Google   www kalachuvadu.com

நிகழ்வு
காலச்சுவடு - ஒருநாள் பண்பாட்டு நிகழ்வு
உரையாடல்கள் தொடர்கின்றன
தேவிபாரதி

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பாளுமைகளில் சுந்தர ராமசாமியைப் போல் வாசகர்களோடு தொடர்ந்த, அர்த்தமுள்ள உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் அதிகப¢பேர் இல்லை. வாசிப்பில் அக்கறையுள்ள எவரோடும் தயக்கமின்றி உரையாடும் இயல்புடைய சுந்தர ராமசாமி வாசகர்களை நண்பர்களாக வளர்த்தெடுப்பதற்கும் அவர்களோடு அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் எப்பொழுதுமே முக்கியத்துவம் அளித்துவந்தார். தனிப்பட்ட சந்திப்புகளில் இளம் படைப்பாளிகள் பலரோடு அவர் நடத்திவந்த உரையாடல்கள் முக்கியமானவை. தமிழ் அறிவுலகம் சார்ந்து தனக்கிருந்த பெருமிதங்களையும் விமர்சனங்களையும் ஏக்கங்களையும் பகிர்ந்துகொள்ளும்விதமான அவ்வுரையாடல்கள் அவர்களது படைப்புப் பார்வையை விரிவுபடுத்தியிருக்கின்றன. அவர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்பும் தமிழ்ப் படைப்பிலக்கியவாதிகளில் பலரும் பதிவுசெய்துள்ள உண்மை இது.

35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் படைப்புப் பணியைச் சிற்றிதழ்களின் வாயிலாக மேற்கொண்டுவந்த சுந்தர ராமசாமி 1988இல் காலச்சுவடைத் தொடங்கியபொழுது அவர் அதுகாறும் நடத்திவந்த உரையாடல்கள், விரிந்ததளத்திற்கு நகர்ந்து சென்றன. படைப்பிலக்கியம் சார்ந்த புதிய முயற்சிகளுக்கும் அறிவார்ந்த விவாதங்களுக்கும் தமிழ்ச் சிற்றிதழ்கள் அளித்துவந்திருந்த கவனத்தை மேலும் கூர்மைப்படுத்தியதோடு அதுவரையில் சிற்றிதழ் சார்ந்து ஆகிவந்திருந்த அடையாளங்களை மாற்றவும் இடையறாது முயன்றுவந்த சுந்தர ராமசாமியின் காலச்சுவடு எட்டு இதழ்களுக்கு மேல் தன் பயணத்தைத் தொடரவியலாமல் போனது தீவிர இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்களுக்குப் பேரிழப்பாகவே இருந்திருக்கும்.

எனவேதான் 1994இல் கண்ணனின் முயற்சியில் புதிய ஆசிரியர் குழுவுடன் காலச்சுவடு தன் இரண்டாம் கட்டப்பயணத்தைத் தொடங்கியவுடன் வாசகர்கள் அதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளித்தனர். 2008 வரையிலான இந்த 14 ஆண்டுகளில் காலச்சுவடு உலகத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான அடையாளமாகத் தொடர்ந்து இயங்கிவருவதை வாசகர் அறிவர். முதலில் காலாண்டிதழாகவும் பின்னர் இருமாத இதழாகவும் தற்போது மாத இதழாகவும் தன் பயணத்தைத் தொடர்ந்து, 100 இதழ்களைத் தாண்டியுள்ள காலச்சுவடு ஒரு தீவிர இதழ் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தயக்கமின்றி நிறைவேற்றி வருவதற்குப் பல உதாரணங்களைத் தர முடியும். இதழியல் பணியோடு பதிப்புத் துறையில் பங்குகொண்டுள்ள காலச்சுவடு மிகக் குறுகிய காலத்திற்குள் 250 நூல்களை வெளியிட்டிருப்பதோடு பண்பாட்டுத் தளத்தில் தன் குரலைப் பதிவுசெய்யும் நோக்கோடு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எண்ணற்ற பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்திவந்துள்ளது. தான் சந்திக்க நேர்ந்த சோதனைகளையும் தனக்கு விடுக்கப்பட்ட சவால்களையும் நம்பிக்கையோடு கடந்துவந்து, நவீனத் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறியிருக்கும் காலச்சுவடு 100 இதழ்கள் கடந்துவந்திருப்பதைக் கொண்டாடும் முகமாகப் பண்பாட்டு நிகழ்வொன்றினை நடத்தியிருப்பது பொருத்தமானது.

19.04.2008 அன்று சென்னை தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை அரங்கில் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் என்னும் உள்ளடக்கத்தோடு காலை 9.45க்குத் தொடங்கி இரவு 7.30 மணி வரை வாசிப்பு, நூல் வெளியீடு, கலந்துரையாடல், நாடகம், ஆவணப்படம் என்னும் வரிசையில் நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒரு முழு நாள் பண்பாட்டு விழாவினை நடத்தியது. 'கனவுகளும் காரியங்களும்' என்னும் காலச்சுவடு முதல் இதழின் தலையங்கத்தைத் தமிழ் நவீன நாடக ஆளுமைகளுள் ஒருவரான தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற சண்முக ராஜா தன் கம்பீரமான குரலில் வாசிக்க, குறித்த நேரத்தில் நிகழ்வுகள் தொடங்கின. நம் காலத்தின் ஆகச் சிறந்த படைப்பாளுமைகளில் முக்கியமானவரான சுந்தர ராமசாமி என்னும் கலைஞன் ஒரு தீவிர இதழொன்றின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் பரிமாணம் பெற்ற ஒரு தருணத்தில், தன் கனவுகளை முன்வைத்து எழுதிய அத்தலையங்கம் இதுவரையிலான காலச்சுவடின் பயணம் குறித்த ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்வதற்கு வாசகருக்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தலையங்க வாசிப்பைத் தொடர்ந்து காலச்சுவடின் இருபதாண்டுக் காலப் பயணம் குறித்து 'இடையறாத கனவுகளும் தொடர்ந்து வரும் காரியங்களும்' என்னும் தலைப்பில் காலச்சுவடின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் அரவிந்தன் கட்டுரை வாசித்தார். சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்ட காலச்சுவடு தன் இருபதாண்டு காலப் பயணத்தில் கடந்துவந்த பாதைகளை, அது எதிர்கொண்ட சவால்களைக் கவனப்படுத்தியது அரவிந்தனின் கட்டுரை. அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது என்னும் இதழியல் நெறியை விடாப்பிடியாகப் பின்பற்றிவரும் காலச்சுவடின் மீது படர்ந்துள்ள வன்மத்தின் 'ஊற்றுக்கண்'களை அடையாளம் காட்டும் விதமாகத் தமிழகத்தின் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் காலச்சுவடு தொடர்ந்து நிகழ்த்திவரும் இடையீடுகளைத் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டினார் அரவிந்தன்.

சுந்தர ராமசாமியின் 75ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய இலக்கியப் போட்டிகளில் தேர்வு பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கான பரிசினை வழங்கிக் கௌரவித்தார் அசோகமித்திரன். அவர்களோடு காலச்சுவடில் நீண்டகாலமாகப் பணிபுரிந்துவரும் பி. சிவக்குமார், நாகம், லோகநாதன் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

காலச்சுவடு பதிப்பகத்தின் 250 ஆம் வெளியீடான பாரதி கருவூலம் நூலினை இந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் வெளியிட பா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். இந்து நாளிதழில் 1904 முதல் 1916 வரையான காலகட்டத்தில் பாரதி எழுதிய கடிதங்கள் மற்றும் இரு கட்டுரைகள் பேராசியர் ஆ.இரா. வேங்கடாசலபதியால் தொகுக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தன. வெளியிட்டுப் பேசிய என். ராம், "இருபதாம் நூற்றாண்டு இந்திய சமூக அரசியல் வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தில் தமிழின் மாபெரும் கவிஞரும் பத்திரிகையாளருமான பாரதி, இந்து நாளிதழுக்கு எழுதிய இக்கடிதங்கள் குறித்து, பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி வழியாகத் தெரிய வந்தபொழுது வியப்பும் பெருமிதமும் கொண்டோம். அவற்றை எவ்வகையில் மறுபிரசுரம் செய்வது என்பது குறித்தும் யோசித்தோம். அவருடைய இதழியல் சார்ந்த எழுத்துகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்னும் ஆசைகூடத் தோன்றியது. அப்படி வெளியிட்டால் அது பாரதியை விரிந்த தளத்தில் புரிந்துகொள்வதற்கு உதவியாயிருக்கும் என நினைத்தோம். பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவராக அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி எங்களது இந்த ஆசையை இத்தொகுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். மாபெரும் தமிழ் எழுத்தாளரான சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்டு இன்றுவரையிலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை மிக அழகாகப் பதிப்பித்திருக்கிறது. காலச்சுவடைப் போன்ற சமூக அக்கறைகொண்ட, பதிப்புத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு இதழ் இந்நூலைப் பதிப்பித்திருப்பது அதனிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய ஒரு செயலே" எனக் குறிப்பிட்ட திரு. ராம், ஒரு கவிஞராகவும் இதழியலாளராகவும் பாரதி ஆற்றிய பணிகளையும் பாரதி வாழ்ந்த காலத்தின் அரசியல் பண்பாட்டுச் சூழலையும் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தில்லியைச் சேர்ந்த ஆங்கிலப் பதிப்பாளர் ஊர்வசி புட்டாலியா, ஒரு பஞ்சாபியான தனக்கு இது போன்ற ஒரு தமிழ் மாற்று இதழின் நூறாவது இதழ் விழாவில் பங்கு பெறக் கிடைத்த வாய்ப்பினைக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மைய நீரோட்டப் பதிப்புத் துறை பொருட்படுத்தாத எழுத்துகளைத் தேடிக்கண்டறிந்து பதிப்பித்துவரும் சுதந்திரமான மாற்றுப் பதிப்பகங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் குறித்தும் அவற்றின் சமூகவியல் தேவை குறித்தும் விரிவாகத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஊர்வசி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, வாஸந்தி உள்ளிட்ட சிலரது படைப்புகளை ஆங்கிலம் வாயிலாகப் படித்திருப்பதாகவும் தமிழின் செழுமையையும் படைப்பாற்றலையும் புரிந்துகொள்வதற்குத் தனக்கு அவை பெரிதும் உதவியதாகவும் குறிப்பிட்டார். காலச்சுவடு போன்ற தீவிர இதழ்களுக்கான தேவை நெருக்கடிகள் மிகுந்த இக்கட்டத்தில் முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது என்ற ஊர்வசி, இது போன்ற ஒரு சிறப்பான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த காலச்சுவடுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பத்திரிகையாளர் சதானந்த் மேனன் இந்து நாளிதழுக்குப் பாரதி எழுதிய கடிதங்கள் குறித்துப் பேசுகையில் ஊடகங்களில் இடம்பெறும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்ட, அதிகாரமற்ற மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வெளி என்றார். இத்தகையதொரு வெளி பொதுச் சமூகத்தோடு ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்குப் பயன்படுபவை, பாரதி அதைச் சரியாகவே பயன்படுத்திக்கொண்டார் என்றார். வாசகர் கடிதங்கள் அரசியல் ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட மேனன் அவசர நிலைக் காலகட்டத்தில் ஊடகங்களுக்கு வந்த கடிதங்களை அதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார். மாற்றுப்பார்வை குறித்த புரிதல்களில் முக்கியமானது நாம் எதற்கு, எப்படி மாற்றாக விளங்குகிறோம் என்பதுதான், அத்தகைய சரியான புரிதல்களுடன் காலச்சுவடு தன் இருபதாண்டுக் கால இதழியல் பணியில் கலை இலக்கியம் சார்ந்தும் கருத்தியல்கள் சார்ந்தும் மாற்றுப் பார்வைகளை முன்வைத்து இயங்கி வருகிறது என்றார் மேனன்.

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு குறித்த தன் மதிப்பீடுகளை முன் வைத்துத் தன் விமர்சனப் பார்வையைத் தொடங்கிய மணா, படைப்பிலக்கியம் சார்ந்த எழுத்துகளோடு சமூக அரசியல் விமர்சனங்கள் சார்ந்த கட்டுரைகள் காலச்சுவடில் அதிகம் இடம்பெற வேண்டும் என சுந்தர ராமசாமி விரும்பியதாகக் குறிப்பிட்டார். தீவிர இதழியல் தளத்தில் காலச்சுவடு கவனிக்கத்தக்க பல விளைவுகளை உருவாக்கியிருக்கிறது, அதற்கு உதாரணமாக, குஜராத் கலவரம் தொடர்பாக இடம்பெற்ற பதிவுகளைக் குறிப்பிடலாம் என்ற மணா, காலச்சுவடில் இடம் பெற்ற நேர்காணல்கள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை என்றார். சுந்தர ராமசாமி வெளியிட்ட காலச்சுவடு சிறப்பிதழில் இடம்பெற்ற ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் 'பாபர் மசூதி இடிப்பு ஒரு இந்தியப் பார்வை' என்னும் கட்டுரை குறித்தும் பெரியார் சிறப்பிதழில் ரவிக்குமார் எழுதிய கட்டுரை குறித்தும் தன் விமர்சனங்களைப் பதிவுசெய்தார் மணா. ஜி.எஸ.ஆர். கிருஷ்ணனின் கட்டுரையோடு தனக்கு உடன்பாடு இல்லை என்பதை சுந்தர ராமசாமி அவ்விதழிலேயே பதிவு செய்திருந்தார், ஆனால் ரவிக்குமாரின் கட்டுரைக்கு அத்தகைய மறுப்பு எதுவும் வெளிவராத நிலையில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த ரவிக்குமாரின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைக் காலச்சுவடினுடையதாகவே கருதவேண்டியிருக்கிறது என்றார். அவருக்குக் காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் விளக்கமளித்தார். காலச்சுவடு யாரையுமே விமர்சனத்திற்கு அப்பால் நிறுத்தியதில்லை எனவும் சில மாதங்களுக்கு முன்னால் காலச்சுவடில் தான் எழுதிய வெந்து தணியும் அவதூறுகள் என்னும் கட்டுரையில் ரவிக்குமாரின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டு அக்கட்டுரை அவரது சொந்தக் கருத்து எனப் பதிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

2005இல் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் வாசித்த கட்டுரையிலும் இது பற்றித் தெளிவாக எழுதியிருந்ததாகவும் அக்கட்டுரை மணா இணை ஆசிரியராக இருந்த புதிய பார்வை இதழில் வெளிவந்ததையும் நினைவுகூர்ந்தார். தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு அரங்கில் காலச்சுவடு இதழில் 2000 -2003 ஆண்டுகளில் வெளிவந்த நேர் காணல்களின் தொகுப்பான காலச்சுவடு நேர்முகம் என்னும் நூலை மணா வெளியிட இமையம் பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பெண் படைப்புகள் என்னும் நூலை மாலதி மைத்ரி வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொண்டார். லதாவின் நான் கொலை செய்யும் பெண்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பை சுகுமாரன் வெளியிட கவிதா பெற்றுக்கொண்டார். கவிதாவின் சந்தியாவின் முத்தம் என்னும் கவிதைத் தொகுப்பை ஞானக்கூத்தன் வெளியிட ப்ரேமா ரேவதி பெற்றுக்கொண்டார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ஞானக்கூத்தன் தலைமையேற்க, சுகுமாரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

பெண் எழுத்தின் உள்ளுறையான அம்சங்கள் குறித்த பரிசீலனைகளினூடே பெண் படைப்பு எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்களைக் குறித்தும் விரிவாக விவாதித்தனர். விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பெண் எழுத்து பொதுச் சமூகத்தின் கண்டனத்திற்குள்ளாவது இயல்பானதே என்றாலும் அதற்காகப் பெண் படைப்பாளிகள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என சுகர்தராணியும் மாலதி மைத்ரியும் கூறினர். படைப்புச் செயலைப் பெண்கள் போராட்டமாகவே நிகழ்த்த வேண்டியிருக்கிறது எனச் சொன்ன சுகிர்தராணி பெண் எழுத்தாளர்களைப் பொதுச் சமூகம் புறக்கணிப்புகளின் மூலமும் அவதூறுகளின் மூலமும் தண்டிக்க முற்படுகிறது என்றார். பெண் எழுத்தின் இன்றைய நெருக்கடிகள் குறித்த விரிவான விவாதங்கள் அவசியம் என்ப தற்கான சான்றாக அமைந்திருந்தது இந்தக் கலந்துரையாடல்.

மதிய உணவுக்குப் பிறகு சுந்தர ராமசாமியின் சன்னல் என்னும் சிறு கதை கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ஆனந்த்சாமி நடிப்பில் நாடகமாக நிகழ்த்தப்பட்டது. சிறுகதையில் தென்படும் ஏக்கங்களையும் துயரங்களையும் தன் அற்புதமான குரல் வளத்தாலும் உடல் மொழியாலும் காட்சிப்படுத்தியிருந்தார் அவர். மிக எளிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த மேடை, பிரதியின் தொனியை முழுமையாக எதிரொலித்தது.

பின்னர் காலச்சுவடின் மீதான மற்றுமொரு விமர்சனத்தை முன் வைத்தார் கவிஞர் கடற்கரய். காலச்சுவடின் இருபதாண்டுக் காலப் பயணத்தை முன்னோடி இதழ்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டுக் காலச்சுவடின் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து ஏற்பட்டுவந்திருக்கும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்த பதிவுடன் தன் விமர்சன உரையைத் தொடங்கினார் கடற்கரய். காலச்சுவடு புறக்கணிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களின் மீது தீவிர அக்கறை செலுத்தி வந்துள்ளது. உதாரணமாக, சுற்றுச் சூழல் சார்ந்த அதன் விரிவான பதிவுகளைக் குறிப்பிடலாம். தியடோர் பாஸ்கரன் போன்ற சூழலியல் அறிஞர்கள் தொடர்ந்து பங்களித்து வருவது பாராட்டுக்குரியது என்றார். எனினும் போதாமைகள் நிலவுவதையும் கவனிக்க வேண்டும் என்ற கடற்கரய், காலச்சுவடு மானுடவியல், நாடகவியல் சார்ந்த கட்டுரைகளையும் பல்வேறு சிறப்புப் பகுதிகளையும் வெளியிட்டதைத் தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமான பங்களிப்பு எனக் குறிப்பிட்டார். புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுத்து செம்பதிப்பாக வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் பணியும் தொகுப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியும் பாராட்டுக்குரியவர்கள் என்றார். இதழ் குறித்தும் பதிப்புப் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசிய கடற்கரயின் விமர்சனம் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

பின்னர் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழின் முழுத் தொகுப்பு நூலை ஆர். வி. ரமணி வெளியிட, கவிஞர் சிபிச்செல்வன் பெற்றுக்கொண்டார். காலச்சுவடு இதழில் 2000 - 2003ஆம் ஆண்டுகளில் வெளி வந்த சொல்லில் அடங்காத வாழ்க்கை என்னும் தோந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை சல்மா வெளியிட சின்னசாமி பெற்றுக்கொண்டார். காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் என்னும் நூலைக் கிருஷ்ணானந்த் வெளியிடக் குளச்சல் மு. யூசுப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் 'தமிழ் ஊடகங்களில் இஸ்லாம்' என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. கிருஷ்ணானந்த், சல்மா, ஆ. இரா. வேங்கடா சலபதி, களந்தை பீர்முகம்மது ஆகியோர் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்து ஊடகங்கள் பரப்பிவரும் கட்டுக்கதைகளும் அவற்றில் பொதிந்துள்ள அரசியலும் இவ்விவாதத்தின் மையப்பொருளாக விளங்கின. பார்வையாளர் தரப்பிலிருந்து விவாதித்தினிடையே மலர் மன்னனும் ப்ரவாகனும் கருத்துரைத்தார்கள். இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளைக் கண் மூடித்தனமாக ஆதரிப்பதாகக் குற்றம் சுமத்தி உரத்த குரல் எழுப்பினர். இந்தக் குறுக்கீடுகள் கலந்துரையாடலின் போக்கைப் பாதித்தன. ஆசிரியர் கண்ணன் இடையிட்டு இஸ்லாம் தொடர்பான காலச்சுவடின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். காலச்சுவடு இஸ்லாத்தை விமர்சனங்களுடனேயே அணுகிவருவதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்த கண்ணன், காலச்சுவடு இந்துத்துவவாதிகள் விரும்பும்படியான ஒரு நிலைப்பாட்டைக் கண்டிப்பாக மேற்கொள்ள முடியாது என்பதைத் தெளிவுபடுத்தினார். தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் என்ற நூல் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலாகும் என்றார்.

காலச்சுவடு அறிவித்திருந்த ஆவணப்படப் போட்டிக்கு வந்திருந்த ஆவணப்படங்களிலிருந்து அயோத்திதாசப் பண்டிதர் குறித்து பாரி செழியன் இயக்கியிருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. போட்டிக்கான தேதி தள்ளிவைக்கப் பட்டதால் திட்டமிட்டவாறு ஆவணப்படப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இறுதி நிகழ்வாக ஆர்.வி. ரமணி இயக்கிய சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. சு.ராவின் ஆளுமை மற்றும் படைப்புச் செயல்பாடுகள் குறித்துக் குறைந்த அளவில் பேசிய அத்திரைப்படம் அவரை முன்வைத்து மரணம் தொடர்பான கேள்விகளையும் எழுப்புவதாயிருந்தது. சடங்குகள் இல்லாமல் அவரது உடல் எரியூட்டப்பட்டது குறித்த ரமணியின் கேள்விகளே ஆவணப்படத்தில் முன்னின்றன. பின்னணி இசையும் தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தாலும் படம் ஒருவகையான ஏமாற்றத்தைத் தரும் அனுபவமாகவே இருந்தது. படத்தில் தோன்றிய எவரும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது முக்கியமான குறை. சு.ரா. போன்ற ஆளுமை குறித்த ஆவணப்படம் அவரது ஆளுமை மற்றும் படைப்புச் செயல்பாட்டின் பன்முக அம்சங்களையும் அவரது பயணத்தின் பரிமாணங்களையும் குறித்ததாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பானது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

காலை 9.45க்குத் தொடங்கிய விழா இரவு ஏழு மணிவரை இடை வெளியே இல்லாமல் நடைபெற்ற போதிலும் பார்வையாளர்கள் அலுப்புற்றதாகத் தெரியவில்லை. முழு நாளும் அரங்கு நிறைந்து தென்பட்ட ஈடுபாடுள்ள வாசகர் கூட்டம் எமது நம்பிக்கைகளை வலுப்படுத்திக்கொள்வதற்குப் பெரிதும் உறுதுணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளடக்கம்