|
புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூகப் பணியாளருமான நிர்மலா தேஷ்பாண்டே தனது 79வது
வயதில் கடந்த மே மாதம் முதல் தேதி தில்லியில் காலமானார். முந்தையதினம் தன்பாத்
நகரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அவருக்கு
வாயுத்தொல்லையும்லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. வியாழன் அதிகாலை அவரின் உதவியாளர்
அவர் அறைக்குச் சென்றபோது 'எனக்கு ஒன்றுமில்லை; நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று
சொன்ன ஒரு மணி நேரத்தில் சுமார் 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
1929 அக்டோபர் 27ஆம் நாள் மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்த நிர்மலாவின் தந்தை
பிரபல மராத்தி எழுத்தாளர் ஒய்.வி. தேன்பாண்டே. பத்தொன்பது வயதில் சுதந்திரப்
போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தொடங்கிய அவரின் சமூகப் பொது வாழ்வு சுமார் 60
ஆண்டுகள் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான நீடித்த
இயக்கமாக அமைந்தது. 1952இல் ஆச்சார்ய வினோபாபாவேயின் பூதான இயக்கத்தில் தன்னை
இணைத்துக்கொண்டு தீவிரமாகப் பணியாற்றிய அவர், பின்னாளில் சங்பரி வாரங்களின்
இந்துத்துவ வெறியூட்டல் செயல்பாடுகளின் அபாயத்தை இனங்கண்டு மதச்சார்பின்மை மற்றும்
சமூக நல்லிணக்கம் ஆகிய தளங்களில் தீவிர கவனம் செலுத்திப் பணியாற்றத் தொடங்கினார்.
மனித சமூகத்தின் பல்வேறு ஆதாரப் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து பேசியும்
எழுதியும் செயலாற்றியும் வந்த காந்தியடிகளின் முன்னுரிமையான விஷயங்களாக
மதச்சார்பின்மை, சமூக அமைதிக்கான பணிகள் அமைந்தன என்பதைப் பல தருணங்களில் நிர்மலா
குறிப்பிட்டுள்ளார். காந்தியத்தை ஒரு சிந்தனைமுறையாக மட்டும் கருதாமல் அதனைச்
செயல்முறைத் தத்துவமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமான வேட்கை
கொண்டிருந்த அவர், தனது வாழ்நாள் செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க இலக்குகளை
எட்டினார்.
சமூக அமைதி குலைவுறும் தருணங்களில் இருவேறு சமூக மக்களிடையே நல்லெண்ணத்தையும்
புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதன் மூலமே நீடித்த சமூக நல்லிணக்கம் சாத்தியமாகும்
என்பதை வலியுறுத்திய அவர், பல்வேறு தருணங்களில் சென்ற நடைபயணங்கள் மூலம் கலவரச்
சூழலின் தீவிரத்தைக் குறைத்தார். குறிப்பாக 2002ஆம் ஆண்டில் குஜராத் கலவரங்களின்
போது நிராதரவான நிலையிலிருந்த மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் வன்முறையுணர்வுக்கும்
மதவெறிக்கும் எதிராக சிவில் சமூகத்தைத் திரட்டியும் ஒருங்கிணைத்ததிலும் அவர் ஆற்றிய
பணி என்றும் நினைவுகூரத்தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளிடையேயும் இருதரப்பு சிவில் சமூகங்களிடையேயும்
நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை உருவாக்கும் பணியும் அவரின் முன்னுரிமைப்
பட்டியலில் இருந்தது. அதற்காகவும் அவர் தனது இறுதிக் காலம்வரை பணியாற்றினார்.
1997இல் ஒருமுறையும் மீண்டும் 2004இல் தொடங்கி மறையும்வரையிலும் நாடாளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
பாகிஸ்தானுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களின்
குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றபோது இந்திய - பாகிஸ்தான் இருதரப்பு மக்களும்
ஒற்றுமை மற்றும் அமைதியையே விரும்புவதாகவும் அதற்கான முன்முயற்சிகளை எடுக்க
வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிடம் வலியுறுத்தினார்.
அவர் மறைந்த மறுநாள் 'தூர்தர்ஷன்' தனது தேசிய ஒளிபரப்பில் அவர் பங்குகொண்ட விவாதம்
ஒன்றை ஒளிபரப்பியது. ஒடுக்குதலும் வன்முறையுணர்வும் பெருகிவரும் சூழலிலும் காந்திய
அணுகுமுறையே போராட்டக்களங்களில் மிகவும் நம்பகமானதும் பயனுள்ளதுமாகும் என்ற தனது
திட்டவட்டமான நம்பிக்கையை அவ்விவாதத்தில் வெளிப்படுத்தினார்.
காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன சேவா சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக மறையும் வரை
அவர் பணியாற்றினார். பாட்டியாலா பல்கலைக்கழகம், அமராவதி பல்கலைக்கழகம், காசி
வித்யபீட பல்கலைக்கழகம் ஆகியவற்றால் 'டாக்டர்' பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்ட
அவர் 'பத்மவிபூஷன்', 'ராஜீவ் காந்தி' சத்பவன விருது. ரஷ்ய நட்புறவுக் கழக விருது
ஆகியவற்றையும் பெற்றுத் தனது வாழ்நாளில் அங்கீகாரமும் செல்வாக்கும் பெற்றவராகவே
விளங்கினார். இவர் பெயர் 2005ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குப்
பரிந்துரைக்கப்பட்டதோடு, இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகவும் பரிசீலிக்கப்பட்டது.
விமர்சனமின்றி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராகவும் நேரு குடும்பத்தின்
அனுதாபியாகவும் தொடர்ந்து செயல்பட்டார் என்றும் நெருக்கடி நிலைக் காலங்களில்
இந்திராவைக் கண்மூடித்தனமாக ஆதரித்தார் என்றும் இவர்மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
அவற்றை இவர் மீதான விமர்சனமாகப் பதிவுசெய்து கொள்ளலாம் என்றாலும் இந்தியச்
சமூகத்தில் காந்தியச் செயல்பாடுகளுக்கும் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகிய
தளங்களிலும் நிர்மலா தேஷ்பாண்டே அவர்களின் மறைவால் ஏற்பட்டுள்ள இழப்பு கணிசமானது
என்பது மட்டும் மறுக்கவியலாத உண்மை.
|