|
60க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் மரணத்திற்கும் நூற்றுக்கணக்கானோரின்
படுகாயத்திற்கும் காரணமான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் இந்தக் கொடூரத் தாக்குதலை
நிகழ்த்தியதாகக் கருதப்படும் பயங்கரவாதக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாகக்
கருதப்படும் நபரின் கணினி உருவப்படத்தை வெளியிட்டுச் சுறுசுறுப்பை
வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் காவல் மற்றும் புலனாய்வு அமைப்புகள் குற்றவாளிகள்
விரைவில் பிடிபடுவார்கள் என்னும் தம் வழக்கமான அறிவிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 'நம்பிக்கை'யூட்ட முயன்றுகொண்டிருக்கின்றன. இந்தியன் முகாஜுதீன்கள்
என்னும் அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் செய்தியன்றில் இந்தத்
தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும்
இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி, பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்பான
லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்உல்-ஜிஹாதி-இ- இஸ்லாமி போன்ற தீவிரவாத இயக்கங்களின் உதவியோடு
இத்தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கலாம் என்னும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
சமீபத்தில் உத்திரப்பிரதேசம், ஆந்திரம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில்
நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தற்போதைய ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புத்
தாக்குதலுக்குமிடையிலான ஒற்றுமையைக் கொண்டு அந்தத் தாக்குதல்களை நடத்தியதாகச்
சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மீதும் அதன் பல்வேறு துணை
அமைப்புகளின் மீதும் புலனாய்வு அமைப்புகளின் சந்தேகம் படர்ந்துள்ளது.
இதற்கிடையே இந்திய முகாம்களில் வசிக்கும் வங்கதேச அகதிகளின் மீது சந்தேகம் கொண்ட
காவல் துறை அவர்களைத் தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது. இப்படியரு
தாக்குதல் நடக்கக்கூடும் என முன்கூட்டியே எச்சரித்ததாகவும் மாநிலக் காவல் துறை அந்த
எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டதாகவும் குற்றம் சுமத்துகிறது மத்திய அரசு.
தீவிரவாதிகளிடம் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மென்மையான அணுகுமுறையைக்
கடைபிடிப்பதால்தான் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்வதாகக் குற்றம்
சுமத்தியுள்ள பாஜக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு 'பொடா' போன்ற கடுமையான சட்டங்கள்
தேவை எனக் கோரியிருக்கிறது.
இந்துத்துவ அடிப்படைவாதத்தைத் தன் ஒரே அரசியல் திட்டமாகக் கொண்டிருக்கும் பாஜகவும்
அதன் தோழமை அமைப்புகளும் மூர்க்கமாகப் பின்பற்றி வரும் இந்துத்துவ அடிப்படைவாதக்
கொள்கைகளின் விளைவாகச் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றமும் அச்சமுமே
இஸ்லாமியர்கள் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதற்கு முக்கியக் காரணம் என்பதை வசதியாக
மறைத்துவிட்டு, இது போன்ற கோரிக்கைகளை வைப்பதன் மூலம் தன்னை பயங்கரவாதத்திற்கு
எதிரான சக்தியாகக் காட்டிக்கொள்வதற்கு முயல்கிறது பாஜக. 1992இல் பாபர் மசூதியை
இடித்ததன் மூலம் இஸ்லாமியர்களைச் சமூகத்தின் மைய நீரோட்டப் போக்கிலிருந்து
அந்நியப்படுத்தியது பாஜகதான். மத நல்லிணக்கம் என்னும் கருத்துருவத்தை அந்த நிகழ்வு
முற்றாகத் தகர்த்தெறிந்தது. ஜனநாயகவாதிகளின் கடும் கண்டனத்திற்குள்ளான அந்நிகழ்வு
குறித்த பெருமித உணர்வுடன், தொடர்ந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்திவரும்
இந்துத்துவ அடிப்படைவாதிகள் அவர்களது வாழும் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகள் இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளன. அப்பாவி
இஸ்லாமியர்கள் அவற்றை ஆதரிக்காத போதிலும் அவை தம்மை அவர்களது பாதுகாவலர்களாக
அறிவித்துக் கொண்டு தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை நடத்திவருகின்றன. அவற்றின்
சர்வதேசத் தொடர்புகள் குறித்த செய்திகள் பயங்கரவாதத்திற்கெதிரான இந்தியச்
சமூகத்தின் போராட்டங்களைச் சிக்கலானவையாக மாற்றியிருக்கின்றன.
'பொடா' போன்ற பயங்கரவாதத் தடைச் சட்டங்களால் பயங்கரவாதம்
கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்பது ஆதாரமற்ற ஒரு நம்பிக்கை. பாஜக தலைமையிலான தேசிய
முன்னணி அரசு கொண்டுவந்த அச்சட்டம் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு
எவ்விதத்திலும் துணைபுரியவில்லை. பெரும்பாலும் அப்பாவிகளே அந்தச் சட்டத்தால்
பாதிக்கப்பட்டவர்கள். அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கு அதிகாரத்தில்
இருந்தவர்கள் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். வைகோ போன்றவர்கள் அந்தச்
சட்டத்தின் கீழ்தான் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தனர் என்பதை நினைவுகூர்வது அவசியம். காவல் துறை அதிகாரிகளுக்கு
எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் 'பொடா' போன்ற சட்டங்கள், நடைமுறையில் மனித
உரிமைகளுக்கு எதிரானவையாகவே செயல்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும் இப்படியரு கோரிக்கையை முன்வைப்பது
பாஜகவுக்கு வழக்கமானதுதான். அதற்குக் காரணம் அக்கட்சியின் அடிப்படைவாதச் சார்பும்
அதன் தலைவர்கள் கொண்டுள்ள பாசிச மனப்பாங்கும்தான். மைய அரசு பாஜகவின் கோரிக்கையை
நிராகரித்திருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குத் தற்போதுள்ள சட்டங்களே
போதுமானவை என அத்வானியின் கோரிக்கைக்குப் பதிலளித்திருக்கிறார் பிரதமர். ஒருவகையில்
பிரதமர் உண்மையைப் பேசியிருக்கிறார்.
தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டு மனித உரிமைகள் நசுக்கப்படுவது சாத்தியப்படும்பொழுது
ஏன் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்னும் கேள்வி எழுகிறது. சத்தீஷ்கரின்
மனித உரிமைப் போராளியான டாக்டர் வினாயக்சென்-ஐ எந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
கீழ் விசாரணையில்லாமல் ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் வைத்திருக்கிறது அம்மாநில
அரசு? தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் மக்கள் போராட்டங்களைத் தடைசெய்வதற்கு
எந்தச் சிறப்புச் சட்டப் பிரிவையும் பயன்படுத்திவருவதாகத் தெரியவில்லை.
அரசின் நிலைப்பாடுகளை விமர்சிக்கும் எந்தவொரு கூட்டத்திற்கும் அனுமதியளிக்க
மறுத்துவரும் தமிழகக் காவல் துறையின் நடவடிக்கைகளுக்குத் தற்பொழுது நடைமுறையில்
இருக்கும் சட்டங்களே போதுமானவையாயிருக்கின்றன. சென்ற மார்ச்சில் சென்னை காமராஜர்
அரங்கில் மகளிர் தினவிழா தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்துவதற்காகப் 'புரட்சிகரப்
பெண்கள் விடுதலை முன்னணி' என்னும் அமைப்பு காவல் துறையிடம் அனுமதி கோரியபொழுது,
புகழ்பெற்ற மக்கள் பாடகர் கத்தார் அதில் கலந்துகொள்ள இருப்பதைக் காரணம் காட்டி
அந்தக் கூட்டத்திற்கு அனுமதி தர மறுத்துவிட்டது மாநகரக் காவல் துறை. அதேபோல், சில
வாரங்களுக்கு முன்னால் அதே அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள
வந்த மரண வியாபாரி எனப் பெயர் சூட்டப்பட்ட குஜராத்தின் நரேந்திர மோடிக்குக் கண்டனம்
தெரிவிக்கும் விதத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஜனநாயகவாதிகளுக்கு
அனுமதியளிக்க மறுத்துவிட்டது காவல் துறை. மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்டு
ஓராண்டு நிறைவடைந்ததையட்டி மே 9ஆம் தேதி அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு
செய்திருந்தது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகம்.
மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொள்ளவிருந்த அந்தக்
கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற பல நிகழ்வுகளை ஆதாரமாகக் காட்டி
தமிழக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைச் சுட்டிக்காட்டுகிறார்கள் மனித உரிமை
ஆர்வலர்கள். என்கவுன்டர் சாவுகள் கொலையாகப் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட
வேண்டும் என்னும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு பொருட்படுத்துவதே
இல்லை. ஆளும் தரப்பை விமர்சிக்கும் தமிழக ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும்
அச்சுறுத்தப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு
'பொடா' போன்ற சட்டங்கள் தேவைப்படாதபோது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு
மட்டும் 'பொடா' ஏன் அவசியப்படுகிறது எனத் தெரியவில்லை.
சட்டங்களாலும் காவல் துறை நடவடிக்கைகளாலும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்திவிட
முடியாது என்பதை அரசும் கட்சிகளும் உணர வேண்டும். அப்பொழுதுதான் உருப்படியான
மாற்றுத் திட்டங்களைக் குறித்து யோசிக்க முடியும். பயங்கரவாதத்தின் ஆணிவேரைக்
கண்டறிந்து அதைக்களைவதைப் பற்றி யோசிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கெதிரான
போராட்டத்தில் பாகிஸ்தானைப் பங்குபெற வைப்பதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொள்வதன்
மூலமாக மட்டுமே லஸ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். மத
நல்லிணக்கம் என்பதைக் குறித்து, செயல்பூர்வமான சிந்தனையும் செயல்திட்டங்களும் தேவை.
பயங்கரவாதத்திற்கெதிரான பிரச்சாரங்களை அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மேற்கொள்வது
அவசியம். சிறுபான்மை மக்களிடத்திலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரிடமும் நம்பிக்கையை
உருவாக்கும் தொலைநோக்குடைய திட்டங்களும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான நம்பகமான
அமைப்புகளுமே பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும். தேர்தல் ஆதாயங்களை
மட்டுமே இலக்காகக்கொண்டு செயல்படுவதை விட்டுவிட்டு ஒற்றுமையை உருவாக்குவதற்கு பாஜக
உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முயலவேண்டும். இது கனவுதான். ஆனால் மெய்ப்பட வேண்டிய
கனவு. |