|
முகுந்தனின் பங்களிப்பு
எனது இரண்டாம் வருகை (காலச்சுவடு, 100) கட்டுரைக்கு இப்படி ஒரு எதிர்வினை ஏற்படும்
என்று சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அக்கட்டுரையில் குடும்ப உறுப்பினர்களின்
பெயர்கள் இடம்பெற்றிருப்பது எனது இரண்டாவது மகன் முகுந்தன் கவனத்திற்கு
வந்திருக்கிறது. சாரங்கன் பற்றிய பகுதிகளைப் படிக்கக் கேட்ட அவன், தன்னைப் பற்றி
எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்ற நியாயமான கேள்வியை முன்வைத்தான். மைதிலி சுயமாக
முகுந்தனைப் பற்றிய சில வரிகளை இடைச்செருகலாகச் சேர்த்தபோது, அவ்வரிகளைக்
காட்டும்படி கேட்டிருக்கிறான். உண்மை அம்பலப்பட்டதும் கோபம், அழுகை, வெளிநடப்பு.
காலச்சுவடுக்கு முகுந்தனின் பங்களிப்பு விபரங்களைச் சரித்திரத்தின் முன் பதிவு
செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முகுந்தன் என் மேசையில் விளையாடும் போது
காலச்சுவடுக்கு வரும் படைப்புகளைக் கிழித்தது இல்லை. மேசையில் ஒருபோதும் சிறுநீர்
கழித்தது இல்லவே இல்லை. கவிதைக் கைப்படிகளில் மேல், கீழ், பக்கவாட்டில் இருக்கும்
இடைவெளிகளில் படம் வரைந்ததே இல்லை. வீட்டிற்கு வரும் நண்பர்களை ஆறு வயதிற்குப் பிறகு, சாக்லெட் கேட்டுக் கடைக்கு விரட்டியது இல்லை. காலச்சுவடுக்கு வரும் போன்களை
அவன் எடுத்துவிட்டால் பொறுமையாகவும் தெளிவாகவும் கண்பட்டுவிடும்படி அழகாகவும் பதில்
சொல்லுவது உண்டு.
காலச்சுவடு அலுவலகத்திலிருந்து அன்றாடம் காணாமல்போகும் பென்சில், ரப்பர்களுக்கு
முகுந்தன் பொறுப்பாளி அல்ல.
மஞ்சள் பெயிண்ட் மர்மம்
மதுரையிலிருந்து தஞ்சைக்கு ரயில் ஏற வேண்டும். இது நாங்கள் மதுரை ஜங்ஷனில் நிற்பதன்
நோக்கம். மானாமதுரையில் ஒரு ரயில் பாதையைத் தொடங்கிவைப்பதற்காக லல்லு பிரசாத் யாதவ்
வருவது பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளக் காரணமில்லை. அவர்தான் மதுரைக்கு வருவதாக
இல்லையே.
தஞ்சை ரயில் வந்தது. நல்ல கூட்டம். அவசரமாக ஏறியாயிற்று. கைப்பிடியிலிருந்து ஏதோ
பிசுக்கென்று ஒட்டிக்கொண்டது. மஞ்சள் சாயம். இரண்டு கைகளும் விரல்கள் விரிந்து
அந்தரத்தில் நின்றன. கவனமாக இருக்கையில் அமர்ந்தேன். நிமிர்ந்தபோதுதான் பெட்டி
நிறைய கைவிரித்து நீட்டிப் பிடித்திருக்கும் பயணிகளைப் பார்த்தேன்.
கையிலிருந்த செய்தித்தாளைக் கிழித்துத் துடைத்துக் கொண்டேன். பலர் துடைக்க எதையாவது
தேடிக்கொண்டிருந்தார்கள். கை கழுவுவது பயன் தரவில்லை. மஞ்சள், வெள்ளைச் சட்டைகளில்
வேட்டிகளில் தலைமுடியில் தொத்திக்கொண்டது.
நமது அதிகார வர்க்கம்போலத் திமிரும் பணிவும் பதற்றமும் சுரணை கெட்டத்தனமும்
இளிப்பும் வன்முக பாவமும் குழைவும் தெனாவட்டும் ஒருங்கே இணையப் பெற்றவர்களைப்
பார்ப்பது அரிது. பெரும் அதிகாரத்தின் வருகை இவர்களைச் சொல்லவொண்ணாப் பதற்றத்திற்கு
ஆட்படுத்துகிறது. ஊழலும் திறனற்ற செயல்முறைகளும் துருப்பிடித்த உள்ளீடுகளும்
பளபளப்பான தற்காலிகமான மேற்பூச்சால் மூடிமறைக்கப்படுகின்றன. இது நமக்குப்
பள்ளிக்காலத்திலேயே பழக்கப்படுத்தப்படுகிறது. உரிய முன்னறிவிப்புக்
கொடுத்துவிட்டுப் பள்ளிக்கு ஆய்வுசெய்ய வரும் கல்வி ஆய்வாளருக்காக நோட்டுப்
புத்தகங்களுக்கு அட்டை போட்டு, சீருடையைச் சிறப்பாக அணிந்து, ஒருநாளும் போடாத ஷ¨
போட்டு, டைகட்டி, பள்ளியைச் சுத்தம்செய்து, கரும்பலகைக்குக் கறுப்படித்து, ஒருநாள்
மினுமினுப்பாக நம்மையும் சூழலையும் தயார்படுத்திக்கொள்கிறோம். பிற்காலத்தில்
அமைச்சர் வரும்போது அவசரமாக ரோட்டிற்குக் கறுப்படித்து, வெள்ளைக் குறிகள் வரைந்து,
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களைத் துன்புறுத்தி ஊரைத் தயார்செய்ய அது
முன்பயிற்சியாக அமைகிறது.
மதுரை வட்டத்திற்கு வரும் ரயில்களுக்குக் கைப்பிடியில் மஞ்சள் பூசியது இந்த
மனோபாவத்தின் தொடர்ச்சி. காயாத வண்ணப் பூச்சு லல்லு தில்லி மீள்வதற்குள்
அழிந்திருக்கும். சில லட்சங்கள் செலவுசெய்யப்பட்டிருக்கலாம். ஆயிரக்கணக்கான
பயணிகளுக்குத் துன்பம். யாரும் யாருக்கும் பதில் சொல்லப்போவதும் இல்லை; வருத்தம்
தெரிவிக்கப்போவதும் இல்லை. ஆனால், நமது ஊடகங்களுக்கு இது செய்தி அல்ல. மதுரையைக்
கட்டி ஆளும் 'ரோமாபுரி ராஜா' அழகிரி கையில் பெயிண்ட் ஒட்டினால் அது செய்தி.
வழங்கப்படும் அடையாளங்கள்
என்னைப் பற்றிய மூன்று விஷயங்கள் மனத்தில் விடையின்றி நின்றன. குடும்பத்திலும்
சுற்றத்திலும் இவை பற்றிய கேள்விகள் எழும்போது நான் ஏதேதோ காரணங்கள் சொல்லித்
தப்பித்துக்கொள்வதுண்டு. அவை சரியான விடைகள் அல்ல என்பது எனக்குத் தெரியும். சரியான
விடை கையகப்படவில்லை.
1. எனக்கு ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால், ஓட்டுப்போடுவதைத்
தட்டிக்கழிக்கும் மனநிலையும் உண்டு. நெருக்கடியாக நான் உணர்ந்த மிகச் சில
சந்தர்ப்பங்கள் நீங்கலாக, நான் பொதுவாக ஓட்டளிப்ப தில்லை.
2. தொலைக்காட்சி விளம்பரங்களை என்னால் பார்க்க முடியாது. விளம்பரங்கள் வரும்போது
சானல்களைக் குதித்தாடத் தொடங்கிவிடுவேன். இதனால் குடும்பத்தில் பிரச்சினை.
3. என்னால் ஷாப்பிங் போக முடியாது. நெருக்கடி கழுத்தைப் பிடிக்காத வரை நான்
ஷாப்பிங் போவதில்லை. அப்போதும் அசௌகரியமாக எல்லைக் கோட்டை நோக்கி ஓடுவதுபோலச்
செய்து முடிப்பதுண்டு. ஒன்றைத் தேர்வுசெய்ய எனக்கு 30 நொடிகள் முதல் அதிகபட்சம்
இரண்டு நிமிடங்கள்வரை பிடிக்கும்.
ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும்போது பொறி தட்டியதைப் போல வேறு ஒன்றிற்கு விடை
கிடைக்கும் அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மேற்படி மூன்று விஷயங்கள்
பற்றிய ஒரு தெளிவு நியூயார்க்கர் இதழில் ஒரு கட்டுரை படித்துக்கொண்டிருந்தபோது
மனத்தில் திரண்டது. படித்து நீண்ட நாள்களாகி விட்டதால் அக்கட்டுரை பற்றிய
மேல்விபரத்தை இப்போது தர முடியவில்லை.
n
சமூகம் நமக்கு மூன்று அடையாளங்களை விரும்பி வழங்குகிறது. இந்த மூன்றும் நீங்கலாகப்
பிற எல்லா அடையாளங்களும் நமது பிறப்பின் அடிப்படையிலோ, உழைப்பின் அடிப்படையிலோ நாம்
பெற்றிருப்பவை.
அந்த அடையாளங்கள்:
1. பார்வையாளர்
2. நுகர்வோர்
3. வாக்காளர்
'பார்வையாளர்' என்பது இங்கு மீடியா பார்வையாளரைக் குறிக்கிறது. இதில் உங்கள்
மதிப்பு நீங்கள் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பவரா, நல்ல இசையைக் கேட்டு ரசிப்பவரா
என்பதல்ல. நீங்கள் விளம்பரப் பார்வையாளரா என்பதுதான் முக்கியம். விளம்பரத்தை
நம்புகிறவரா? அதனால் எளிதில் தூண்டப்படுகிறவரா என்பது முக்கியம். விளம்பரத்தால்
தூண்டப்பட்டால் உங்களுக்குச் சந்தையில் அந்தப் பொருளை வாங்கும் பண வசதி உண்டா
என்பது முக்கியம். ஜிஸிறி (ஜிமீறீமீஸ்வீsவீஷீஸீ ஸிணீtவீஸீரீ றிஷீவீஸீts) என்கிற
கணக்கீடுதான் ஒரு நிகழ்ச்சிக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கையையும்
தொகையையும் முடிவுசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுத்த சில
தொலைக்காட்சிப் பெட்டிகளில் பொருத்தப்படும் கருவி வழி அளவீடு செய்கிறார்கள். இவை
சிறுநகர, கிராமப்புற வீடுகளில் பொருத்தப்படமாட்டாது. நகர்ப்புறங்களில்
குப்பங்களிலும் தொலைக்காட்சி இருக்கிறது என்றாலும் ஜிஸிறி கருவி அவற்றில்
பொருத்தப்படமாட்டாது. இப்போது இலவசத் தொலைக்காட்சி பெறுபவர்கள் வீடுகளிலும் இது
பொருத்தப்படும் வாய்ப்பு இல்லை. இவர்களெல்லாம் மதிப்பிற்குரிய பார்வையாளர்கள் அல்ல.
விளம்பரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு உடனடியாக நுகர்பவராகச் சந்தைக்குச்
செல்பவர்தான், அதற்கான பண வசதி கொண்டவர்தான், மதிப்புவாய்ந்த பார்வையாளர்.
அல்லாவிட்டாலும் எல்லாப் பார்வையாளருக்கும் ஒரு குறைந்தபட்ச விளம்பர மதிப்பு உண்டு.
மீடியா விளம்பரங்களைப் பார்க்காதவர்களுக்கு மதிப்பே இல்லை.
வணிக மதிப்பீடுகள் நமக்கு மனமுவந்து வழங்கும் அடையாளம் நுகர்வோர் என்பது.
மார்க்கெட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கும் ஒருவருக்கு இந்த அடையாளம்
வழங்கப்படுகிறது. இதனால் சில உரிமைகளும் கிடைக்கின்றன. இங்கு நம் பிறப்பு சார்ந்த
அடையாளங்கள் எதுவும் பொருட்படுத்தப்படுவதில்லை. நம் உழைப்பு சார்ந்து பெறப்பட்ட
அடையாளங்களுக்கும் மதிப்பில்லை. நம்மிடம் உள்ள வாங்கும் சக்திக்கும்
நாட்டத்திற்கும் மட்டுமே கணிசமான மதிப்பு உண்டு. தமது உரிமைகள் அறிந்து, தமது தேவை
அறிந்து, தேர்ந்தெடுத்து வாங்கும் நுகர்வோரைவிடப் பேராசையில் வாங்குவோருக்கே அதிக
மதிப்பு. மது, புகையிலை போன்ற பொருள்களை வாங்குவது பலருக்கும் ஒரு அடிமைப்
பழக்கமாக, 'அடிக்ஷனாக'வே உள்ளது.
நமது ஜனநாயக அரசியல் அமைப்பு நமக்கு விரும்பி வழங்கும் அடையாளம் வாக்காளர் என்பது.
வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமையாக வலியுறுத்தப்படுகிறது. நாம் ஒரு வாக்காளர்
என்பதால் அரசியல் கட்சிகள் நம்மை மதிக்கின்றன. ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது
மதிப்பைத் தெரியப்படுத்தும் விதமாகப் பல்வேறு சாதனங்களை இலவசமாக அளிக்கின்றன.
பக்கெட், செருப்பு, வேட்டி, சாராயம், சேலை, பணம் என வழங்கி நமது மதிப்பை
உறுதிப்படுத்துகின்றன. இங்கு சிந்தித்து வாக்களிப்பவரைவிட மந்தையாக வாக்களிப்
பவர்களுக்கே அதிக மதிப்பு.
இந்த மூன்று அடையாளங்களும் நமக்கு விமர்சனம் அற்ற மதிப்பை வழங்குபவை. இவற்றை
அணிந்து கொள்வதால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த மூன்று அடையாளங்கள் மட்டுமே
கொண்ட மனிதர்களாக நம்மை மாற்றுவதுதான் உலகமயமாதல் என்கிற பெருந்திட்டத்தின் இறுதி
லட்சியம்.
ரசனை, ருசி, விமர்சனப் பார்வை, விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு, அரசியல் உணர்வு,
கலையுணர்வு போன்றவற்றை வளர்த்துக்கொள்வதே சமூகத்தில் நம்மைத் தகுதிகொண்ட
மனிதர்களாக்குகிறது. மேற்படி அடையாளங்கள் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள நம்மைத்
தூண்டுவதில்லை. மொண்ணையான மனிதனையே அவை விரும்புகின்றன.
மேற்படி அடையாளங்களை நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், ஆற்றோட்டம் அதன் திசையில்
நம்மை அடித்துச் செல்வதுபோல இந்த அடையாளங்கள் நம்மை இழுத்துச்செல்ல நாம்
அனுமதிக்கக் கூடாது. ஒரு குடிமகனாக நமது செயல்பாடுகள் எதிர்நீச்சல் போடுவதாக இருக்க
வேண்டும். அறம், விழிப்புணர்வு, பணிய மறுக்கும் செயல்பாடு ஆகியன சமூக மனிதனாக
நம்மைத் தகுதிப்படுத்தும் விழுமியங்கள்.
n
தேசிய நாடகப் பள்ளி, காலச்சுவடு அறக்கட்டளை, தெ.தி. இந்துக் கல்லூரி இணைந்து
நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற மாணவர்களுடன் 10.12.07 அன்று
நடத்திய உரையாடலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்.
|