|
காலச்சுவடு அறக்கட்டளை, மாஃபா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், புக் பாயிண்ட் ஆகியவை
இணைந்து நடத்தும் மாதாந்திர நிகழ்வான அற்றைத் திங்களின் அக்டோபர் நிகழ்ச்சி
அம்மாதம் 28ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அந்நிகழ்வில் பத்திரிகையாளர்,
புகைப்படக் கலைஞர் சதானந்த் மேனன் கலந்துகொள்ள இருந்தார். அன்றைய கடும் மழை
காரணமாகக் கடைசி நேரத்தில் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. நல்ல விஷயங்களை இயற்கை
நினைத்தால்கூடத் தடுத்துவிட முடியாது என்பதற்கேற்ப அதே நிகழ்வு கடந்த பிப்ரவரி
24ஆம் தேதி புக்பாயிண்ட் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டது.
சதானந்த் மேனன் குறித்த அறிமுக உரையை அரவிந்தன் வாசித்தார். மேனன், அரசியல்,
கலாச்சாரம் பற்றி எழுதிவருபவர். த எகனாமிக் டைம்ஸ் இதழின் கலைப் பிரிவு
இயக்குநராகப் பணியாற்றிய இவர், தற்போது சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில்
கலை மற்றும் கலாச்சார இதழியல் குறித்து பாடம் எடுக்கிறார். பல நகரங்களில்
கண்காட்சிகளை நடத்தியுள்ளார். பல நூல்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். கடந்த 20
ஆண்டுகளாக சம கால நடனக் கலைஞர் சந்திரலேகாவின் மேடை நிகழ்வுக்கான ஒளி அமைப்பை
வடிவமைத்து இயக்கியவர். 1995இல் நவீன வடிவமைப்பு குறித்த வாராந்திர பக்கத்தை த
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் உருவாக்கி நடத்திவருகிறார். ஒளியும் அசைவுகளும் என்ற
முதல் சர்வதேசக் கருத்தரங்கு, பயிலரங்கைப் புதுதில்லியில் 2001இல் ஒருங்கிணைத்தவர்.
பெட்டர் ஃபோட்டோக்ராஃபி எனும் மாதாந்தர இதழின் ஆசிரியர் குழு ஆலோசகராக
இருந்துவருகிறார். இவ்விதழிலும் சமகாலீன என்னும் மலையாள (மாதமிருமுறை) இதழிலும்
பத்தி எழுதிவருகிறார். இலக்கியம், நாடகம், நடனம், அழகியல், மனித உரிமைகள்,
சூழலியல், ஊடகங்கள், கலாச்சார அரசியல், பாலியல் பிரச்சினைகள், வகுப்புவாதம்,
கற்பித்தல் ஆகியவை குறித்த சுமார் 500 கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரைகள்
சமர்ப்பித்திருக்கிறார் மேனன். இத்தகு தகவல்களை உள்ளடக்கியிருந்தது அரவிந்தனின்
உரை. பின்பு, ப்ரஸன்னா ராமஸ்வாமியைச் சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார் அவர்.
எண்பதுகளின் கடைசியிலிருந்து சதானந்த் மேனன் தனக்கு அறிமுகமானவர், நீண்டகால நண்பர்,
எனத் தொடங்கிக் கலை, கலாச்சாரம் போன்ற விஷயங்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம்
எனும் நிலையை முற்றாக மாற்றியவர் மேனன், கலை சார்ந்த அரசியல் முக்கியச்
செயல்பாடானதற்கு மேனன் த எகனாமிக் டைம்ஸில் நடத்திய பக்கம் உதவியாயிருந்தது
போன்றவற்றைக் குறிப்பிட்டார். அப்பக்கத்தில் பல ஆண்களும் பெண்களும் எழுதியதையும்
பலவிதமான சிந்தனைகள் அதில் எழுத்துக்களாக உருமாறினதையும் சொன்னார். மேக்ஸ் முல்லர்
பவனில் அவர் பணியாற்றியபோது மேனனை அழைத்துக் கண்காட்சி நடத்தியதை நினைவு
கூர்ந்தார்.
1968இல் தான் சென்னைக்கு வந்ததாகவும் வட இந்தியாவில் பல பயணம் மேற்கொண்டிருப்பதால்
பேசுவதற்கு அவருக்கு வசதியான மொழி ஹிந்தி என்றும் குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்
மேனன். ஆங்கிலமும் சரளமாகப் பேசினார். மலையாளம் அறிந்தவர். தமிழிலும் பேசினார்.
அடையாளம் என்ற பெயரில் ஒரு சிறு எல்லைக்குள் சுருங்கிவிடாமல் பரந்து விரிந்த உலகைப்
பற்றி அறிந்து கொள்ள பன்மொழிப் பரிச்சயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். படிக்கும்
போது தான் ஓட்டப் பந்தயத்தில் பெற்ற பதக்கங்களைப் பற்றிய நினைவை மகிழ்ச்சியுடன்
பகிர்ந்து கொண்டார்.
படித்து முடித்ததும் சி.பி. சேஷாத்திரி ஆசிரியராக இருந்த காலத்தில் இந்தியன்
எக்ஸ்பிரஸில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததாகச் சொன்னார். தமிழ் மொழியிலும் ஆங்கில
மொழியிலும் ஆசிரியர் பெற்றிருந்த புலமை பற்றிச் சிலாகித்தார்.
தான் பணியில் சேர்ந்த உடனே பார்க்க நேர்ந்த இரத்த வங்கியில் தானம் கொடுப்பவர்
பற்றிய அறிக்கை குறித்துக் கூறினார். அந்த அறிக்கையில் இரத்த தானம் கொடுப்பவர்களின்
எண்ணிக்கை திங்கள், செவ்வாய், புதன் ஆகியதினங்களில் குறைவாகவும் வியாழனில்
அதிகரித்து வெள்ளியன்று மிக அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமைகளில் தங்கள் இரத்தத்தைத் தானமாக வழங்கி அதில் கிடைத்த பணத்தைக்
கொண்டு எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்பது
அறியப்பட்டிருக்கிறது. ஒரு பாட்டில் இரத்தத்திற்கு ஐந்து ரூபாய்
அளிக்கப்பட்டிருக்கிறது அப்போது. இதை எம்ஜிஆரும் ஊக்குவித்திருக்கிறார். தனது
ரசிகர் மன்றத்தின் மூலம் தனது படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவருக்குப்
பரிசுகள் அவர் அளித்ததாகவும் மேனன் வேதனையுடன் குறிப்பிட்டார். அது குறித்து அவர்
எடிட் செய்த அறிக்கைக்கு 'மூவிஸ் அண்ட் தெய்ர் ப்ளட்ஸ்' எனத் தலைப்பிட்டதைக்
குறிப்பிட்டார். தமிழர்களின் திரைத் துறை மயக்கம் குறித்த அரசியல் பற்றி ஆராய
இந்தச் சம்பவம் காரணமாய் அமைந்ததாய்க் குறிப்பிட்டார்.
அப்பாவித் தமிழன் யார் யாருக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் இரத்தத்தைச்
சிந்துகிறான். குருட்டு விசுவாசத்தினால் சிறு சிறு சலுகைகளுக்காகத் தன்னை
வஞ்சிப்பவர்களிடம் மயங்கிக் கிடக்கிறான் என நினைக்கும்போது,
"தோத்திரங்கள் சொல்லியிவர்
தாம் - தமைச்
சூது செயு நீசர்களைப்
பணிந்திடுவார்"
எனும் பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன.
அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் சேர்ந்து பதினான்கு மாதங்களுக்குப் பிறகு நெருக்கடி
நிலை பிரகடனப்படுத்தப்பட்டது பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்
சமயத்தில் அவர்கள் ஏற்படுத்திய 'நெட்வொர்க்' குறித்துத் தெரிவித்தார். கருத்துச்
சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் அது. வரலாற்றில் தனக்கெதிரான சிறு பதிவையும்
அதிகார வர்க்கம் விரும்புவதில்லை. தனது அதிகாரத்தால் எதிர்க் குரலை முடக்கத்
துடிக்கிறது. அஞ்சல் அட்டைகளில் 'பொலிடிக்கல் மெஸேஜ்' பரிமாறிக்கொண்டதைக்
குறிப்பிட்ட மேனனின் செயல் உண்மையைப் பதிவுசெய்ய உரிய இடம் மறுக்கப்படும்போது
தனக்குக் கிடைக்கும் சிறிய இடத்திலும் உண்மையைப் பதிவுசெய்யப் பத்திரிகையாளன்
முயல்வான் என்பதை உணர்த்தியது. உள்நாட்டு அஞ்சல் எனில் பிரித்துப் பார்க்கப்படும்,
அஞ்சல் அட்டை எனில் அதிலென்ன முக்கியத்துவம் இருக்கும் என அலட்சியப் படுத்தப்படும்.
அதைப் பயன்படுத்திக்கொண்டமையைக் குறிப்பிட்டார். நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஊடக
வரத்து அதிமானது பற்றிக் குறிப்பிட்டார் மேனன். 1990களில் அனைத்துப்
பத்திரிகைகளிலும் Arts Pages
இடம் பிடித்திருந்தன. 1994 - 95 இல் அந்தப் பகுதிகளை எல்லாம் பொழுது போக்குப்
பக்கங்கள் ஆக்ரமித்துக் கொண்டன, இந்தச் சூழ்நிலையில் அவர் 1995இல் எக்னாமிக்
டைம்ஸில் கலைக்கான பக்கத்தை ஒதுக்கித் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.
அடுத்ததாக அவர் எடுத்த புகைப்படங்கள், அவர் ஒழுங்குபடுத்திய மேடை ஒளியமைப்புக்
காட்சிகள் குறித்த 'Slide Show' காண்பிக்கப்பட்டது. காலை 5:30 மணிக்குச்
சென்றுவிட்டு இரவு 7:30க்கு வீடு திரும்பும் தீப்பெட்டித் தொழிற்சாலைக் குழந்தைகள்
குறித்த புகைப்படங்களும் அரசியல் தலைவர்களின் வானளாவிய கட் அவுட்களும் அடிப்படை
வசதிக்குத்திணறும் மக்களை ஒரு புறமும் சொகுசில் திளைக்கும் ஆளும்வர்க்கத்தை
மறுபுறமும் நிறுத்துகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு படம் 'குடும்பத் தலைவன்
திரைப்படச் சுவரொட்டியின் முன்னே தட்டுமுட்டுச் சாமான்களோடு படுத்துக்கிடக்கும்
நடையோரக் குடியானவன்'. சிந்திக்கத் திராணியற்று மயக்கத்தில் வீழ்ந்துகிடக்கும்
தமிழன் எப்போது விழித்துக் கொள்வானோ? எனத் தோன்றியது அப்புகைப்படத்தைப் பார்க்கும்
போது.
நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்,
மேனன். அன்றைய மாலைப்பொழுதில் அறிவார்ந்த சிந்தனாவாதியைச் சந்தித்த மகிழ்ச்சியில்
கூட்டம் நிறைவுற்றது. |