|
சாதி, தீண்டாமை, தீண்டப்படாதார் குறித்த வரலாற்று நம்பிக்கைகளில் பெரும்
மாற்றங்கள் நிகழ்ந்துவரும் வேளை இது. இதனூடாகத் தங்களுடைய போராட்ட வாழ்வு
மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திற்கான தங்களின் கொடைகளையும்கூடக் கண்டறிந்து
விளக்கும் நடவடிக்கைகளில் தலித் அறிவாளிகள் பலரும் ஈடுபட்டுள்ளனர். வரலாறு குறித்த
இத்தகு அக்கறையை விரிவாக்கும் வகையில் தமிழகத்தில் தலித் வரலாற்று மாதம் எனும்
திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தலித் அறிவாளிகளால் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பின
வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று
மாதமாக அறிவித்தனர். வரலாற்று மாத நிகழ்வைச் சார்ந்தும் சாராமலும், தலித் வரலாறு
குறித்த தேடல்கள் நடந்துவருகின்றன. இந்த ஆண்டு மதுரை தலித் ஆதார மையம் நடத்திய
கலைவிழா மற்றும் கருத்தரங்கின் மையப்பொருளும் தலித் வரலாறு பற்றியதே.
தலித் வரலாற்று மாத நிகழ்வு ஏப்ரல் 19ஆம் நாள் சென்னை அம்பேத்கர் ஆய்வு மாணவர்
வட்டம் என்ற புதிய அமைப்பு ஒன்றினால் சென்னை அய்க்கப் அரங்கில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கம், ஆவணங்களின் கண்காட்சி, ஆவணப்படத் திரையிடல் ஆகியவை இந்நிகழ்வில்
இடம்பெற்றன. நூறாண்டுகால தலித் அரசியல் வரலாற்றை விளக்கும் துண்டறிக்கைகள்,
புகைப்படங்கள், சான்றிதழ்கள், சிறு வெளியீடுகள் போன்ற 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரி. செழியன் தயாரித்த அயோத்திதாசர் என்னும் ஆவணப்
படத்தை ஞான. அலாய்சியஸ் வெளியிட, சி. லட்சுமணன் பெற்றுக்கொண்டார். மாலை 4.00
மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கிற்கு, பி. பொன்னுசாமி தலைமைவகித்தார். இடைக்காலக்
கல்வெட்டுகளில் தலித் மக்கள் குறித்த பதிவுகளைப் பற்றிப் பேராசிரியர் கு.
பாலமுருகன் பேசினார். சாதி சோழர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் மாறிவந்த
முறைமையை விளக்கிப் பேசிய அவர் புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைத் தம்
கருத்துகளுக்குச் சான்றாகக் காட்டினார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்
சட்டமன்ற வாதங்களில் பங்கேற்ற தலித் பிரதிநிதிகளின் வாதங்களைக் கோ. ரகுபதி
விவரித்தார்.
தாமிரபரணி 17 பேர் படு கொலையை அச்சு ஊடகங்கள் சித்தரித்த விதத்தினையும் அதில்
ஆங்கில ஊடகங்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இருந்த வேறுபாட்டையும் ரத்தின மாலா
விவாதித்தார். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே திருநெல்வேலி மாவட்டம்
திருப்பணிக்கரிசல்குளம் என்னும் ஊரில் தலித்துகள் அடைந்த அரசியல்
விழிப்புணர்ச்சியையும் அது அம்மக்களிடமும் பிற சமூகத்தினரிடமும் ஏற்படுத்திய
மாற்றத்தினையும் தன் உரை மூலம் விளக்கினார் ஜே. பாலசுப்ரமணியம்.
வெகுமக்கள் நினைவுகளோடு மட்டும் நின்று பதிவுசெய்யப்படாமல் போகிற சாதி மறுப்புப்
போராளிகளைப் பற்றிப் பேசிய ஸ்டாலின் ராஜாங்கம் வஞ்சி நகரம் என்னும் ஊரில் மக்களால்
நடுகல் தெய்வமாக வணங்கப்படுகிற கந்தன் என்பவரின் சாதி ஒழிப்புப் போராட்டத்தையும்
அதில் வெற்றிபெற்ற அவர் கொல்லப்பட்ட விதத்தினையும் சொன்னார்.
இறுதியாக ஞான. அலாய்சியஸ் வரலாற்றுப் பார்வைகளில் தலித்துகளின் தலையீட்டினால்
ஏற்பட்டுவரும் மாற்றங்களை வரவேற்றுப் பேசியதோடு வரலாறு குறித்த இத்தகைய அக்கறைகளும்
நிகழ்வுகளும் தொடர வேண்டும் என்று பேசினார். நுண் வரலாறு, வட்டார வரலாறு எனும்
அம்சங்களைக் கவனப்படுத்திய இக்கருத்தரங்கம் முக்கியமான ஒன்று. இந்த அரங்கில்
எழுத்தாளர்கள், மாணவர்கள், பல்வேறு இயக்க அபிமானிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர்
பரவலாகக் கலந்துகொண்டனர்.
|