|
பெறற்கரிய பேறாக மனித நலனில், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், இந்தச்
சமுதாயத்தில் வாழுகின்ற இல்லாதோர், இயலாமையில் உழல்வோர்மீது அக்கறைகொண்ட கவிஞர்
கனிமொழி, மாநிலங்களவையின் உறுப்பினராகக் கடமை ஆற்றக்கிடைத்த வாய்ப்பு நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது உண்மை. அந்த அவையில் அவர் ஆற்றவிருந்த கன்னி உரை குறித்து
என் போன்றோர் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் மேலானவை; ஆனால், குடும்ப நிறுவனம்
வரையறுக்கிற 'சுதந்திர' வெளிக்குள் மட்டுமே பெண்ணால் இயங்க முடியும் என்கிற
புரிதலிலிருந்துதான் கவித்துவ ஆளுமை கொண்ட கனிமொழியையும் நாம் பார்க்க நேர்கிறதா?
அழிவுக்கு வித்தான அணு ஆற்றல் தொழில்நுட்பத்தின் வழி நமது நாட்டின் மின்னாற்றல்
தேவையை நிறைவுசெய்துவிட முடியும் என நம்புவதும் அதற்கு உதவியாகவே அமெரிக்காவுடன்
123 ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதனை விரைந்து அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற
ஆர்வமும் நிரம்பிய அவருடைய மாநிலங்களவை உரை அவரை ஒரு தேர்ந்த அரசியல் தொழில்நுட்பம்
வாய்ந்தவராக வெளிப்படுத்தியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை அது ஒரு தவிர்க்கவியலாமை
என்று எண்ணிக் கொள்வதே நமக்கு விருப்பமாக இருக்கிறது.
உரையின் தொடக்கமே "முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின்
கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்"
என்பதாக இருக்கிறது. ஆக, இந்திய அரசாங்கமும் அதனை ஆதரிக்கின்ற திமுக ஆட்சியும்
விரும்புகிற உரையைத்தான் தான் தயாரித்திருப்பதாக முதலிலேயே அறிவித்தாலும் அந்த
உரையை நாட்டு மக்கள் இவருடைய பிற ஆளுமைப் பண்புகளுடன் இணைத்தே புரிந்துகொள்ள
முயல்கின்றனர்.
"நமது நாட்டிற்கெனச் சுதந்திரமான இராணுவச் சார்புடைய ஒரு அணுசக்தித் திட்டத்தைக்
கடை பிடிக்கவும் மேற்சொன்ன ஒப்பந்தம் வழிவகுக்கும் என நானும் என் கட்சியும்
உறுதியாக நம்புகின்றோம்"
இந்த நம்பிக்கை 'ஆட்சி அதிகாரம்' என்னும் அமிர்தம் கலந்தது. எனவே, எஞ்சிய விளிம்பு
நிலை மக்கள் பற்றிய அக்கறை என்னும் வெளியைப் பார்க்கும் சாவகாசம் அற்று, கட்சி
அறைகளினுள் பருகப்பட்டதாகும். தொலைநோக்கின்றி உடனடித் தேவையினடியாக ஏற்றுக்கொண்ட
உணவு இது.
கவிஞர் பிறப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே, சுதந்திரமான இராணுவக் கொள்கை,
பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் நமது
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சீனப் பிரதமர் சூஎன்லாய், எகிப்து அதிபர் நாசர்
ஆகியோரும் இன்னும் சில தலைவர்களும் முயன்றுதான் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை
உருவாக்கினார்கள் (1955). இந்த முயற்சிகளின் தொடக்க காலத்திலேயே அப்போதைய
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸர்முகமத் ஜாபருல்லாகான் இந்த முயற்சியை
இகழ்ந்துரைத்தார். சோவியத் யூனியன் - அமெரிக்கா என்ற இருபெரும் வல்லரசுகள் தமக்குள்
உருவாக்கிய மேலாதிக்கப் போட்டியில் யார் பக்கமும் சார்ந்து தம் சுதந்திரத் தன்மையை
இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் உருவான அணிசேர்க்கையை 0 + 0 + 0 + 0 = 0 என்று
பகடி செய்தார். அவருடைய உள்மன ஆசை அமெரிக்காவைச் சார்ந்து இயங்க வேண்டும் என்பதாக
அப்போது இருந்தது. (Partha. S. Ghosh - Frontline. Oct. 2006)
இந்திய விடுதலைக்குப் பின் நமது வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அடிப்படை
அரசியல் அலகாக 'அணிசேராக் கொள்கை'யை மதித்தார் நேரு. நேருவுக்குப் பின் வந்த
இந்திராகாந்தி அம்மையார் காலத்திலும் நமது வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தில்
நேருவின் அந்த விருப்பம் தங்கியிருந்தது என்பதை உலகம் அறிந்திருந்தது. கால நகர்வில்
சோவியத் யூனியன் - அமெரிக்கா பனிப்போர் முடிவுக்கு வந்ததும் உலகின் முதல் சோசலிச
அமைப்பின் தகர்வும் உலக அரசியல் வெளியில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழக் காரணமாயின.
இதன்விளைவாக இந்திய வெளியுறவுக் கொள்கையும் பல புதிய சவால்களைத் தொடர்ந்து
எதிர்கொள்ள நேர்ந்தது. நான்கு தசம ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த அணிசேராமைக்
கொள்கை நீர்த்துப் போகத் தொடங்கியது. அதன் பின்னர் வந்த ஆட்சிப் பொறுப்பில்
இருந்தவர்களாலும்தாம்.
உலக அளவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான சொல்லாடல்களில் மயங்கி மரபு வழியாக
நாம் வெளியுறவுக் கொள்கையில் கடைபிடித்துவந்த சிறிதளவு அறத்தையும்
தொலைத்துவிடும்படி நம்மை வற்புறுத்தின புதிய உறவுகள். அமெரிக்காவின் மேலாதிக்கத்தை
மறுக்கவியலாத சட்டகத்தினுள் தன்னைப் பொருத்திக்கொண்டது இந்தியா. 123 ஒப்பந்தம்
என்பது அணு ஆற்றல் தொடர்பான எரி பொருள், அது சார்ந்த தொழில் நுட்பம் என்பதோடு
முடிந்து விடுவதல்ல என்பதற்கு ஒன்றிரண்டு நிகழ்வுகளைச் சுட்டலாம்.
1995-2004 காலகட்டத்தில் ஐ.நா.வில் பல்வேறு காரணங்களை முன்வைத்து நிகழ்ந்த
வாக்கெடுப்புகளில் 80 விழுக்காடு அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்தியா
வாக்களித்துள்ளது. செப். 5, 2005இல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த
வாக்கெடுப்பில் நியாயத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது, அதாவது அமெரிக்காவுக்கு
ஆதரவாக. அணுகுண்டு வீசாமலே ஈராக்கில் 3 லட்சம் மக்கள் மடிய நேர்ந்த அமெரிக்க
நடவடிக்கையைக் குற்றம் சொல்லாமல் அமைதி காக்கிறது புத்தர் பிறந்த நாடு.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சற்றே நோய்க்கூறு கொண்டிருந்த நம்முடைய உறவு 123
ஒப்பந்தத்தினால் மேலும் அடிவாங்குவது உண்மை. இரஷ்யா, மேற்காசிய நாடுகளுடன் நாம்
கொண்டிருந்த உறவில் கீறல் விழுந்திருக்கிறது. தெற்காசிய நாடுகள் முழுவதும் 123
ஒப்பந்தத்தை அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கின்றன. அமலாவதற்கு முன்பாகவே
இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த ஒப்பந்தம் எனச்
சொல்கின்றன நிகழ்கால நடைமுறைகள். எடுத்துக்காட்டாக, அண்மையில் அமெரிக்க வெளியுறவுச்
செயலர் கான்டலிஸா ரைஸ் அம்மையார் தெரிவித்த கருத்து (ஆணை) ஒன்றினைக் காணலாம்.
"புதுடில்லி பழைய முறையில் சிந்திப்பதையும் பழைய வழிகளில் செயல்படுவதையும்
விட்டுவிட வேண்டும்..."
(அமெரிக்க - இந்திய வர்த்தகக் கழக உரை)
"இன்னமும்கூடச் சிலர் வெளியுறவுக் கொள்கையில் 'அணி சேராமை' பற்றிப்
பேசிக்கொண்டிருப்பதாக அறிகிறேன். அது (அணி சேராமை) தன் அர்த்தத்தை இழந்துவிட்டது"
(கான்டலிஸா ரைஸ், Finance Times London, Aug 3, 2007)
அறிவுசார் வலிமையும் ஆதிக்க வெறியும் கொண்ட யூத வெறியும் சமகால உலகைப் பார்க்கத்
தவறி, குருதியில் நனைந்து களிக்கிற இசுலாமிய அடிப்படைவாதமும் ஒன்றுக்கொன்று
குறைந்ததல்ல. அத்தகைய யூதவெறி கொண்ட இஸ்ரேலுடன் இந்தியா இராணுவ ஒப்பந்தம்
செய்துகொள்கிறது. ஏனெனில். இஸ்ரேலையும் அமெரிக்காவே வழிநடத்துகிறது.
நமக்குச் சுதந்திரமான இராணுவக் கொள்கையை உருவாக்கிக்கொள்ள 123 ஒப்பந்தம் உதவுமென்று
நம்புகிற கவிஞரின் சிந்தனைக்குச் சில தகவல்கள்:
இந்த ஒப்பந்தத்தை வழி நடத்தக் கூடிய 'ஹைடு சட்டம்' கூறுகிறது:
"ஈரான் விஷயத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்திசைவுடன்
நடந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் ஒப்பந்த நாடு ஒத்து இயங்குகிறதா என்பது
குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஆண்டுக் கொருமுறை அமெரிக்க காங்கிரசுக்கு அறிக்கை தர
வேண்டும்"
(Henry J Hyde - Us - India - Peaceful
Atomic energy co operation Act of 2006
public law 109-401, Now on the Hyde Act Sec 104 g (z) E (i)
தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியாவின் கடற்படை வலிமையானது. மேலும்
இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ நிலையை வலிமையாக்கிக்கொள்வதற்கும்
இப்பிராந்தியக் கடற்பரப்பில் எளிதாக நுழைந்து, இந்த நாடுகளின் மீது இராணுவரீதியான
மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கவும் இந்தியா உதவ முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
இப்பகுதியின் சர்வதேசக் கடற்பரப்பில் பயணிக்கும் எந்தக் கப்பலையும் (தனக்குப்
பிடிக்கவில்லையெனில்) அணு ஆயுதங்கள் கொண்டு செல்வதாகக் கூறி, தாக்கிக் கைப்பற்றும்
அதிகாரம் ஒப்பந்தத்தின் வழி அமெரிக்காவுக்கு உருவாகிறது.
எல்லா நாடுகளிலும் 'ஹிஷி மார்க்' ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கப் பல்வேறு இராணுவ,
பொருளியல் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர் பிரதமர் மன்மோகன் சிங்கும்
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷ§ம். இப்படியாக ஜனநாயகப் பயிரை இருவரும் வளர்க்க ஆண்டுக்கு 10
மில்லியன் டாலர்களை அர்ப்பணிக்கிறார்கள்.
ஆசிய நாடுகளிடையே தன்னை அதிகாரியாக உயர்த்திக்கொள்ளும் ஆசையன்று இந்திய
ஆட்சியாளர்களின் ஆழ்மனத்துள் தங்கியிருக்கிறது என்பதையும் நாம் 'பெருமையுடன்'
கூறிக்கொள்ள முடியும். சீனா நமக்குப் பெரும் சவாலாக நிற்குமோ என்ற சங்கடமும் உண்டு.
எவ்வாறாயினும் நம்மிடமும் கொஞ்சம் அணுகுண்டுகள் இருந்தால்தான் 'எதிரிகள்'
அஞ்சுவார்கள். அதற்கு முக்கியமாக புளுட்டோனியம் தேவை. சில அணு உலைகளைக் கட்டி
இயக்கினால் அது எளிதாகக் கிடைக்கும். (ஒரு கொசுறு தகவல்: 1/2 கிலோ
புளுட்டோனியத்தால் உலகில் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்கிவிட முடியும்.)
தற்சமயம் நம்முடைய மின் ஆற்றல் தேவையில் சுமார் 3 விழுக்காடு என்ற அளவில்
கிடைத்துவரும் அணுமின் ஆற்றல் இந்த உலைகளை எல்லாம் வெற்றிகரமாகக் கட்டி முடித்து
இயக்கும்பொழுது (2020இல்) 7 விழுக்காடாக உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும்
இருக்கிறது.
கவிஞரின் நகைச்சுவை உணர்வை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்பதற்கு இரண்டு
மேற்கோள்களைக் குறிப்பிட முடியும்.
(1) ". . . இதில் த்ரீ மைல் ஐலண்ட் பேரழிவு நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க
முடியாத பயங்கரம் ஆகும் . . . அந்நிலையிலும் அதிலிருந்து வெளியான ஆபத்தான அணுக்
கதிர்கள் பாதுகாப்பு மிக்க அந்த உலையின் சுவர்களைத் தாண்டி வெளியேறவில்லை. எனவே
யாருக்கும் தீவிரமான காயங்கூட உண்டாகவில்லை."
உண்மையில் 1979ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் இருந்த
அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட கதிரியக்க
விளைவுகளினால் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் புற்றுநோய் கண்டு இறந்ததாக அந்த
நாட்டு அரசாங்கமே அறிவித்தது.
1986இல் சோவியத் யூனியனில் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு லட்சத்து
முப்பத்தையாயிரம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஏற்பட்ட
நெருப்பை அணைக்கவும் உலைக்கு மூடு விழா நடத்தவும் 40 டன்களுக்கும் அதிகமான 'போரான்
கார்பைடு' உலோகத்துகள்கள், 800 டன்கள் சுண்ணாம்புக் கல், 2400 டன்கள் ஈயம், 1000
டன்கள் காங்ரீட் கலவை போன்றவற்றை உலையின் மீது கொட்டினார்கள். நிலத்தடியில்
கதிரியக்கம் பரவுவதைத் தடுக்க அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தைப்
பிளாஸ்டிக் தகடுகளால் மூடினார்கள். ஆக, கோளாறு, விபத்து என்றால் உலைகளை மூடுவதும்
பெரும் பொருட்செலவு. இந்த விபத்துக்குப் பின்னர் இந்த செர்னோபில் அணு உலை மற்றும்
சில உலைகளையும் வடிவமைத்த அறிவியலாளர் 'வாலெரி லெகசோவ்' தற்கொலை செய்துகொண்டார்.
அதற்குச் சில நாள்கள் முன்னர் அவர் அளித்த பேட்டியன்றில் "அணுசக்தி என்பதை
அழிவுக்காகப் பயன்படுத்தினாலும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினாலும் அதன் அபாயம்
ஒன்றுதான்" என்று கூறியிருந்தார்.
நகைச்சுவை (2) "இந்த ஒப்பந்தம் நம்நாட்டின் வளர்ச்சிக்கான 300 மில்லியன் மக்களை
வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தல், பாலின மற்றும் ஜாதிப் பாகுபாடு, கிராமப்
புறத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான ஒரு
கருவியாகவே கருதிவந்துள்ளனர்"
தண்ணீர் தொடர்பான நோய்களினால் ஆண்டுக்கு 40 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். உலகில்
240 கோடி மக்களுக்குச் சுகாதார வசதி இல்லை. ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மக்களே
மிகுதி. பெர்ஸிய மொழியில் இந்துஸ்தான் என்றால் தண்ணீர் நிறைந்த நாடு என்று பொருள்.
இங்கே ஒரு பகுதியில் வறட்சி, பிரிதொரு பகுதியில் வெள்ளப் பெருக்கு. ஆயிரக்கணக்கில்
உயிர் இழப்பு, உடமை இழப்புகள். நமது மக்களில் பெரும் பகுதியினருக்குப்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது பத்திரிகைகளில் வாசிக்கின்ற சொற்றொடர் என்பதற்கு
மேல் அர்த்தம் தருவதில்லை. அரைப்படி தண்ணீரைப் பன்னிரெண்டு ரூபாய் என்று பன்னாட்டு
நிறுவனங்கள் விற்று இந்தியர்களுக்கு 'சேவை' செய்வதை இந்தப் 'பாமரர்கள்' அறிந்து
என்ன பயன்!
இந்திய மண்ணில் ஆண்டுக்கு 1 லட்சம் டன்களுக்கும் மேலாக உயிர்கொல்லி மருந்துகளைத்
தூவுகின்றனர். இதனால் பல புதிய புதிய நோய்கள், அதற்கும் அவர்களே (Mncs) மருந்துகள்
தருகிறார்கள். அதிக விலை தந்து வாங்க முடியாமல் பலர் 'காலனூர்' போய்ச் சேர்வது
குறித்துப் பலருக்கும் தெரியாது. ஏனெனில் அவை 'இயற்கை மரணங்கள்'. கல்வியோ ஏழைகளின்
கனவு. பலகோடிப் பேருக்கு வேலையில்லை. வேளாண்மை சீரழிந்துவருகிறது. ஆனால் 'நிஞிறி'
என்று ஏதோ உயர்ந்துகொண்டே வருகிறதாம். அந்நியச் செலவாணிக்கு அளவே இல்லையாம்.
(தேசத்தைவிற்றால் பணம் இந்திய ரூபாயிலா கிடைக்கும்!) இத்தகைய உண்மை நிலவரத்தைச்
சார்ந்து தீர்வு என்னவென்று யோசிக்காமல், சர்வதேசச் சட்டங்களுக்கும் மே'GDP' லாகத்
தன்னுடைய சட்டத்தையே மதிப்புள்ளதாக்க முயலும் அமெரிக்காவை ஆதரித்தே ஆக வேண்டும்
என்று முடிவெடுப்பதற்கு நமது சார்புகள் நம் கொள்கைகளைச் சார்ந்து இருப்பதே காரணம்.
"சில சமயங்களில் நமது சார்புகள் நம் கொள்கைகளைச் சார்ந்து உள்ளனவே தவிர உண்மை
நிலவரத்தை அல்ல" என்று கனிமொழி தன் உரையில் கூறியிருப்பது சத்தியமன்றி வேறென்ன...?
n
நன்றி: Epw vol. xLII no: 35
(ஜனகப்ரியா முன்னர் வெளிவந்த இலக்கிய வெளி வட்டம் இதழின் ஆசிரியர்.)
|