Google   www kalachuvadu.com

பதிவு: மீண்டும் காகங்கள், நாகர்கோவில், 27.11.2007
'நாங்கள் நல்ல தமிழில் பேசும் பிள்ளைகள்'
மா. சுப்ரமணியன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சை. பீர்முகம்மது உரையாற்றிய 'மீண்டும் காகங்கள்' சிறப்புக் கூட்டம் (27.11.2007) புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பாக இருந்தது. இலக்கியமும் வாழ்வும் பிரிக்க முடியாதவை. இணைந்தே இருப்பவை. எனவே 'மலேசியத் தமிழ் இலக்கியம்' என்று தலைப்பு இருந்தாலும் அவரது உரையில் வெளிப்பட்டது அம்மக்களின் வாழ்க்கையே!

மலேசியாவும் குறிப்பாக அங்கு வாழும் தமிழர்களும் இன்று செல்வச் செழிப்புடன் இருந்தாலும் அவர்களது கடந்த காலம் இருட்டாகவே இருந்தது என்று சை. பீர்முகம்மது தமது உரையைத் தொடங்கினார். மலேசியா இன்று ஒரு 'சிறு ஆசியா'. இங்கே பல்வேறு ஆசிய நாட்டினர் வாழ்ந்துவருகின்றனர். தமிழர்களின் தனியடையாளமாகத் தமிழ் மொழியுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்' எனத் தமிழின் பரப்பைத் தமிழகம் குறுக்கிக்கொண்டாலும், தமிழ் இன்று தனது எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு 80 நாடுகளில் இலக்கியம் படைக்கும் அளவில் விரிந்து பரந்து உள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பல்லாண்டு காலமாகவே தமிழிலக்கியத் தளத்தில் இயங்கிவந்தாலும், தனித்த அடையாளமும் அங்கீகாரமும் இல்லாமல் தாயன்பு வேண்டி ஏங்கி, வாடி வளர்ந்துவரும் குழந்தைகள்போல் உள்ளன. தாய்நாட்டுத் தமிழ் இலக்கியம் 80 நாடுகளிலும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வெளியே உருவாகும் தமிழ் இலக்கியம் பற்றி இங்குள்ளோர் அறிந்திருக்காதது ஒரு பெருங்குறை. தெரிந்தவர்களும் அக்கரை இலக்கியம் குறித்துப் பேசுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு மலேசியாவில் தமிழ் பேசப்படுகிறது என்பதே வியப்பளிக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், குறிப்பாக அயல்நாட்டுத் தமிழ்த் துறை சார்ந்தவர்கள்கூட, மலேசியாவிலிருந்து தமிழ்ச் சிறுகதைகளும் நாவல்களும் வெளியாகின்றன என்ற செய்தியைக் கேட்டதும் வியப்படைகின்றனர்.

இதனைப் போக்கும் விதத்தில் 93 மலேசியப் படைப்பாளிகளின் எழுத்துக¢களை வேரும் வாழ்வும் என்னும் தலைப்பில் 3 தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன் என பீர்முகம்மது பெருமையுடன் கூறினார். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் காலனியாட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் மலேசியாவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யத் தமிழர்களைக் கூட்டிச் சென்று குடியமர்த்தினர். அவர்களை அடிமைகள் போலவே ஆங்கிலேயர்கள் நடத்தினர். அவர்கள் சிறிய குடிசை போன்ற வீடுகளில் போதிய வசதிகள் இன்றி வாழ்ந்தனர். உடல் வலி தீரக் கள்ளும் மன வலி நீங்க மாரியம்மன் கோவிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பஞ்சத்தால் விரட்டப்பட்டவர்களாக மலேசியா வந்தவர்கள் பலர், நல்ல சுகபோக வாழ்வு அங்கே கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றிக்கொண்டுவரப் பட்டவர்கள் இன்னும் சிலர். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்த சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் உறவினர்கள் 73 பேர் நாடு கடத்தப்பட்டவர்களாக மலேசியாவிற்கு வந்துள்ளனர். இதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

மலேசியா, இந்தோனேஷியா, பாலி போன்ற நாடுகளுக்குச் சோழ மன்னர்கள் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 1272இல் இராஜராஜ சோழன் படையெடுத்துச் சென்றதற்கான வரலாற்று ஆவணங்களை ஆய்வாளர்கள் தருகின்றனர். அங்கு தமிழர்கள் பெருமையுடன் வாழ்ந்திருந்தனர். அடிமைகளாக அல்ல. படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்களின் நோக்கம் வணிகத் தொடர்பு விரிவாக்கமாகவே இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழர்கள் அங்கே நட்புணர்வுடன் கௌரவமாகவே நடத்தப்பட்டனர். இதற்குச் சான்றாக இந்தோனேஷிய நாட்டு நாணயத்தைக் காட்டலாம். இன்றுள்ள ரூ. 20,000 மதிப்புள்ள நாணயக் காகிதத்தில் இந்துக் கடவுளான விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலேசியாவில் வெள்ளையர்களால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் வலியும் வேதனையும் விவரிக்க இயலாததாக இருந்தது. அவர்கள் வாழ்வு, சுமை மிகுந்ததாக இருந்தது. ஆட்சி மாறியும் அவர்கள் அல்லல் தீரவில்லை. ஜப்பானியர்கள் வெள்ளையர்களைவிடக் கொடூரத்தன்மையுடன் ஆட்சி நடத்தினர். தோட்டத்தில் விவசாயப் பணியில் இருந்தவர்களைச் சாலை அமைக்கும் பணியிலும், இருப்புப்பாதை அமைக்கும் பணியிலும் அமர்த்திக் கசக்கிப் பிழிந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜப்பானியர் உதவியுடன் இந்திய தேசியப் படையை இந்தியாவிற்கு வெளியே அந்நிய மண்ணில், மலேசியாவில் உருவாக்கினார். அதன் பின்னர் ஜப்பானியர்கள் பிடியில் தளர்வு ஏற்பட்டது. மலேசியத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் சுபாஷ் அமைத்த படையில் இணைந்தனர். அவர் மறைவுக்குப் பின்னர் இந்திய தேசியப்படையும் சோர்ந்து, கரைந்து மடிந்தது. இவ்வாறு, இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்தில் தோட்டத்தைவிட்டு வெளியே வந்த மலேசியத் தமிழர்கள் மனித உரிமைகள், சுதந்திரம் ஆகியன குறித்த உணர்வும் புரிதலும் பெற்றனர். இதிலிருந்து மலேசியத் தமிழிலக்கியம் தோன்றியது எனலாம்.

மலேசியத் தமிழிலக்கியத்தை மூன்று காலகட்டமாகப் பிரிக்கலாம். ஜப்பானியராட்சிக்கு முந்தைய காலத்தினைத் தொடக்க இலக்கியக் காலமாகவும், 1940 - 50ஐ நடுப் பகுதியாகவும், 1950க்குப் பிந்திய காலகட்டத்தைத் தற்கால இலக்கியக் காலமாகவும் பிரிக்கலாம். தொடக்ககால இலக்கியம் தாய்நாட்டைச் சார்ந்தே இருந்தது. சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே, பல பத்திரிகைகள் வெளி நாடுகளில் தோன்றின. 1924இல் தமிழ் தேசன் மலேசியாவிலிருந்து வெளிவரத் தொடங்கியது. அதனை நடத்திவந்த ஐயங்காரிடமிருந்து நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் பத்திரிகை வந்தது. வாரம் இருமுறை வரும் வெளியீடாக மாறியது. பின்னர் சிங்கப்பூரிலிருந்து கோ. சாரங்கபாணியின் தமிழ்முரசு வெளிவந்தது. இப்பத்திரிகைகளில் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் வெளிவந்தன. 1914இல் வெளிவந்த தமிழ் நாவல்கள் இரு தலைப்புகளைக் கொண்டிருந்தன - 'ரோஜா அல்லது முத்துமலைக் கள்வன்'.

முதற்கட்ட இலக்கிய முயற்சியில் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அக்காலகட்ட இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கைச்சுமை, மனவலி, துயரங்கள் பதிவாகவில்லை. மண்ணின் வாசம் அறவே இல்லை எனலாம். 1929இல் ஈ.வெ.ரா. பெரியார் அங்கு வந்தார். தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களைப் பொதுக் கூட்டங்களில் பேசினார். அவரது பேச்சுக்கள் தமிழ் முரசு பத்திரிகையில் வெளியாயிற்று. இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. நாடகங்கள் எழுதி மக்களிடம் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்தினர். பாடல்களை எழுதிப் போட்டிகள் நடத்திக் கவிஞர்களை உற்சாகப்படுத்தினர்.

1875ஆம் ஆண்டு சிறுகதை வடிவத்தில் சிங்கை நேசன் ஒரு கதையை வெளியிட்டுள்ளது. தமிழின் முதல் சிறுகதையை வெளியிட்ட பெருமை மலேசியாவிற்குத் தரப்பட வேண்டும்.

1948இல் தமிழ் முரசு பத்திரிகை பாரதிதாசன் கவிதை, கருணாநிதியின் கதை, இராஜாஜியின் கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தமிழ்சுடர் பத்திரிகையாசிரியர் சண்முகசுந்தரம் சிறுகதைப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு 25 வெள்ளிக் காசுகளைப் பரிசளித்துள்ளார். இப்பத்திரிகையை மலேசியாவின் மணிக்கொடி எனப் பலர் புகழ்ந்துள்ளனர். ஆரம்பகாலத்தில் இருந்த நிலை மாறி மலேசியாவின் மண்வாசனையோடு கதைகள் வெளிவரத் தொடங்கின. இப்ராஹிம் என்பவர் எழுதிய 5 சிறுகதைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

1954இல் ஈ.வெ.ரா. பெரியார் இரண்டாம¢ முறையாக மலேசியாவிற்கு வந்தார். புதிய வெளிச்சமும் மறுமலர்ச்சியும் தமிழ் மக்களிடம் ஏற்பட அவர் வருகை பெரிதும் உதவியது. இளைஞர்கள் பொதுவாழ்வில் அக்கறை காட்டினர். சாரங்கபாணியின் தமிழ் முரசு பத்திரிகை 'மாணவர் மணி மன்றம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அவர்கள் தமிழில் எழுத வாய்ப்பளித்தது. மாணவர்கள் எழுத்திற்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. இம்மாணவர்கள் பின்னர் 1967இல் 'தமிழ் இளைஞர் மணி மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினர். 60,000 உறுப்பினர்களைக் கொண்ட இம்மன்றம் கலை, இலக்கியம், நாடகங்கள் வெளிவரப் பெரிதும் உதவியது. புதிய சிந்தனைத் தளங்கள் உருவாகின. 60 தமிழ்நாடகக் குழுக்கள் நாடகங்களை எழுதி நாடகக் கலைக்குச் சேவை செய்தன.

தமிழ்நாட்டிலிருந்து தீபம் நா. பார்த்தசாரதி, அகிலன், மு.வ. ஆகியோர் மலேசியாவிற்கு வந்தனர். மக்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் வளர்ந்தது. 1960 - 72 காலகட்டம் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். தனிநாயக அடிகளின் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அப்போது நடைபெற்றது. திராவிடத் தமிழ் இலக்கியமே அங்கு பழக்கத்திலிருந்தது. புதுக்கவிதை வரவில்லை. மரபுக் கவிதையும் திராவிடத் தாக்கத்தால் உந்தப்பட்டு, "தமிழே தாயே, வானமே வையகமே" என உணர்ச்சி வெளிப்பாடாகவே இருந்தது. மனிதவலியும் மக்களின் அவல நிலையும் கவிதையின் பாடுபொருளாக இல்லை.

இப்போது, இளைஞர்கள் மத்தியில் நவீனத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. புதிய எழுத்து முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மலேசியாவில் 552 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழில் சிறுகதைகள் எழுதி உலகளவில் பரிசு பெற்றுள்ளோம். தாய்ப்பால் கிடைக்காமல் வளர்ந்த பிள்ளையானாலும் நல்ல தமிழில் பேசும் பிள்ளைகளாக இன்றுள்ளோம். 1976இல் கணையாழி நடத்திய சிறுகதைப் போட்டியில் மலேசியத் தமிழ் எழுத்தாளரின் 'சிகரம்' என்னும¢ கதை முதல் பரிசு பெற்றுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள நூலக அமைப்பு மலேசிய இலக்கியக் கருத்தரங்கம் நடத்தவுள்ளது. 'தமிழினி 2008' மலேசியாவில் நடத்தத் திட்டமிட்டுவருகிறோம். 93 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளின் 3 தொகுதிகளையும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிவருகிறோம். தமிழ்நாடு இன்று மலேசிய எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. எனது கட்டுரைத் தொகுப்பினைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழிலக்கியம் இன்று தனி முத்திரையுடன் வளர்ந்துவருகிறது என்று சை. பீர்முகம்மது தமது உரையை நிறைவுசெய்தார்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பீர்முகம்மது பதிலளித்தார். அவர் பேசும்போது ஆறு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டபோது, "நாங்கள் நல்ல தமிழில் மட்டுமே பேசுகிறோம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற நிலையில் அந்த ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். நாங்கள் 'டிபன் சாப்பிட்டீர்களா?' என்று வினவுவதில்லை. 'பசியாறிவிட்டீர்களா?' என்றுதான் கேட்போம்" என்று மலேசிய மக்களின் தமிழ்ப் பயன்பாடு பற்றி உயர்வாகக் கூறினார்.

உள்ளடக்கம்