|
க்ளார்க்கின் முதல் விதி - புகழ் பெற்ற, குறைந்த வயதுள்ள ஒரு விஞ்ஞானி ஒரு
(அறிவியல்) நிகழ்வு நடக்கும் என்று சொன்னால், அவர் சொல்வது அநேகமாகச் சரியாக
இருக்கும். அவர் இது நடக்காது என்று உறுதியாகச் சொன்னால், அவர் சொல்வது அநேகமாகத்
தவறாக இருக்கும்.
1
உலகத்தின் அழிவைப் பற்றி மனிதன் அவன் மனிதனான (Homo Sapiens) நாளிலிருந்து
சிந்திக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கலாச்சாரமும் பேரழிவை அதன் கலாச்சார
நீட்சியின் இறுதிக் கட்டமாகவோ அல்லது அதன் சுழற்சியின் ஒரு பெரும் புள்ளியாகவோ
கொண்டிருக்கின்றது. கில்க மெஷ் இதிகாசத்திலிருந்து தமிழ் நாட்டுத் தெருவோரங்களில்
நடக்கும் சுவிசேஷக் கூட்டங்கள்வரை வரப்போகும் முடிவு திரும்பத்திரும்பப் பேசப்பட்டு
வந்திருக்கிறது. நம்மில் பலரிடம் நாம் உலக அழிவின் சாட்சியாகிவிடுவோமோ என்ற
உள்ளார்ந்த ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருக்கிறது.
எனக்கு அழிவு பற்றிப் பேசும் அறிவியல் சிறுகதைகள், நாவல்கள் மீது அதிகம் மரியாதை
கிடையாது. மனிதன் பயப்பட வாழ்வே பல தருணங்களைக் கேட்காமலே வழங்குகிறது, நாம்
படித்துப் பயப்படத் தேவையில்லை என்பது என் கருத்து. நான் படித்து ரசித்த ஒரே
பேரழிவுச் சிறுகதை (apocalyptic story) ஆர்தர் சி. க்ளார்க் எழுதியது. கடவுளின்
தொள்ளாயிரம் கோடிப் பெயர்கள் என்னும் பெயர் கொண்டது.
க்ளார்க் இந்தக் கதையை 1953இல் எழுதினார். கணினி பெருமளவில் சந்தைக்கு வராத காலம்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நியுயார்க் நகரத்திலிருந்து திபேத்தியலாமா ஒருவர்
கணினி வாங்குகிறார். மார்க் க்ஷி என்ற பெயர் கொண்ட கணினி. கூடவே இரு கணினிப்
பொறியாளர்களையும் தனது நாட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். காரணம் லாமாக்கள்
(அவர்களே கண்டு பிடித்த) மொழியில் கடவுளின் உண்மையான பெயர்கள் எழுதப்பட வேண்டும்.
பெயர் ஒன்பது எழுத்துகளுக்குள். ஒரு எழுத்து மூன்று முறைக்கு மேல் தொடர்ச்சியாக
வரக் கூடாது. பொறியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கணினியை
இயங்கவைக்கிறார்கள். அதனுடன் இணைக்கப்பட்ட அச்சுயந்திரம் பெயர்களை விடாமல்
அடிக்கிறது. ஒரு நாள் தலைமைலாமா பொறியாளரிடம் ஏன் கடவுளின் பெயர்கள்
அடிக்கப்படுகின்றன என்பதன் காரணத்தைச் சொல்கிறார். கடவுளுக்குத் தொள்ளாயிரம் கோடிப்
பெயர்கள். இந்தப் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்த பின் உலகிற்கு அறிவதற்கு ஒன்றும்
இல்லை. அதன் காலம் முடிந்துவிடும். பொறியாளர்களுக்குச் சந்தேகம். ஒருவேளை
தொள்ளாயிரம் கோடிப் பெயர்கள் அடிக்கப்பட்ட பின் உலகம் அழியாவிட்டால் தங்களை
நிறுத்தி வைத்துவிடுவார்களோ என்று. எனவே, அவர்கள் விமானம் வரும் நாளன்று கணினி,
கடவுளின் கடைசிப் பெயரை அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு முன்னதாகவே விமான
நிலையத்திற்குப் புறப்படுகிறார்கள். கோவேறு கழுதை சவாரி. இருள் வரும் நேரம்.
விமானத்தை மலை மேலிருந்து இறங்கும் அவர்களால் பார்க்க முடிகிறது. வானத்தில்
மின்னும் தாரகைகள். கீழே இறங்கும் தருவாயில் ஒரு பொறியாளர் திரும்பி வானத்தைப்
பார்க்கிறார். தாரகைகள் மறைந்துகொண்டிருக்கின்றன.
2
க்ளார்க்கின் இரண்டாவது விதி - நடக்கக்கூடியவற்றின் எல்லைகளை உறுதிசெய்ய, நாம்
அவற்றைத் தாண்டி நடக்க முடியாதவற்றின் உள்ளே சிறிது தூரம் செல்ல வேண்டும்.
முதல் உலகப் போரின் கடைசி ஆண்டில் மைன்ஹெட் என்ற இங்கிலாந்து கிராமத்தில் ஒரு எளிய
குடும்பத்தில் க்ளார்க் பிறந்தார். சிறுவனாக இருக்கும்போது அவருக்கு அந்தக்
காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து வந்துகொண்டிருந்த 'கூழ்' நாவல்களைப் படிப்பதில்
தணியாத ஆர்வம். அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் சார்ந்தவை. அமெரிக்காவிலிருந்து
வரும் சரக்குக் கப்பல்களுக்குச் சமன்பாடு அளிப்பதற்காக (ballast) அவற்றின்
அடித்தளங்களில் அடுக்கப்படுவதற்காக அச்சடிக்கப்பட்டவை. புத்தகங்களின் தரம் எப்படி
இருக்கும் என்பதைப் பற்றிக் கூறத் தேவையில்லை. ஆனால், க்ளார்க்கிற்கு அவை மிகமலிவான
விலையில் கிடைத்தன.
ஹெச். ஜி. வெல்ஸ் நாவல்களைப் படிக்கத் தொடங்கியவுடன் இந்தக் கதைகளிலிருந்து
அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால் அவர் படித்த கடைசி மற்றும் முதல்
மனிதர்கள் (Last and First Men by Olaf Stapledon) என்ற நாவல் - மனித குலத்தின்
வரலாற்றை நிகழ்காலத்திலிருந்து வரப்போகும் இருநூறு கோடி ஆண்டுகள்வரை சித்தரிப்பது -
அறிவியல் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரக்ஞையை அவருக்குக் கொடுத்தது.
அவர் அறிவியல் கதைகளை எழுதத்தொடங்கினார். பார்த்துக்கொண்டிருந்தது கணக்கர் வேலை.
இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன் அவர் விமானப் படையில் சேர்ந்தார். அவருக்கு
ராடார் பற்றி ஆராயும் அமெரிக்க அறிவியல் குழுவுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக்
கிடைத்தது. 1945இல் அவர் Wireless World என்ற பத்திரிகைக்கு ஒரு அறிவியல் கட்டுரையை
அனுப்பினார். அதில் அவர் எவ்வாறு செயற்கைக் கோள்களின் மூலம் - பூமியின் சுற்றுக்கு
இயைந்து சுற்றுவதால் பூமியைப் பொறுத்தவரை ஒரே இடத்தில் இருப்பவை - மனிதன் தகவல்களை
அனுப்பலாம் என்பதைப் பற்றி விவரித்திருந்தார்.
அவருக்குப் புகழ் கிடைத்தது 'குழந்தைப் பருவத்தின் முடிவு' என்ற நாவல் மூலம்தான்.
இந்த நாவலில் மனித குலத்தின் தரத்தை உயர்த்த விண்வெளியிலிருந்து மேற்பார்வையாளர்கள்
வருகிறார்கள். தரம் உயர்ந்தால் வருகின்ற நெருக்கடிகளைச் சித்தரிக்கும் இந்த நாவல்
இன்றுவரை க்ளார்க்கின் ரசிகர்களால் விரும்பிப்படிக்கப்படுகிறது.
1964ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குநரான ஸ்டான்லி குப்ரிக் க்ளார்க் எழுதிய The
Sentinel என்ற கதையைப் படித்தவுடன் அவரைச் சந்திக்க ஆவல் கொண்டார். அவர்
க்ளார்க்கைப் பற்றிக் கூறியது இது: Isn't he a recluse, some nut who lives up a
tree in India?
இவர்கள் இருவரின் முயற்சியால் வெளிவந்த படம்தான் 2001: ஒரு விண்வெளி இதிகாசம்
(2001- A Space Odyssey). குரங்கு மனிதனுடன் தொடங்கும் இந்தப் படம் ஒரு நட்சத்திரக்
குழந்தை (மனிதக் குழந்தை) விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் தருணத்தில்
முடிகிறது. இந்தப் படம் இன்று விமர்சகர்களால் இதுவரை வந்த பத்து மிகச் சிறந்த
படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
3
க்ளார்க்கின் மூன்றாவது விதி - மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்திற்கும்
மந்திரவாதத்திற்கும் அதிகவித்தியாசம் கிடையாது.
குப்ரிக் சொன்னது தவறு. க்ளார்க் வாழ்ந்த நாடு இந்தியா இல்லை. அவர் வசிப்பதற்குத்
தேர்ந்தெடுத்த நாடு இலங்கை.
1953இல் திருமணம் செய்துகொண்டு 1964இல் விவாகரத்துப் பெற்றுக்கொண்ட அவர் மறுமணம்
செய்துகொள்ளவில்லை. பக்கவாதத் தொல்லையால் சக்கர நாற்காலியில் இயங்க வேண்டிய
கட்டாயம். அவரது இல்லம் முழுவதும் எலக்ட்ரானிக் சாதனங்கள். அவரைச் சுற்றிலும் கேட்ட
குரலுக்குப் பதில் சொல்லப் பல இளைஞர்களை அவர் வேலைக்கு நியமித்திருந்தார். அவர்கள்
என்ன வேலை செய்தார்கள் என்பது பற்றிப் பலருக்குச் சந்தேகம். ஒரு நாளுக்கு
நூற்றுக்கணக் கான மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்தன. அவர் எழுதத் துடிக்கும்
இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரை இது: ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது படியுங்கள்.
இந்த அறிவுரை தமிழில் எழுதும் பலருக்கும் பொருந்தும். நாளைக்கு ஒரு புத்தகம்
படித்தால் எழுதுவது மிகக் குறைந்து, வாசகர்களுக்கு ஒருவேளை விமோசனம் கிடைக்கலாம்
என்ற நல்ல எண்ணத்தில் கூறப்பட்ட அறிவுரை என்று நான் நினைக்கிறேன்.
க்ளார்க்கின் நகைச்சுவை மிகப் புகழ்பெற்றது.
கேள்வி: நீங்கள் வேற்றுக் கிரகங்களில் நம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று
நினைக்கிறீர்களா?
பதில்: இரண்டு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நாம் தன்னந்தனியாக இருக்கிறோம்
அல்லது நமக்கு அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற இரண்டு சாத்தியக் கூறுகளுமே
பயமுறுத்துபவை.
கேள்வி: நீங்கள் பறக்கும் தட்டுகளை நம்புகிறீர்களா?
பதில்: பறக்கும் தட்டு? இதுவரை உலகிற்கு வெளியே அறிவோடு இயங்குவது எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயம் பறக்கும் தட்டுகளை நம்புவது, அறிவு இவ்வுலகில்
எவ்வளவு அரிதானது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
4
"அதிகாரம், பணம் - இவை இரண்டும் முழு வளர்ச்சி அடைந்த மனிதர்களின் குறிக்கோளாக
இருக்கக் கூடாது."
க்ளார்க் ஒரு நல்ல நாவலாசிரியர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஒருவேளை அது
எனக்கு அறிவியல் நாவல்களில் அவ்வளவு விருப்பமில்லாததனால் இருக்கலாம். நியுயார்க்
டைம்ஸ் பத்திரிகையில் க்ளார்க் மறைவு குறித்து எழுதப்பட்ட கட்டுரை His heroes are
less than memorable என்று கூறுகிறது. வெல்ல முடியாத பிரபஞ்சத்தோடு போராடிக்
கொண்டிருக்கும் அவரது பாத்திரங்களுக்கு மனிதனுடைய அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களைப்
பற்றி நினைக்க நேரமில்லை என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது.
க்ளார்க் நடக்கும் என்று கூறியதெல்லாம் நடந்தது என்று சொல்ல முடியாது. மனிதன்
1994இல் செவ்வாய்க் கிரகத்தில் கால் வைப்பான் என்று அவர் சொன்னார். ஆனால் அவர்
நடக்கும் என்று சொன்னவற்றில் பல நடக்கலாம். அவற்றுள்சில:
2020க்குள் இயந்திர மனிதனின் அறிவு ஏறத்தாழ மனிதனின் அறிவை எட்டிவிடும்.
மனிதன் கண், காது, சருமம் போன்றவற்றிலிருந்து உணரும் நிலையைத் தாண்டி, இவற்றின்
உதவியில்லாமலேயே தகவல் சேகரிக்கும் நிலையை அடைந்துவிடுவான்.
2050க்குள் மனிதர்கள் தங்களைத் தாங்களே உறையச் செய்துகொள்வார்கள் (freeze
themselves) - பல ஆண்டுகளுக்குப் பின் உறைநிலையிலிருந்து மீண்டு உலகம் எப்படி
இருக்கிறது என்பதைக் காண்பதற்காக.
கடைசிவரை அவருக்கு எதைப் பார்த்தாலும் அதிசயம். கடைசிவரை மனிதன் மானுட நிலையைக்
கடந்து அவனாலேயே கற்பனை செய்யப்பட்ட கடவுள் நிலையை அடைந்துவிடுவான் என்ற நம்பிக்கை
அவரை விட்டுப் போகவில்லை. அவர் தனது கல்லறையில் பொறிக்கச் சொன்ன வாசகம் இது: He
never grew up: but he never stopped growing. அவன் முழு வளர்ச்சி அடையவேயில்லை;
ஆனால், அவன் வளர்வது கடைசிவரை நிற்கவேயில்லை. |