Google   www kalachuvadu.com

மதிப்புரை
விடியலை நோக்கி
ஓவியா

எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் இந்நூலாசிரியரான பேபி ஹால்தார். தன் குடும்ப ஆண்களின் பொறுப்பின்மையாலும் சுயநலத்தாலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார். படிப்பு ஏழாம் வகுப்புடன் நின்றுபோன நிலையில் தனக்குத் தெரிந்த ஒரே தொழிலான வீட்டுவேலை செய்து வாழ்ந்துவருகிறார். தனக்கும் தன் குழந்தைகளுக்குமான ஆதரவுக்காகவும் வாழ்விற்காகவும் பணிப்பெண்ணாக அல்லாடியும் போராடியும் வாழ்ந்து கொண்டிருந்த பேபி ஹால்தாருக்கு இந்தி எழுத்தாளர் பிரபோத்குமாரின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகும் நல்வாய்ப்புக் கிடைத்தது. சிறுவயதிலிருந்தே கல்வியில் ஆர்வமும் அது பாதியிலேயே நின்றுபோனதால் ஏற்பட்ட ஏக்கமும் மிகுந்திருந்த பேபி ஹால்தாரை, அந்த எழுத்தாளர் வீட்டு நூலக நூல்கள் புரட்டிப் பார்க்கத் தூண்டியிருக்கின்றன. இதனைக் கவனித்த பிரபோத் குமார் வாஞ்சையுடன் பேபியின் கடந்த காலத்தை எழுதும்படி தூண்டியிருக்கிறார். பேபி ஹால்தாரும் எழுதியிருக்கிறார். அதன் விளைவே நம் கைகளில் இந்த நூல். வங்காளத்தில் எழுதப்பட்டு இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல் இப்போது தமிழில் நமக்கு வந்திருக்கிறது. இவரது வாழ்க்கைச் சித்திரம் இவருடைய வாழ்க்கையை மட்டுமே குறித்ததல்ல. சராசரி இந்தியப் பெண்களின் வாழ்க்கைச் சட்டகத்தை நமக்கு வரைந்துகாட்டுகிறது.

ஏழாம் வகுப்புக்கு மேல் பேபி படிக்கவில்லை. எழுத்தும் கல்வியும் ஆண்களின் தலைமையில்தான் இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ அவற்றைக் குறைவாகப் பெற்ற பேபி எந்தக் கலாச்சாரப் பொய்மைக்கும் ஆட்படாமல் அலங்காரங்கள் எதுவுமற்ற தனது எழுத்தில் வாழ்க்கையின் மெய்ம்மையை அப்படியே பதிவுசெய்திருக்கிறார். திருமணம், மகப்பேறு பற்றிய சமுதாயக் கற்பிதங்களின் எவ்விதச் சாயலும் அவருடைய எழுத்தில் ஏறவில்லை. திருமணம், உறவு பற்றிய எந்தக் கனவுகளுமில்லாத நிலையிலேயே இந்தப் பெண்ணுக்கு மண உறவு தீர்மானிக்கப்படுகிறது.

நான்கு முறை கர்ப்பம் தரிக்கிறார். ஒருமுறை கர்ப்பம் கலைந்துவிடுகிறது, அதுவும் கணவன் அடித்ததால். மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். இந்த அனுபவங்களையும் அப்படியே பதிவுசெய்திருக்கிறார் பேபி. அந்தப் பதிவு மிக முக்கியமானது. அவருடைய எழுத்தில் தாய்மையின் புனிதத்தைப் பற்றிய கற்பிதங்களின் தடை ஏதுமின்றி மகப்பேற்றின் வலி அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்த மண்ணில் பல இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் உறவும் கர்ப்பமும் நிர்ப்பந்தத்தில் நிகழ்கின்றன. சட்டம் மற்றும் சமுதாய அங்கீகாரத்துடன் திருமணம், குடும்பம் இவற்றின் வாயிலாக. குடும்பம் என்கிற அமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் வன்முறையைப் பெண்ணியவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறவர்களைவிட மிக ஆழமாகப் பேபி ஹால்தாரின் எழுத்து, சித்திரமாக்கியிருக்கிறது.

பேபியின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள் அப்பாவும் கணவரும். தனது நிலைக்குக் காரணமான இந்த இருவரையும் பேபி வெறுப்புடன் சித்தரிக்கவில்லை. முடிவெடுத்துப் பிரிந்துவந்துவிட்ட கணவனைப் பற்றி எழுதும்போதுகூட அவரைப் பிரிவதும் தனக்கு வேதனையையே தருவதாக எழுதுகிறார். இதைவிடச் சிநேகத்துடன் எப்படி வாழ்வது? ஆனால், ஆண்கள் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமே? எப்படி இவரது வாழ்க்கை பெண்களின் வாழ்க்கை பற்றிய பொதுச் சட்டகத்தைத் தருகிறதோ அவ்வாறேதான் இந்த ஆண்களும் நமது பெரும்பான்மையான குடும்பத் தலைவர்களைப் பிரதிபலிக்கிறார்கள். இந்தச் சமூகமானது ஆண்களின் தலையில் தலைமைப் பொறுப்பைத் தூக்கிவைத்திருக்கிறது. அது சரியா தவறா என்பது வேறு விசயம். ஆனால், அதனை அவர்கள் செவ்வனே நிறைவேற்றவில்லை என்பது நடப்பு உண்மையாக இருக்கிறது. இதில் பேபியின் வாழ்க்கைமீது கவிழ்கின்ற வறுமை, அவர் குடும்பத்து ஆண்களின் பொறுப்பின்மையாலும் சுயநலம் மற்றும் சுயபோகத்தினாலும் உருவான ஒன்றுதான். அதனால் ஏற்படும் ஏழ்மையின் சுமைதாங்கிகளாக அந்தக் குடும்பப் பெண்கள் ஆகிவிடுகிறார்கள். தெலுங்கு மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு குடும்பம் சிதைகிறது என்ற நாவலும் இந்த நிலையை நன்கு சித்தரித்திருக்கும் ஒரு படைப்பாகும். பேபியின் இந்தத் தன் வரலாறு அந்த நாவலை நினைவுபடுத்துகிறது.

இந்த மண்ணில் பெண்ணுக்கென வீடு கிடையாது. பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே அவளுக்குரியனவல்ல. அங்கு அவளுக்குத் தரப்பட்டிருப்பது பாதுகாப்பும் அடைக்கலமும்தானே தவிர உரிமையல்ல. என்ன செய்வது தந்தை ஒப்புவித்த கணவனிடம் ஒரு பெண் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று பேபி ஹால்தார் பரிதாபமாகக் கேட்கும் கேள்வி உள்ளத்தை உலுக்குகிறது. பேபி ஹால்தாரின் சோகம் அவர் பெண்ணாய்ப் பிறந்ததால் இந்தச் சமூகம் அவருக்குத் தந்தது. குழந்தைகளுடன் பேபி குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதற்குத் தனக்கொரு இடம் வேண்டும் என்று அலைகின்ற அகதி நிலை இந்தச் சமூகத்தை உறுத்த வேண்டும். அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் பெரும்பாலானோர் அவரிடம் அன்புடன் நடந்துகொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் சமூகவரையறைகள் இருக்கின்றன. கணவனின் நிழலை மறுக்கும் பெண்ணுக்கு அகதி வாழ்க்கை என்பது ஆணாதிக்கச் சமூக அமைப்பு எழுதியிருக்கும் விதியாகும்.

இவ்வாறு நம் நாட்டுப் பெண்களின் சராசரி வாழ்க்கையை இவரது நூல் படம் பிடித்தபோதிலும் பேபி ஹால்தார் இன்று அடைந்திருக்கும் சிறப்புக்கும் பெருமைக்கும் மிகத் தகுதியானவர் தான். நூலில் வெளிப்படும் அவரது மொழியாற்றல் நம்மை வியப்படைய வைக்கிறது. குறிப்பாக அவரது அம்மாவைப் பற்றி அவர் எழுதியிருக்கும் பக்கங்கள். அவருடன் சேர்ந்து நாமும் அம்மாவை அவர் மீண்டும் பார்க்கமாட்டாரா என்று நினைக்கத் தொடங்குகிறோம். ஆனால், அந்த அம்மா வந்தபோது என்ன நடந்தது? வாழ்க்கையின் உண்மை என்பது எந்த நாவலையும் ஒரு படி மேலேபோய் எதிர்பாராத தரிசனங்களைத் தருவதாகத்தான் இருக்கிறது. சிறுவயதிலிருந்து அவரிடம் வெளிப்படும் நேர்மையான எண்ண ஓட்டமும் உழைப்பும் புதியன கற்கும் ஆர்வமும் அவருடைய எழுத்தில் வெளிப்படுகின்றன. குறிப்பாக அவருடைய கடுமையான உழைப்பும் அதனடிப்படையிலான தன்மான உணர்வும் நம்மை ஈர்க்கக்கூடியவையாக இருக்கின்றன. கையில் முகவரி இருந்தால் என்னால் எந்த இடத்துக்கும் போக முடியும் என்று மூட்டை முடிச்சுகளோடும் குழந்தைகளோடும் அவர் செல்லும்போது அவரது உருவம் பெருமை மிக்கதாக நமக்குள் பதிவாகிறது.

உள்ளடக்கம்