Google   www kalachuvadu.com

மதிப்புரை
பிள்ளை விளையாட்டு
ஹாலா

இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு ஒரு கவித்துவமான முன்னுரை. அதுவே இத்தொகுப்பைப் படிக்கவைக்கிறது. முன்னுரையில், "குவளைக் கண்ணனின் கவிதைகளைப் படிக்கும்போது, உள்ளே ஏற்படும் உணர்ச்சி அகப் போராட்டம் சார்ந்ததான தன்மையுடன், சமூகப் பார்வையின் திட்டவட்டமான எல்லைக்குள் இருந்துவிட முடியாமல், ஆனால், முற்றிலுமாக அவற்றிலிருந்து விடுபட்டுவிட முடியாமலும் இருக்கும் அவஸ்தை பல இடங்களில் இவரது கவிதைகளில் காணக் கிடைக்கிறது. ஆனால், அதை மீறிக் கடந்து சென்றுவிட்ட கணங்களின் நிரூபணமாகப் புதியதொரு கால - வெளியில் சிருஷ்டியின் மலர்ச்சி தெரிகிறது," என்கிறார் ஆனந்த். இந்த அறிமுகமே கவிதைக்குள் என்னை அழைத்துச் சென்றது. கவிஞரின் அவஸ்தையை நானும் அனுபவிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. கவிதையைப் படிப்பதன் மூலம் நிகழும் அவஸ்தைப் போராட்டமும் கவிஞரின் போராட்டமும் எவ்வாறானவை என அறியும் முயற்சியாகவும் அது எனக்கு இருந்தது. ஒரு வாசகன் படித்தலில் அனுபவித்த அவஸ்தையும் அதன் ஊடான பயனுமே இது.

"மலர்ச்சி"

'முதல் மலர் மலர்ந்துகொண்டிருக்கிறது,' என்று கவிதை தொடங்கி, அந்த மலர்ச்சியின் வியாபகத்தில் அண்டசராசரமும் வெளிப்போந்து, அவை எல்லாம் அந்த மலரின் மொட்டுக்குள்தான் இருந்தன என்று கூறிவிட்டு, 'அந்த மலர் எங்கே?' என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

ஏதோ ஒன்றின் மலர்ச்சியாக அண்டசராசரங்கள் உருவான பின்னர் அந்த மலர் இல்லாமல் போனது அதிசயமல்ல. கேள்வி அந்த மலரைப் பற்றி அல்ல. எல்லாம் உருவாகக் காரணமான அந்த மொட்டு எங்கே உருவானது என்பதுதான்.

கருந்துளையில்(Black Hole) இருந்தே இப்பிரபஞ்சம் உருவானது என்று விஞ்ஞானிகள் விளக்கிவிட்டு, பின்னர் கருந்துளை உருவான விதம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியதைப் போல, இந்தக் கவிஞருக்கும் கேள்வி உருவாகி அவரைத் தீண்டி, "இங்குக்கும் அங்குக்கும் நடுவில் மலர்ந்துகொண்டிருக்கிறது அந்த மலர்", என்கிறார். 'நிகழ்ந்துகொண்டிருக்கிறது' என்பதின் மூலம் தொடர் நிகழ்வொன்றையே பதிலாக வைத்துப்பார்க்கிறார். இவர் கண்டறிந்த பதில் திருப்தியான பதில் இல்லை. ஆனால், உள்ளார்ந்த உணர்தலில் மலர்ச்சித் தத்துவமாகவே அண்டசராசரங்களின் வியாபகத்தை ஒரு தொடர்நிலை அனுபவமாகவே அறிகிறார். அதையே கவிதைப்படுத்தும்போது சிந்தனையின் அங்கமான 'வினா' எழுகிறது. சரியான பதில்கிடைக்காத திருப்தியின்மையை உருவாக்குகிறது. பின் அந்த நிலையையும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் பேரவஸ்தைக்கு உட்பட்டு அந்தத் தவிப்பு நிலையைக் கவிதையிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

ஆன்மிகப் போர்வையை அணிந்துகொள்ளாமல், அறிவுஜீவி என்ற அலங்காரமான அந்தஸ்தையும் கொள்ளாமல் வாழும் மனிதனின் பிராண அவஸ்தைதான் இது. திட்டவட்டமான சமூகப் பிரக்ஞையின் வளையத்துக்குள் வாழ்ந்தாலும், சுயப் பிரக்ஞையால் அறியப்பட்ட விஷயம் அந்த வளையத்தை மீறியதாகவே வாழ்கிறது, அதன் தவிப்புகளோடு.

n

உணர்வுக் கலப்பும் அறிவுத் தேடலுமற்ற ஒரு பூரித்த சமநிலையில், கண்ணாடியே கண்களாகி உள்பார்வை கொள்கிறது. தீவிரப் புரிதலின் திடீர் அனுபவமாக உள்விழிப்பு நிகழ்ந்து திடுக்கிட வைக்கிறது. ஆழ் உணர்வுக் குமிழ்கள் உள்ளிருந்து கிளம்பி உடலில் சருமத்துளைகளின் வழியே மயிர்க்கூச்செரிந்து வெளி உலகில் கரையும்போது, தினசரி பார்த்துக்கொண்டிருந்த காட்சிகள் தம் அர்த்த வடிவங்களை வேறாக்கிக் காட்டிவிடுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத இத்தகைய அனுபவச் செயல்பாடுகளைக் கூற முயலும்போது அர்த்த வடிவங்களின் மாற்றுப் போக்கினை மட்டுமே கூற முடிகிறது. அப்படி எழுதப்பட்ட கவிதைதான் 'நீ'. கண்ணுக் கெட்டிய / தூரம்வரை / விரிந்து கிடக்கும் நிலக்காட்சி / சிமிட்டலில், விழுங்கப்படுகிறது.

ஊர்கள், மொழிகள் கடந்து / பொங்கியோடுகிற நதி / மிடறில் / உள்ளே போகிறது / ராட்சசிடி விரிந்து, பரந்து கிடக்கும் நிலக்காட்சி ஒரு சிமிட்டலில் விழுங்கப்படுதலையும் ஊர்கள், மொழிகள் கடந்து ஓடுகின்ற நதி ஒரு மிடறில் விழுங்கப்படுதலையும் சம்பவ நிகழ்வுகளாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய உணர்தலில் இவற்றை மீறிய ஒரு பிரும்மாண்டம் தன்னுள் இருக்கிறது. அது தனதாக இல்லாமல் 'நீ'ஆக இருக்கிறது. அந்த 'நீ'யும் ஒரு பெண்பாலாக இருக்கிறது. இது அறிவார்த்தமோ அல்லது உணர்வு பூர்வமோ அற்ற ஒரு கணத்தில் வெளிப்படுவதுதான் இங்கு கவிதையாகிறது. இந்த உள்பார்வை (insight) இவருக்கு எப்படி நிகழ்ந்தது என்பது கூறப்படவில்லை. ஆனால், பரந்த நிலக்காட்சியையும் பல ஊர்கள், பல மொழிகள் கடந்து ஓடும் நதியையும் மீறிய ஒரு மாநிலையைத் தனக்குள் தன்னை மீறிய, தனக்கு மாற்றான ஒரு பெண்மையின் வெளிப்பாடாகப் பார்த்து அகங்காரமற்ற ஒரு பாராட்டையும் அந்தப் பெண்மைக்குத் தந்துவிடுகிறார்.

நெடுங்கதையின் சில பாகங்கள்

சிதறலான, வரிசைகளற்ற அத்தியாயங்களே தலைப்புகளாகின்றன. நேர்கோட்டுச் சிந்தனைக்கு ஆதாரமான கணிதம் எண்களுக்கு ஒரு வரிசைக்கிரமம் அமைத்துக் கொடுத்தது. எண்களின் கிரமம் உண்மையில் ஆதாரமற்ற ஒரு கற்பிதம். ஆனால், இந்தக் கற்பிதம் கணிதத்திற்கு மிகவும் அவசியமானது. இந்த அடிப்படைதான் நேர்கோட்டுச் சிந்தனைக்குத் துணை நிற்பது. இந்தக் கவிதையில் எண்களின் கிரமம் சிதறடிக்கப்பட்டு, மானிட வாழ்வின் நிகழ்வுகள் கிரமப் பொறிக்குள் சிக்க மறுக்கும் நிலையாக ஒரு தனித் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் மேல்வரிசை, கீழ்வரிசை, சங்கிலித் தொடர் என்றெல்லாம் இல்லை. ஒரு சமதளப் பார்வையை மட்டுமே கவிதை நம்முன் வைக்கிறது. வரிசைக் கிரமமற்ற பாகங்களை விட்டுக் கவிதையைப் பார்த்தால் பெண்மையின் விகசிப்பால் ஒரு கவிதைக்கும் மற்றொன்றுக்குமாய் ஒரு நடைவழிப்பாதை மேடுபள்ளமாகத் (அர்த்த நிஜங்களும் மாயமேடுகளுமாய்) தெரிகிறது.

வீட்டு விலங்குகள் பெண்களால் பேணி வளர்க்கப்பட்டதால், வழங்கிய வழக்கத்தில் அவர்களும் வீட்டு விலங்கானதை - ஆண்களால் அல்லவாம். வழங்கிய வழக்கத்தாலாம்! - எதிர்பாராத ஒரு கணத்தில் தூக்கி எறிந்து நம் மனத்தில் அறைகிறார். ஆனாலும், பெண்மையின் ஆக்க சக்திப் பிரவாகம் மனிதர்களால் அறியப்படாமல் வெறும் அனுபவப் புலத்திலேயே இருந்து, பிச்சியம்மன் ஆகிவிடுகிறாள், பிச்சி.

அமாவாசையிலும் பௌர்ணமியிலும் விம்மித்தணியும் கடல் பெண் ஆகாயம் என்று ஏதுமில்லை என்பதான, 'ஏதுமற்ற ஒன்றேயான' மௌடீகத் தளத்தைப் படைத்துக் காட்டுகிறாள். (இந்தப் பாகத்திற்கு எண் எதுவும் குறிப்பிடப்படவில்லை).

இத்தகைய பெருவெளிப் பெண்மைப் பிரவாகம், சமையலறையில் மட்டுமே சுவாசிக்கக்கூடியவர்களாய் ஆனபோது, கபடமற்ற குழந்தைக் கேள்விகளால் இது ஒரு மர்ம தேசமாகிறது. பின்னர் ஆண்மையும் பெண்மையும் இரு வேறு தனிமைகளாய்ச் சந்தித்துக்கொண்டு, பின் புணர்ந்து, மூப்புக் குழந்தையின் வருகையால் புதிர் மூட்டைகள் விடுவிக்கப்பட்டு . . . என்று பயணிக்கிறது.

தன்னின் தவிர்க்க முடியாத பிறிதை (the essential other) அடையாதவரை, நாம் தூக்கிச் சுமக்க வேண்டிய தனிமையையும் புதிர் மூட்டைகளையும் அந்த மற்றதின் சேர்க்கையில் புதிய ஒன்றின் உருவாக்கமே நீக்க இயலும் என்று கூறுகிறது கவிதை. பெண்மையின் விகசிப்பை உள்வாங்கித் தன்னுள் இணைத்துக்கொள்வது ஆண்மையின் நேர்கோட்டுச் சிந்தனை வழிப்பட்டதல்ல. உணர்வுத் தளத்தில் பேரவஸ்தைக்கு உட்பட வேண்டிய செயல் அது.

பிள்ளை விளையாட்டு

இந்தக் கவிதை நேரடியாகத்தான் பேசுகிறது. குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து தெரியாதவற்றைத் தெரிந்து கொள்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்வதென்னவோ பொருள்களின், உயிரினங்களின் பெயர்களை. ஆனால், குழந்தைகளிடமிருந்து நானோ தெரிந்தவற்றை அழிக்கக் கற்றுக்கொள்கிறேன் என்பதின் மூலம், எதை அழிக்கக் கற்றுக்கொள்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில் சதுரங்க விளையாட்டில் (பிள்ளை விளையாட்டில்) பொதிந்து கிடக்கிறது. குழந்தை கற்றுக்கொடுத்த விளையாட்டில் தோல்வி என்பது இல்லை. யார் யாரை வெல்வது என்ற போட்டி இல்லை. இருவருமே வெல்லலாம்.

இத்தகைய குழந்தைகள் மனோபாவத்தில், பெரியவர்களான நாம் விளையாட வேண்டுமென்றால், நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள நம்பிக்கைகளை நாம் தெரிந்தெடுத்து அழிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய நம்பிக்கைகள் நம் தெரிவு நிலைக்குக் கீழ், நமது பிரக்ஞைக்கு உட்படாது நம்மை ஆட்டிவைக்கின்றன. அவற்றைத் தெரிந்தெடுத்து அழிக்க வேண்டும்.

உதாரணமாக, எதை நாம் வெற்றி என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்? நம் வெற்றியில் பலர் அல்லது ஒருவராவது தோற்றாக வேண்டும். ஒருவரின் தோல்வியில்தான் இன்னொருவரின் வெற்றியைப் பொதித்து வைத்திருக்கிறோம். ஒரு தனிமனிதனின் சாதனையில்கூட, வாழ்வில் 'நான்' தோற்றுவிடக் கூடாது என்ற உள்நோக்கின் உந்துதலே வெற்றியைச் சாத்தியப்படுத்துகிறது. எனவே, தோல்வியைப் பின்புலமாகச் சமைத்தே வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. வெற்றியைப் பற்றி நாம் கொண்டுள்ள 'நனவிலி' நம்பிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்கினால் ஒழிய, வெற்றிக்கு வேறு பொருள் கொடுக்க இயலாதவர்களாகி நிற்கிறோம். இத்தகைய நம்பிக்கைகளை (நனவிலியின் ஆழத்தில் இருந்து உருவி எடுத்துத்தான் செய்ய வேண்டும்) அழிக்கக் கற்றுக் கொள்கிறாராம் கவிஞர், பிள்ளை விளையாட்டில் இருந்து. வலி மிகுந்த செயல்தான் இது.

"கவிதை தன்னைக் காட்டிக்கொள்ளும்போதே, கவிஞனுக்கு அவனையும் காட்டிவிடுகிறது," என்று முன்னுரையாய்க் கூறப்படுகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரை பல கவிதைகள் அதைத்துல்லியமாகச் செய்கின்றன. கூடவே வாசகனுக்கும் அவனைக் காண்பித்துக் கொடுத்துவிடுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள 'நெடுங்கதையின் சில பாகங்கள்' என்ற கவிதை அத்தகைய அனுபவத்தை எனக்குச் சாத்தியமாக்கியது.

உள்ளடக்கம்