|
நவீன மலையாளக் கவிதையின் கர்ஜனை கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். நவீனர்களில் வெகு
மக்கள் கவிஞரும் அவரே. நவீனத்துவப் போக்கை வைத்துப் பார்த்தால் இந்த இரண்டு
தகுதிகளும் தீண்டாமைக்குரியவை. ஆனால், அவற்றை நவீனத்துவத்தின் அடையாளமாக
மாற்றியதில் பெரும் வெற்றி கண்டவர் கடம்மனிட்ட. மலையாளக் கவிதையில் நவீனத்துவப்
போக்கு நடைமுறையிலிருந்த காலத்தில் எழுதவந்தவர் கடம்மனிட்ட. அய்யப்பப் பணிக்கர்
முன்னிலை வகித்த நீரோட்டத்தில் கடம்மனிட்டயும் ஒருவர். எனினும் அவரை மலையாளக் கவிதை
மரபின் இழையறாத தொடர்புக் கண்ணியாகவே காண வேண்டும். மலையாளக் கவிதையின் அடிப்படை
இயல்பு வாசிப்பைச் சார்ந்ததல்ல. அதன் திட்பமான வடிவம் அச்செழுத்தல்ல. அது
சொல்லப்படுவதன் மூலம் உருவாவது. ஒலி உருவமே அதன் முதன்மை வடிவம். நவீனத்துவம்
அச்சியற்றப்பட்ட எழுத்தின் மௌனவாசிப்பைக் கோரிய காலப் பகுதியிலும் சொல்லுவதன் மூலம்
கவிதையைச் சாத்தியமாக்கியவர் கடம்மனிட்ட. இந்த வாய்மொழி வடிவத்துடன் நாட்டார்
வழக்காற்றையும் அவர்களுடைய கூறல் முறையையும் இணைத்தவர் அவர். பெரும்பான்மையான
மலையாளி வாசகர்களிடையே அவர் நட்சத்திரச் செல்வாக்குப் பெற இதுவே காரணம் என்று
தோன்றுகிறது. நடுத்தரவர்க்கப் படிப்பாளிகளுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும்
மட்டுமான சிந்தனைக் குலாவலாக இருந்த கவிதை சாதாரணர்களுக்குரியதாக மாறவும்
கடம்மனிட்ட காரணமாக இருந்தார். கடம்மனிட்டயுடனான முதல் எதிர்கொள்ளலிலேயே இதை உணர
முடிந்தது.
ஏறத்தாழ மூன்று பதிற்றாண்டுகளுக்கு முன்பு வானம்பாடி சிற்றேடு கடம்மனிட்ட
ராமகிருஷ்ணனுக்கு ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. இப்போது பெங்களூரில் பணியாற்றும்
நண்பர் ப. கிருஷ்ணசாமி அன்று கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவராக இருந்தார்.
மலையாள இலக்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். கிருஷ்ணசாமியின் உற்சாகத்தில்
சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பிதழை உருவாக்கினார். கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின்
புகழ்பெற்ற கவிதைகளான 'குறத்தி', 'கண்ணூர் கோட்டை', 'மத்தங்ங', 'பாக்யசாலிகள்'
ஆகியவற்றை முறையே சிற்பி, நான், கிருஷ்ணசாமி மூவரும் மொழிபெயர்த்திருந்தோம்.
கடம்மனிட்டயின் நேர்காணலும் இடம்பெற்றிருந்தது. இதழ் வெளியீட்டை ஒரு நிகழ்ச்சியாக
நடத்த மாத்ருபூமி மலையாள நாளிதழின் பிரதிநிதியாக இருந்த கவிஞர் விஜயகுமார் குனிசேரி
ஏற்பாடு செய்திருந்தார். அய்யப்பப் பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், எம்.
கிருஷ்ணன் குட்டி ஆகிய மலையாளக் கவிஞர்களுடன் தமிழ்க் கவிஞர்கள் சிலரும்
பங்கேற்கும் இரு மொழிக் கவியரங்குக்கும் ஏற்பாடானது.
எங்களூரான கோவையின் மையப்பகுதியில் இருக்கிறது விக் டோரியா டவுன்ஹால். முக்கியமான
பேருந்து நிறுத்தமும் கூட. பல ஆண்டுகளாக அதைக் கடந்து பல முறை போகவர
வேண்டியிருந்தும் அதற்குள் நுழைந்து பார்த்ததில்லை. அதையட்டியே பழைய இரும்புச்
சாமான்கள் விற்கும் கடைகளும் மீன், மாமிசக் கடைகளும் இருந்தன. மார்க்கெட்காரர்கள்
இயற்கையின் அழைப்புக்கு அவசரமாக ஒதுங்கும் இடம் அது என்ற சித்திரம்தான் மனத்தில்
தங்கியிருந்தது. அவ்வப் போது புதிதாக வரும் நகராட்சி ஆணையர்கள் ஒரு வரலாற்றுச்
சின்னத்தைப் பாழ்படுத்தக் கூடாது என்ற அவசர விழிப்புடன் நகர்மன்றத்தைப் பராமரிக்க
நடவடிக்கை எடுப்பார்கள். பெரும்பாலும் மன்றத்தைச் சுற்றியிருக்கும் வெற்றிடங்களில்
புற்களைப் பறித்துக்குவிப்பதும் மன்றத்துக்குள்ளே ஒட்டடை அடிப்பதும்தான்
பராமரிப்புப் பணிகள். அப்படிப் பராமரிக்கப்பட்ட நகர் மன்றத்தில் வெளியீட்டு
விழாவையும் கவியரங்கையும் நடத்தினோம்.
கவியரங்கம் தொடங்கி அய்யப்பப் பணிக்கரும் பிறரும் கவிதை வாசித்துக்கொண்டிருந்தனர்.
இலக்கிய ஆர்வமுள்ள கொஞ்சம் தமிழர்களுடனும் மலையாளிகளுடனும் கணிசமான காலி
நாற்காலிகளும் கவிதை கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்தது கடம்மனிட்டயின் முறை.
'மலஞ்சூரல் மடயில் நிந்நும் குறத்தியெத்துந்நு, விளஞ்ச சூரப் பனம்புபோலக்
குறத்தியெத்துந்நு' என்ற வரிகள் விரல் சொடுக்கின் தாளத்துடன் கனத்த குரலில்
முழங்கின. கவிதையின் பத்து வரிகள் கடப்பதற்குள் அரங்கின் வாசலில் பெருங்கூட்டம்
திரண்டிருந்தது. எல்லாரும் மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள்;
வழிப்போக்கர்கள். அவர்கள் கவிதையில் லயித்து நின்றிருந்தார்கள். அவர்களுடைய
வேண்டுகோளுக்கு இணங்கி கடம்மனிட்ட அதே கவிதையை மறுபடியும் சொல்ல நேர்ந்தது.
அவர்களுக்குக் கவிதை புரிந்திருக்குமா என்ற விசாரணையைவிட ஒரு கவிஞனால் இவ்வளவு பேரை
ஈர்க்க முடிகிறது என்ற வியப்பு எனக்குள் மேலோங்கி நின்றது. அந்த வியப்
பேற்படுத்தும் ஆற்றலைக் கடைசி வரை தக்கவைத்திருந்தார் கடம்மனிட்ட. நெருக்கடி நிலைக்
காலத்திலும் பின்னாள்களிலும் அவரது கவிதை வாசிப்பு புதிய இடதுசாரிக் கவிதையுணர்வின்
தவிர்க்க இயலாத அடையாளமாக இருந்தது. மலையாள நவீன கவிதையில் இடதுசாரிப் போக்கின்
திசைகளை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். எண்பதுகளின் பாதிக்குப் பிறகு அவர்
புதிய கவிதையாக்கங்களில் ஈடுபடுவது அபூர்வமாகியிருந்தும் அவரே கவியரங்கின் நாயகராக
இருந்தார்.
எம். ஆர். ராமகிருஷ்ணப் பணிக்கர் என்ற கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் பத்தனம்திட்டை
மாவட்டம் கடம்மனிட்ட கிராமத்தில் பிறந்தார். தகப்பனார் பிரபலமான படையணிக் கலைஞர்.
(படையணி என்பது நாட்டார் சடங்கை அடிப்படையாகக் கொண்ட கலை). அந்தக் கலையின் சாரம்
அவருடைய படைப்பாக்கங்களில் ஊறியிருந்தது. இறுதிக்காலம் வரை அந்தக் கலையின்
புரவலராகவும் இருந்தார். இளமைக் காலம் முதல் இடதுசாரி இயக்கங்களின் அனுதாபியாக
இருந்தார். அந்தச் சார்பும் அவரது படைப்பாக்கங்களில் உள்ளோடியிருந்தது. அஞ்சல்
தணிக்கைத் துறை ஊழியராகச் சென்னையில் பணியாற்றிய காலத்தில்தான் அவரது கவிதைகள்
அச்சாக்கம் கண்டன. எம். கோவிந்தன் நடத்திய சமீக்ஷ£ இதழில் கடம்மனிட்டயின் ஆரம்ப
காலக் கவிதைகள் வெளியாயின. அதன் தொடர்ச்சியாகவே நவீன இயக்கத்துக்குள் இடம்பெற்றார்.
நவீன கவிதையில் மேலோங்கியிருந்த தனிமனிதவாதப் போக்கை மாற்றிக் கவிதைக்குள் சமுதாய
விவாதத்தைக் கொண்டுவந்த வரும் பக்தியியக்கக் கவிஞர்களை நினைவுபடுத்தும் விதமான
இம்மை சார்ந்த ஆன்மீக நோக்கை முன்வைத்தவரும் இடதுசாரி இயக்கக் கவிஞர்களின்
பிரச்சாரத் தொனியுள்ள கற்பனாவாதச் செய்யுள்களுக்கு மாற்றாக வெகுமக்கள்
பண்பாட்டையட்டிய கவிதையியலை நிறுவியவரும் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனே என்று
மதிப்பிடலாம்.
கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் அவரது சமகாலக் கவிஞர்களுடன் ஒப்பிடும்போது அதிகம்
எழுதியவரல்லர். கிட்டத்தட்ட நூறு கவிதைகளையே எழுதியிருக்கிறார். அவை நான்கு
தொகுப்புகளாக (கடம்மனிட்டயுடெ கவிதகள், கடிஞ்ஞூல் பொட்டன். மிஸ்ரதாளம்,
மழபெய்யுந்நு மத்தளம் கொட்டுந்நு) வெளி வந்துள்ளன. கடம்மனிட்டயுடெ கவிதகள்
தொகுப்புக்கு ஆசான்விருது, கேரள சாகித்திய அக்காதெமிவிருது உட்பட ஐந்து விருதுகள்
வழங்கப்பட்டன. கவிதையைத் தாண்டியும் அவருடைய ஈடுபாடுகள் இருந்தன. எம். கோவிந்தனின்
'நோக்கு குத்தி' என்ற கவிதையை ஆதாரமாக்கி மங்கட ரவிவர்மா இயக்கிய திரைப்படத்தில்
கடம்மனிட்ட நடித்திருந்தார். சாமுவல் பெக்கட்டின் 'கோடோவுக்காகக் காத்திருத்தல்'
(வெயிட்டிங் ஃபார் கோடோ) நாடகத்தை மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆக்டாவியோ பாஸின் 'சூரியக் கல்' (சன்ஸ்டோன்) என்ற நெடுங் கவிதையையும்
மொழிபெயர்த்திருக்கிறார்.
கடம்மனிட்டயின் கவிதை வடிவம் மரபான வடிவை சீர்திருத்திப் புதுப்பித்தது போன்ற
அமைப்புக் கொண்டது. தாளக்கட்டுடனும் சங்கீதத் தொனியுடனும் சொல்லப்படுவதற்குத்
தோதானது இந்த வடிவம். பொதுவாக அநாயவசியமான நீட்சி கொண்டது. மௌன வாசிப்பில்தான் இந்த
நீட்சி அலுப்பைத் தருமேயன்றி சொல்லப் படும்போது பரவசப்படுத்துவது. கடம்மனிட்டயின்
கனத்த குரலில் ('கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற கிறித்துவ
கீதத்தைப் பாடிய நடராஜ முதலியாரின் குரலைப் போன்றது அவர் குரல்) - இந்தக்
கவிதைகளைக் கேட்பது ஓர் அனுபவம். ஒரு கட்டத்தில் கடம்மனிட்டயின் 'சொல் காழ்ச்ச'
நிகழ்ச்சிகள் கட்டணம் வைத்து நடத்தப்பட்டன. அவரது கவிதைப் பதிவு ஒலிப்பேழைகள்
ஆயிரக்கணக்கில் விற்றழிந்தன. உரைநடையிலும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். அதில்
இசையின் விரிவுக்குப் பதிலாக விவாதத்தின் ஆழம் இருக்கும்.
1992 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கடம்மனிட்ட அரசியலில் முனைப்பாக ஈடுபட்டார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் ஆதரவு பெற்ற
சுதந்திர வேட்பாளராக ஆறன்முளை தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்றத்துக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு கோன்னி தொகுதியில் மீண்டும்
போட்டியிட்டார். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். கேரள மாநில நூலகக் குழுத் தலைவர்,
புரோகமன கலா சாகித்ய சங்க (முற்போக்கு கலை இலக்கியச் சங் கம்)த்தின் தலைவர் ஆகிய
பொறுப்புகளில் செயல்பட்டார். இந்தக் காலங்கள் கடம்மனிட்டயின் கவிதையுதிர் காலங்கள்.
எனினும் அவருடைய பழைய கவிதைகளுக்கான வசந்தம் வாசகர் மத்தியில் மிச்சமிருந்து கொண்டே
இருந்தது. 'எனக்குக் கவிதையாகச் சொல்ல ஏதாவது இருக்கிறது என்று நினைத்தால் நிச்சயம்
எழுதுவேன்' என்று இது பற்றிக் கேட்டபோது விளக்கமும் சொன்னார். பின்னர் அவர்
கவிதையாகச் சொன்னவை கட்சி அறிக்கையை மிஞ்சவில்லை. அவரது கவிதை அவர் சார்ந்திருந்த
அரசியலுக்கு எதிராக இருந்த நிகழ்வையும் காண நேர்ந்தது. அது குறையாக அல்லாமல்
கவிதையில் வெற்றியாகவும் எனக்குத் தோன்றியது.
ஏ. கே. ஆண்டணி முதல்வராக இருந்தபோது சி. கே. ஜானு தலைமையில் ஆதிவாசிகள் போராட்டம்
நடத்தினர். தலைமைச் செயலகவளாகத்தைச் சுற்றிக் குடில்கள் அமைத்து அதில்
தங்கியிருந்து போராடினர். போராட்டம் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நீண்டது.
போராட்டத்துக்கு இடதுசாரி அனுதாபிகள் ஆதரவளித்தபோதும் கட்சிகள் அதிகாரபூர்வமாக
மௌனமே சாதித்தன. இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இலக்கியவாதிகளும் ஆதிவாசிகளுடன்
தோள்சேர்த்து நின்றபோது கடம்மனிட்டயின் பங்கேற்பின்மை வெகுவாக உணரப்பட்டது. கட்சி
சார்ந்தவராக அறியப்பட்டிருந்ததால் அவரும் மௌனியாக இருந்தார். ஆனால்,
போராட்டக்களத்தில் அவருடைய கவிதை முழங்கிக்கொண்டிருந்தது. பெரும்பாலான ஆதிவாசிக்
குடில்களின் முன்னால் வைத்திருந்த சுவரொட்டிகள் 'நீங்கள் எங்கள் கறுத்த மக்களைச்
சுட்டுத் தின்பீரோ? நீங்கள் எங்களின் குழிமாடம் குளமாய்த் தூர்ப்பீரோ?' என்று
கேட்டுக்கொண்டிருந்தன. 'நீங்கள் யோசியுங்கள், நீங்கள் எப்படி நீங்கள் ஆனீர்களென்று'
என்று எச்சரிக்கை செய்துகொண்டிருந்தன. இவையெல்லாம் கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் கவிதை
வரிகள். ஒரு கவிஞன் நினைக்கப்பட வேறு என்ன வேண்டும், இதைவிட.
|