Google   www kalachuvadu.com

கடிதங்கள்

'கனவுகளும் சாதனைகளும்' தலையங்கமும் கண்ணணின் 'இரண்டாம் வருகை' கட்டுரையும் என் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சிற்றிதழ் 7,000 பிரதிகள் அச்சிடப்படுகிறது என்பது மகத்தான ஒரு சாதனைதான்! இச்சாதனைகளினூடே பொறாமைகள் பின்தொடர்வதும் அவற்றின் பின்னே அவதூறுகள் அணி வகுப்பதும் நடைபெறாவிட்டால் தான் அதிசயப்பட வேண்டும்.

கே. எஸ். கீழாம்பூர் ராமையா
புதுச்சேரி

காலம் கடந்தும் காலச்சுவடு தன் கடமையில் கண்ணாயிருக்கும் என்பதற்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகளைத் தலையங்கம் வெளிப்படுத்தியது. நரிக்குறவர்களின் நல்வாழ்வுக்காகக் கடலூர் ஆட்சித் தலைவர் மேற்கொண்ட திட்டங்கள் சிறப்பு. மலேசியாவில் அதீதமான ஆதரவுடன் ஆளுமை செலுத்திவந்த ஆளும் கூட்டணி அரசை மக்கள் தன் ஜனநாயக சக்தி மூலம் அசைத்து ஆட்டம் காண வைத்துத் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டார்கள். சிற்றிதழ் இயக்கங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள்.

அ. ரா. வலம்புரிநாகராஜன்
ஈரோடு

இருபது ஆண்டுகள், நூறு இதழ்கள், 250 நூல்கள். காலச்சுவட்டின் பெருமையைப் பாராட்டுவதிலும் அதன் பணியை ஊக்குவிப்பதிலும் உண்மையிலேயே மனநிறைவு பெறுகிறோம். இது ஏதோ வசதியானவர்களின் ராஜபாட்டை நடை அல்ல. உள் நோக்க கற்பிப்புகளும் முடக்கப் பார்க்க முயன்ற நிகழ்வுகளும் ஏராளம். அனைத்தையும் தளராத தன்னம்பிக்கையாலும் தமிழ்மீது கொண்ட தணியாத தாகத்தாலும் எதிர்கொண்டு வீறுநடை போடுகிறது காலச்சுவடு.

குழந்தையின் அழுகைக்கான காரணத்தைத் தெரிந்திருந்தும் "நான் ஏன் சொல்கிறேன்" என்ற ஞானக்கூத்தனின் கவிதை உள் மனத்தின் நளினத்தை நயமாகக் காட்டியது.

தனி ஒரு மாணவனுக்குக் கல்வி இல்லையெனில் பொங்கி எழும் போர்க்குணம் மிக்கவர் எஸ். எஸ். ஆர். தன் பணிக்காலத்திற்குப் பின்னர் கிடைத்த அனைத்துப் பணப் பலன்களையும் கல்விக்காகவே திருப்பிக் கொடுத்த பெருந்தகை. ஆற்றல் மிக்க இளைய சமு தாயத்தை ஊக்குவிப்பதில் பாச முள்ள தந்தை. நூறாவது இதழில் அவரைப் பற்றிய பதிவு சிறப்பு.

கா. இர. குப்புதாசு
செஞ்சி

கண்ணணின் 'இரண்டாம் வருகை' கட்டுரை படித்தேன். நிகழ்காலத்தில் பரந்து விரிந்த வாசகப் பரப்பைக் கொண்டிருக்கும் காலச்சுவடு தான் வளர்ந்த நிலை, பின்னணியில் இருக்கும் ஆன்றோர் சான்றோர்கள், ஆசிரியர் பங்களிப்புகள் யாவும் 15 ஆண்டு காலத் தமிழ் இதழியல் வரலாற்றுப் பாதையில் பயணித்தது மறுக்க முடியாத உண்மை. நரிக்குறவர்களின் இன்றைய நிலை, வழங்கப்பட வேண்டிய உரிமைகள் என நல்ல யோசனைகளை ரவிக்குமார் 'காணமல் போன நரிக்கொம்பு' கட்டுரையில் முன்வைத்துள்ளார். கவிதையில் எஞ்சும் காலத்தின் சுவடுகள் கட்டுரைகள் அனைத்தும் அருமையான வரலாற்று நினைவுகள்.

எம். சிவபாரதி
தென்காசி

'காலச்சுவடு' நூறாவது சிறப்பிதழ் படித்தேன். இருபது ஆண்டுகளாகத் தீவிர தமிழ் ஆர்வலர்கள், வாசகர்களை ஒரு சேர இணைத்து, தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மையை நோக்கி முன் நகர்த்திய பெருமை இதற்கு இருக்கிறது. சு.ரா அவர்களின் தொலைநோக்கும் அவரது வாரிசு திரு. எஸ்.ஆர். சுந்தரம், அப்பா தந்த ஒளிப்பந்தத் தைக் கையிலெடுத்து வலம் வருவது பாராட்டுக்கும் புரிதலுக்கும் உடையது.

இருபதாண்டு காலத்தில் நூறு இதழ்கள், 250 நூல்கள் வெளியீடு என்பது எளிதான காரியமல்ல. காலாண்டு, இருமாதம், பின் மாத இதழ்கள் என அவ்வப்போது மாறுதல்களைக் கொண்டு 'காலச்சுவடு' வெளிவருவது என் போன்ற படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் ஆறுதல் தரும். கண்ணனின் 'இரண்டாம் வருகை', ராஜமார்த்தாண்டன், பழ. அதியமான், ஞானி, அம்ஷன் குமார், கனகலதா, மோகனரங்கன் ஆகியோரின் கட்டுரைகள் வெளிப்படுத்தும் பார்வைகளும் பதிவுகளும் அனேகமாகப் பாதுகாக்க வேண்டியவைகூட. சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திய குவளைக் கண்ணன் (ரவிக்குமார்) பாராட்டுக்குரியவர்.

குரு. ராதாகிருஷ்ணன்
நெல்லிக்குப்பம்

காலச்சுவடு நூறாவது சிறப்பிதழ் அருமை. காலச்சுவடைப் படிப் பவர்களும் உண்மையை நேசிப் பவர்கள்; சிந்தித்துச் செயல்பட விரும்புபவர்கள். சுந்தர ராமசாமி யால் தொடங்கப்பட்டு இரண்டா வது பிறப்பெடுத்த காலச்சுவடு வெவ்வேறு வகையான ஆர்வலர் களுக்குக் களமாக விளங்குகிறது. எந்தச் சூழலிலும் உண்மையைச் சொல்லத் தயங்குவதில்லை. சில சமயங்களில் காலச்சுவடு மீது "சாதிச் சாயம்" பூசச் சிலர் நினைத் தாலும் அதன் உண்மை நாட்டம் அவர்களின் வக்கிர மனத்தை அடையாளம் காட்டவே செய்கிறது.

யு.ஆர். அனந்தமூர்த்தியின் வாழ்த்தில் காலச்சுவடின் சமூக அக்கறை சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. ஜனநாயகம் என்று நாம் எவ்வளவுதான் ஓங்கி ஒலித்தாலும் இன்னும் பல விஷயங்களில் வாய்மூடி மவுனிகளாகவே இருக்கிறோம்.

உண்மையைச் சொல்ல அச்சம் நமக்கு இருக்கவே செய்கிறது. தஸ்லிமாவிற்காகக் குரல் கொடுத் தால் பின்விளைவுகள் மோசமாகப் போகுமோ என்ற அச்சம். இதனை யும் தாண்டி, களந்தை பீர்முகம்மது போன்ற மனித நேயர்களைக் காலச்சுவடு மூலம் தரிசிக்கவும் முடிகிறது. 'தேசியம்' பற்றி உரக்கப் பேசும் பா.ஜ.க.காரர்களோ அல்லது கம்யூனிஸ்டுகளோ கர்நாடகத் தினரின் வக்கிர நிலையைக் கண்டிக்கத் தீவிரமாகத் துணிய வில்லை. காரணம், தேசத்தைவிட ஓட்டுக்களும் அவை தரும் பதவி சுகமுமே. அமெரிக்காவின் ஏகாதி பத்தியத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் சிவப்புக் கொடியினர் "திபெத் போன்ற பழமையான நாகரிகத்தைப் பேராசை பிடித்த சீனர்கள் அழிப்பதை" ஜனநாயக மலர்ச்சியாகக் கருதிக்கொண்டி ருக்கின்றனர்.

கல்வி இன்று வியாபாரப் பொரு ளாகிப் போனது. விஜயகுமார் போன்றோர் நம்மிடையே இப் போது நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கின்றனர். கல்வி, சமூகம், மெய்யியல் எனப் பன்முகம் கொண்டு பிரகாசிக்கும் காலச்சுவடு என்றென்றும் நின்று நிலைபெற்று விளங்கும்.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

சுந்தர ராமசாமியின் 'புலமையின் அம்மணம்' கரட்டு வடிவத்திலான சிறுகதை, பொற்கொடியின் இயல்பான தன்மையையும் மணிகண்ட சிவன், பாக்கியத்தம்மாளின் போன்ற புகழ்பெற முனையும் பெற்றோர்களின் தன் முனைப்பையும் காட்டும் முதல் தளச் சித்திரம். தனிமனிதத் திறமை, மெல்ல மெல்ல 'பிடிக்க' வழிதேடி, பல்வேறு சாகசங்களால் மிளிரத் தொடங்கு கிறது என்று அடுத்த தளத்திற்கு, அதாவது தமிழ்ச் சூழலின் சித்திரத்தை மனதுக்குள் வரையத்தொடங்குகிறது.

கதையின் உயிரே கடைசி மூன்று பத்திகளில்தான் உள்ளது. கதைத் தலைப்பான 'புலமையின் அம்மணம்'த்திற்கு அர்த்தம் தருபவை. தமிழ்ப் புலமை இயல்பாயில்லை இன்று. வீர்ய விதை, உரம், மருந்து போன்ற செயற்கைகளால் வலிந்து, ஊத வைக்கப்படுகிறது என்பது தலைப்புவழி ஓர் அங்கதத் தொனி யோடு விவரிக்கப்பட்டுள்ளது.

தனக்காக வாழ்வது என்பது போய் எல்லாமே பிறருக்காக, பிறருக்காகத்தான் வாழ்கிறோம் என்பதை மிகவும் நுட்பமாக 'மாமனுக்கு முன்னுக்கு அம்மணத்தோட வரயா நாயே' என்ற தொடர் நம் வாழ்க்கை நெறியைக் கூறுவதாயுள்ளது. இப்படி புலமையின் அம்மணத்தளம் விரிந்து விரிந்து, இன்றைய புலமையின் போக்கினையும் சொல்வது. சு.ரா.வின் தன்மையே அலாதிதான்.

காலச்சுவடு, தமிழ்க் கலாச்சாரத்தின் பன்முகங்களிலும் தன் ஒளிவீச்சைப் பரப்பியுள்ளது; பிற மொழி இலக்கியத் தொடர்பைத் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகர்களுக்குத் தெரியச்செய்தது. ஜன ரஞ்சகமான எழுத்தில் நீந்திக் கொண்டிருப்போர்க்குத் தீவிர எழுத்தினைப் பருகக் கொடுத்தது; இவையெல்லாம் காலச்சுவடின் இயல்புகள். இதோடு அரசியல், பொருளியல் சார்பாகவும் தீர்மான கரமான கருத்துகளை முன்வைத்த சிறப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

நா. சிவசுப்பிரமணியன்
பாளையங்கோட்டை

இதழியல் சூழலில், இவ்வாறான பயணமென்பது ஆச்சர்யமானது தான். ஆனால், இப்படியரு பயணம் தொடருவதற்கு, சுந்தர ராமசாமி உருவாக்கிவைத்த இலக்கியப் பின்புலம் முக்கியமானது. தமிழில் புதிதாக எழுதவந்த பலரது வளர்ச்சிக்கும், அவர்கள் பயிற்சிக்களமாகப் பயன்படுத்துவதற்கும் 'காலச்சுவடு' இதழ் தந்த சர்வ சுதந்திரமும் நினைவிற்கொள்ளப்பட வேண்டியது. புதிது புதிதாக வாசகர்கள் இவ்விதழினை வாசிக் கிறார்கள், அவற்றில் சிலர் தத்தமது கருத்துகளை இதழில் வெளிப்படுத்துகின்றனர். எதிர்வினை, விவாதம் பகுதிகளில் வெளியிடப்படும் கருத்துகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அனைத்துத் துறைகள் குறித்தும் சிறந்த பல கட்டுரைகள் வெளிவந்த போதிலும், திரைத் துறை சம்பந்தமான கட்டுரைகள் / விமர்சனங்கள் ஆழமாக இடம்பெறவில்லை என்று தோன்றுகின்றது. ஆனால், அதியற்புதமான விதத்தில் சுற்றுச் சூழல், வேளாண்மை, அரசியல் குறித்தும், அண்டை மாநிலத்தின் இலக்கியவாதிகளின் படைப்புகளும் இடம்பெற்றிருந்ததைப் பெருமையுடன் நினைவுகூர முடியும். எதிர்ப்பும் விமர்சனமும் அவதூறுகளும் எழுவது தமிழிலக்கியச் சூழலில் புதிதல்ல. அவையெல்லாம் காலங்காலமாக இச்சமூகத்தில் நிலவி வருபவையே. அதுவும்கூட இலக்கியச் சூழலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

'இரண்டாம் வருகை' கட்டுரை, காலச்சுவடு இதழ் வளர்ச்சிக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்ததோடு வெளிப்படையான அவரது கூற்றும் அணுகுமுறையுமே, இதழ் வலுப்பெற உதவியிருக்கின்றன என்னும் புரிதலை ஏற்படுத்தியது.

'காணாமல் போன நரிக்கொம்பு' கட்டுரையில் நரிக்குறவர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. நமது திரைப்படங்களும் இதழ்களும் நகைச்சுவை எனும் பெயரில் சமூகத்தின் கடை நிலையில் உள்ளோரைக் கேவலப்படுத்தும் காரியத்தில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதுபோலவே நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் இழிவாகச் சித்தரிக்கின்றன. ரவிக்குமாரின் அக்கறையும் முயற்சியும் அரசின் காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றன. 'தூக்க நினைத்த கோவர்த்தன கிரி' மற்றும் 'நிகழ்' என் அனுபவம் ஆகிய இரு கட்டுரைகளும் அழுத்தமானதாகவும் தகவல்களை உள்ளடக்கியும் இருந்தன. 'மன ஓசை' இதழில், விழி. பா. இதயவேந்தன், பெருமாள் முருகன், கோச்சடை, சூரிய தீபன், தேவிபாரதி போன்றோரும் மிகச்சிறப்பாகத் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அச்சுக் கோத்து, சிரமம் கொண்டு பல இதழ்கள் வெளிவந்த காலத்தில், தனி நபர் துவேசமும், பொறாமையுணர்ச்சியும் இன்று இருப்பதுபோல் அன்று இல்லை.

கே. ரவிச்சந்திரன்,
திருச்சி

ஏப்ரல் இதழில் "நரிக்குறவர்கள்" பற்றிய ரவிக்குமார் கட்டுரையைப் படித்தேன். அதில் இரண்டு இடங்களில் வரும் "காயலான் கடை" என்ற சொற்றொடர் குறித்தான எனது விளக்கத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

"காயலான் கடை" என்று சற்றே இகழ்ச்சித் தொனியுடன் பலராலும் குறிப்பிடப்படும் அந்தக் கடைகள், எனது ஊரான காயல்பட்டின வாசிகளால் நீண்ட நாட்களாக நடத்தப்படும் கடைகளாகும். 'காயல்பட்டினம்' என்பதிலுள்ள காயல் என்பதே. 'காயலான்' ஆக இங்கு மருவியுள்ளது.

பழைய இரும்புகள், உபயோக மற்ற பல தட்டுமுட்டுச் சாமான்கள், வேறு பல பழைய சாமான்களைக் கொள்முதல் செய்து, அதை எடைக்கு எடை அப்படியே விற்பதே இவர்களின் தொழிலாகும். அதனால் உபயோகம் இல்லாத பொருள்களைக் "காயலான் கடை சமாச்சாரம்" என்று இகழ்ச்சித் தொனியுடன் குறிப்பிடும் வழக்கம் பேச்சு வழக்கில் வந்தது.

சென்னை மண்ணடித் தெருவில் இன்றும் காயல்பட்டின வாசிகளால் இரும்புக்கடைகள் நடத்தப்படுவதைப் பார்க்கலாம். திண்டுக்கல், மதுரை போன்ற ஊர்களிலும் காயல்பட்டின வாசிகளால் இது போன்ற கடைகள் இப்போதும் நடத்தப்பட்டுவருகின்றன.

அடுத்தபடியாக, பாசி மணிகளை நரிக்குறவர்கள் காயலான் கடைக்காரர்களிடம் வாங்கியதாகவும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிய தெளிவான விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், காயல்பட்டின வாசிகளில் பெரும்பாலோர் உயர்ரக மாணிக்க வியாபாரிகள், கோமேதகம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என்பனவற்றை வாங்கி விற்பவர்கள். இன்றும் இத்தொழிலில் ஈடுபடும் காயல் நகர் வாசிகள் உலகெங்கும் பரவியுள்ளனர். இந்தியாவின் பல பாகங்களிலும்கூட அவர்கள் இத்தொழிலைச் செய்துவருகின்றனர்.

முற்காலம் தொட்டே அவர்களின் இத்தொழிலுக்கு வசதியாக, போகும் ஊர்களில் தங்கி ஓய்வெடுப்பதற்கு வழியாக, "முத்துச் சாவடி"களை நிர்மானித்தனர். அது போன்ற "முத்துச்சாவடி" இன்றும் மதுரையில் செயல்பாட்டில் உள்ளது. மதுரைக்குப் போகும் காயல் பட்டின வாசிகள் யாரும் இங்கு இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். இது போன்று இன்னுமொரு முத்துச்சாவடி நாகர்கோவிலும் இருப்பதாக அறிகிறேன்.

ராஜமார்த்தாண்டன் தனது சிற்றிதழ் தொடர்பான கட்டுரையில் "கணையாழி"யை மறந்துவிட்டது ஏன்? அவரால் குறிப்பிடப்படும் இதழ்கள் வெளிவந்த அதே காலகட்டத்தில் வெளிவந்ததுதானே "கணையாழி"யும்!

ஒருவேளை தமிழகத்திற்கு வெளியே (டெல்லி) இருந்து வெளிவந்த இதழ் என்பதலா? (அல்லது) சிற்றிதழ்களுக்கே உரிய இலக்கணப்படி எட்டு, பத்து இதழ்களோடு நிற்காமல், பல வருடங்கள் தொடர்ந்து வெளிவந்ததாலா எதனால் அது விடுபட்டது என்பதை ராஜமார்த்தாண்டனே விளக்கினால் நல்லது. தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் 'கணையாழி'க்கு மறுக்க முடியாத ஒரு இடம் உள்ளது என்பதே உண்மை.

சுந்தர ராமசாமியின் கதை மிக அருமை.

கே.எஸ். முகம்மத் ஷ§ஐப்
காயல்பட்டினம்.

நாட்டில் பல லட்சம் குடும்பங்கள் வாழையடி வாழையாக இன்னும் மனித மலத்தைத் தலையில் சுமந்துகொண்டு திரிவதைக் கண்டு வருந்தாமல், உயர்சாதி மாணவன் ஒருவனுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்பதைத் திரையில் கண்டு கண்ணீர்விட்டுக் கதறியழுத 'ஜென்டில்மென்' நிறைந்த நம் நாட்டில், நரிக்குறவர்களின் பிரச்சினைகள் பற்றி எழுதியுள்ள ரவிக்குமார் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

கா. தங்கதுரை,
பழனி

இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பாரம்பரிய விவசாய முறைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருக்கவில்லை. இன்றைய தேவை விஞ்ஞான அடிப்படையில் அமைந்த இயற்கை வேளாண்மை. பசுமைப் புரட்சி காலத்தின் கட்டாயம். அறுபதுகளில் இறப்பு விகிதம் குறைந்து பிறப்பு விகிதம் அதிக மாகிக்கொண்டிருந்தது. வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு உள்நாட்டு விளைச்சல் போதாததால் றிலி-480 திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பு பர்மா அரிசி இறக்குமதி நின்றுபோய்விட்டது. வறட்சி தாங்கும் குறுகிய காலப் பயிர் ரகங்கள் 1ஸி-20 பொன்னி அறிமுகப்படுத்தப்பட்டு நெல் உற்பத்தி அதிகரித்து நாடு தன்னிறைவு பெற்றது. ஆற்றுப் பாசன வசதியற்ற ராமநாதபுர மாவட்டத்தில் நெல் பயிரிடப்பட்டது. புதிய ரகங்களுக்கு ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து தேவைப்பட்டதும் அதனால் நிலமும் சுற்றுச் சூழலும் மாசடைந்ததும் உண்மைதான். மனிதன் தவறுசெய்துதான் சரியான பாதையைக் கண்டடைகிறான். பிலிப்பைன்ஸ் நெல் ரகங்களிலிருந்து

1$-20 பொன்னியை உருவாக்கிய வேளாண் விஞ்ஞானிகள் நம் நன்றிக்கு உரியவர்கள்.

சங்கீதா ஸ்ரீராம் தொடர்ந்து எழுதப்போவதாகத் தெரிகிறது. அவருக்கு சில கேள்விகள்.

நாற்பதுகளில் தமிழ்நாட்டு மக்கள்தொகையில் குறைந்த சதவிகித மக்கள்தான் அரிசி உணவு சாப்பிட்டார்கள். ஏன் பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நிலையேற்பட்டது? பாரம்பரியத் தொழில்நுட்பம் என்ன ஆயிற்று?

நம் நாட்டு மக்கள் பஞ்சம் பிழைக்க பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், மொரிஷியசுக்குக் குடியேறினார்கள். ஏன்? வளம் மிகுந்த தஞ்சைத் தரணியில் பிறந்த தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் ஏன் தென்னாப்பிரிக்கா சென்றார்கள்?

வெள்ளைக்காரர் ஆட்சியில் பஞ்ச நிவாரண இலாகா என்ற துறை இருந்தது. தாது வருடப் பஞ்சத்தில் பட்டினி கிடந்த மக்களுக்கு வேலைதர பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டது. சங்க காலத்திலிருந்து பஞ்சம் அவ்வப்போது தலைகாட்டியிருக்கிறது. பாரம்பரிய அறிவியலால் மாறிமாறி வரும் வெள்ளம், வறட்சி, பஞ்சத்தைத் தவிர்க்க முடிந்ததா?

இயற்கை வேளாண்மை விளைபொருள்களின் விலை அதிகமாக இருக்கிறது. ஏன்? ஆறு கோடி மக்களுக்குத் தேவையான நெல், எண்ணெய்வித்துக்கள், பயறு, வகைகள், காய்கறிகளுக்குப் போதுமான இயற்கை உரம், பூச்சி கொல்லி கிடைக்க வழியுண்டா?

பி.எஸ். மணியன்,
சென்னை

'காலச்சுவடு' 100வது சிறப்பிதழை வெளியிட்டுள்ளதை ஒரு பெரிய சாதனையாக் கொள்ளவேண்டும். இன்றைய இலக்கிய இதழ்கள் பெரும்பாலும் 'காலச்சுவடு' இதழைப் பின்பற்றியே வருகின்றன என்பது காலச்சுவடுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. 'காலச்சுவடு'க்கு முன்-பின் என்று பெரிய கட்டுரை எழுதலாம்-யாராவது.

சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியின் முடிவு அறிவிக்கப் படாமலேயே ஏப்ரல் 19 அன்று நடக்க இருக்கும் ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வில் பரிசு வழங்குவதாக அறிவிப்பு வந்துள்ளது ஏற்புடையதாக இல்லை.

சிற்றிதழ் இயக்கம் சில பார்வைகள் சிறப்புப் பகுதி 100வது 'காலச்சுவடு' இதழை மேலும் சிறப்பித்துள்ளது. மிக முக்கியமான சிற்றிதழ்களில் பங்கு கொண்ட படைப்பாளிகள் குறித்தும் படைப்புகள் குறித்தும் ராஜமார்த்தாண்டன், பழ. அதியமான், ஞானி, அம்ஷன் குமார், மோகனரங்கன் ஆகியோரது கட்டுரைகள் இதழ்களின் நோக்கம், செயல்பாடு பற்றிச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன.

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
கோவை

மலேசியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கூட்டணியான தேசிய முன்னணி 50 ஆண்டுகளாக மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றது. இப்போது தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தோல்விக்குத் தமிழர்களின் எழுச்சிதான் காரணம். ஆனாலும் இலங்கையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் துயர்நிலை போன்று மலேசியாவிலும் ஆரம்பம் ஆகிறதே என நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. 1957இல் 888 தமிழ்ப் பள்ளிகள் 2007இல் 523 ஆகக் குறைந்துள்ளன. கட்டுரை மூலம் மலேசியாவின் நிலைமையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இலங்கைப் பிரச்சினை இப்போது மலேசியப் பிரச்சினை என்று இந்தியர்களுக்குச் (தமிழர்களுக்கு) சோதனை மேல் சோதனை. இந்தியாவின் மவுனம் கவலையளிக்கிறது. சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. ராஜமார்த்தாண்டன் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் அப்போது, கல்கி, ஆனந்த விகடன் குழுதம், கல்கண்டு என்பவைதான் என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது அந்தப் பத்திரிகைகளைப் படிக்கத் தோன்றவில்லை. அரசு நூலகத்தில் இப்போது சிற்றிதழ்களை அதிகம் விரும்பிப் படிக்கின்றனர்.

ஈ. சிதம்பரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்

உள்ளடக்கம்