Google   www kalachuvadu.com

பத்தி
பிறவழிப் பயணம்
புழக்கடை மனிதர்கள்
ரவிக்குமார்

சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரிகளுக்குச் செல்லும்போது நான் விரும்பிக்கேட்டுச் சீட்டு எழுதியனுப்பும் பாடல்களில் ஒன்று 'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்' என்ற பாரதியின் பாடலாகும். உருக்கம் ததும்பும் அவரது குரலில் அந்தப் பாடலைக் கேட்கும்போது பாரதியின் மீது மதிப்புக் கூடும். அந்தப் பாடல் காட்சியில் எஸ். வி. ரங்காராவும் சிவாஜி கணேசனும் வெளிப்படுத்தும் நடிப்பும்கூட மிகையாகத் தெரியாது. ஆனால், அதே பாடலை நான் அண்மையில் கேட்டபோது ஏதோ நெருடியது. பாரதி எழுதிய கண்ணன் & என் ஆண்டான் என்ற கவிதையையும் கண்ணன் & என் சேவகன் என்ற கவிதையையும் திரும்பவும் எடுத்துப் படித்தபோது வேறுவிதமான எண்ணங்கள் தோன்றின. இதற்கு இடையில் நடந்த சம்பவத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் தான் எனது நிலைமைக்குக் காரணம் என்ன என்பது புரியும்.

பிப்ரவரி மாதம் இருபத்தெட்டாந்தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி என்ற கிராமத்துக்குத் தோழர்களோடு போயிருந்தேன். அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூருக்குச் சென்று வீட்டு வேலை செய்துவந்த கீதா என்ற பதினேழு வயதுப் பெண் அண்மையில் மர்மமான முறையில் இறந்து போனார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத்தான் அந்த ஊருக்குச் சென்றோம். நடந்த விவரங்களைக் கீதாவின் பெற்றோரிடம் கேட்டோம். கீதா கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருச்சூரில் உள்ள சன்னிமூக்கன் என்பவர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். அதற்குமுன் அவரது அக்கா அங்கே வேலை பார்த்திருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆனதால், கீதாவை அங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். சன்னிமூக்கனின் உறவினரான டாக்டர் ஷாஜு ஜார்ஜ் என்பவர் வீட்டில் கீதாவின் தங்கை ஜெயந்தி வேலை பார்த்துவந்துள்ளார்.

சில மாதங்களுக்குமுன் அவரது முறைப் பையனோடு கீதாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. தன்னைச் சீக்கிரமே வந்து அழைத்துச் செல்லுமாறு கீதா தனது பெற்றோருக்கு போன் பண்ணிச் சொல்லியிருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பிறகு 19.02.2008 அன்று இரவு சன்னி மூக்கன் வீட்டிலிருந்து கீதாவின் பெற்றோருக்கு போன் வந்திருக்கிறது. கீதாவுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடனே புறப்பட்டு வருமாறும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். கீதாவின் அப்பாவும் அம்மாவும் இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அங்கே போய்ச் சேர்ந்ததும் நேரே அவர்கள் திருச்சூர் கிழக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள். உங்கள் மகளுக்கு நீங்கள் பலவந்தமாகத் திருமணம் செய்துவைக்க முயன்றிருக்கிறீர்கள், அதனால், அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று அவர்களைப் போலீஸ்காரர்கள் மிரட்டியிருக்கிறார்கள். சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் காவல் நிலையத்திலேயே வைத்து மிரட்டப்பட்டிருக்கிறார்கள். சில காகிதங்களில் கையெழுத்துப் போடுமாறு போலீஸ்காரர்கள் வற்புறுத்தியுள்ளனர். கையெழுத்துப் போட்டபிறகு அவர்கள் மார்ச்சுவரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கீதாவின் உருத்தெரியாத உடலைப் பார்த்துக் கதறியழுத அவரது அம்மா மயக்கமடைந்து விட்டார். ஒரு காரில் அவர்களை கீதாவின் சடலத்தோடு பலவந்த மாகத் திணித்து ஊருக்கு அனுப்பி யுள்ளனர். சன்னிமூக்கனின் உறவுக்காரர் வீட்டில் வேலை செய்துவந்த கீதாவின் பதினைந்து வயதுத் தங்கையான ஜெயந்தியிடம் விசாரித்த போது தனது அக்காவிடம் சன்னி மூக்கன் தவறாக நடந்துகொள்ள முயல்வதாகத் தனது அக்கா தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கீதாவை சன்னிமூக்கன்தான் கற்பழித்துக் கொலை செய்திருப்பாரெனவும் கூறினார். கீதாவின் கிழிந்த ஆடைகளை எங்களிடம் காட்டினார்கள். ஆனால், திருச்சூர் கிழக்குக் காவல் நிலையத்திலோ அதைச் சந்தேக மரணம் எனப் பதிவுசெய்திருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையிலும் போஸ்ட்மார்ட்டம் ரிப் போர்ட்டிலும்கூட அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது.

செய்திகளைக் கேட்டறிந்ததும் திருவனந்தபுரத்திலிருக்கும் கவிஞர் சுகுமாரனைத் தொடர்புகொண்டேன். அவர் முன்னாள் நக்ஸலைட்டும் இப்போது அன்வேஷி என்னும் மனித உரிமை அமைப்பை நடத்தி வருபவருமான அஜிதாவின் தொலை பேசி எண்ணைக் கொடுத்தார். அஜிதாவோடு பேசி நான் சேகரித்த விவரங்களை அவர்களுக்கு அனுப்பினேன். திருச்சூரில் உள்ள 'ஜனநீதி' என்ற மனித உரிமை அமைப்பைத் தொடர்புகொள்ளுமாறு அவர் சொன்னதன்பேரில் அவர்களைத் தொடர்புகொண்டு இந்த வழக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

காந்தலவாடி கிராமத்தில் விசாரித்தபோது, அங்கிருந்து கீதாவைப் போல மேலும் பல இளம்பெண்கள் கேரள நகரங்களில் வீட்டுப் பணியாளர்களாகச் சென்று வேலை செய்துவருவது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், பெரம்பலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பல பெண்கள் இப்படி வீட்டுப் பணியாளர்களாகக் கேரளாவில் உள்ளனர். சுமார் பத்து வயதாக இருக்கும்போதே அந்தப் பெண்களை அவர்களது பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்களுக்கு இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ரூபாய்வரை முன் பணம் கிடைக்கிறது. அதிகபட்சம் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம். இப்படிக் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் சிறுமிகளை வீட்டுவேலைக்கு அமர்த்தித் தருவதற்கு இந்த மாவட்டங்களில் நிறைய ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். பல சமயங்களில் தமது பிள்ளைகள் எந்த வீட்டில் வேலைசெய்கிறார்கள் என்பதும் பெற்றோருக்குத் தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் சம்பளமும்கூட ஏஜெண்டுகள் மூலமே அவர்களுக்கு வந்து சேர்கிறது. கீதாவைப் போல வெளி மாநிலங்களுக்குச் செல்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரில் வேலை செய்பவர்களுக்கும் இன்று பாதுகாப்புக் கிடையாது என்பதே யதார்த்தம்.

நமது வீடுகளில் வேலைசெய்யும் பணிப்பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம்? தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வீடு வீடாகப் பாத்திரம் கழுவியும் துணிதுவைத்தும் பெருக்கியும் துடைத்தும் அல்லல்படுகிற வீட்டுப் பணியாளர்களைக் குறித்துச் சிந்திப்பதற்கும்கூட நமக்கு நேரம் இருப்பதில்லை.

வீட்டுப் பணியாளர்களைப் பற்றி நமது சினிமாக்களும் பத்திரிகைகளும் புனைந்துவைத்துள்ள கட்டுக்கதைகள் தாம் நமது அபிப்ராயங்களை வடிவமைக்கின்றன. குடும்பத் தலைவர்களை மயக்கும் 'கவர்ச்சிக் கன்னி'களாகவே வீட்டுப் பணியாளர்களைப் பெரும்பாலான திரைப்படங்கள் சித்திரித்துவருகின்றன. தொலைக்காட்சி நெடுந்தொடர்களோ இன்னும் மேலே போய், அவர்களை 'வில்லி'களாக்கிச் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் உண்மையல்ல என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக நாம் அவற்றை மறுப்பதில்லை.

'சம்பளத்துக்காக வேறொரு வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்பவரே வீட்டுப் பணியாளர்' என சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. அறைகளைச் சுத்தப்படுத்துதல், சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் பெருக்கிச் சுத்தமாக வைத்திருத்தல் & இப்படி அவர்கள் செய்யும் வேலைகளையும் கூட அது விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதற்குப் பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. நவீன யுகத்தில் நகரத்துப் பெண்களில் பெரும்பாலோர் வேலைக்குப் போகிறவர்களாக உள்ளனர். எனவே, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் பணியாட்களை அமர்த்த வேண்டியது அவசியமாகிவிட்டது. பெரிய அணைகள், மின் திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றால் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள் நகரங்களுக்குப் பெருமளவில் குடிபெயர்கின்றனர். அவர்களுள் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாத கிராமத்துப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக மாறுகின்றனர். ஏழைக் குடும்பங்களில் அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கப் பெண்கள் வீட்டு வேலைக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள சுமார் ஐம்பத்தைந்து கோடிப் பெண்களில், வேலை செய்வோரில் தொண்ணூறு சதவீதத்தினர் அமைப்புசாராத் தொழிலாளர்களாகவே உள்ளனர். 2000ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை யன்று இந்தியாவில் சுமார் இரண்டு கோடிப் பேர் வீட்டுப் பணியாளர்களாக இருப்பதாகக் கூறியது. அதில் இருபது சதவீதம்பேர் பதினான்கு வயதுக்கும் குறைவான சிறுமிகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மும்பை நகரத்தில் மட்டுமே சுமார் ஆறு லட்சம் வீட்டுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் பதினெட்டு லட்சம் பேர் வீட்டுப் பணியாளர்களாக வேலைசெய்து கொண்டிருப்பதாக அவர்களுக்கென சங்கமொன்றை நடத்திக்கொண்டிருக்கும் கிளாரா தெரிவிக்கிறார்.

கண்ணன் & என் சேவகன் என்ற கவிதையை பாரதி எழுதிய காலத்தில் இந்த அளவு நகரமயமாக்கல் நடந்திருக்கவில்லை. எனவே, நகரத்தைக் காட்டிலும் கிராமமே அவரது சிந்தனையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருந்தது. கண்ணன் & என் ஆண்டான் என்ற கவிதையில் அவர் ஒரு கிராமத்து அடிமையையே சித்தரிக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் செல்வாக்கையும் பள்ளுப் பாடல்களின் தாக்கத்தையும் பாரதியின் அந்தக் கவிதையில் நாம் பார்க்க முடிகிறது. 'காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்; பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே' என்ற வரிகளில் அதை நாம் தெளிவாகவே பார்க்கலாம். கண்ணன் & என் சேவகன் என்ற கவிதையிலும்கூட மாடு கன்று மேய்ப்பது பற்றி அவர் குறிப்பிடுகிறார். 'மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்; வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்' என்ற வரிகள் அதை எடுத்துக்காட்டும். கண்ணன் என்ற சேவகனின் பெருமைகளை, பாரதி விதந்துரைப்பது ஒருபுறமிருக்க பொதுவில் பணியாட்கள் குறித்து அவர் தீட்டிக்காட்டும் சித்திரம் நம்மைத் திகைப்படையச் செய்கிறது. 'கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாமறப்பார்; வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்' என்று அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பாரதி 'ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார் தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்' என்று வீட்டுப் பணியாளர்களைப் பேராசைக்காரர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், துரோகம் செய்பவர்களாகவும் சித்தரித்துக் காட்டுகிறார். இப்போதும் பொதுப்புத்தியில் அவர்களைப் பற்றிப் பதிந்துள்ள கருத்துகள்தான் பாரதியின் கவிதையிலும் கசிந்திருக்கிறது. ஒரு சேவகன் எப்படி இருக்க வேண்டும் என அவர் வர்ணித்திருப்பதைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியே ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக 'காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை' என அந்த சேவகன் கூலியே வேண்டாமென மறுப்பதைப் பார்க்கையில், பாரதி காட்டும் 'உதாரண சேவகனின்' குணாம் சங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் வீட்டுப் பணியாளர்களின் நலன்களுக்கான இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன. வேலைக்கான உத்தரவாதம், நியாயமான சம்பளம், மருத்துவ உதவி, விடுப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துப் போராடிவருகின்றன. அதன் காரணமாக இப்போது மத்திய அரசு வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்புக்காகச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ''வீட்டுப் பணியாளர் பதிவுச் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் 2008'' என அழைக்கப்படும் அந்தச் சட்டத்துக்கான மசோதா இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது. வீட்டுப் பணியாளர்கள், அவர்களை வேலைக்கு அமர்த்துவோர் ஆகிய இரு தரப்பினரும் இந்தச் சட்டத்தின் கீழ் அடங்குவர். அவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மாவட்ட வாரியங்களில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரியம் வீட்டுப் பணியாளர்களுக்கான முழுநேரச் சம்பளம் எவ்வளவு, பகுதிநேரச் சம்பளம் எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும். வீட்டுக்காரர் அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்காக ஆண்டுக்கு இருநூறு ரூபாய் தர வேண்டும். வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

'வீட்டுப் பணியாளர் நலநிதி' என ஒரு நிதி உருவாக்கப்படும். அதன் மூலம் வீட்டுப் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். அவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரு தொகையை இந்த நிதிக்குச் செலுத்த வேண்டும். பணியாளரை வேலைக்கு அமர்த்தியுள்ள வீட்டுக்காரர் மாவட்ட வாரியத்தில் அந்தப் பணியாளர் குறித்த விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வீட்டுப் பணியாளர் நிரந்தரமாக வேலை செய்பவராக இருந்தால் நாளன்றுக்குக் குறைந்தது பத்து மணி நேரம் ஓய்வு தர வேண்டும். ஆண்டுக்குப் பதினைந்து நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். மத்திய / மாநில அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சக் கூலியை அவருக்குக் கொடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் வீட்டுக்காரருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

மாவட்ட வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வீட்டுப் பணியாளர்களின் நிலைமையை அறிவதற்கு அவர் வேலைசெய்யும் வீட்டுக்குச் சென்று பார்வையிடலாம். அதை அந்த வீட்டுக்காரர் தடுத்தால் அவருக்கு மூன்று மாதம்வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும். சிறுமிகளை வேலைக்கு அமர்த்தினாலோ வீட்டு வேலைசெய்யும் பெண்களைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தினாலோ அந்த வீட்டுக்காரருக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இது மத்தியச் சட்டம் என்ற போதிலும் மாநில அரசுகள் இந்தச் சட்டத்துக்கான நடைமுறை விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

மத்திய அரசு இப்படிச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்பே தமிழக அரசு இந்த விஷயத்தில் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 'வீட்டுப் பணியாளர் நல வாரியம்' இந்தத் திசையில் செய்யப் பட்ட சிறப்பான காரியமாகும். இந்த வாரியத்தில் பதிவுசெய்யும் உறுப்பினருக்குத் திருமண உதவித்தொகை, பேறுகால உதவித் தொகை முதலியவை வழங்கப்படுகின்றன. அந்த உறுப்பினர் இயற்கையாக மரணம் அடைந்தால் பதினைந்தாயிரம் ரூபாயும் விபத்தில் உயிர் நீத்தால் ஒரு லட்ச ரூபாயும் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் சட்டமும் சரி, தமிழக அரசு அமைத்திருக்கும் வாரியமும் சரி, அந்தந்த மாநிலத்துக்குள் வேலைசெய்பவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளன. மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைசெய்யும் பெண்களின் நிலையை அவை கவனத்தில் கொள்ளவில்லை. இது தவிர வெளிநாடுகளுக்குச் சென்று வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்துகொண்டிருப்பவர்கள் பற்றியும் அவை வாய்திறக்கவில்லை.

அண்மையில் மத்திய அமைச்சர் வயலார் ரவி சில நடவடிக்கைகளை எடுத்தார். இனிமேல் வீட்டு வேலைக்காகப் பெண் தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் நானூறுடாலர் சம்பளம் தர வேண்டும். அதாவது மாதம் சுமார் பதினெட்டாயிரம் ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா இரண்டாயிரத்து ஐந்நூறு அமெரிக்க டாலரை இந்தியத் தூதரகத்தில் வேலைக்கு அமர்த்துபவர் டெபாசிட்டாகக் கட்ட வேண்டும். முப்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களை மட்டும் தான் வேலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு மொபைல் போன் ஒன்றை வேலைக்கு அமர்த்துபவர் வழங்க வேண்டும் முதலான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

வீட்டு வேலைசெய்யும் பெண் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனைகள் சமையல்காரர்கள், டிரைவர்கள் ஆகியோருக்கும் பொருந்துமெனச் சொல்லப்பட்டுள்ளன. பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ஹாட்லைன் வசதி ஒன்றை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இனிமேல் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்கள் தொழில் திறன்களில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பதையும், வேலை தொடர்பாக முன் அனுபவமோ பயிற்சியோ பெற்றிருக்க வேண்டுமென்பதையும் கட்டாயமாக்க அரசு முடிவுசெய்துள்ளது.

வெளிநாடுகளில் வீட்டுப் பணியாளர்களாகச் செல்பவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை அந்தந்த நாடுகள் நிர்ணயிக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், அதை அந்த நாட்டு அரசுகள் ஏற்கவில்லை. குறிப்பாக அரபு நாடுகள் அதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. அரபு நாடுகளில்தான் நம் நாட்டுப் பெண்கள் அதிக அளவில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர்.

காந்தலவாடியிலிருந்து திரும்பிய பிறகு அதைப் பற்றி நான் ஜூனியர் விகடனில் எழுதினேன். அதைப் படித்துவிட்டுத்தான் கிளாரா என்னைத் தொடர்புகொண்டார். இப்போது கீதாவின் வழக்கைத் 'தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் யூனியன்' என்ற அவரது அமைப்பு கையிலெடுத்துள்ளது. கீதாவின் சடலத்தை அவரது பெற்றோர் எரித்துவிட்டதால் மறு பிரேதப் பரிசோதனை செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே, அந்த வழக்கை மறு விசாரணைசெய்ய வேண்டும் எனக் கேரள முதல்வருக்கு இப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்டுகள் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படித் தமிழகப் பெண்கள்வதைக்கப்படுவது நியாயம்தானா என இங்குள்ள தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு நான் சட்டப் பேரவையில் பேசியபோது, வீட்டுப் பணியாளர் பிரச்சினை குறித்துப் பேசினேன். அவர்களுக்கு நலவாரியம் அமைப்பதில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்பட்ட தமிழக அரசு அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை இதுவரை அறிவிக்காமல் காலம் கடத்துகிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசினேன். குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின் அட்டவணை எண் ஒன்றில் வீட்டுப் பணியாளர்களைச் சேர்த்து முதல்கட்ட அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதமே செய்யப்பட்டாயிற்று. (தொழிலாளர் நலத் துறையின் அரசாணை எண்: 85 நாள் 09.05.2007) அந்த அறிவிப்பு செய்யப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்ததும் இறுதி அறிவிப்பைச் செய்து குறைந்தபட்சக் கூலியை நிர்ணயிக்க வேண்டுமென்று அந்தச் சட்டம் சொல்கிறது. ஆனால், இன்னும் தமிழக அரசு அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆந்திரப் பிரதேச அரசு வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து ஆணை பிறப்பித்துள்ளது (G.O: M S No. 119 Labour, Employment,Training&Factories Dated 10th December, 2007) நாளன்றுக்கு எட்டுமணி நேரம் வேலைசெய்யும் வீட்டுப் பணியாளருக்கு மாதச் சம்பளமாக இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மாதத்துக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்குப் பன்னிரெண்டரை ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி இங்கும் விரைவில் குறைந்தபட்சச் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டுமெனக் கேட்டேன். பொது விவாதத்தின் இறுதியில் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் பேராசிரியர். க. அன்பழகன் எனது கோரிக்கையைக் குறிப்பிட்டு வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று விரைவில் ஊதியம் முடிவுசெய்யப்படும் என அறிவிப்புச் செய்தார். இதன்மூலம் தமிழகம் முழுதும் இருக்கிற வீட்டுப் பணியாளர்களுக்கு இப்போது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.

கீதாவின் ஊரான காந்தலவாடிக்கு நான் மீண்டும் 19.04.2008 அன்று போயிருந்தேன். அங்கு மீண்டும் விசாரித்தபோது, காந்தலவாடியிலிருந்து பதினோரு பெண்கள் கேரளாவுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது. அங்கிருந்து அப்படி வேலைக்குப்போன இரண்டு பெண்கள் ஏற்கனவே பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த ஊர் இளைஞர்கள் கூறினார்கள். பக்கத்துக் கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கேரளாவில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அப்படிப் போனவர்களில் சுமார் பத்துப் பெண்கள் பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெண்களின் படிப்பறிவு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது, வறுமை முதலிய காரணங்களால் அப்பகுதி மக்கள் விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கின்றனர். வறுமை ஒழிப்புக்காகவும் வேலை தேடிக் குடிபெயர்வதைத் தடுப்பதற்காகவும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய வேலை உறுதித் திட்டமும் கூட அந்தப் பகுதிகளில் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவற்றின் காரணமாகத்தான் அப்பகுதியிலிருந்து இவ்வளவு பேர் பிற மாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. கீதாவின் வழக்கில் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளுக்கு இப்போதாவது ஒரு தீர்வினைக் கண்டாக வேண்டும். பிற மாநிலங்களில் வேலைசெய்யும் வீட்டுப் பணியாளர் அனைவரையும் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும். அவர்களில் வயதுவந்த வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளத்தையும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும். மேஜர் ஆகாத சிறுமிகளைக் கண்டறிந்து அவர்களையெல்லாம் கொத்தடிமைகளாகக் கருதி, உடனே அவர்களை மீட்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டுப் பணியாளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. சமையல் அறையிலும் புழக்கடையிலுமாக அவர்களது வாழ்வு முடிந்துகொண்டிருக்கிறது. இனிமேலும் தாமதப்படுத்தாமல் வீட்டுப் பணியாளர் பதிவுச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் அவ்வளவு சீக்கிரம் இந்தியாவில் நிறைவேற்றப்படுவதில்லை. நேரு காலத்தைய இந்து சட்ட மசோதா முதல் இப்போதைய பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவரை அதற்கு ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். அப்படி எதுவும் நேர்ந்துவிடாமல் விரைவில் இந்தச் சட்டம் நடை முறைக்கு வர வேண்டும். அதற்குத் தமிழக அரசும் இந்தப் பிரச்சினையின்மீது அக்கறைகொண்ட அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

புகைப்படங்கள்: ரவிக்குமார்

உள்ளடக்கம்