Google   www kalachuvadu.com

அஞ்சலி: இராம. திரு. சம்பந்தம்
'எழுத்தாளன் பேச்சா, போடு கொட்டை எழுத்திலே'
ராஜமார்த்தாண்டன்
1980களின் பிற்பகுதியில், தினமணி நாளிதழ் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் குழுவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தினமணியின் இணைப்பான தமிழ்மணியில் 'புதுமைப்பித்தன் கதைகளில் பெண்கள்' என்னும் கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பாராட்டி அப்போதைய ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் எனக்குக் கடிதம் எழுதியதுடன், மதுரைப் பதிப்பின் செய்தி ஆசிரியராக இருந்த இலட்சுமணனிடம், 'ராஜமார்த்தாண்டன் விருப்பப்பட்டால், சென்னை வந்து தமிழ்மணியில் பணியாற்றலாம்' என்று கேட்டிருந்தார். அதன்படி நானும் 1989இன் பிற்பகுதியில் சென்னைக்குச் சென்றேன். அந்தக் காலகட்டத்தில், இராம. திரு. சம்பந்தம் (இராம. திருஞான சம்பந்தம்) 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவரைப் பார்த்திருக்கிறேனே தவிர, அவருடன் பேசியதில்லை.

ஐராவதம் மகாதேவன் ஆசிரியர் பொறுப்பை ராஜிநாமா செய்தபின், பொறுப்பாசிரியராக இருந்த கி. கஸ்தூரிரங்கன் ஆசிரியரானார். சிறிது காலத்துக்குப்பின், சம்பந்தம் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னரே அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஐராவதம் மகாதேவனும் கஸ்தூரிரங்கனும் காலை பதினொரு மணிக்கு அலுவலகத்துக்கு வந்து, மாலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார்கள். பட்ஜெட் மற்றும் சில முக்கிய நிகழ்வுகளின் போதுதான் இரவு ஒன்பது, பத்து மணிவரை இருப்பார்கள். அலுவலகத்தில் இருக்கும்போது பெரும்பாலும் தங்களுக்கான அறையில் அமர்ந்து பணிகளைக் கவனிப்பார்கள். எப்போதாவதுதான் ஆசிரியர் குழுவினர் அமர்ந்து பணியாற்றும் பகுதிக்கு வருவார்கள். ஆனால் சம்பந்தமோ ஆசிரியர் குழுவினரின் அறையில் நின்றுகொண்டேதான் உதவியாசிரியர்கள் மொழிபெயர்த்த செய்திகளையும் செய்தியாளர்கள் சேகரித்துவந்த செய்திகளையும் திருத்திக்கொண்டும் செய்திகளை எப்படி வடிவமைக்க வேண்டும், எத்தகைய தலைப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக்கொண்டுமிருப்பார். அவர் தனது அறையில் அமர்ந்திருப்பது, பெரும்பாலும் உணவுண்ணும்போது அல்லது முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்களில்தான். தரம் குறையாமல் தினமணியின் விற்பனையை உயர்த்துவதொன்றே எப்போதும் அவரது குறிக்கோளாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை என்ன, கூடியிருக்கிறதா குறைந்திருக்கிறதா, விளம்பரங்கள் எவ்வளவு வருகின்றன, விற் பனையாளர்கள் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதில் மிகவும் அதிக அக்கறைகாட்டுவார். ஐராவதம் மகாதேவனும் கஸ்தூரிரங்கனும் விற்பனையை விடவும் பத்திரிகையின் தரத்திலேயே குறியாக இருந்தனர். அவ்வகையில், பத்திரிகையின் வளர்ச்சியில் ¢அதன் உரிமையாளரைவிடவும் அதன் ஆசிரியரான சம்பந்தமே அதிக அக்கறை கொண்டிருந்தார் என்று சொல்வது சற்றும் மிகையல்லதான்.

ஏ.என். சிவராமன் காலம்வரை தினமணி ஆசிரியர் குழுவினர் பயன்படுத்திவந்த சொற்பிரயோகங்களை (ஸ்திரீ, ஜனாதிபதி, அக்ராசனர் . . . போன்றவை) ஐராவதம் மகாதேவன் தமிழ்ப்படுத்தினார். நாளிதழின் மொழிநடையையும் செய்தி வெளியிடும் முறையையும் முற்றிலும் மாற்றியமைத்தார். பெரியாரின் சீர்திருத்த எழுத்து வடிவத்தை முதன்முதலில் வழக்கத்தில் கொண்டு வந்த நாளிதழ் தினமணி தான். ஐராவதம் மகாதேவன்தான் அதைச் செயல்படுத்தினார். இலக்கணப் பிழையில்லாமல் நல்ல தமிழில் செய்திகள் வெளியிடப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இராம. திரு. சம்பந்தமும் கடைசிவரையிலும் அதனைப் பின்பற்றினார்.

ஐராவதம் மகாதேவன் தினமணி இணைப்பான வெள்ளிமணியில் (அதில் அவருக்கு உவப்பில்லாத சினிமா, டி.வி., ராசிபலன் பகுதிகள் இடம்பெற்றிருந்தன.) கவனம் செலுத்தியதே இல்லை. அந்தப் பக்கங்களைப் பார்ப்பதுகூட இல்லை. ஆனாலும், அவரது நோக்கமறிந்தே அவற்றில் பொறுப்பாகத் திரைப்படச் செய்திகளும், அவை தொடர்பான புகைப்படங்களும் பிரசுரித்துவந்தனர். வெள்ளிமணி மற்றும் தினமணி கதிரில் பிரசுரிக்கப்படும் திரைப்பட 'ஸ்டில்'கள் மற்றும் செய்திகள் சம்பந்தம் பார்வையிட்டு, அனுமதித்த பின்னரே பிரசுரிக்கப்பட்டன. அந்த அளவில் (விற்பனையில் செலுத்திய கவனத்தை) நாளிதழின் தரத்திலும் செலுத்தினார். அதில் அவர் மிகவும் கண்டிப்புடனும் நடந்துகொண்டார்.

இதே போன்ற உழைப்பையும் சிரத்தையையும் சக ஊழியர்களிடமும் எதிர்பார்த்தார் இராம. திரு. சம்பந்தம். கைநிறையச் சம்பளம், பிரச்சினையில்லாத குடும்ப வாழ்க்கை அமைந்த அவருக்கு அது சாத்தியமாக இருந்தது. ஆனால் மனநிறைவில்லாத சம்பளத்துடன் நாளும் அல்லாடிக்கொண்டிருந்த ஆசிரியர் குழுவினரும் செய்தியாளர்களும் தன்னைப் போலவே நிர்வாகத்தினருக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டுமென்ற அவரது எதிர்பார்ப்பு, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.

தனது சக ஊழியர்களில் தனக்கு மிகவும் விசுவாசமான சிலர், பிறரைப் பற்றிக் கூறும் பணி சார்ந்த மற்றும் தனிப்பட்ட விஷயங்கள், தகவல்களை இராம. திரு. சம்பந்தம் பெரிதும் நம்பியிருந்தார். இருந்த போதிலும், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அதுகுறித்து விசாரித்து உண்மையை அறியவும் (முயற்சி) செய்வார். பெரும்பாலும் அவை சில்லறை விஷயங்களாகவே இருக்கும். நானும் எங்கள் பிரிவில் சீனியர் அட்டென்டராகப் பணியாற்றிய சக்கரை என்கிற சக்கர பாணியும் சில தினங்களில் பணி முடிந்ததும் மது அருந்துவது வழக்கம். இதை யாரோ இராம. திரு. சம்பந்தத்திடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, அதுபற்றி என்னிடம் ஒரு நாள் கேட்டார். நான், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று முதலில் மறுத்தேன். மீண்டுமொருநாள் அதையே கேட்டார். 'வேலை முடிந்ததும் இரவில் சில நாள்கள் நாங்கள் மது அருந்துவ துண்டுதான்' என்று சொன்னேன். அதன் பிறகு ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் அதைப் பற்றி விசாரித்ததே கிடையாது. தான் கேள்விப்பட்டது உண்மைதானா என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமே அவரிடம் இருந்தது. செய்திகளின் பிரசுர விஷயத்திலும் இந்த ஆர்வம் இருந்ததே பத்திரிகைத் துறையில் அவரது வெற்றிக்கான காரணம் என்றும் சொல்லலாம்.

செய்திகளின் சேகரத்திலோ அவற்றை எழுதிய முறையிலோ மொழிபெயர்ப்பிலோ தவறுகள் நேர்ந்துவிட்டால் ஐராவதம் மகா தேவன், சம்பந்தப்பட்டவரைத் தனது அறைக்கு அழைத்து, யாருமறியாமல் கண்டிப்பது வழக்கம். பாராட்டுவ தென்றால் பலர் முன்னிலையில் பாராட்டுவார் அவர். இராம. திரு. சம்பந்தம் இதற்கு நேர்மாறானவர். பாராட்டும் வசையும் ஒன்றுபோல் அதீதமான நிலையில், பலர் முன்னிலையிலேயேதான் அரங்கேறும். ஆசிரியர் குழுவினர் பணியாற்றும் அறையிலுள்ள தகவல் பலகையிலும் எழுத்து வடிவில் அந்த வசை இடம்பெற்றிருக்கும் - அனைவரின் பார்வைக்காக. ஆசிரியரைச் சந்திக்க வரும் பிரமுகர்கள், செய்திகள் கொண்டு வருகிறவர்கள், பிற துறைகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் அதைப் படிக்கும் வாய்ப்பு உண்டு. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பதை இராம. திரு. சம்பந்தம் கடைசிவரையிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் மென்மனம் கொண்ட கவிஞரும் ஓவியருமான யூமா. வாசுகி, மூன்று மாத காலம் தினமணியில் புகைப்படக்காரராகப் பணியாற்றியபோது, அவரிடம் இராம. திரு. சம்பந்தம் நடந்துகொண்ட முறை மிகவும் கடுமையானது. சமீபத்தில் வெளியான மஞ்சள்வெயில் நாவலில் யூமா. வாசுகி அதனைப் பதிவுசெய்திருக்கிறார் என்றால், அந்தச் சம்பவம் அவரை எவ்வளவு பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தனக்குப் பிடிக்காத அல்லது தன்னைப் பிடிக்காத, திறமையில்லாதவர்கள் என்று தான் கருதும் அல்லது தனக்கு வேண்டியவர்கள் கருதும் உதவியாசிரியர்கள், செய்தியாளர்களை இடமாற்றம், துறை மாற்றம் செய்து அவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கியதும் உண்டு. இப்படியும் அவர் நடந்துகொண்டதற்குக் காரணம், தினமணியின் மீது அதன் உரிமையாளருக்கும் மேலானதொரு அக்கறை கொண்டிருந்ததுதான் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

ஏனெனில், பொதுவாக இராம. திரு. சம்பந்தம் இரக்க குணம் கொண்டவர்தான். தினமணியில் அவர் வெளியிட்ட செய்திகளின் மூலம் பொருளாதார வசதியற்ற ஏராளமான ஏழை மாணவ - மாணவியர் மற்றும் இலங்கைத் தமிழ்க் குழந்தைகள், வாசகர்களின் நிதியுதவியினால் பெரும் பயனடைந்தனர். இவ்வாறு பயனடைந்த மாணவர்கள், தினமணி அலுவலகத்துக்கு வந்து நன்றிப்பெருக்குடன் இராம. திரு. சம்பந்தத்தைப் பாராட்டியதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலான பத்திரிகையனுபவத்தில், ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் எழுத்தில் அவரது பங்களிப்பு குறைவானதுதான். ஆனால் நாளிதழின் ஆசிரியர் என்ற நிலையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்' என்ற துல்லியமான கணிப்பினடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்கும் பொருத்தமானவர்களை நியமித்து, ஒருதேர்ந்த நிர்வாகி என்பதை, தினமணியின் ஆசிரியராக அவர் பணியாற்றிய ஒன்பதாண்டுகளில் சிறப்பாகவே செய்துள்ளார். குறிப்பாகச் சொல்வதென்றால், ஞாநியை இதழாசிரியராக நியமித்தது, தினமணியின் தலையங்கப் பொறுப்பினை ராயப்பாவிடம் ஒப்படைத்தது, இசைமலர் தயாரிக்கும் பொறுப்பை இப்போதைய இதழாசிரியர் எஸ். சிவகுமாரிடமும் கல்வி மலர் பொறுப்பைப் பொன். தனசேகரனிடமும் ஒப்படைத்தது, மருத்துவ மலர் பொறுப்பைச் செய்தியாளர் ரெங்கராஜனிடம் ஒப்படைத்தது, கிறிஸ்துமஸ் மலர் தயாரிக்கும் பொறுப்பை லியோ ரொட்ரிகோவிடம் ஒப்படைத்தது, ஞாநி ராஜினாமா செய்தபின் இதழாசிரியர் பொறுப்பில் இளைய பெருமாளை நியமித்தது போன்றவற்றைச் சொல்லலாம். இவர்கள், தாங்கள் அந்தப் பொறுப்புகளில் பணியாற்றிய காலத்தில், சிறப்பாகச் செயல்பட்டனர் என்பதைத் தினமணியின் தொடர் வாசகர்கள் நன்கறிவார்கள்.

இவற்றிலும் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது ஞாநியை அழைத்து, இதழாசிரியர் பொறுப்பை ஒப்படைத்ததுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராகப் பணியாற்றி, சில பிரச்சினைகள் காரணமாக விலகி, பல்வேறு இதழ்களில் விட்டுவிட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த ஞாநியை அழைத்து இதழாசிரியர் பொறுப்பில் அமர்த்தினார். 'தீபாவளி மலர்', 'பொங்கல் மலர்', 'கல்வி மலர்' போன்ற - தரமான, நிர்வாகத்துக்கு விளம்பரம் மூலம் வருமானத்தையும் பெற்றுத்தந்த மலர்கள் வெளிவரக் காரணம் ஞாநிதான். மேலும் ஞாநி இதழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில்தான், தினமணி கதிர் இணைப்பிதழில் வாராவாரம் இரண்டுபக்க அளவில், மாரிமுத்து (யூமா. வாசுகி)வின் நவீன ஓவியங்களுடன் கவிதைகள் வெளிவந்தன. அந்தக் காலகட்டத்தில் பிரபல வார இதழ்களில் நடைமுறையில் இல்லாத ஒரு முக்கிய நிகழ்வு இது.

இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு, எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம். ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த போது தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தினமணியிலும் தினமணி சுடர், தமிழ்மணி இணைப்புகளிலும் முதன்மை கொடுத்துப் பிரசுரிக்கப்பட்டன. (பின்னர் அவ்விணைப்பிதழ்கள் காணாமல் போயின.) அதையே தன் காலத்தில் தொடர்ந்ததுடன், எழுத்தாளர்களைப் பற்றிய செய்திகள், நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், எழுத்தாளர்களின் பேச்சுகள் தினமணியில் விரிவாக - புகைப்படங்களுடன் - வெளிவரக் காரணமானவர் இராம. திரு. சம்பந்தம்தான் என்பதில் சற்றும் மிகை இல்லை. எழுத்தாளர்கள் விருது - பரிசுகள் பெற்றுக் கௌரவிக்கப்பட்ட செய்திகளும் எழுத்தாளர்களின் மரணம் பற்றிய செய்திகளும் புகைப்படத்துடன் தினமணியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது, இன்றைய நிலையிலும், பிற தமிழ் நாளிதழ்களில் இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று தான். "சமீபத்தில் ஒரு நாளிதழ் ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். 'எழுத்தாளனின் பேச்சா, போடு கொட்டை எழுத்திலே' என்று தம் உதவி ஆசிரியர்களிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். எனக்குப் புல்லரித்தது" (ஆளுமைகள் மதிப்பீடுகள், பக். 376) என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருப்பது சம்பந்தத்தைத்தான்.

இந்த ஆரோக்கியமான மாற்றத்திற்கான காரணம் இராம. திரு. சம்பந்தம்தான். உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

1998இல் காலச்சுவடு பதிப்பக நூல்களின் வெளியீடு - அதுவரை பிரசுரமாகாத மற்றும் நூல்களில் இடம்பெறாத புதுமைப்பித்தனின் படைப்புகளின் தொகுப்பான அன்னை இட்ட தீ (தொகுப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி) உள்பட நான்கு நூல்கள் - சென்னை புக் பாயிண்ட் அரங்கில் நடந்தது. அதற்கு முன்னதாக சுந்தர ராமசாமி, கண்ணன் ஆகியோர் தினமணி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தியபோது, விழாவுக்கு வருமாறு ஆசிரியரையும் அழைத்தார் சுந்தர ராமசாமி. பொதுவாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாராத நிகழ்ச்சிகளில் இராம. திரு. சம்பந்தம் கலந்துகொள்வதில்லை. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை - நிகழ்ச்சி நடந்த இடம் தினமணி அலுவலகத்துக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ`- செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுடன் நடந்தே நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சம்பந்தம். நிகழ்ச்சியில் தலையைக் காட்டிவிட்டு, உடனே திரும்பிவிடுவதாகத்தான் முதலில் சொன்னார். ஆனால், அந்த அரங்கு நிரம்பி, வெளியிலும் பார்வையாளர்கள் திரண்டிருந்தது, பெருமளவில் எழுத்தாளர்கள் வந்திருந்தது மற்றும் நிகழ்ச்சியின் திட்டமிட்ட ஒழுங்கு காரணமாகக் கடைசிவரையிலும் அமர்ந்திருந்தார் அவர். அவரை அறிந்தவர்களுக்குப் பெருவியப்பை அளித்த சம்பவம் இது. அந்த நிகழ்ச்சியைத் தினமணிக்காகப் பதிவுசெய்த பொன். தனசேகரன், வழக்கம்போல் தயாரித்த செய்தியையும் ஒரு புகைப்படத்தையும் ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார். அதற்கு அவர், 'என்னப்பா, நாலோ ஐந்தோ புத்தகங்கள் வெளியிட்டாங்களே, எல்லாப் படங்களையும் போடு' என்று கூறினார். அதற்குத் தனசேகரன், 'எல்லாப் புத்தக வெளியீட்டையும் செய்தியையும் போட்டால் அரைப் பக்கம் வந்துவிடும் சார்' என்று சொல்ல, 'பரவாயில்லைப்பா, முக்கியமான நிகழ்ச்சி, எல்லாத்தையும் போடு' என்றார். மறுநாள் தினமணியில் நான்கு புகைப் படங்களுடன், அரைப் பக்கச் செய்தியாக அந்த நிகழ்ச்சி பிரசுரிக்கப்பட்டிருந்தது. தினமணியின் வரலாற்றில் இதற்கு முன் இப்படியரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பதிவுசெய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

(இந்தச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பான இன்னொரு சம்பவத்தைக் குறிப்பிடுவதும் அவசியம் என நினைக்கிறேன். மேலே குறிப்பிட்ட நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தினமணியில் பிரசுரமான விதம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பதிப்பாளர்களை வியப்பிலாழ்த்தியது, நம்பிக்கையூட்டியது என்னும் போதே, ஒரு சிலரை அது பொறாமைக்குள்ளாக்கியது என்பதையும் சுட்டிக்காட்டுவதற்காகத்தான். தமிழினி பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தனைப் பற்றிய மூன்று நூல்களின் வெளியீடு சென்னையில் நடந்தது. அதில் நான் எழுதிய புதுமைப்பித்தனும் கயிற்றரவும் நூலை விமர்சித்துப் பேசிய அ. மார்க்ஸ், அன்னை இட்ட தீ நூல் வெளியீடு பற்றிக் குறிப்பிட்டு, 'ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் தினமணியில் காலச்சுவடு ஏஜென்ட்டுகளாகச் செயல்படுகிறார்கள்' என்று தொடர்பில்லாமல் பேசினார். அவர் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த தினமணியின் செய்தியாளரும் எனது நண்பருமான பொன். தனசேகரன், மேலே காலச்சுவடு பதிப்பக நூல்கள் வெளியீடு பற்றிய செய்தி வெளியிட்டது குறித்து நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தை - ஆசிரியர் சம்பந்தத்துக்கும் அவருக்குமிடையேயான உரையாடலை - அ. மார்க்ஸிடம் கூறி, அதற்கும் மார்த்தாண்டனுக்கும்யாதொரு தொடர்புமில்லை, ஆசிரியர் சம்பந்தம்தான் அதற்குக் காரணம் என்றும் சொன்னார். அதற்கு அ. மார்க்ஸ் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துவிட்டுப் பேச்சைவேறு திசைக்கு மாற்றினார்.)

தினமணி கதிரில் ஜெயகாந்தனின் 'சபை நடுவே' தொடர் வெளிவந்தபோது, முதல் வாரத்துக்கான கட்டுரையை அவரிடமிருந்து வாங்கிவரவும், மெய்ப்புப் பார்க்க வேண்டுமென்று அவர் விரும்பிய ஓரிரு சந்தர்ப்பங்களிலும், அலுவலகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த காரில் என்னை ஜெயகாந்தன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார் சம்பந்தம். மேலும், மூத்த எழுத்தாளர்கள் சி. சு. செல்லப்பா, சுந்தர ராமசாமி போன்றவர்கள் அலுவலகத்துக்கு வந்த சமயங்களில், அவர்கள் திரும்பும்போது இரண்டாவது மாடியிலிருந்து லிப்டில் அவர்களை அழைத்துக்கொண்டு கீழே வந்து, அவர்கள் வந்திருந்த கார் அல்லது ஆட்டோ நிற்குமிடம்வரை சென்று வழியனுப்பிவைப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவையெல்லாம் வேறெந்த நாளிதழ் ஆசிரியர்களிடமும் எதிர்பார்க்க முடியாத செயல்பாடுகளாகும். இத்தனைக்கும் ஜெயகாந்தன், சி. சு. செல்லப்பா, சுந்தர ராமசாமி போன்ற படைப்பாளிகளின் நூல்களை அவர் படித்ததுமில்லை. இதனை அவரே கூறியுமிருக்கிறார். ஆனாலும், அவர்களின் இலக்கியச் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்தார் என்பதே மரியாதைக்கான காரணம். வெகுஜன இதழ்களில் எழுதும் பிரபல எழுத்தாளர்கள் அலுவலகத்துக்கு வந்த போது அவர் இது போன்று அவர்களிடம் நடந்துகொண்டதில்லை. 'பிரபலங்க'ளுக்குரிய மரியாதையை மட்டுமே அளித்துவந்தார்.

ஒன்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் சம்பந்தத்தின் கீழ் நான் பணியாற்றியிருக்கிறேன். அதுவும் தினமணி கதிர் பிரிவில். ஞாநிக்குப் பின் மூன்று மாதங்கள் தினமணி கதிர் என் பொறுப்பில் வெளிவந்த சந்தர்ப்பங்களில், ஒரு சில கட்டுரைகள் வெளியீடு தொடர்பாகச் சற்றுக் 'கடுமையான' வார்த்தைகளை என் மீது அவர் பிரயோகித்தது உண்டு என்றபோதிலும், என்னை அவர் உரிய மரியாதையுடனேயே நடத்தினார் என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். அதற்குக்காரணமென நான் இப்போதும் நினைப்பது, நானும் கவிதைகள், கட்டுரைகள் எழுதி அவை நூலாக வெளிவந்திருக்கின்றன என்பதும், எழுத்தாளர்கள் பலருடன் எனக்குத் தொடர்பும் நட்பும் இருந்தது என்பதும், ஓரளவில் பிழையின்றித் (நல்ல) தமிழில் எழுதத் தெரியும் என்பதும்தான்.

சம்பந்தமும் ஞாநியும் எப்போதும் நண்பர்களைப் போலவே பேசிக்கொள்வர்கள். ஒருமுறை சம்பந்தம் இதழ்கள் பிரிவில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஞாநியைப் பார்த்துப் பேசிவிட்டுத்திரும்பும் போது, 'சம்பந்தம், உங்களைப் பற்றி எடிட்டோரியல் செக்ஷனில் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?' என்றார் ஞாநி. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து, 'என்ன பேசிக்கிறாங்க?' என்று அவர் கேட்க, 'நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? நம்மீது விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று பேசிக்கொள்கிறார்கள்' என்றார். சிரித்த முகத்தில் சற்றே துயரம் படிந்தது. மீண்டும் பழைய சம்பந்தமாகி, சிரித்துவிட்டுச் சென்றார்.

அவர் ஓய்வு பெற்றநாளன்று சக ஊழியர்களிடையே பேசிய பேச்சும். அவரது முகத்தில் படர்ந்திருந்த துயரத்தின் சாயலும், தான் நீண்ட காலமாகப் பணியாற்றிய நிறுவனத்தைவிட்டுப் பிரிந்து செல்வதான உணர்வை விடவும் தனது பாரம்பரிய வீட்டைவிட்டுப் பிரிந்து செல்லும் ஒரு குடும்பத் தலைவரின் துக்கத்தையே உணர்த்தின. அந்த அளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடனும் தினமணி நாளிதழுடனும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தவர், 'ஆரெம்டி' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இராம. திரு. சம்பந்தம்.

இப்போது, 'ஆரெம்டி'யின் மறைவுக்குப் பின், அவரின் கீழ் பணியாற்றிய அந்தக் காலகட்டத்தை நினைத்துப்பார்க்கும்போது, அவர் காலத்தில் பணியாற்றிய சக ஊழியர்கள் பலருக்கும் - எனக்கும்தான் - அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதிலும், என்னைப் பொறுத் தவரையில் - ஓர் இலக்கிய ஆர்வலன் என்னும் நிலையில்- தரமான தினமணி நாளிதழின் வாசகர்கள் மட்டுமல்லாமல், எழுத்தாளர்களும் இலக்கிய வாசகர்களும் என்றும் நினைவுகூர வேண்டிய ஆளுமை இராம. திரு. சம்பந்தம்.

n

ஆகஸ்ட் 14 2007 அன்று காலமான இராம. திரு. சம்பந்தத்தின் அஞ்சலிக் கட்டுரை இது. தவிர்க்க இயலாத காரணங்களால் காலதாமதமாகப் பிரசுரிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்