|
'லூர்து சார்' என்று மாணவர்களாலும் நண்பர்களாலும் அன்போடும் உரிமையோடும்
அழைக்கப்பட்டுவந்த முனைவர் தேவசகாயம் லூர்து தமது 71ஆம் வயதில் காலமானார். எளிமையான
தோற்றத்துடன் கூடிய அவர் ஒரு கிராமத்துக்காரரைப் போன்று எதையும் மறைக்காது வெட்டு
ஒன்று துண்டு இரண்டு என்று வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தம் கோபத்தை மறைக்கத்
தெரியாதவர். இறுதிவரை நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்துக்கொண்டிருந்தவர்.
1960 நவம்பரில் பாளையங் கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் தம் பணியைத் தொடங்கினார்.
தமிழ்த் துறையின் தலைவர் பதவி, பணிமூப்பு அடிப்படையில் அவருக்குக் கிடைக்க வேண்டிய
நிலையில் அவரைவிடப் பதினாறு ஆண்டுகள் பணிமூப்பில் இளையவர் ஒருவருக்குக்
கொடுக்கப்பட்டது. இதற்குச் சாதியப் பாகுபாடுதான் காரணம் என்ற கருத்து அப்போது சில
ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் நிலவியது. தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்ற
ஆதங்கம் அவருக்கு இருந்தது. இதன் எதிரொலியாக, தேவாலயம் செல்வதைப் பல ஆண்டுகளாக
நிறுத்திவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரது மகன் திருமணத்தையட்டியே
தேவாலயத்திற்குள் நுழைந்தார். ஆனால், அவர் நாத்திகரல்லர். பின்னர் தமிழ்த் துறைத்
தலைவராக 1984 முதல் 1988 வரை பணியாற்றினார்.
சேசுசபை அருட்பணியாளர் பிரான்சிஸ் செயபதியின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட
நாட்டார் வழக்காற்றியல் பட்டமேற்படிப்புத் துறையின் தலைவராகவும் நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் 1987இல் பொறுப் பேற்று 1996 மே வரை
பணியாற்றினார். அவர் ஓய்வுபெற்ற பின்னரும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின்
கௌரவ இயக்குநராகவும் மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிவந்தார்.
"கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக் கல்லாயிற்று" என்பதுபோல் தமிழ்த் துறைத் தலைவர்
பதவி தொடக்கத்தில் மறுக்கப்பட்ட லூர்துவின் பங்களிப்பினால் உருவான நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் கல்லூரிக்குத் தமிழகம் முழுவதிலும்
பரவலான அறிமுகத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது. அவர் பார்த்துப் பார்த்து
வாங்கிய நூல்களைக் கொண்ட அத்துறையின் நூலகம் அறிவுத் தேட்டம் உடையோரின்
வேடந்தாங்கலாக விளங்குகிறது.
அவர் பணியில் சேர்ந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியவர் 'தற்காலத்
தமிழகராதி'யின் பதிப்பாசிரியரும் அகராதிகள் உருவாக்கத்தில் தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக்கொண்டவருமான முனைவர் பா. ரா. சுப்பிர மணியன். அவரது நட்பு அவரை
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத்துறைக்கு இழுத்துச் சென்றது. அதன் விளைவாக அவரது
முனைவர் பட்ட ஆய்வுப் பொருளாகப் பழமொழிகளை எடுத்துக்கொண்டார். 1982இல் மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தில் "தமிழ்ப் பழமொழிகள் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பிலான தம்
ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றார். பழமொழிகளுக்கும் சூழலுக்கும் இடையிலான உறவை
இதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வாழ்ந்த பாளையங்கோட்டையில்தான் பேராசிரியர் நா. வானமாமலையும் வாழ்ந்துவந்தார்.
அவரைப் பார்க்க அடிக்கடி பாளையங்கோட்டைக்கு வருவதும் அவர் வீட்டிலேயே தங்குவதும்
எனக்கு வழக்கம். இடையிடையே லூர்துவும் அவரைக் காண வருவார். என்றாலும், அவருடன்
நட்பை ஏற்படுத்திக்கொள்வதில் நான் ஆர்வம் காட்டியதில்லை. பொதுவாக வணக்கம்
கூறுவதுடன் சரி. இவ்வாறு அவரிடமிருந்து ஒதுங்கியிருந்ததற்கு என் தரப்பில் இரண்டு
காரணங்கள் இருந்தன.
முதலாவது "பாரிவேள் தமிழ்த் துணைவன்" என்னும் பெயரில் பள்ளி இறுதி வகுப்பு, புகுமுக
வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 'நோட்ஸ்' எழுதி வெளியிடுபவராக
அவர் இருந்தது. இரண்டாவது பட்டிமன்றப் பேச்சாளியாக அவர் இருந்தது.
பின்னர், படிப்படியாக அவருடன் நெருங்கிவந்தாலும் மேற்கூறிய இரண்டு காரணங்களும்
உறுத்தலாகவே இருந்தன. ஒரு நாள் அவரது அழைப்பின்பேரில் அவரது வீட்டிற்குச் சென்றபோது
அவரது வீட்டு நூலகம் உண்மையிலேயே என்னைப் பிரமிக்கவைத்தது. 1978, 79 காலகட்டத்தில்
நூற்றுக்கணக்கில் மட்டுமே கல்லூரிப் பேராசிரியர்கள் ஊதியம் பெற்றுவந்த காலத்தில்,
600, 800 என்ற விலையில் அந்த மனிதர் நூல்களை வாங்கிக் குவித்திருந்தார்.
முதன்முறையாக அவர் வீட்டில்தான் நாட்டார் வழக்காற்றியலின் விவிலியம் என்று
கூறத்தக்க மரியா இலீச் பதிப்பித்த 'A Standard Dictionary of Folklore and
Mythology' என்ற அகராதியைப் பார்த்தேன்.
விருந்தோம்பும் பண்புமிக்க அவரது துணைவியார் வழங்கிய நொறுக்குத் தீனியைக்
கொறித்தவாறு என்னையும் அறியாது, அதன் விலையைக் கேட்டுவிட்டேன். அவர் கூறிய விலை
சற்று வியப்பை அளித்தபோது, 'இதெல்லாம் வாங்கப் பணம் ஏது என்று நினைக்கிறீர்களா?'
என்றார். நான் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாத நிலையில், அவரது நூலக அறையின் ஒரு
மூலையில் தரையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த உரைநூல் கட்டுக்களைக் காட்டி இதுதான்
உதவிவருகிறது என்றார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. நோட்ஸ் போட்டு, வரும்
லாபத்தையெல்லாம் இது போன்று விலையுயர்ந்த புத்தகங்களை வாங்க ஒதுக்கிவிடுகிறேன்
என்றார். 'முன்பு பட்டிமன்றங்களுக்குப் போவேன். பத்திரிகைகள் வாங்கவும் அவற்றை
பைண்டு செய்யவும் அவை உதவின. ஆனால், படிக்க நேரம் போதாமையால் பட்டிமன்றம் போவதை
நிறுத்திவிட்டேன்' என்றார். தென்றல், கண்ணதாசன், தென்மொழி, தேனோலை போன்ற இதழ்கள்
பைண்டு செய்து அடுக்கிவைத்திருந்ததற்குப் பின்னால் இப்படி ஓர் இரகசியம் இருந்தது
புரிந்தது. திரு மங்கையாழ்வார் நினைவுக்கு வந்தார்.
விவரணை முறை (Descriptive Method) என்பது எவ்வித வரைமுறையுமின்றி எழுதக்கூடியது
என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருந்த அன்றைய தமிழ்ச் சூழலில் பல்வேறு
கோட்பாடுகளின் துணையோடுநாட்டார் வழக்காறுகளை ஆராய்வதை அவர் தன் இறுதி மூச்சுவரை
வலியுறுத்திக்கொண்டே வந்தார். இத்தகைய கோட்பாடுகளின் மீது அவர் கொண்டிருந்த
மட்டுமீறிய காதல், அவரது பலமாகவும் பல வீனமாகவும் அமைந்தது என்றே கருதுகிறேன்.
ஐரோப்பியச் சூழலில் உருவான கோட்பாடுகள் எந்த அளவுக்குத் தமிழக நாட்டார்
வழக்காற்றுத் தரவுகளுக்குப் பொருந்தும் என்ற கேள்வி எழுப்பப்படும்போது, முதலில்
பொருத்திப் பாருங்கள், பொருந்தவில்லையென்றால் கோட்பாட்டை வளைத்துப் பாருங்கள்,
அதுவும் முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைத் தமிழ்
வழக்காறுகளுக்குப் பயன்படுத்த முடியாதென்று ஆதாரங்களின் அடிப்படையில் கூறுவதும் ஆய்வின் வெளிப்பாடுதான் என்பார்.
அவரோடு நிகழ்த்தும் உரையாடல்களில் ஆலன் டண்டிஸ், ரிச்சர்டு எம். டார்சான், லாரி
ஹாங்கோ எனப் பல ஐரோப்பிய அறிஞர்களின் பெயர்களும் அவர்கள் எழுதிய நூல்களின்
பெயர்களும் American Folklore, Proverbiam போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும்
அடிக்கடி இடம்பெறும். தன் கருத்தை விளக்க அல்லது வலியுறுத்த திடீரென்று எழுந்து ஒரு
குறிப்பிட்ட நூலின், குறிப்பிட்ட பக்கத்தை எடுத்துக்காட்டுவார். அவரது கண்பார்வை
மங்கியபொழுது, புத்தகத்தின் பருமன், அதற்குப் போடப்பட்ட அட்டையின் வண்ணம்
போன்றவற்றைச் சுட்டிக்காட்டி நம்மை எடுக்கும்படி செய்துவிடுவார். பின்னர்
குறிப்பிட்ட பகுதியையும் நாமே படிக்கும்படிக் கூறி விளக்குவார்.
புத்தகங்களை மிகுந்த சிரத்தையுடன் பேணிவந்தார். வீடுகட்டும் போதே
புத்தகங்களுக்கென்று கான்கிரீட்டினால் நீண்ட பேழை ஒன்றைச் சுவரையட்டி
உருவாக்கியிருந்தார். ஜெர்மன் தூதரகத்திலிருந்து மாதந்தோறும் ஆங்கில இதழ் ஒன்று
அவருக்கு இலவசமாக வரும். அதைப் புத்தகங்களுக்கு அட்டைபோட முழுமையாகப்
பயன்படுத்திவிடுவார். அட்டை போடவே அது அனுப்பிவைக்கப்படுவது போன்று தோன்றும். பள்ளி
மாணவனின் சிரத்தை அவர் அட்டை போடுவதில் இருக்கும். எவ்விதப் போலித் தன்மையுமின்றிப்
புரியாத ஆங்கிலச் சொற்களைக் கோடிட்டு ஆங்காங்கே தமிழில் பொருள் எழுதியிருப்பார்.
கண்பார்வை குன்றியபோது இது மட்டுப்பட்டது. அவ்வளவு எளிதில் புத்தகங்களை இரவல்
தந்துவிட மாட்டார். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே படிக்கத் தருவார். அவர்களுள்
நானும் ஒருவன் என்பதை இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
கதவுகள் இல்லாத இவரது நூலகப் பேழையில் புத்தகத்திற்கும் சுவருக்கும் இடையிலுள்ள இடை
வெளியில் ஏதாவது ஒரு பூனை அவ்வப்போது குட்டிபோட்டுவிடும். அதை எடுத்து வெளியில்
போடவிட மாட்டார். குட்டிகள் வெளியேறும் வரை அங்குதான் இருக்கும். அவர் மகன் நடத்திய
வணிக நிறுவனம் நட்டமடைந்தபோது அதை ஈடுசெய்யும் வழிமுறையாக அவர் ஓய்வு பெற்ற பின்னர்
கிட்டிய பல லட்சங்களைக் கொடுத்துவிட்டார். அதுவும் போதாத நிலையில் அவரது மாணவரும்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தைத் தூய சவேரியார் கல்லூரியில் நிறுவுவதற்குக்
காரணமாக இருந்தவருமான பணி. பிரான்சிஸ் செயபதி அடிகளார், அவரது நூலகத்தை விலைக்கு
வாங்கி, அதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் நூலகத்தில் சேர்த்தார். இதனால்
அவரது நூல்களைத் தன் விருப்பம்போல் பயன்படுத்தும் உரிமையை லூர்து இழக்கவில்லை.
அவரைக் கௌரவிக்கும் வழிமுறையாகத் 'தே. லூர்து நூலகம்' என்று பெயரும் சூட்டப்பட்டது.
சேசுசபைக் கல்வி நிறுவனமொன்றில் துறவியல்லாத ஒருவரின் பெயர் சூட்டப்பட்ட நூலகம்
இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
தான் ஈடுபாடு கொண்ட நாட்டார் வழக்காற்றியல் துறையில் நிகழும் புதிய வளர்ச்சிப்
போக்குகளை உயிர் துறக்கும்வரை அவர் உள் வாங்கிவந்தார். அறிவுத் தேடல் எந்தக்
கட்டத்திலும் நின்றுவிடாது என்பதை அவர் உணர்த்திவந்தார். இத்துறையில் பணியாற்றும்
உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் பலருடன் அவருக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. இதனால் பல
புதிய நூல்களை உடனுக்குடன் அறியும் வாய்ப்பு அவருக்கிருந்தது.
1990ஆம் ஆண்டில் சர்வதேச அளவிலான நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப் பட்டறை ஒன்றைப்
பொறுப்பேற்று நடத்தினார். கொடைக்கானலில் இருபது நாள்கள், பாளையங் கோட்டையில் இருபது
நாள்கள், திருச்சூரில் இருபது நாள்கள் என மொத்தம் அறுபது நாள்கள் நிகழ்ந்த
இப்பட்டறையில் ஆலன் டண்டிஸ், லாரி ஹாங்கோ, பீட்டர் க்ளாஸ், ஏ. கே. இராமானுஜன்,
ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என உலகப் புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்கள் பாடம்
நடத்தினர். இப்பட்டறையில் பயிற்சி பெற்ற பலர் இன்றுவரை இத்துறையில் பணியாற்றி
வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அவர் ஆற்றிய பணிகளில் குறிப்பிடத்தக்கவையாக, அவர்
தொடங்கிய ஆய்விதழ்கள் அமைந்தன. அவர் உருவாக்கிய தமிழக நாட்டார் வழக்காற்றியல்
கழகத்தின் சார்பில் நாட்டார் வழக்காற்றியல் அரை யாண்டிதழை 1987இல் தொடங்கினார்.
பொருளாதார நெருக்கடியினால் தள்ளாடி இதுவரை நான்கு இதழ்கள்தான் வெளிவந்துள்ளன.
என்றாலும் அவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் சார்பில் 'South Indian Folklorist' என்ற
அரையாண்டிதழைத் தொடங்கி அதை சர்வதேசத் தரம் கொண்ட ஆய்விதழாக வெளியிட்டார். இதுவரை
எட்டு இதழ்கள் வெளியாகி ஒன்பதாவது இதழ் வெளிவரும் தருவாயில் உள்ளது. இவ்விரண்டு
இதழ்களையும் தொடர்ந்து வெளிவரச் செய்வது அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான
அஞ்சலியாக அமையும்.
முறையாக நாட்டார் வழக்காற்றியல் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காதது
அவரை மிகவும் வருத்தியது. நாட்டார் வழக்காற்றியல் துறைகளில் நாட்டார் வழக்காற்றியல்
பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புத் தர வேண்டுமென்று வலியுறுத்தி அவரது
மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றனர். அதை அவர்
வரவேற்றதோடு தமது சூழலியம் : பழமொழிகளை முன்வைத்து என்ற நூலில்,
"இவர்களுக்கு வாழ்வு வேண்டாமா? சோறு போடாத கல்வி என்ன கல்வி? இக்கல்விப் புலத்தில்
அந்நியர் வந்து புகுதல் என்ன நீதி? ஒன்றல்ல இரண்டல்ல 18 ஆண்டுகள் அவர்கள்
பொறுத்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுக்களில்
ஏறினார்கள். நீதிமன்றம் அவர்கள் பக்கம் நல்ல நீதியை வழங்கியுள்ளது. ஆனால் சிலர்
சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்துகொள்வார்கள். நான் என் மாணவர்களுக்காக என்றும் குரல்
கொடுப்பேன்."
என்று எழுதியுள்ளார். தன் மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது அவரது
இயல்பாக இருந்தது. ஆய்வு மாணவர்களின் ஆய்வேடு இறுதி வடிவம் பெறும்போது அவரும் இரவு
1மணி 2மணிவரை தன் வீட்டில் விழித்திருப்பார். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு
ஏற்படுவதைத் தவிர்க்கும் வழிமுறையாக வீட்டிற்கு வெளியே நாற்காலிகளைப்
போட்டுப்படுத்து விவாதித்துவிட்டு அங்கேயே படித்து உறங்கிவிடுவார். ஆய்வேடுகளைப்
படிக்கவும் திருத்தவும் 'பார்வைக்கூலி' கேட்கும் பல பேராசிரியர்களிடையே இப்படியும்
ஒருவர்.
அவரது இறுதிச் சடங்கு 06.04.2008 ஞாயிறன்று மதுரை கே. புதூர் தேவாலயத்தில் நடந்தது.
அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மகன் பாரி பூணூல் அணிந்து
நின்றுகொண்டிருந்தான். நமது படிப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவர்களது
இறப்புக்குப் பின்னர் நேரும் விபத்து அவருக்கும் ஏற்பட்டுவிட்டது என்பதைப் புரிந்து
கொண்டேன். நாத்திகர்களாக வாழ்ந்து மறைந்த இடதுசாரிச் சிந்தனையாளர்களான தொ.மு.சி.
ரகுநாதன், கோ. கேசவன் ஆகியோரது பூதவுடல்கள் சம்பிரதாய சமயச் சடங்குகளிலிருந்து
தப்பவில்லை. நெற்றியில் மூன்று பட்டைகளாக, திருநீறு பூசப்பட்ட நிலையில் தொ. மு. சி.
யின் உடலைப் பார்த்தபோது 'அண்ணாச்சி உங்களுக்கு இப்படிச் செய்துவிட்டார்களே?' என்று
கதற வேண்டும்போல இருந்தது. தே. லூர்து நாத்திகரல்லர். எனவே, தேவாலயச் சடங்குகளுக்கு
அவரது உடலை ஆட்படுத்தியதில் வியப்பில்லை. ஆனால், இறுதிவரை ஆதிக்கத்தின் அடையாளமாகப்
பூணூலைக் கருதிவந்தார். ஆனால், அவரது மரணச் சடங்கிலும் பூணூல் நுழைந்துவிட்டது ஒரு
வகையில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
அவர் உடலை உள்ளடக்கிய சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்பட்டு மண்ணும் மலரும் போட்டு
நிரப்பப்பட்ட பின்னர் மௌனமாகத் திரும்பினோம். ஆனால், அவரது நினைவுகளும் பணிகளும்
நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுப் புலத்தைத் தொடர்ந்து
பாதித்துக்கொண்டேயிருக்கும்.
தே. லூர்துவின் நூல்கள்:
1976 : நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி.
1981 : நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி.
1986 : நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு, பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி.
1987 : நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு
மையம், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.
2001 : நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள் (இரண்டாம் பதிப்பு).
2001 : நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.
2008 : சூழலியம்: பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய
சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை. |