முன்பெல்லாம்
மிதந்துகொண்டிருந்தேன்
ஒருநாள்
போக்கிரித்தனமாகப் பிடுங்கிப் போனது
எனது மிதவையை
பின்னர்
நீந்திக் களைத்தேன்
களைத்து மூழ்கினேன்
மூழ்க மூழ்க
வேறொரு வெளிச்சம்
வேறொரு உலகம்
மீன்களாலான உலகம்
பெரிய சின்ன மீன்கள்
ஒரு மீன்
முன்னே வட்டமிட்டது
என்னை வட்டமிட்டது
உரசிச் சென்றது
உரசி உரசிச் சென்ற அது
கட்டித் தழுவி முத்தமிட
உப்புக் கடல் தித்தித்தது
நானும் அவளும்
புதையுண்ட நகரங்களில் நீந்திச் சுற்றினோம்
நடனமாடினோம்
ஆழ்கடல் அற்புத நடனம்
பின்னர்
அலைப் பரப்புக்கு வந்து அளந்தோம் கடலைகடல்
தன்னைத்தானே
கரையறுத்துக்கொண்ட கடல்
சிற்றலையும் பேரலையுமாய்
ஓரலை உயர வேறலை தாழ
ஓயாத நடனக் கடல்
மேலே கரித்து
ஆழத்தில் தித்திக்கும் இருசுவைக் கடல்
பூரித்துப் பொங்கியெழும் பொங்குமாங் கடல்
கடல்மீது நான்
கடலுக்குள் நான்
நானுக்குள் கடல்
ஓவியம்: கலைச்செல்வன் |