Google   www kalachuvadu.com

பாரதி கருவூலம்: பாரதியியலுக்குப் புது வரவு

கடந்த 85 ஆண்டுகளாக நடந்துவரும் பாரதியியல் ஆய்வுகளை இன்னும் தொடர வேண்டிய நிலையே உள்ளது. தொகுப்புக்கு அகப்படாத பல எழுத்துகள் எங்கெங்கோ இன்னும் ஒளிந்து கிடக்கின்றன. அவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கிறபோதுதான் பாரதியின் முழுமையினை அவதானிக்க இயலும். அதிலும் பாரதியின் ஆங்கில எழுத்துகள் குறைவாகவே தொகுப்புகளாகியுள்ளன.

1937இலும் பாரதி நூற்றாண்டை ஒட்டியும் பாரதியின் தம்பி சி. விசுவநாதன் தொகுத்து வெளியிட்ட கிரீஸீவீ & ஷீtலீமீக்ஷீ றிஷீமீனீs ... மட்டுமே பாரதியின் ஆங்கில எழுத்துகள் பெரிதும் அடங்கிய நூலாக உள்ளது. பாரதி அறிஞர்கள் ரா. அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் முதலானோர் பாரதியின் ஆங்கில எழுத்துகள் சிலவற்றைக் கண்டெடுத்துள்ளபொழுதிலும் இந்தப் பணி நிறைவு பெறாமல்தான் உள்ளது.

இந்தச் சூழலில் பாரதி காலத்து ஹிந்து நாளிதழ்களை ஆராய்ந்து, அதில் பாரதி எழுத்துகளை ஆ. இரா. வேங்கடாசலபதி நூலாக்கியிருக்கிறார். இன்று கிடைக்கப் பெறும் பாரதியின் ஆங்கில எழுத்துகள் நூற்றைம்பது பக்கங்களுக்குள் அடங்கிவிடும் நிலையில், 'பாரதி கருவூலம்' மூலமாகப் புதியதாக அறியலாகும் எழுத்துகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. 'வ.உ.சியும் பாரதியும்', 'பாரதியின் கருத்துப் படங்கள்', 'பாரதி: விஜயா கட்டுரைகள்' ஆகிய நூல்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளவர் ஆ. இரா. வேங்கடா சலபதி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தெற்காசிய ஆய்வு மையத்தில் இந்நூலுக்கான தேடுதல் பணியை அவர் மேற்கொண்டார் என்ற உண்மை நமக்குப் பெருமை தருவதாக இல்லையெனினும் அதுதான் யதார்த்தம்.

பாரதி கருவூலம், பாரதியியல் ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான கொடை. 1904 முதல் 1916 வரையிலான காலத்தில் பாரதி ஹிந்துவில் எழுதிய ஆங்கில எழுத்துகள் இவை. ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதில் என்ன துணிவு வேண்டியிருக்கிறது? ஆங்கிலம் எழுதத் தெரிந்தால் போதாதா? என்று நினைக்கலாம். ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதை வைத்து கடிதம் எழுதியவரைக் கைது செய்த வரலாறுகள் பிரிட்டீஷ் இந்தியாவில் உண்டு.

'பாரதி கருவூலம்' நூலில் ஆங்கில எழுத்துகளின் கூடவே அவற்றின் தமிழாக்கமும் அடுத்தடுத்து தரப்பட்டுள்ளன. அது தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்களுக்குப் பயனுடையது. பாரதி அன்பர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் வரலாற்று ஆர்வமுள்ள வாசகர்களுக்கும் இது முக்கியமான வரவு. பெரும் படைப்பாளுமைகளின் அறியப்படாத எழுத்துகள் எவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு முன்மாதிரி.

ஏற்கெனவே 20ஆம் நூற்றாண்டு நவீனத் தமிழ் இலக்கியத்தில் சுடர்விடும் படைப்பாளுமைகளின் பிரசுரம் பெறாத, தொகுக்கப்படாத படைப்புகளோடு கூடிய முழுத்தொகுப்புகளை வெளியிடும் கிடைப்பதற்கரிய பெருமையைப் பெற்றது காலச்சுவடு பதிப்பகம். பாரதி (விஜயா கட்டுரைகள்), புதுமைப்பித்தன் (அன்னை இட்ட தீ, சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புத் தொகுதிகள்), ஜி. நாகராஜன் (முழுத்தொகுப்பு), ஆத்மாநாம் (முழுத்தொகுப்பு), சுந்தர ராமசாமி (முழுத்தொகுதிகள்) ஆகிய மனநிறைவு தரும் சாதனைகளை அடுத்து இப்போது 'பாரதி கருவூலம்' நூல், தமிழகத்தில் வெளிவரும் நூல்களின் பிரவாகத்தில் ஒரு மணி போல அமைந்துள்ளது. காலச்சுவடு நியாயமான பெருமிதம் கொள்கிறது.

உள்ளடக்கம்