Google   www kalachuvadu.com

கட்டுரை
சங்க காலக் குடும்ப அமைப்பு?
பொ. வேல்சாமி

இன்று நமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துச் சங்ககாலக் குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை நம்மால் தெளிவாகக்கூற முடியாது. ஒரே நேரத்தில் வேந்தர்கள், மன்னர்கள், பழங்குடித் தலைவர்கள், வணிக வளமிக்க நகரங்கள், சிற்றூர்கள், பழங்குடி மக்கள் வாழ¢ந¢த மலைப்பகுதிகள் என்று பலவாறான சித்திரங்களைக் காட்டும் தரவுகள் பழந்தமிழ் இலக்கியத்தில் நிறையவே காணப்படுகின்றன. இன்றைய நிலையிலுங்கூடக் கூட்டுக் குடும்பங்கள், தனிக்குடும்பங்கள், ஒவ்வொரு சாதிக்குமான வேறுபட்ட திருமணச் சடங்குமுறைகள், அறுத்துக் கட்டுதல் போன்ற பழக்கவழக்கங்கள் நிறைந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தின் மிகப் பழமையான காலத்துக் குடும்ப முறையைப் புரிந்துகொள்வது என்பது கடினமானதுதான். நவீனக் காலத்துச் சமூகவியல், மானிடவியல் போன்ற சமூக விஞ்ஞானங்களின் துணை கொண்டு அதனைப் புரிந்துகொள்ள நாம் முயலலாம். ஆனால், இத்தகைய முயற்சிகளுக்கும் தடைபுரியும் பல கருத்துகள் 20ஆம் நூற்றாண்டின் தமிழறிஞர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் புனைந்து பரப்பிவிடப்பட்டுள்ளன. பெரியார் ஈ. வெ. ராவால் இத்தகைய கருத்துகளும் அவற்றைக் கூறிய நபர்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய பொதுப்புத்தியில் அவையே படிந்துள்ளன. என்றாலும், உண்மையான தரவுகளின் அடிப்படையில் சரியான செய்திகளை வெளிப்படுத்தி வந்தவர்களுக்குக் குறைவான ஆதரவே இருந்தாலும் இத்தகையவர்கள் இன்றும் ஆய்வுப்புலங்களில் நினைவு கொள்ளப்படுபவர்களாக இருப்பதால் எதிர்காலம் இத்தகைய ஆய்வுகளை வரவேற்கும் என்ற நம்பிக்கையும் கொள்ள வழி உள்ளது.

உலக மக்களின் பரிணாம வளர்ச்சி, சமூக நிறுவனங்களின் தோற்றங்கள், வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் தோற்றம் கொண்டதும் 19ஆம் நூற்றாண்டில் தான். மார்கன் போன்ற அறிஞர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சியானது ஏங்கல்ஸ் போன்றோரால் விரிவுபடுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் லெவிஸ்ட்ராஸ் போன்றவர்களால் அறிவியல்ரீதியான தகுதியையும் பெற்றது. இந்தப் பின்புலங்களை மனத்தில்கொண்டு பழங்காலத் தமிழகத்தின் குடும்ப அமைப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொண்டு அந்தக் குடும்ப அமைப்பைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் பொருளதிகா ரத்தில் இதற்கான செய்திகள் நிறையவே உள்ளன. குறிப்பாக அகத்திணையியல், களவியல், கற்பியல் போன்ற இயல்கள் இந்த ஆய்வுக்குப் பெரிதும் துணைசெய்யும் தகவல்களைக் கொண்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களில் உள்ள பல பாடல்கள் நமக்கு உதவும் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. ஆனால், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதங்கள் போன்றவை பைபிள், குரான் போன்ற தங்கள் புனித நூல்களில் குடும்ப அமைப்பைப் பற்றிய துல்லியமான வரையறைகளைக் கூறியுள்ளது போல நம்முடைய பழந்தமிழ் நூல்கள் வழங்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப அமைப்பைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியான திருமணச் சடங்கைப் பற்றித் தொல்காப்பியத்தில் நான்கு சூத்திரங்களிலும் அக நானூற்றில் இரண்டு பாடல்களிலும் செய்திகள் கிடைக்கின்றன. தொல்காப்பியர் "பெண் கொடுப்பதற்கு உரிய மரபினோர் கொடுக்க, பெண்ணைக் கொள்வதற்கு உரிய மரபினோர் கரணச் சடங்கோடு கொள்வதைக் கற்பு" என்கிறார்.1 கொடுப்பவர் இல்லாமல் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கூட்டிச் சென்று வாழ்க்கை நடத்துவதும் திருமணச் சடங்குதான் என்கிறார்.2 மேலோர் மூவர்க்கும் பொருத்தப்பாடு உடைய கரணச் சடங்கு கீழோர்களுக்கு ஆன காலமும் உண்டு,3 என்கிறார். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணச் சடங்கை யாத்தனர் என்கிறார்.4 இந்தச் சூத்திரங்களுக்கு விளக்கம் அளிக்கும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கரணம் என்பதை வேத வழிப்பட்ட திருமண முறையாகக் கருதுகின்றனர். ஆனால், அவர்களால் இதே சூத்திரங்களுக்கு மேற்கோளாகக் காட்டப்படும் அகநானூறு 86, 136ஆம் பாடல்கள் வேதப் பார்ப்பனர்கள் இல்லாமல் உறவினர்கள் குழுமி ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடத்தி விருந்துண்டு மகிழ்ந்ததாகத்தான் செய்திகளைத் தருகின்றன.

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்' என்னும் நூற்பாவை அடிப்படையாகக் கொண்டு திருமணச் சடங்கை விளக்கவந்த உரையாசிரியர்களாயினும் இன்றைய ஆராய்ச்சியாளர்களாயினும் எல்லோரும் ஒத்த குரலில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலித்துப் புணர்ந்துவிட்டு ஏமாற்றி ஓடிவிடுவதைத் தடுக்கவே இந்தக் காரணம் என்ற திருமணச் சடங்கு பெரியவர்களால் நடைமுறைப்படுத் தப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர்களது கூற்றுகள் சற்றும் பொருத்தமற்றவை, பிழையானவையுங்கூட என்பதைத் தொல்காப்பியத்தில் இந்த நூற்பாக்களை அடுத்துவரும் பல நூற்பாக்களும் அகப்பாடல்கள் பலவும் நவீன மானிடவியல் தகவல்களும் வெளிப்படையாகவே கூறிவிடுகின்றன. ஆகவே, இதனைப் பற்றிய சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு நமக்குக் கிடைக்கின்ற தரவுகளை அவை காட்டும் செய்திகளின் அடிப்படையிலேயே தொடர்ந்துசென்று உண்மைகளை ஆராய்வோம்.

திருமணத்துக்குப் பிந்திய குடும்ப வாழ்க்கையில் தலைவன் எனப்படுகின்ற ஆடவனது செயல்பாடுகள் என்பன தலைவி எனப்படுகின்ற பெண்ணின் பார்வையிலிருந்து பெரும்பாலும் வருத்தத்துடன் கூடிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவனவாகவே அமைந்துள்ளன. ஓர் ஆடவனுக்குத் தன் மனைவி தவிரக் காதல்கிழத்தி, காமக்கிழத்தி, திருமணஞ்செய்துகொண்ட பரத்தைகள், அப்பொழுதுக்குத் தொடர்பு கொள்ளும் பரத்தைகள் எனப் பலதரப்பட்ட பெண்களுடன் உள்ள உறவுகள் என விரிந்துகொண்டே செல்கின்றன. உள்ளுறை உவமம், இறைச்சி போன்ற உத்திகளால் உணர்த்தப்படும் பெரும்பாலான சங்கப் பாடல்களின் செய்திகள் அந்த ஆடவனின் காமக்களியாட்டத்தை, மிருகங்களை உவமை ஆக்கிச் சுட்டிக் காட்டுவனவாக உள்ளன. சங்க இலக்கியத்தில் வரும் தலைவியின் அவலக் கூற்றுகளில் ஒன்று தலைவனாகிய உனக்கு வாரிசுகளை உண்டாக்கித் தருவதல்லாது எங்களுக்கு வேறு மரியாதை என்ன இருக்கிறது என்பதுமாகும். "பரத்தையர்களுடன் கூடிக் குலாவி ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளும் தலைவனே அவளுடைய குழந்தைகளை உன்னுடைய வாரிசு என்று அறிவிக்க முடியுமா?" என்று நற்றிணை 330ஆம் பாடல் கூறுகின்றது. இதே கருத்தை ஐங்குறுநூற்றின் நான்காம் பாடலும் கூறுகின்றது. 'பரத்தையருடன் கூடிக் கும்மாளமிட்டு வந்த நீ என்னைப் பார்த்து என் மகனின் தாயே என்று என் முதுமையைப் பழிப்பதும் சரிதானா?' என்று அகநானூறு ஆறாம் பாடலில் தலைவி பேசுகின்றாள். இவற்றைப் போலவே குறுந்தொகை 8, 359ஆம் பாடல்களும் ஐங்குறுநூறு 90, 405, 442 போன்ற பாடல்களும் கற்புடைய பெண் ஒரு ஆணுக்கு வாரிசை உருவாக்கித்தரும் தாயாக இருப்பதைத் தவிர மற்ற வகைகளில் அவள் அடிமையாகவே நடத்தப்பட்டு வந்தாள் என்பதைப் புலப்படுத்துகின்றன.

இந்த மனோபாவம் தன் கணவனு டன் தொடர்பு கொண்ட பரத்தையைக் காணும்போது எவ்விதம் வெளிப்படுகிறது என்பதைப் பரிபாடல் 20ஆம் பாடல் தெளிவாக விளக்குகின்றது. தலைவியுடன் உள்ள தோழிகள் தலைவிக்காக ஒரு பரத்தையைப் பார்த்து, "காமத்தைப் பொய்யடுங்கூட்டி விற்கும் கணிகையே! ஒருத்தனுக்கே உரிமையின்றிப் பலர்க்கும் பொதுமையுடை யாய்! ஐம்புல உணர்ச்சியைப் பெறும் காமுகராகிய பன்றிகள் நுகர்கின்ற தொட்டியே! வனப்பாகிய மயலிலே கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையால் எம்முடைய எருது சோம்பிக்கிடவாமல் உழுகின்ற பழைய சாலே! பொருள் ஈபவர்கள் வெளியே போகாமல் தடுத்துக் கண்ணே கயிறாகக் கொண்டு தோளாகிய தறியோடு கட்டிக் காமம் மிகும்பொருட்டு யாழிசையை நுகரச் செய்வதோடு எம்முடைய அணிகலன்களையும் வளையும் பூண்டு நின் அழகையும் நுகரச்செய்யும் இன்பத்தில் பொதுவாக உள்ள மகளே! முன்னே கெட்டுப்போன எம் எருதை யாம் தேடித்திரிந்து இவ்விளையாட்டு மகளிர் கண்காண வணங்குவோம்; இவ்வகையாகிய தொழுவத்திற் புகவிட்டு நன்றாக அலங்கரித்து முழக்கஞ்செய்து மாலையையே கோலாகக்கொண்டு அடித்து இவ்வழக்குரைக்கும் அவையத்திலே எம் எருதாதலை யாவரும் அறியத் தொடர்ந்தேம். தம் எருதை உழுதற்றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமை வேளாளர்க்கு இல்லை; ஆதலின் இங்ஙனம் செய்கின்றேம். என் தலைவியினுடைய ஆரத்தைத் தலைவன் நினக்குத் தந்தான். அதனை அணிவதற்கு நின் மார்பும் தலைவியின் மார்பும் ஒத்த னவாகுமோ?" என்று கூறுகின்றனர்.

இத்தகைய கூற்றுகள் இலக்கியங்களில் பதிவாகியிருப்பதைத் தொகுத்துப் பார்க்கும்போது, 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதுதான் தமிழ்ப் பண்பாடு எனக் கூறுபவர்கள் உண்மையைக் கூறவில்லை என்பதும் ஒரு புனைவான தமிழ்க் கலாச்சாரக் கட்டமைப்பின் ஊடாகத் தங்களுடைய அதிகாரத்தைத் தமிழ் மக்கள் மீது நிலைநிறுத்திக்கொண்டவர்கள் என்பதும் புலனாகின்றன. 'ஒருத்திக்கு ஒருவன்' என்பதுதான் இலக்கியங்களின் ஊடான வரலாற்றிலும் இன்றைய எதார்த்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மக்களின் கருத்து என்பதும் வெளிப்படை.

தமிழ் பேசும் சாதிகளிடையே குடும்ப உறவுகள் எத்தன்மையில் இருந்தன என்பதை எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய மானிட இன இயல், குலங்களும் குடிகளும் போன்ற நூல்களில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். நூறாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான சாதிகளில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 20, 25 வயதுடைய பெண்களை மணம் முடித்துவைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அச்சிறுவர்கள் குடும்பம் நடத்தும் பருவத்திற்கு வரும் வரை அவர்களது மனைவிகளுடன் அச்சிறுவர்களின் தந்தை, அப்பெண்ணிற்குத் தாய்மாமன் உறவுடையவர்கள் அவளுடன் குடும்பம் நடத்தி அவள் பிள்ளையைப் பெற உதவுவார்கள். இந்தச் செய்திகளைத் தென்னிந்திய மானிடவியல் நூலில் தர்ஸ்டன் விளக்குகின்றார். சிந்தனையாளர் நியெட்ஸே,5 'மிகப் புராதன காலத்தில் திருமணம் என்பது சமுதாயத்திற்கெதிரான பாவமாகக் கருதப்பட்டது; ஒரு மனிதன் பெண் ணொருத்தியைத் தனக்கே உரிமையாக வைத்துக்கொள்ள விழைவது தப்பெண்ணமாகக் கருதப்பட்டது; அதன் காரணமாக ஒருவன் குற்ற வாளியாக்கித் தண்டிக்கப்பட்டதும் உண்டு! கம்போடியா போன்ற சில கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடிகளிடையே இன்றும் இந்த ஏற்பாட்டின் சின்னம் எஞ்சியிருப்பதைக் காணலாம்' எனக் கூறுகிறார். ரோமைன் ரோலண்ட் விவேகானந்தர் சரித்திரத்தைப் பற்றி எழுதும்போது, திபெத்தியருக்குள் நடக்கும் பலபுருஷ வாழ்க்கையைப் பற்றிய ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். 'விவேகானந்த சுவாமிகள் திபெத்து தேசத்தில் வசிக் குங்காலையில் அங்குள்ள ஒரு குடும்பத்தில் விருந்தினராயிருந்தபோது, திபெத்தில் நடக்கும் கல்யாண வழக்கத்தைக் கண்டித்துப் பேசினார். அந்தக் குடும்பத்தில் ஆறு சகோதரர்களுக்கு ஒரே மனைவிதான் இருந்தாள். அவர்கள் நூதன சிஷ்யர்களாக அமைந்தவர்களென்ற உற்சாகத்தில் சுவாமி அச்சகோதரர்கள் அனுஷ் டித்துவந்த பொது மனைவி வழக்கத்தின் தீங்குகளை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிக் கண்டிக்கையில், அவர்களில் ஒருவர், 'என்னே சுயநலம் குருவே! ஒரு பெண்ணை ஒருவன் தனக்கே வைத்துக்கொள்ளும் சுயநலம், என்ன அக்கிரமம்!'6 என்கிறார்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் மற்ற நாடுகளிலும் பல்வேறு குடும்ப அமைப்புகள் நிலவிவந்ததையும் இன்றைய காலத்திலும் அத்தகைய அமைப்புகள் நடைமுறையில் இருப்பதையும் பல்வேறு நூல்களும் பழங்குடிகளைப் பற்றிய செய்தித் தொகுப்புகளும் நிறையவே காட்டுகின்றன. ஆனாலும், ஓர் ஆண் மகனை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்பை மட்டும் பழந்தமிழ் நூல்களும் இன்றைய ஆய்வாளர்களும் சிறப்பித்துக் காட்டுவது ஏன்? இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழ்நாட்டுக் குடும்ப அமைப்பு ஆணாதிக்கத்தை மையப்படுத்தியே கலாச்சாரக் கட்டமைப்பை உருவாக்கியதன் விளைவுதான் இது என்று கருதலாம். சொத்துரிமையையும் அதிகார உரிமையையும் தனக்குப் பின்னர் தன் வாரிசுகளே பெற வேண்டும் என்னும் வேட்கையும் மற்றவர்கள் அந்தப் பகுதியில் எந்த நிலையிலும் உள் நுழைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுந்தான் 'கற்பு' என்பதைக் கட்டமைத்தது.

தன் விந்துக்குப் பிறக்காத குழந்தை தனக்கு வாரிசாவதைத் தடுக்கும் முகமாகத் 'தலைவி' என்ற கருத்துருவாக்கம் தமிழ் அகத்திணைத் துறைகளில் உருவாக்கப்பட்டது. தலைவன், தலைவி என்னும் உருவாக்கங்கள் சமநிலையில் வைக்கப்பட்டிருக்குமாயின் புறத்திணைப் பகுதியில் தலைவன் (ஆண்) மட்டுமே பாத்திரமாக்கப்பட்டுப் புறத்திணைச் சிறப்புகள் எல்லாம் ஓர் ஆணின் வெற்றியாக மட்டும் சொல்லப்பட்டிருக்கமாட்டா. இறுதியாகப் பேசப்படும் காஞ்சித்திணையில்கூட உலகியல் வெற்றிகளையெல்லாம் பெற்றுவிட்ட ஓர் ஆண்மகன் தன் வாழ்வின் இறுதியில் 'முக்தி' பேறு அடைந்து கடவுளோடு இணைவதாகக் காட்டப்படும்போதுகூடத் தலைவி (மனைவி) என்று அவன் வாழ்நாள் முழுவதும், இணைந்து நடந்துவந்த பெண் என்பவள் வீடுபேறு அடையும் நிலையில் விலக்கப்படுவதைக் கவனிக்க வேண்டும். ஆணாக அதிலும் அதிகாரமும் செல்வமும் நிறைந்த தலை மகனாக உள்ளவனே உலக வாழ்க்கையின் உயிர்ப்புடைய அச்சாணியாக நிறுவப் பட்டு, அதாவது ஓர் ஆண்தான் எல்லா நிலைகளிலும் 'தன்னிலை' (Subject)யாகக் கொள்ளப்பட்டுப் பெண்ணுட்பட மற்றயெல்லாம் இந்த ஆணின் தன்னிலைக்கான புறநிலை (Object)யாகக் கட்டமைக்கப்பட்ட நிலைதான் சங்க காலமாக நமக்குக் காட்டப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியத்தின் பல இயல்கள் சாட்சிகளாக இருப்பினும், சங்கப் பாடல்கள் எல்லாம் அதற்கு வலுசேர்ப்பனவாக அமையவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொது நிலையிலிருந்து ஆதாரங்களைக் கவனிப்போமானால் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரையிலும் பலவிதமான குடும்ப அமைப்புகள் நிலவிவருவதைக் காணமுடிகிறது. தொகுக்கப்பட்ட சங்கப் பாடல்கள் சிலவற்றில் ஆணின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பு நிலைகளையும் காண முடிகின்றது. புறநானூறு 246ஆம் பாட்டில் கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பு ஏற்று வதைபட்டு வாழ்வதைவிட இறந்த கணவனுடன் தீயில் மூழ்குவது, நீரில் மூழ்குவது போன்று இனிமையானது என்ற பெருங்கோப்பெண்டின் கூற்று கவனிக்கத்தக்கது. புறநானூற்றில் வரும் மகள் மறுப்புத் துறை சார்ந்த பாடல்களில் வேந்தர்களே தங்களுடைய பெண்களைத் திருமணம் முடிப்பதாக இருப்பினும் அரண்மனை வாழ்க்கையாயினும் தங்கள் பெண்கள் இரண்டாம் தர மனைவிகளாவதை விரும்பாது, வேந்தனையே எதிர்த்துப் பேசும் பழங்குடித் தலைவர்களைக் காண்கின்றோம்.

வரலாறு நெடுகிலும் கூட்டுக் குடும்ப அமைப்பையே கொண்டு வாழ்ந்துவந்த தமிழ்ச் சாதிகளிடை யில் 'தனிக்குடும்ப அமைப்பு' என்பது வெள்ளையர் ஆதிக்கத்திற்குப் பின்னாலான நவீனக் காலத்தில், அதிலும் குறிப்பாக நகர்மயமான சமூகத்தில்தான் ஏற்பட்டது எனச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய சூழல் நிலவிய தமிழகத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அக இலக்கியங்களில் தனிக்குடும்ப அமைப்புதான் தென்படுகிறது. அது வெறும் புனைவா அல்லது சமூக எதார்த்தமா என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஆனால், எதார்த்த தமிழ்ச் சமூகம் பல்வேறுபட்ட குடிகளாகவும் குலங்களாகவும் பிரிந்துதான் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. ஆகவே, ஒருவன் ஒருத்தி என்ற குடும்பக் கட்டமைப்பு என்பது அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் உரியவன் ஆண்தான் என்ற ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு ஏற்பட்ட ஒரு புனைவுதான் என்று நாம் கருதலாம். பல்வேறு பழக்க வழக்கங்கள், திருமண முறைகள், குடும்ப அமைப்புகள் நிறைந்ததாகத் தான் தமிழ்ச் சாதிகளின் சமூகம் உள்ளது. அதில் ஒருவகையான அதாவது ஆண் ஆதிக்கக் குடும்பந்தான் ஒழுக்கமானது, உயர்வானது எனக் கட்டமைக்கப்பட்ட ஒரு புனைவுதான் தமிழில் உள்ள களவியல், கற்பியல் போன்ற இலக்கிய, இலக்கணக் கருத்துகள் என்று நாம் கருதுவதுதான் சரியாக இருக்க முடியும்.

குறிப்புகள்

1. தொல்காப்பியம்-பொருளதிகாரம் (உரைவளம்) கற்பியல்- நூற்பா - 140, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

2. மேற்படி, நூற்பா - 141

3. மேற்படி, நூற்பா - 142

4. மேற்படி, நூற்பா - 143

5. சிந்தனையாளர் நியெட்ஸெ, பிரேமா பிரசுரம், 5ஆம் பதிப்பு, ஜனவரி 2004, பக்கம்-155

6. கலைமகள் களஞ்சியம் (பாகம்-1), கலைஞன் பதிப்பகம் சென்னை, பக்கம் - 69, 70.

ஓவியங்கள்: ஆதிமூலம்

உள்ளடக்கம்