Google   www kalachuvadu.com

கட்டுரை
நான் எடுத்த சில புகைப்படங்கள்
அசோகமித்திரன்

நான் சில காலம் பணிபுரிந்த திரைப்பட ஸ்டூடியோவுக்கு ஆக்ஃபா - கேவர்ட் என்ற திரைப்படச் சுருள் கம்பெனியின் பிரதிநிதி அநேகமாகத் தினமும் வருவார். எங்களுக்கிருந்த திரைப்பட லாபரட்டரிக்கு முதலில் கேவாகலர் என்ற வண்ணத்திற்குத்தான் இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் அந்த வண்ணத்தில்தான் 1950களில் சில திரைப்படங்கள் முழுமையாக அல்லது சில பகுதிகள் மட்டும் இருந்தன. உதாரணத்துக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற படத்தில் நாகலோகக் காட்சிகள் கேவாகலரில் இருந்தன. வட இந்தியாவில் சில படங்கள் முழுமையாகவே கேவாவண்ணப்படங்களாக வந்தன. ஒரு பகுதி மட்டும் என்னும்போது அது ஒரு சுருள் (சுமார் 10 நிமிடங்கள்) அல்லது இரு சுருள்கள் இருக்கும். அநேகமாக அவை நடனக் காட்சிகளாக இருக்கும். நாகின் என்ற இந்திப் படத்தில் கடைசி நான்கு சுருள்கள் வண்ணத்தில் இருந்தன. வலுக்கட்டாயமாக நான்கு பாடல்கள், நான்கு நீண்ட நடனங்கள். ஆனால் அது மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டிருந்தது. கதாநாயகன் பாம்பு கடித்து இறந்து, அவனுடைய பிராணன் வேறுலகத்துக்குப் போய்விடுகிறது. அந்தப் பிராணனைக் கேட்டுக் கதாநாயகி அந்த உலகத்துக்குப் போய் மன்றாடுகிறாள். கதாநாயகியாக நடித்தவர் வைஜயந்திமாலா. இப்படம் சென்னையிலேயே சுமார் எட்டு மாதங்கள் ஓடியது.

ஆனால் 1964 அளவில் கேவாகலர் கைவிடப்பட்டு ஈஸ்ட்மென் வண்ணம் என்பது புழக்கத்துக்கு வந்தது. ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் இந்த வண்ணத்தில்தான் எடுக்கப்பட்டன.

ஆனால் இது திரைப்படங்கள் பற்றியது அல்ல. அன்று கேவாகலர் கம்பெனி ஒரு மலிவு விலை 'பெட்டி' காமிராவிற்றது. ஐம்பது ரூபாய் காமிராவை நான் நாற்பது ரூபாய்க்கு வாங்கிப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

அந்த காமிராவுக்கான புகைப்படச் சுருளில் பன்னிரண்டு படங்கள் எடுக்கலாம். நல்ல வெளிச்சத்தில் தான் எடுக்க முடியும். ஆனால் அதை வைத்தே நான் பல மிக நல்ல படங்கள் எடுத்தேன்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு யாஷிகா காமிரா வாங்க முடிந்தது. அது 'எலக்ட்ரோ 35' என்ற பெயர் கொண்ட காமிரா. பெரிய லென்ஸ். நல்ல வெளிச்சத்தில் எடுத்தால் படங்கள் சிறப்பாக இருக்கும்.

நான் புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கருதவில்லை. கிடைத்த நூல்கள் எல்லாம் படித்துத்திறமை வாய்ந்த புகைப்படக்காரனாக இருக்கவே முயன்றேன். என்னுடைய ஒரு புகைப்படம் அன்று நியூயார்க்டைம்ஸ் பத்திரிகையின் இந்திய நிருபராக இருந்த கஸ்தூரிரங்கன் அவர்களுக்காக எடுத்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாயிற்று.

ஆனால் காமிரா, நிறையப் பணம் செலவாகும் ஈடுபாடு. இன்றைய காமிராக்களில் படமெடுப்பவரின் திறமையின் பங்கு குறைவு. சக்திக்கு அதிகமாகப் புகைப் படங்கள் எடுத்து என்னுடைய மூன்று மகன்களும் சுதந்திரமாக நல்ல படங்கள் எடுக்க முடிந்த அளவு கற்றுக்கொடுத்தேன்.

முழுக்க முழுக்கச் சென்னைவாசியாகும்வரை சுஜாதா என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். ஒருமுறை அவரையும் சில படங்கள் எடுக்க முடிந்தது. ஞாநி வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சியைப் படம் எடுக்க முடிந்தது. திலீப்குமாரின் திருமணத்தைப் படமெடுக்க முடிந்தது.

புகைப்படங்களை அன்று அச்சில் கொண்டுவர வேண்டுமானால் ஒரு நல்ல "பிளாக்" செய்பவரின் ஒத்துழைப்பு வேண்டும். பெரிய பத்திரிகைகளில் படங்கள் அன்று சிறப்பாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். அன்று எல்லோரும் மெயில் பத்திரிகையின் பிராசசிங் பிரிவைச் சொல்வார்கள். அங்கே கட்டணம் அதிகம். நான் துணைபுரிந்த ஒரு பத்திரிகை முதலாண்டில் ஒருமுறை சி. சுப்பிரமணியம் படத்தை அட்டையில் போட்டது. மிகவும் நன்றாக இருக்கும் அது மெயில் பிராசசிங் பிரிவில் செய்யப்பட்டது. ஆனால் கட்டுப்படியாக வேண்டுமல்லவா?

அப்பத்திரிகைக்குச் சில காலம் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஓவியர் அட்டைப் படமாக அரசியல் கேலிப்படங்கள் வரைந்தார். அரை மனதாகத்தான். ஒவ்வொருமாதமும் அவருடைய வீடு, அலுவலகம் என்று குறைந்தது பதினைந்து முறை போக வேண்டும். ஒரு இதழில் ஒரு கதாசிரியர் எருமை மாடு மூத்திரம் போவதைச் சற்று விரிவாகவே எழுதியிருந்தார். பத்திரிகையை என்றும் பிரித்துப் பார்க்காத அந்த ஓவியர் அந்த மாதம் புரட்டிப்பார்த்திருக்கிறார். நான் அட்டைப் படத்திற்காக அவர் முன்பு நின்றேன். அவர் கடும் கோபத்துடன் மூத்திர நாற்றம் அடிக்கும் பத்திரிகையோடு அவருக்கு உறவு வேண்டாம் என்றார். அந்தப் பத்திரிகையில் அதைவிடத் தீவிரமான உடலியக்க விஷயங்கள் வந்திருந்தன. நான் சொல்லவில்லை. நினைத்துக்கொண்டேன். அவர் தீர்மானமாகப் படம் போட முடியாது என்று கூறிவிட்டார். அடுத்த நாள் அட்டை அடித்தாக வேண்டும். நான் அப்போது எனக்குக் கிடைத்த என்னுடைய புகைப்படங்களுடன் ஒரு நிபுணர் எடுத்த தி. ஜானகிராமனின் படத்தையும் சேர்த்து ஒரு 'கொலாஜ்' மாதிரி செய்து அவசரம் அவசரமாக 'பிளாக்' செய்யக் கொடுத்தது. அந்த 'பிளாக்' சுமார் ரகம்தான். அந்த அட்டையின் நல்ல பிரதி கிடைக்கவில்லை. கிடைத்தது இதோ நீங்கள் பார்ப்பது.

உள்ளடக்கம்