Google   www kalachuvadu.com

தலையங்கம்
விலைவாசி உயர்வு: திணறும் வாழ்க்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கெதிரான கிளர்ச்சிகள் தீவிரமடைந்துவருகின்றன. அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2008-2009ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது குறித்த பெருமித உணர்வில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திளைத்துக் கொண்டிருந்த தருணத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்தக் கிளர்ச்சிகள் அதற்கு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்கப்போவதில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சிறுபான்மையின மக்களின் நலன்களுக்கும் பல சலுகைகளை வாரி வழங்கியிருந்த நிதிநிலை அறிக்கை மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரக்கூடும் என்னும் ஊகத்தைக்கூடத் தோற்றுவித்திருந்தது. ஆனால் மார்ச்சில் பணவீக்க விகிதம் கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழு சதவீதத்தைத் தாண்டியது.

அரசின் மந்தமான நடவடிக்கைகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கோ பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கோ பெரிய அளவில் உதவவில்லை.

பொது விநியோகத் திட்டத்தை அரசுப் படிப்படியாகக் கை கழுவிக்கொண்டு வருகிறதோ என்னும் சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திவந்த கேரளத்திற்கு வழங்கப்பட்டுவந்த அரிசி ஒதுக்கீட்டு அளவைக் குறைத்ததன் மூலம் அம்மாநில மக்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் வெளிச்சந்தைகளில் அதிகத் தொகை கொடுத்து அரிசியை வாங்கும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதை ஒரு உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சமையல் எண்ணெய் இறக்குமதியின் மீதான தீர்வையைக் குறைத்த மைய அரசின் அவசர நடவடிக்கையும்கூடக் கேரளத்தின் தென்னை உற்பத்தியாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் இந்த வருடம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேங்காயெண்ணெய்ச் சந்தையான காங்கயத்திற்குக் கொப்பரை வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகத் தேங்காயெண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுச் சமையல் எண்ணெய்ச் சந்தையைக் கைப்பற்றுவதற்கே துணைபுரியும். அதேபோல் பாசுமதி ரக அரிசி தவிர்த்து மற்ற அரிசி ரகங்களுக்கான ஏற்றுமதியைத் தடைசெய்ததும் மிகத் தாமதமான நடவடிக்கை என்கிறார்கள் நிபுணர்கள். உள்நாட்டு விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதில் அக்கறைகாட்டாத அரசு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்கிறது. இது ஏற்கனவே கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் கூடுதல் இழப்பை உருவாக்குவதற்கு மட்டுமே உதவும்.

அரசின் கொள்கைகளே தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார் அனைத்திந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கந்தேல்வல். சில்லறை வணிகத்தில் ஈடுபட ஏகபோக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததுதான் தற்போதைய நெருக்கடிகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார் அவர். பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் உணவு தானியங்களைப் பெருமளவில் வாங்கிப் பதுக்கி வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் பார்க்கத்துடிப்பதுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனச் சொல்லும் கந்தேல்வல் பலமுறை சுட்டிக்காட்டியும் அரசு இந்த அம்சத்தைக் கண்டு கொள்ளவே இல்லை என்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விவசாய உற்பத்தியை முடக்குவதையும் சந்தைகளைக் கைப்பற்றுவதையும் தம் முதன்மையான நோக்கங்களாகக் கொண்டுள்ளன. மைய அரசு அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களிடம் சரணடைந்ததுதான் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் எனச் சொல்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். அரசு விரைந்து செயல்பட வேண்டும் எனக் கோருகிறார்கள் கிளர்ச்சியாளர்கள்.

'வளர்ச்சி'த் திட்டங்களுக்காக விளைநிலங்கள் அபகரிக்கப்படுதல், விவசாயத் துறையில் பொது மூலதனங்களின் பற்றாக்குறை, நீராதாரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்திய விவசாயத்தைச் சில்லறைச் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் காப்பாற்ற முடியாது. வர்த்தகச் சூதாடிகளின் நலன்களைப் பாதுகாக்க உதவும் பதுக்கல், கள்ளச் சந்தை வியாபாரத்திற்கெதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் பொது விநியோகத்திட்டத்தைச் செயலூக்கமுள்ள அளவில் விரிவுபடுத்துவதும் முக்கியம். தவிர மைய மாநில அரசுகள் உலகமயமாக்கலின் விளைவாக உள்நாட்டு விவசாயிகளுக்கும் சாமான்ய மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் களைவதில் தீவிர முனைப்புக் காட்ட வேண்டும். உணவு தவிர மருத்துவம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்குத் திணறிக்கொண்டிருக்கும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மீது மெய்யான அக்கறை செலுத்தப்பட வேண்டும். நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கும்பொழுது மனதில் கொள்ள வேண்டியது தேர்தலை மட்டும் அல்ல என்பதை நமது மாண்புமிகு நிதியமைச்சர்கள் உணர்ந்தால் நல்லது.

உள்ளடக்கம்