|
சாதாரண ஒளிப்பந்தம் உலகளவில் பெரிய அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது. 1936
பேர்லின் ஒலிம்பிக் போட்டியில்தான்
ஒளிப்பந்தத்தின் உலகச் சுற்றுலா ஆரம்பமாகியது. இதைத் தொடங்கியவர் ஹிட்லர். ஆரிய
இனத்தின் மகாத்மியங்களைப் பரப்புரைக்க
இந்த விளையாட்டுகளையும் தீப்பந்தத்தையும் பாவித்துக் கொண்டார். இப்பொழுது இதே
தீவெட்டி மேற்கத்தைய கலாச்சாரத்தின்
சமீபத்திய உன்னதச் சின்னமான மனித உரிமைகளைப் போதிக்கும் கூரான கருவியாக
மாற்றப்பட்டிருக்கிறது. காலனியக் காலத்தில்
கிறிஸ்தவம் இருளில் வாழ்கிறவர்களை நாகரிக நாயகர்களாக உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.
பிறநாட்டுப் பிற்போக்குத்தனங்களைப்
பழுதுபார்க்கும் அதே வேலையை இன்றைய பின் காலனியச் சூழலில் மேற்கத்தைய அரசுகள் மனித
உரிமைகள் மூலம் சாதிக்க
முயல்கின்றன.
சீனாவின் மனித உரிமைகள் பற்றிய பதிவேடு அவ்வளவு பிரகாச மானதல்ல. சீன
ஆக்கிரமிப்பினால் திபேத் கலாச்சாரம் கரைந்து
கொண்டிருக்கிறது. திபேத் ஏற்படுத்திய கலகலப்பில் மறக்கப்பட்ட இன்னொரு சீனா விளிம்பு
நிலை மக்கள் Xinjiang மாகாணத்தில்
வாழும் ஊகிகுர்ஸ்கள் (Uighurs). இவர்கள் முஸ்லிம்கள். இவர்களைச் சீனமயமாக்குதலில்
பேஜிங் அரசுதன் எந்திரங்களைச்
செம்மையாகப் பயன்படுத்திவருகிறது. ஊகிகுர்ஸ்கள் இஸ்லாம் மத்தைச் சேர்ந்தவராகையால்
இவர்களின் பிரச்சினையைத்
தூக்கிக்காட்ட மேற்கத்தைய ஊடகங்களிடையே ஒரு தயக்கமிருக்கிறது. சீனாவுக்குப் பெரிய
வல்லரசுகளின் வரிசையில் இடம்பிடிக்க
ஆசை. ஒரு வல்லரசின் அடையாளம் பல்லின, பல்மொழி, பல்சமய, பல்கலாச்சார மக்களுக்குக்
காட்டும் தாராளத் தன்மையாகும்.
இன்னொன்று பல கருத்துகள் முன்பின் முரணாக இருந்தாலும் அவற்றைச் சகித்துக்கொள்ளும்
தன்மையே. இது சீனாவிடம் இல்லை.
இந்தப் பரந்த நாட்டைச் சீனா அரசியல் அமைப்பு பெரும் பான்மையினரான ஹான் இனக்
கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது,
நிச்சயிக்கிறது.
இந்தக் கட்டுரையின் பிரதான கவனம் சீனா அல்ல. மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைப்
பேச்சே. இந்தக் கட்டத்தில் மனித
உரிமைகள் தோற்றம் குறித்து எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சின்னத்திரட்டு. மனித உரிமைகள்
பற்றிய கருதுகோள்கள் சடுதியாகத்
தோன்றியவையல்ல. அவற்றைப் பற்றிய எண்ணங்களும் நிலையானவையுமல்ல. இவை மாறிவரும் சமூக,
அரசியல், பண்பாட்டுத்
தேவைகளுக்கும் அதற்கு மேலாக மேலாட்சி செய்யும் நாடுகளின் வினைமுறைதிறன்களுக்குப்
(strategic) பொருந்துமாறு
பதப்படுத்தப்பட்டவை. இவை மூன்று வகைசார்ந்தவை. முதலில் ஐக்கிய நாடுகள் சபையில்
இரண்டாம் உலகப் போருக்குப்பின்
அறிமுகப்படுத்தப் பட்டபோது தனி மனித அரசியல் உரிமைகளுக்குத்தான் அதிக மதிப்புக்
கொடுக்கப்பட்டது. தனி மனித சுதந்திரத்தில்
அரசு தன்னிச்சையாகத் தலையிடுவதைத் தவிர்ப்பதே இந்தப் பிரகடனத்தின் நோக்கம். இந்தத்
தனிப்பட்ட மனித உரிமைகளுக்கான
பின்னணி பிரான்சுப் புரட்சியும் அமெரிக்க உள்நாட்டுக் கலவரமுமாகும். இதற்கு அதிக
அளவு ஆதரவு மேற்கத்தைய தாராண்மையும்
சனநாயக நாடுகளிலிருந்து கிடைத்தது. இந்த எண்ணங்களைப் பதிவு செய்யும் பிரதிகள்:
Universal Declaration ñŸÁ‹
International Covenant on Social and Civil Rights. இதற்குப் பிறகு 60களில் சோசலிச
நாடுகளினால் அரசியல், பொருளாதார,
பண்பாட்டு உரிமைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டன. இதற்கு 20ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியே
காரணமாகும். மனித உரிமைகளைத் தனி ஆளின் பிரத்தியேக சம்பந்தமாக, அரசியல், பொருளாதார,
சூழலமைப்புகளை நீக்கிப் பார்க்கும்
மேற்கத்தைய நாடுகளின் சார்புத்தன்மைக்கு சோசலிசக் கருதுகோள்களின் கூட்டு உரிமைகள்
திருத்தப்பாடாகும். எவ்வாறு தனி மனித
உரிமைகள் காப்பாற்றப்படுகின்றனவோ அவ்வாறே இனக் குழுமங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டும் என்பது சோசலிச
நாடுகளின் கருத்து. மூன்றாவது கட்டத்தில் நாடுகளின் தேசிய வள உற்பத்தி அதிக அழுத்தம்
கொடுக்கப்பட்டு நாட்டின் பொருளாதார
அபிவிருத்தி உள்ளார்ந்த மனித உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. புதிதாக
விடுதலையடைந்த ஆப்பிரிக்க, ஆசிய, லெத்தீன்
அமெரிக்க நாடுகள் காலனிய ஆட்சியின்போது சீரழிக்கப்பட்ட தங்களின் பொருளாதார உடைமைகள்,
வளங்களை மீண்டும்
சீர்திருத்துவது தமக்குரிய மனித உரிமை என்று வலியுறுத்தின. ஐ.நா சாசனம் ஷரத்துகள்
55, 56லும் Universal Declaration 22,
27இலும் இவை அங்கீகரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம் வாசிப்பதற்கு
இனிமையாக இருக்கின்றன. ஆனால்,
இவற்றைப் பூலோக அர சியல் அரங்கில் கையாளும்போது தான் சங்கடம் வருகிறது.
மேற்கத்தைய சொல்லாடலில் மனித உரிமைகள் பற்றி இரட்டை நிலை உண்டு. மேலே சொன்ன
மூன்று வகையில் மேற்குலகச்
சொல்லாடலில் முதலாவதே முன்னிறுத்தப்படுகிறது. இன்று சீனாவைத் தாக்குவதற்குத் தனியார்
உரிமைகளே
பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்தைய வர்ணிப்பில் மனித உரிமைகள்கூட ஒரு குறுகிய தேர்வே.
பேச்சு, எழுத்துச் சுதந்திரம், சுய
நிர்ணயம், வாக்குரிமைகளையே மேற்கத்தைய அரசியல்வாதிகளும் விமர்சகர்களும்
பிரதானப்படுத்துகிறார்கள். தனி மனித உரிமையின்
முக்கிய அம்சமான சித்திரவதையைப் புறக்கணித்துவிடுகிறார்கள். சீனாவின் மனித உரிமைக்
கறைகள் தெரிகிறது. அதேபோல்
சாதாரண மனித உரிமைகளுக்கே இடம் தராத அமெரிக்க அரசின் கொள்கை மரபு கண்ணுக்குத்
தெரிவதில்லை. பர்மா பௌத்த
பிக்குகளை அதிகாரத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லும் அய்ரோப்பிய அரசியல் தலைவர்கள்
அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு
முன்னால் வாய் அடைத்துப் போயிருக்கிறார்கள். Water boarding என்ற சித்திரவதை முறை (ஆளுக்கு
முகத்தைக்கட்டி நீருக்குள்
மூழ்குவது போல் அமிழ்த்தி எடுப்பது) புஷ் அங்கீகரித்தபோது ஜனநாயகத்தின் கண்காணிகளான
பிரித்தானியாவோ ஜெர்மனியோ
பிரான்சோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
மேற்கின் மனித உரிமை ஆதரவுகூட முரணானது. மனித உரிமைகளுக்கும் அரசியல் லாபங்களுக்கும்
பொருளாதார
வாய்ப்புகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டால் மேல் நாட்டு அரசுகளைப் பொறுத்த மட்டில்
தங்களின் அரசியல், வாணிக ஆதாயமே
முக்கியம். சவூதி அரேபியா இதற்கு உத்தம உதாரணம். ஜனநாயகத்தின் அனா ஆவன்னாவைக்கூட
மதிக்காத இந்த ஆட்சியைத்
தங்களின் வியாபார நோக்கு காரணமாக மேற்கு நாடுகள் போஷித்துவருகின்றன.
மேல் நாடுகளின் இரட்டைக் குரல் தனி வகையானது. விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்
பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டாம்
என்று சொல்லுகிறார்கள். ஆனால், சீனாவின் சந்தையில் வர்த்தகம் செய்ய மேற்கு நாட்டு
வாணிக ஸ்தாபனங்கள்
போட்டிபோடுகின்றன. சீனமக்களும் அரசும் வேறு. சீன மக்களுக்காக ஒலிம்பிக்
விளையாட்டுகள் நடைபெற வேண்டும். இதைத்தான்
தலாய் லாமாவும் விரும்புகிறார். எனக்கு என்னவோ விளையாட்டு வீரர்களை இந்தப்
போட்டிகளில் பங்கு வகிக்க வேண்டாம் என்பது
மேற்குலக நாடுகளின் இரட்டை நிலைப்பாடுக்கு இரைக்கப்பட்ட கடா என்றுதான் தோன்றுகின்றது.
கறுப்பர்கள், கனவுகள், கவலைகள்
வி. எஸ். நைபால் பற்றிய ஒரு ஆவணப்படத்தை பிபிசி நாலாவது அலைவரிசையில் பார்த்த
கையுடன் இதை எழுதுகிறேன். அவர்
எளிதில் எரிச்சல்படக்கூடியவர், சில தீர்க்கமான எண்ணங்கள் கொண்டவர், தன்னையும்
தன்னுடைய எழுத்துகள் பற்றியும் உன்னதக்
கருத்துடையவர் என்ற அபிப்பிராயம் உண்டு. இந்தக் கட்டுருவாக்கங்களுக்குக் களங்கம்
வராதபடி அறுபது நிமிட நிகழ்ச்சியில் நைபால்
நடந்துகொண்டார். எட்வர்ட் சயத் இவரை 'அறிவுலகின் சறுக்கல்' என்று சொன்னது
நினைவுக்குவந்தது. நைபால் இந்திய
வம்சாவளியில் வந்த ட்ரினிடாடைச் சேர்ந்தவர். இதே நாட்டைச் சேர்ந்த, இந்தியப்
பின்புலத்தைக் கொண்ட இன்னுமொரு
மேற்கிந்தியப் படைப்பாளியிருக்கிறார். அவர் பெயர் சாம் செல்வன் (Sam Selvon.) எனக்கு
நைபாலைவிட செல்வனின் எழுத்து
பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம் நைபாலைப் போல் மூன்றாவது நாடுகளைப் பற்றி
மேற்கத்தைய தாராளவாத வாசிப்பாளர்களை
மகிழ்வூட்டும் சித்தரிப்புகள் இவர் எழுத்தில் இருப்பதில்லை. இவருடைய எழுத்துகளில்
நைபால் கண்டுகொள்ளாத அல்லது கண்டு
கொள்ள மறுக்கும் காலனிய ஆட்சி மற்றும் உலகமயமாக்கம் ஏற்படுத்திய தகவல் குழப்பங்கள்,
சோக விளைவுகள் பற்றிக்
கூர்மையான பார்வைகள் இருக்கும். தருணம் கிடைக்கும்போது செல்வனின் படைப்புகள் பற்றி
எழுதுகிறேன். இப்போதைக்கு நான்
சமீபத்தில் படித்துமுடித்த இவரின் Moses Ascending நாவல் தரும் இரண்டு முக்கியச்
செய்திகளை மட்டும் தருகிறேன்.
இந்த 'மோசே அசண்டிங்' செல்வனின் மூன்று பகுதி நாவலில் நடுப்பாகமாகும். செல்வனின்
எழுத்துக்களில் ஒரு வசதி
என்னவென்றால் முன்பின் நாவல்களைப் படிக்காமலேயே இந்த மூன்று தொடர்களில் எந்த ஒரு
நாவலுக்குள்ளும் இலேசாக
நுழைந்துவிடலாம். ஒரு நாவல் பெரும்திரட்டு அந்தஸ்து பெறுவதற்கு அதன் தீர்க்கதரிசனப்
பார்வை முக்கியமானதாகும். இந்த நாவல்
70களில் எழுதப்பட்டாலும் அதில் அடையாளப்படுத்தப்பட்ட சில புலப்பதிவுகள்
இங்கிலாந்தில் அந்நியர் குடியேற்றம் பற்றி வருவதை
முன் அறியக்கூடிய அறிவுடன் எழுதப்பட்டவை. உதாரணத்திற்கு ஒன்றைத் தருகிறேன்.
மேற்கிந்தியத் தீவிலிருந்து இங்கிலாந்தில்
குடியேறிய மோசே அனுகூலமற்ற சீதோஷ்ண நிலை, ஆங்கிலேயர் காட்டிய இயல்பான இனவெறுப்பு
இவற்றையும் மீறிக் கொஞ்சம்
பணம் சேர்த்துத் தனக்கென ஒரு வீட்டை வாங்கிச் சொத்துரிமையாளராகிவிடுகிறான். தான்
சாதித்துவிட்டேன் என்ற பெருமிதம்
இருந்தபோதும் அவனின் சாதனை ஒரு அபாய அறிவிப்பு என்றே அவனுக்குப் படுகிறது. அப்போது
மோசே யோசிக்கிறான். பொதுமக்கள்
நினைக்கிறார்கள். அன்றாட வாழ்வில் தினமும் ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் ஆக்கினையையும்
அந்நியப்படுத்துதலையும் வெறுப்பையும்
தாங்க முடியாமல் ஒரு நாளைக்குக் கொதித்து எழுவார்கள். அப்போது இந்த நாட்டையே
கலங்கவைக்கும் இனக் கலவரம் வெடிக்கும்.
இந்தக் கருத்து தப்பானது என்று மோசேக்குத் தெரிகிறது. இனக் கலவரத்திற்கு மோசே தரும்
காரணம் சற்று வித்தியாசமானது.
நம்மையும் கொஞ்சம் சலனப்படவைக்கிறது. மோசே எண்ணுகிறான் இனவெறியாட்டம் எப்போது இந்த
நாட்டில் தலைதூக்கும் என்றால்
வெள்ளையர் மனத்தில் என்றைக்குக் கறுப்பர்கள் சொகுசாக, சௌகரியமாக, சுக போகங்களுடன்
வாழ்கிறார்கள் என்ற கருத்து
தோன்றுகின்றதோ அப்போது எழும் இனக் கிளர்ச்சி நாட்டையே திடீரெனக் கலங்கவைக்கும்.
செல்வனின் கதாபாத்திரம் நினைத்தது
போல் பெரும்பான்மையான ஆங்கிலேயரின் எண்ணம் வந்த குடியேறிகள் இங்குள்ள சில சலுகைகளைப்
பயன்படுத்தி, குஷியாக
வாழ்கிறார்கள் என்பதே. உதாரணத்திற்கு ஒன்று. வெள்ளைத் தொழில் வர்க்கத்தினர்
கவுன்சில் வீடு கிடைப்பதற்கு மாதக்கணக்கில்
காத்திருக்க வேண்டும். ஆனால், குடிபுகுந்தோர் வரிசையைத்தாண்டி கவுன்சில்
குடியிருப்புத் தலங்களில் வாழ்க்கையை
ஆரம்பிக்கலாம். இது ஆங்கிலேய உழைப்பவர் வர்க்கத்தை மட்டுமல்ல, வெள்ளை
மத்தியதரத்தினரிடையேயும் எரிச்சலையும்
பதற்றநிலையையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று இங்கு உள்ள வலதுசாரி
ஊடகங்களினால் இந்த எரிச்சல்
மேலும் ஊக்குவிக்கப்படுகிறது.
கடைசியாக, செல்வனின் நூல் தரும் இன்னுமொரு தகவல். குடியேறிய தொடக்க நாள்களின்
கறுப்பர்களின் நாளாந்த வாழ்க்கையைப்
பற்றிய செல்வனின் வர்ணிப்பு. என்னுடைய தளர்த்தியான மொழிபெயர்ப்பில் தருகிறேன்.
கறுப்பர்களுக்கு நாள்தோறும்
நடப்பவற்றையும் ஆங்கிலேயரின் தினசரி அடிப்படைத் தேவைகள் சீராகச் செயல்படக்
கறுப்பர்களின் பங்கை உணர்ச்சியுடன் செல்வன்
இவ்வாறு பதிவு செய்கிறார்: அதிகாலையில் அடிக்கும் முதல் கடிகாரத்தின் எழுப்பொலி
கறுப்பர்களின் வீட்டில் கேட்கும். சூரியனின்
புதிய கதிர்களைக் கறுப்பர்கள்தான் பார்ப்பார்கள். முதல் வெண்பனித் துளிகள்
கருப்பரின் தேகத்தில்தான் விழும். இலையுதிர் காலத்தில்
உதிரும் முதல் இலை கறுப்பர்கள் தலையைத்தான் தொடும். அதிகாலையில் அலுவலகத்தைச்
சுத்தம் செய்பவர் கறுப்பராயிருப்பார்.
குப்பைத் தொட்டிகளைத் தூய்மைப்படுத்துபவர் கறுப்பரே. உங்கள் பாதாள இரயில் ஓட்டுநர்
கறுப்பராய்த்தான் இருப்பார். மதுக்கடையில்
மதுபானத்தைப் பரிமாறுபவர் கறுப்பர். வெதுப்பகத்தில் (bakery) கடும் சூட்டைத்
தாங்கிக்கொள்பவர் கறுப்பர். தெருவில் விழும் முதல்
மூத்திரத் துளி கறுப்பருடையதாகத்தான் இருக்கும். கடைசி வரி செல்வன் எழுதவில்லை. நான்
சும்மா சேர்த்துக்கொண்டது. செல்வன்
ஆவணப்படுத்தியது 70களின் பிரித்தானியா. இனி அதிதுரித முன்னோக்கிப் பொத்தானை
அமுக்கிச் சமகால ஆங்கிலேயச் சூழலுக்கு
வாருங்கள். இன்றைக்கு அய்ரோப்பிய ஒன்றியம் விரிவடைந்ததினால் தினமும் புதிய வாழ்வைத்
தேடி வரும் போலிஷ், ருமேனிய,
பல்கேரிய, லாட்வியரை இந்தச் செல்வனின் நாவலில் வரும் கறுப்பர்களுக்குப் பதிலாக
ஆள்மாறாட்டம் செய்யுங்கள். இன்று
மாறிவரும் புலம் பெயர்ந்தோர் அசைவியக்கத்தில் (mobility) புதிய கறுப்பர்கள் யார்
என்று தெரியவரும்.
|