|
அண்மையில் மாடர்ன் தியேட்டர்ஸார் தயாரித்த பர்மா ராணி (1945) படத்தைப் பார்க்கும்
வாய்ப்புக்கிடைத்தது. சென்னையில் பழைய திரைப்பட ஆர்வலர்களுக்கென Vintage Heritage
என்ற அமைப்பை நண்பர் சர்வேஸ்வரன் நடத்திவருகிறார். நடிகர் சங்கத் திரையரங்கில்
இப்படங்கள் அவ்வப்போது திரையிடப்படும். திரைப்படத்தின் filmography அடங்கிய
துண்டறிக்கை தரப்படுவதோடு, விவரம் தெரிந்த ஒருவர் படத்தை அறிமுகப்படுத்திப் பேசுவார்.
பழங்காலத்து நடிகர்கள் சிலரும் இங்கு வருவார்கள். டி. வி. குமுதினி (மாத்ருபூமி
1939), சுந்தரிபாய் (சந்திரலேகா 1948) இவர்களை நான் இங்கே சந்தித்திருக்கின்றேன்.
பர்மா ராணி இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்திலிருந்தபோது பிரிட்டீஷ் அரசின்
உத்தரவிற்கிணங்க, போரை ஆதரித்து, நேச நாட்டுக்கூட்டணியின் நிலைப்பாட்டை ஆதரித்து
எடுக்கப்பட்ட படம். ஒரு புத்தம் புதிய பிரதி போன்ற ஞிக்ஷிஞி ஒன்றை நண்பரொருவர்
சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்து இங்கே திரையிட்டார். தமிழ்ப்படங்களுக்கு
சிங்கப்பூரில் பல விநியோகஸ்தர்கள் இருந்தனர். போர் மூண்டவுடன் பல படங்களின்
பிரதிகள் அங்கே முடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் அழிந்துவிட்டாலும் சில படங்கள் அங்கு
இன்னமும் இருக்கின்றன என்று தெரியவருகிறது. அப்படிக் கிடைத்ததுதான் பர்மா ராணி.
சினிமா ரீதியாகத் தரத்தில் உயர்ந்ததாக இல்லாவிடினும் இப்படம் இந்தியத் திரை
வரலாற்றில் இடம் பிடித்த ஒன்று. உலகப்போரின்போது சில முக்கியமான படங்கள்
இந்தியாவில் வெளிவந்தன. தமிழ் சினிமாவில் பர்மா ராணி கவனிக்கப்பட வேண்டிய படம்.
இந்தியில் போரின் பின்னணியில் சாந்தாராமைக் கதாநாயகராகக் கொண்ட டாக்டர் கோட்னிஸ் கா
அமர் கஹானி என்ற படம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சுதந்திரப் போராட்டம் தீவிரகட்டத்தை அடைந்தபோது, இந்தியர்களுக்குச் சுய உரிமை
அளிக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் 1935இன்படி நாடெங்கும்
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை ராஜதானியில் காங்கிரஸ் கட்சி நல்ல
பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ராஜாஜியைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது.
(அன்று ராஜதானியின் முதல்வர் பிரதமர் என்றழைக்கப் பட்டார்.) இந்தத் தேர்தலில் பல
சினிமா நடிகர்களும் இயக்குநர்களும் காங்கிரஸை ஆதரித்துப் பிரச்சா ரத்தில்
ஈடுபட்டனர். இதில் வி. நாகையாவும் கே. பி. சுந்தராம்பாளும் முக்கியமானவர்கள்.
பின்னர் 1958இல் கே.பி.எஸ் இந்தியாவிலேயே சட்டசபைக்குள் நுழைந்த முதல் நடிகர் என்ற
புகழைப் பெற்றார். இதற்கு முன்னரே ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து, எம்.வி. மணி,
எம். எம். சிதம்பரநாதன் என்ற கதாநாயக நடிகர்களும் மற்ற பல சினிமா சார்ந்த
கலைஞர்களும் சத்தியாக்கிரகம், கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி எரிப்பு போன்ற
போராட்டங்களில் ஈடுபட்டனர். ராமானுஜர் (1938) படத்தின் கதாநாயகி என். சீதாலட்சுமி
மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை வருடம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் திரைப்படத்தையும் நடிகர்களையும்
தன் கொள்கைகளைப் பரப்பவும் மக்களின் ஆதரவைத் திரட்டவும் முதன்முதலில்
பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாட்டில் சினிமா - அரசியல் ஊடாட்டம்
முப்பதுகளிலேயே தொடங்கிவிட்டது. இதன் தொடர்ச்சிதான் சுதந்திரத்திற்குப் பின் தமிழ்
நாட்டில் நடந்ததும் இப்போது நடந்துகொண்டிருப்பதும்.
காங்கிரஸ் 1937இல் பதவிக்கு வந்ததும் எல்லா ஊடகங்களின் (நாடகம், அச்சு, கிராமபோன்)
மேலிருந்த தணிக்கையும் தளர்த்தப்பட்டது. ஏறக்குறைய முற்றிலுமாகத்
தள்ளிவைக்கப்பட்டது. முக்கியமாகப் போலீஸ் கமிஷனரைத் தலைவராகக் கொண்டு இயங்கிவந்த
சினிமா தணிக்கைக் குழு செயலிழந்தது. அரிதாகக் கிடைத்த இந்தச் சுதந்திரத்தைப்
பயன்படுத்திப் பல தேசியப் பற்று சார்ந்த மாத்ருபூமி, தியாகபூமி, பாரத கேசரி, ஹரிஜன
சிங்கம் முதலிய படங்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்தன. ஆனால், இந்தக்
காலகட்டத்தில் திரையில் தேசப்பற்று ஒரு விலைபோகும் சரக்காகவும் ஆகியிருந்தது என்பதை
மறப்பதற்கில்லை.
இந்தக் கருத்துச் சுதந்திரம் அதிக நாள் நீடிக்கவில்லை. 1939இல் உலகப்போர் மூண்டது.
கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு இந்தியாவைப் போரில் இழுத்துவிட்டார். இதை
ஆட்சேபித்து காங்கிரஸ் கட்சி பதவிவிலகியது. பிரிட்டீஷ் அரசு தணிக்கையை மறுபடியும்
முன்னைவிடக் கடுமையாக அமலாக்கியது. சினிமா துறை அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. அகில
இந்திய அளவில் சினிமாவைக் கண்காணிக்க ஒரு குழு (Film Advisory Board)
அமைக்கப்பட்டது. போரில் பிரிட்டீஷாரின் நிலைப்பாட்டை ஆதரித்துத் திரைப்படம்
வெளிக்கொண்டுவர, தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதும் பிரச்சாரப் படங்கள் எடுப்பதும் இக்
குழுவின் பணி. ஜி. டி. பி. ஹார்வி என்ற ஆங்கிலேயர் இந்தக் குழுவின் தலைவராகவும்
போர் பிரச்சார அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
1942 ஏப்ரல் 5ஆம் நாள் சென்னைமீது ஜப்பானியர் குண்டு வீசினர். பீதியடைந்த மக்கள்
நகரைவிட்டு வெளியேறினர். பல நிறுவனங்களும் சென்னையிலிருந்து வெளியேறி வெளியூர்களில்
தற்காலிக அலுவலகங்களை அமைத்தன. பிரகதி (பின்னால் ஏவிஎம்) ஸ்டுடியோ காரைக்குடிக்குக்
குடிபெயர்ந்தது. தென்னிந்திய பிலிம் சேம்பர் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது.
யுத்தத்தினால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சினிமா சாதனங்களையும் கச்சா
பிலிமையும் இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. 1941இல் ஜப்பானும்
யுத்தத்தில் ஈடுபட்டபின், கோடக்பிலிம் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. சில
நகரங்களில் இரண்டாவது ஆட்டம் தடைசெய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கச்சா பிலிம்
கட்டுப்பாட்டை அரசு கொண்டுவந்து, ஒரு படம் 11,000 அடிக்குள் இருக்க வேண்டுமென்ற
விதியையும் அமலாக்கியது. இது தமிழ் சினிமா இயக்குநர்களுக்குப் பெரிய சிக்கலை
உண்டாக்கியது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரையில் சினிமா இலக்கணம், கதை
சொல்லும் உத்திகள் வளராமல் இருந்தன. ஒரு நிகழ்வை சினிமா மொழியின் மூலம் காட்டத்
தடுமாறினார்கள். அதிலும் ஒரு நிகழ்வைக் காமிரா மொழி மூலம் சுருக்கிக் காட்ட
சிரமப்பட்டார்கள். ஆகவே, ஒரு கதையைக் குறுகிய நேரத்தில் காட்ட முடியாது என்றே
நினைத்தார்கள். அது மட்டுமல்ல பாட்டுகளைக் குறைக்க வேண்டியிருந்தது. அந்தக்
காலத்தில் சினிமாவிற்குப் போவதை மக்கள் ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போவதைப் போலக்
கருதினார்கள். பாட்டுக் குறைந்தால் யார் வருவார்கள்? ஆகவே, கச்சா பிலிம்
கட்டுப்பாட்டை எல்லாத் தயாரிப்பாளர்களும் எதிர்த்தார்கள். எஸ். எஸ். வாசன் இது ஒரு
'மிருகத்தனமான' விதி என்றார். இதை எதிர்த்து சினிமா ஊழியர்கள் ஊர்வலம் சென்றார்கள்.
சினிமாப் பத்திரிகைகளில் தலையங்கங்கள் எழுதினார்கள். ஆனால், பிரிட்டீஷ் அரசு
மசியவில்லை.
நீளக் கட்டுப்பாடு மட்டுமல்ல தயாரிப்பாளருக்கு பிலிம் வேண்டு மென்றால்
ஸ்டுடியோக்கள் எடுக்கும் மூன்று படங்களில் ஒரு படமாவது போரில் பிரிட்டனின் நிலைப்
பாட்டை ஆதரிப்பதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைப் போடப்பட்டது. மௌனப்பட
காலத்திலிருந்தே சினிமாவின் பிரச்சார இயல்பை உணர்ந்திருந்த பிரிட்டீஷ் அரசு இதுதான்
சந்தர்ப்பம் என்று இந்திய சினிமாவைத் தனக்குச் சாதகமாகச் செயல்பட வற்புறுத்தியது.
அன்றிருந்த ஊடகங்களில் அரசின் கட்டளைக்கு முதலில் அடிபணிந்தது சினிமாதான்.
சென்னையிலிருந்து பல போர்ப் பிரச்சாரப் படங்கள் வெளிவந்தன.
திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் யுத்தம் பற்றிய செய்திப்படம்
கட்டாயமாகத் திரையிடப்பட்டது.
போருக்குச் சில ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் மந்திரிசபை ஆட்சியிலிருந்தபோது
(1937-39) தேசப்பற்றுப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்றிருந்த தயாரிப்பு நிறுவனங்கள்
இப்போது பிரிட்டீஷ் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து, ஏகாதிபத்திய சக்திகளைப் போற்றிப்
படங்கள் எடுக்கத் தயங்கவில்லை. மெட்ராஸ்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்போ ரேஷனின் கே.
சுப்ரமணியம்-சி. எஸ். வி. அய்யர் இயக்கிய மானசம்ரக்ஷணம், ஜெமினியின் கொத்த மங்கலம்
சுப்பு இயக்கிய கண்ணம்மா என் காதலி, மாடர்ன் தியேட்டர்ஸாரின் டி. ஆர். சுந்தரம்
இயக்கிய பர்மாராணி என்ற இந்த மூன்று படங்களும் 1945இல் வெளியாயின. அதே வருடம் கோவை
சென்ட்ரல் ஸ்டுடியோ, ஏ. எஸ். ஏ. சாமி இயக்கிய என் மகன் படத்தைத் தயாரித்தது. இதில்
பர்மா ராணி படம் மட்டும் எஞ்சியுள்ளது.
சென்னையில் பர்மா ராணியின் முதல் காட்சிக்கு அரசின் பிரச்சார அதிகாரி ஜி. டி. பி.
ஹார்வி தலைமை தாங்கினார். ஜப்பானியர் பிடியிலிருந்த ரங்கூனில் கதை நடக்கிறது.
இந்தியாவைத் தாக்க தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் ஜப்பானியத்
தளபதி ஜெனரல் பக்ஜினாவைக் கண்காணித்து வருகின்றார். தமிழ்ப்பெண் மங்களம் தலைமையில்
ஒரு பிரிட்டீஷ் ஒற்றர்படை இயங்கிவருகிறது. அப்போது பிரிட்டிஷ் வான்படையில்
பணிபுரியும் மூன்று தமிழ்வீரர்கள் விமானம் மூலம் வந்து, பாராசூட்டில்
ரங்கூனுக்கருகே குதித்திறங்குகிறார்கள். அங்குள்ள ஒரு புத்த விகாரத்தில்
ஒற்றர்களின் ரகசியச் சந்திப்பு நடைபெறுகின்றது. ஜப்பானியரின் திட்டத்தைத்
தோற்கடித்து விட்டு, மங்களத்தின் உதவியால் மூன்று விமானப்படை வீரர்களும் விசைப்படகு
மூலம் சென்னைக்குத் தப்பித்துப்போகிறார்கள். சுபம். ஜப்பானிய ராணுவத் தளபதி பக்ஜினா
அவ்வப்போது இந்த, அன்றைய ஜப்பானின் 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற கருத்தை
வலியுறுத்துகின்றார். இந்தப் பிரச்சாரத்தை எதிர் கொள்கிறது பர்மா ராணி. ஜப்பானிய
ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை விளக்குகின்றது. பொழுது போக்கு அம்சங்கள் - பாட்டு,
நகைச் சுவை ஆகியவை - மிகவும் குறையாக இருப்பதைக் கவனிக்க முடிகின்றது.
எல்லாக் காட்சிகளும் ஸ்டுடியோவினுள் எடுக்கப்பட்டவை. கதை நடப்பது பர்மா என்பதை
நிறுவயானைகள் பராமரிக்கப்படும் ஒரு காட்சியும் கடல்வழி ஒற்றர்கள் தப்பும் கடைசிக்
காட்சியும் மட்டும்தான் வெளிப்புறக் காட்சிகள். இப்படத்தில் வரும் பாட்டு இல்லாத
பர்மிய நடனக் காட்சி ஒன்று கையால் வர்ணம் தீட்டப்பட்டுத் (hand-tinted)
திரையிடப்பட்டது. அதாவது, ஒவ்வொரு படச் சட்டமும் கையினால் வர்ணம் தீட்டப்படும்.
இந்தியத்திரையில் இது ஒரு முன்னோடி முயற்சி. மற்றொரு அம்சம் என்னைக் கவர்ந்தது. ஒரு
அழுத்தமான, தன்னம்பிக்கை நிறைந்த ஒரு பெண் பாத்திரம் மங்களமாக சி. டி. ராஜகாந்தம்
நடித்திருந்தார். இன்றுவரைக்கும் இத்தகைய பெண் கதைமாந்தர்கள் தமிழ் சினிமாவில்
அரிதாகவே தோன்றுகின்றனர்.
தமிழ் சினிமாவில் வெகு ஆண்டுகள் - அறுபதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடித்த
ஒரு கலைஞர் ராஜகாந்தம். இவரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க அம்பை
திட்டமிட்டிருந்தார். இதைப் பற்றிப் பேச அம்பையும் நானும் ராஜகாந்தத்தை அவரது
பட்டினப்பாக்கம் வீட்டில் ஒரு மாலை சந்தித்தோம். வீட்டில் நுழைந்தவுடன் என்னை
அறிமுகப்படுத்திக்கொள்ள 'நான். . . ' என்று தொடங்கினேன். 'என் விசிறியா. .
.உட்காரப்பா' என்றார். அவரது ஆரம்பகால சினிமா அனுபவங்களைப் பற்றிப் பேசினார். அவர்
நடித்த உத்தம புத்திரன் (1940) படத்தைச் சில நாள்களுக்கு முன் தான்
பார்த்திருந்தேன். அதைப் பற்றியும் பேசினோம். ஆனால், அந்தச் சந்திப்பிற்கு ஒரு
வாரத்திற்குப்பின் அவர் இறந்துபோன செய்தி கிடைத்தது. அம்பை திட்டமிட்டிருந்த அந்தக்
குறும்படம் தயாரிக்கப்படவில்லை.
சரி, கதைக்கு வருவோம். இயக்குநர் டி. ஆர். சுந்தரம் ஜப்பானியத் தளபதியாக
நடிக்கின்றார். ஹிட்லர் போன்ற தோற்றமுடைய மேக்கப். ஆனால் முகபாவங்களற்ற நடிப்பு.
ஒற்றர்களுக்கு உதவும் புத்த பிக்குவாகச் செருகளத்தூர் சாமா பிரமாதமாக நடிக்கிறார்.
சகுந்தலையில் (1940) கண்வ ரிஷியாகவும் ஏழைபடும்பாடு (1950) படத்தில் பாதிரியாகவும்
தோன்றித் தனது நடிப்பால் மக்கள் மனத்தில் இடம் பெற்றவர் இவர். மதகுரு பாத்திரம்
கிடைத்தால் பிய்ச்சு உதறிவிடுவார் சாமா. ஒற்றனாக வந்து, ஜப்பானியர்களிடம் அகப்பட்ட
பின் உளவு ரகசியத்தைச் சொல்லாமல் மௌனம் காத்து, சித்ரவதை செய்யப்பட்டு உயிர்
துறக்கும் பாத்திரமாகத் தோன்றும் இளம்வயது டி. எஸ். பாலையா மனத்தில் நிற்கின்றார்.
என். எஸ். கிருஷ்ணன், கே. எல். வி. வசந்தா, சகஸ்ர நாமம் இவர்களும் முக்கியப்
பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாலிவுட் பாணியில் கதை சொல்லப்படுகின்றது. பாத்திரப் பேச்சு மிகக் குறைவு. இரண்டு
மூன்று வாக்கியங்கள் பேசினாலே அதிகம். சினிமாவின் அடிப்படை இயல்பான காட்சிப்
படிமங்கள் மூலம் பல இடங்களில் கதை நகர்த்தப் படுகின்றது. பக்கம் பக்கமாக வசனம்
எழுதி, காமிராவை ஒரே இடத்தில் கட்டிப்போட்ட வசனகர்த்தாக்களின் காலத்திற்கு முற்பட்ட
படம் இது.
அதே சமயம் வெளிவந்த மற்றொரு முக்கியப் போர் பிரச்சாரப் படம் கே. சுப்ரமணியம்
தயாரித்த மானசம்ரக்ஷணம். "மஹோன்னத பிரச்சாரப் படம்" என்று தயாரிப்பாளர்களால்
விளம்பரம் செய்யப்பட்டது. இதுவும் பர்மாவில் நடக்கும் கதை. உளவு பார்ப்பவர்களைப்
பற்றிய கதை.
இந்தப் படத்தின் ஒரு பிரதிகூட இப்போது இல்லை. சமகாலத்துப் பத்திரிகை மூலம்
இப்படத்தைப் பற்றிய சில விவரங்கள் நமக்குக்கிடைக்கின்றன. ஜப்பானிய ராணுவ
அதிகாரியாகக் காளி என். ரத்தினத்தின் நடிப்பும் இந்தியர்கள் கால் நடையாக பர்மா
எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் மணிப்பூர் அருகே நுழைவதும் அப்படத்தின் முக்கிய
அம்சங்கள். சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு கருத்தரங்கில் ஒரு பேச்சாளர்
தமிழ் சினிமாவில் பராசக்தியில் மட்டுமே இந்த பர்மா நடைப் பயணம்
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றார். மானசம்ரக்ஷணத்திலும் அந்த வரலாற்றுச்
சிறப்புப்பெற்ற காட்சி இடம்பெற்றிருந்தது. யுத்த காலத் தமிழ்நாட்டை இந்தப் படம்
காட்சிப்படுத்தியிருந்தது. தூத்துக்குடியில் விமானப்படைத் தாக்குதலுக்கு மக்கள்
ஆயத்தமாவது போல (air raid precaution) ஒரு காட்சியும் உண்டு. இந்தப் படம் அழிந்து
போனது ஒரு பெரிய இழப்புத்தான். என்றாவது பினாங்கிலிருந்தோ சிங்கப்பூரிலிருந்தோ இது
மறுபடியும் தோன்றலாம் என்ற ஒரு நப்பாசை எனக்குண்டு. என் மகன் படமும் அந்த
ஆண்டுதான். இது ஒரு விமானப்படை பைலட் பற்றியது. அவரது காதலி ஒரு ராணுவ
செவிலித்தாய். போர்க்களத்தில் ஒரு மருத்துவ நிலையத்தில் ஒன்று சேர்கிறார்கள்.
ஹெமிங்வேயின் A Farewell to Arms நினைவிற்கு வர வில்லையா? இப்படத்தின் வச னத்தை ஏ.
எஸ் .ஏ . சாமி எழுதியிருந்தார்.
இதன் பின்னர் தமிழ் சினிமா போரைப் பற்றி நினைத்தது அந்த நாள் படத்தில்.
ஜப்பானியர்களின் ஒற்றனாகக் கதாநாயகன் (சிவாஜி) இயங்கி, மனைவியாலேயே
கொல்லப்படுகிறான். அறுபதுகளில் சீனப் படையெடுப்பிற்குப் பின் ரத்ததிலகம் (1963),
பார்த்தால் பசி தீரும் (1962) போன்ற படங்கள் வெளிவந்தன. பின்னர் பாகிஸ்தானை
எதிரியாகக் கொண்டு சில படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், போரை எதிர்க்கும் படங்களோ
(anti-war movies) அல்லது அமைதியை ஆதரிக்கும் படங்களோ வந்ததில்லை. போரை
நாட்டுப்பற்றுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளும் படங்களே வெளிவந்தன.
(Frontline, செப்டம்பர் 23, 2006 இதழில் வெளியான War and Tamil Cinema என்ற எனது
கட்டுரையின் விரிவாக்கம் இது.)
|