Google   www kalachuvadu.com

கொங்கு மண்டல மரபுக் கலை விழா
பெ. பாலசுப்ரமணியன்

மரபு சார்ந்த அடையாளங்கள் குறித்த அக்கறைகள் விரிவடைந்திருக்கும் தருணம் இது. மரபின் செழிப்பான கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நவீனத்துவப் பரப்பிற்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் நவீனத்துவவாதிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. மரபின் வளமான கூறுகளை உள்வாங்கிக்கொண்டு தம் படைப்புகளைச் செழுமைப்படுத்திய நவீனத்துவவாதிகள் எண்ணற்றோர். பாரதியிலிருந்து பல நவீனத்துவவாதிகள் மரபின் தாக்கத்துக்குட்பட்டவர்களே. புதுமைப்பித்தன் கதைகளில் முக்கியமானவையெனக் கருதத்தக்க பலவும் மரபோடு நடத்திய உரையாடல்களிலிருந்து பிறந்தவை.

தமிழ் நவீன நாடக இயக்கம் நாட்டார் கலைகளால்தான் புத்துயிர் பெற்றது எனச் சொல்வது விவாதத்திற்குரியது அல்ல. ந. முத்துசாமியின் நவீன நாடகங்கள் இதற்குச் சரியான உதாரணம். புரிசை கண்ணப்பத் தம்பிரானின் கூத்து மொழியால் உரம்பெற்றது கூத்துப்பட்டறை இயக்கம். தமிழ் நவீனத்துவவாதிகளுக்கு மரபு குறித்த அக்கறைகளை விரிவடையச் செய்ததில் ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கு முக்கியப் பங்கு உண்டு. பிறகு பல்கலைக்கழகங்களும் தன்னார்வ நிறுவனங்களும் நாட்டாரியலில் தம் அக்கறைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கின. நாட்டார் கலைகளைத் தொகுக்கும் பணிகளில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அவற்றை மறுவாசிப்புக்குட்படுத்தும் எண்ணற்ற முயற்சிகள் தமிழ் அறிவுலகத்தினுள் நடைபெற்றுவருகின்றன. எனினும், நாட்டார் கலைகளைத் தொகுப்பதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் நவீனத்துவவாதிகள் பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளன.

பல்வேறு இனக்குழுக்கள் தத்தமக்கேயுரிய தனிச் சிறப்பான கூத்து மற்றும் கதையாடல் வடிவங்களைக்கொண்டுள்ளன. அவற்றை வகைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கான தரவுகள் இல்லாத நிலையில் அவை குறித்த அறிவுலகவாதிகள் மற்றும் நகரவாசிகளின் ஏக்கப் பெருமூச்சுகள் அக்கலைகளின் மீது படர்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். உலகமயமாக்கலின் விளைவாக வேகமாக அழிந்துவரும் தம் அடையாளங்கள் குறித்துத் தொன்மையான சமூகங்களிடையே எழுந்துள்ள பதற்றம் அவற்றின் மீது முன்னெப்போதுமில்லாத கவனம் உருவாக முக்கியக் காரணம் எனலாம்.

மரபு சார்ந்த அடையாளங்களின் மீது அறிவுலகவாதிகளிடையே எழுந்துள்ள இந்த அக்கறைகளுக்கு மேடைகளை உருவாக்கிக்கொடுக்கும் பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் தனி நபர்களும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில் தம் பங்களிப்பாகப் பண்பாட்டுத் துறை சார்ந்த செயல்பாடுகளில் பல ஆண்டுகளாக ஈடுபாடுகாட்டிவரும் ஸ்ரீராம் சிட்ஸ் குழுமமும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து ஈரோட்டில் சென்ற பிப்ரவரி 22, 23, 24 தேதிகளில் நடத்திய கொங்கு மண்டல மரபுக் கலை விழா முக்கியமானதாகிறது.

கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் தனிச்சிறப்பான கலை மரபுகளை நினைவூட்டும் விதத்தில் நடைபெற்ற அந்த விழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன், மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் சிவநேசன், டாக்டர் வெ. ஜீவானந்தம், வழக்கறிஞர்கள் சிதம்பரன், கி. அண்ணாதுரை, கொங்கு என். கொழந்தசாமி, ஜெ. சுத்தானந்தன், ஈரோடு கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்களவதி உள்ளிட்ட எண்ணற்ற ஈரோடு நகரப் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்றது.

22.02.2008 ஈரோடு வ.உ.சி பூங்காவில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் கண்ணன் கொடியசைத்துத் தொடங்கிவைத்த கொங்கு மண்டல மரபுக் கலைஞர்களின் பேரணியோடு விழா ஆரம்பமாயிற்று. பேரணி, வெறும் ஊர்வலமாக அல்லாமல் பொதுமக்கள் வியந்து காணும்படி தப்பாட்டம், சலங்கையாட்டம் என இசையோடும் ஆடலோடும் விழா நடைபெற்ற கலைமகள் கல்வி நிலையத்தை வந்தடைந்தது.

கொங்கு நாட்டின் பல்வேறு கலைச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கிப் பராமரித்துவரும் கலைமகள் கல்வி நிலைய அரங்குகளில் மூன்று நாள்களும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச் சந்திரன் முகப்புரை வழங்கினார். நாட்டுப்புறக் கலைகள், கலைஞர்கள்மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்த அந்த உரை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமராஜ் உட்பட அரசு மற்றும் கல்வித் துறை சார்ந்த பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்த்துகலை, வாய்மொழி அரங்கு, ஆய்வரங்கு என்னும் பகுப்பில் மூன்று நாள் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. அன்று மாலை கொங்குப் பகுதியின் தொன்மையான கலை வடிவமான காத்தவராயன் உடுக்கடிக் கூத்தினை வெங்கமேடு ராஜு குழுவினர் நிகழ்த்தினர். தொடர்ந்து, பழம்பெரும் இசை நாடகக் கலைஞர்களில் ஒருவரான கலைமாமணி கரூர் கே. ஆர். அம்பிகா குழுவினரின் அரிச்சந்திரா இசை நாடகம் இரவு நடைபெற்றது. ராஜ நடிகையென ரசிகர்களால் போற்றப்படும் அம்பிகா ஆண் வேடங்கள் புனைவதில் வல்லவர். எழுபது வயதான அவர் இந்நாடகத்தில் சந்திரமதியாகத் தோன்றித் தன் ஆற்றலை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இரண்டாம் நாள் முற்பகல் தொடங்கிய வாய்மொழி அரங்கில் தங்கம் செல்வராஜ், பாலசுப்பிரமணியன் போன்றோர் வழங்கிய கொங்கு மண்டல வாய்மொழிக் கதைகள், கதை சொல்லும் மரபை உயிர்ப்பிக்கும் தன்மை கொண்டிருந்தன. ஆய்வரங்கில் 'பழங்கதையாடல்களில் தென்படும் சமூக வரலாறு', 'சடங்குகளும் சாதிய அடையாளங்களும்' என்னும் தலைப்புகளில் முறையே கொங்கு மண்டலத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பெருமாள் முருகனும் க. சீ. சிவக்குமாரும் பேசினர். பறவைகள், விலங்குகளைக் கொண்டு சொல்லப்படும் கதைகளில் மனிதர்களுக்கான குறியீடுகளாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கதைகள் கொங்குப் பகுதியில் நிறைய உள்ளன. ஆனால், அவை தொகுக்கப்பட்டு எழுத்து வடிவம் பெறாமல் சிதறிக்கிடக்கின்றன எனப் பெருமாள்முருகன் விவரித்தார்.

கொங்கு வேளாளர்களின் சடங்குகளை மையமாகக் கொண்டு அவற்றில் பங்குபெறும் பிற சாதி மக்களின் நிலை, வாழ்வுமுறை, அவர்களுக்கான இடம் போன்றவற்றை நகைச்சுவை கலந்த மொழியில் க. சீ. சிவக்குமார் முன்வைத்தார். பிற சாதியினரின் சடங்குமுறைகளை விரிவாகத் தொகுக்கவும் ஆராயவும் தேவையிருக்கிறது என்பது அவர் கட்டுரை உணர்த்திய செய்தி.

இரண்டாம் நாள் மாலை தொடங்கி, பின்னிரவுவரை நிகழ்த்து கலைகள் நடைபெற்றன. இன்று தொலைந்துபோய்விட்ட தாலாட்டுப் பாடல்களையும் ஒலிநாடாக்களில் கேட்கும் ஒப்பாரிப் பாடல்களையும் மிக இயல்பாகக் கிராமத்துப் பெண்கள் சிலர் பாடினர். கும்மிப் பாடல்களும் பாடப்பட்டன. குமாரபாளையம் சமர் பா கலைக்குழுவினர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர். அவர்களோடு இணைந்து கே. ஏ. குணசேகரன் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைச் சிறப்புறச் செய்தார். பின்னர் இசை நாடக மரபின் பிந்தைய தலைமுறை மரபைச் சேர்ந்த கலைச்செல்வம் கரூர் ஆர். டி. எஸ். நெடுமாறன் குழுவினரின் சித்திரவள்ளி கிராமிய இசை நாடகம் நடைபெற்றது. முழுமையும் பாடல்களாகவே அமைந்த இந்நாடகம் பார்வையாளர்களைப் பிணைத்துவைத்துக்கொண்டது.

கொங்குப் பகுதியின் மிகப் புகழ்பெற்ற கதைப்பாடலான அண்ணன்மார் கதையைப் பூளவாடி முத்து மீனாட்சி குழுவினர் உடுக்கடிக் கூத்தாக நிகழ்த்தினர். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத விரதம் பூண்டிருந்த பொன்னர், சங்கர் என்னும் பாத்திரங்களின் கதையை முத்து மீனாட்சி என்னும் பெண் கலைஞர் தன் வெண்கலக் குரலில் நான்கு மணிநேரத்திற்கும் மேலாகச் சரளமாகப் பாடி நிகழ்த்தினார். சமகால விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் எனக் கதையை அனாசயமாக நிகழ்த்திச் சென்ற விதம் பாராட்டைப் பெற்றது. உடுக்கு என்னும் இசைக்கருவி இத்தனை சக்தி வாய்ந்ததா என்னும் வியப்பும் உண்டாயிற்று. இக்கதையை நிகழ்த்துவதில் தேர்ந்த முத்து மீனாட்சி குழுவினரின் நிகழ்ச்சி இக்கலை விழாவின் உச்சமாக அமைந்தது.

மூன்றாம் நாள் ஆய்வரங்கில் 'பொன்னர் - சங்கர் கதையாடலும் நிகழ்த்துமுறையும்: ஒரு சமூகவியல் பார்வை', 'கொடுமணல் அகழ்வாய்வுகள்: வரலாறும் புனைவும்' என்னும் தலைப்புகளில் முறையே சின்னசாமியும் கல்வெட்டாய்வாளர் புலவர் செ. இராசுவும் உரையாற்றினர். எண்பதுகளின் தொடக்கத்தில் கொடுமணல் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட அனுபவம், மதுரையில் மாநாடு நடத்தியது, அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தது எனப் பலதரப்பட்ட தகவல்களைத் தன் பேச்சினூடாக வெளிப்படுத்தினார் இராசு.

படக்காட்சியுடன் கொடுமணல் அகழ்வாய்வுத் தகவல்களை விவரித்தார் அவர். தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்து வெற்றிகரமாக நடைபெற்ற கொடுமணல் ஆய்வில் சங்க காலத் தமிழர் வாணிகம் தொடர்பாகக் கிடைத்த செய்திகள் வரலாற்றுக்குப் பெரிதும் உதவுவன. யவனர்களின் கடவுள் உருவங்களுங்கூடச் சுடுமண் சிற்பங்களாக அங்கே கிடைத்தமையை அவர் விளக்கினார். சின்னசாமி, அண்ணன்மார் கதையை நாட்டுப்புறக் காப்பியம் எனத் தம் பேச்சில் குறிப்பிட்டார். மகாபாரதக் கதையுடனான ஒப்புமையை விளக்கினார். அவர் கருத்துகள் குறித்த விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றது. பார்வையாளர்களின் பங்களிப்போடு இவ்வாய்வரங்கு சிறப்பாக முடிந்தது.

நிகழ்வில் நடத்தப்பட்ட நத்தக்காடையூர் துரைசாமி குழுவினரின் தப்பாட்டம், காங்கயம் குட்டறை முத்துசாமி - வாய்க்கால் புதூர் சுப்பு குழுவினரின் சலங்கையாட்டம் ஆகியனவும் குறிப்பிடத்தகுந்தவை.

இறுதி நிகழ்வாக மூன்றாம் நாள் இரவு கூத்தம்பட்டித் திருமலை ராஜன்-பவானி அர்ஜுனன் குழுவினரின் மதுரை வீரன் நாடகம் நடைபெற்றது. தனித்துவமுடையது இந்நாடகம். மதுரை வீரன் கதையின் கொங்குப் பகுதியின் வாசிப்பு என்று சொல்லத்தக்க வகையில் இந்நாடகம் அமைந்தது. அருந்ததியர் சாதியின் தோற்ற வரலாறு இந்நாடகத்தில் இடம்பெறுவது முக்கியமானது. இச்சாதியினர் செருப்புத் தைக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தும் தோல் பை, கத்தி, உளி போன்ற கருவிகளை அக்கதைமாந்தர்களினூடாக வெளிப்படுத்துவது இயல்பு. ஆனால், அம்மக்கள் தம்மீது படிந்துள்ள இழிவான பிம்பங்களைத் தவிர்த்து நவீன வடிவங்களை ஏற்கும் விதமாக, கூர்மையான சமூக விமர்சனங்கள் அங்கத உணர்வோடு மதுரை வீரன் நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டன. முழுக்க முழுக்க அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர்களே இந்நாடகத்தை நடத்தினார்கள்.

கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கும் வகையில் நிறைவு விழா நடைபெற்றது. இம்மரபுக் கலை விழாவில் சுகுமாரன், யுவன் சந்திரசேகர், அம்ஷன் குமார், அறிவுமதி, மருது, கடற்கரய், தமிழ்மகன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மூன்று நாள் நிகழ்வுகளோடு முடிந்துவிடாமல் இம்முயற்சி பல்வேறு வகையில் தொடர வேண்டும் என மருத்துவர் வெ. ஜீவானந்தம் கூறியது அர்த்தமுள்ளதென அனைவரும் உணர்ந்தனர். அழிந்தும் நலிவடைந்தும் வரும் மரபுக் கலைகளையும் அவற்றை நிகழ்த்தும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய பண்பாட்டு நிகழ்வுகளை ஆதரிப்பது அவசியம் என்னும் எண்ணமும் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குக் காரணமான காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதியும் அவருக்குத் துணை நின்ற காலச்சுவடு அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சி. கதிர்வேல், இர. வெள்ளியங்கிரி, ஈரோடு ஸ்ரீராம் சிட்ஸ் சார்பாக ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட அண்ணாதுரை, ஜெயப் பிரகாஷ் ஆகியோரும் பாராட்டுக் குரியவர்கள்.

புகைப்படம்: பாரதி நிலவன்,
ஸ்டுடியோ 5, வெள்ளக்கோவில்

உள்ளடக்கம்