|
இந்நிகழ்ச்சியின் பெயரைப் பார்த்ததும் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எனத்
தொடங்கும் பாரி மகளிர் கவிதை நினைவுக்கு வருகின்றது.
கல்வித் துறைக்கு நினைத்து நினைத்து மகிழக்கூடிய ஒளிமயமான காலமோ இருள் சூழ்ந்த
காலமோ இதுவரையிலும் இருந்ததில்லை. எப்பொழுதும் கிரகணம் பிடித்ததுபோலத்தான்
இருக்கிறது எனச் சொல்லும் எஸ். எஸ். ராஜகோபாலன் (எஸ்எஸ்ஆர்) பதினெட்டு வயதிலேயே
ஆசிரியராகிவிட்டார். இருபத்தி நான்கு வயதில் தலைமை ஆசிரியர்.
இராமாயணம் முதல் இங்கர் சால்வரை அனைத்துவிதமான வாசிப்பு அனுபவங்களையும் தரக்கூடிய
எண்ணிக்கையில்லாத புத்தகங்கள் நிரம்பியது அந்த வீடு. நாளிதழ்களையும் விடாமல்
பொக்கிஷமாகச் சேர்த்துப் பாதுகாத்த தந்தை, தமிழ்வழிக் கல்விக்கு வித்திட்டவர்களில்
முதன்மையானவர். தந்தையுடன் சேர்ந்து பார்வையற்றோர் பட்டப்படிப்புப் பயில
உறுதுணையாய் நிற்கும் சகோதரி என இனிமையான சூழல் வாய்த்திருந்து எஸ்எஸ்ஆருக்கு.
இளம்வயதிலேயே ஆசிரியரானாலும் கிராமப்புறத்தில்தான் பணியாற்ற வேண்டுமென்ற முனைப்பில்
கிராமத்துப் பள்ளியன்றில் தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். முதல் தலைமுறையாகப்
படிக்கவந்த மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த காலகட்டத்தை மிகுந்த நெகிழ்வுடன்கூடிய
தருணமாகக் கருதும் இவர், கட்டணக் கல்விமுறை இருந்த அக்காலத்தில் கட்டணம் கட்டிப்
படிக்க வசதியில்லாமல் கற்கும் ஆசையோடும் எதிர்காலத்தை நோக்கிய கேள்விகளோடும் இருந்த
மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கிடைத்த பொறுப்பை ஓர் ஆசிரியராக
மதிப்புமிக்கதும் ஒப்பற்றதுமாகத்தான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
தன்னைவிட வயதில் மூத்தவர்களெல்லாம் தம் பிள்ளைகளைப் படிப்பிக்கும் தெய்வமென்று
எழுந்து வணங்கும்போது தோன்றிய வெட்கம்தான் மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில்
கொண்டு ஆசிரியராகத் தான் தொடர்ந்து செயல்படத் தூண்டுதலைத் தந்தது என்கிறார்.
மாணவர்களின் படிக்கும் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடப் பள்ளிசார்ந்த எந்த
விதிகளும் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்று சொல்லும் எஸ்எஸ்ஆர், நாம் செய்ய
வேண்டியதெல்லாம் எல்லாக் குழந்தைகளும் கற்பதற்குத் தகுதியானவர்கள் என்பதை அந்தக்
குழந்தைகளே உணரும்படி செய்வதுதான் என்று குறிப்பிடுகிறார்.
வயதடிப்படையில் தகுதியில்லை என்பது, இன்னொரு மொழிக்காரராக இருந்தால் சேர்க்கத்
தயங்குவது, ஒரு பாடம் சரியாக வராவிட்டால் திரும்பத் திரும்ப அதே வகுப்பில் போடுவது,
படிப்பைத் தவிரக் குழந்தைகளிடம் இருக்கும் வேறு எந்தத் திறமைகளையும் கண்டுகொள்ளாமல்
பாடத்தை மட்டுமே திணிப்பது, டியூசன் என்ற பெயரில் பணம் வசூலிப்பது என நமது கல்விச்
சூழலில் விதிகளின் பெயரில் ஆயிரம் குறைபாடுகள் உண்டு. இவற்றையெல்லாம் கடந்து
குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்த்தல், பிற துறைத் திறமைகளை ஊக்கு விப்பது போன்ற
செயல்பாடுகளை ஏனோ இன்னும் நமது பள்ளிச் சூழல் முழுமையாய் ஏற்கவில்லை என்ற
எஸ்எஸ்ஆரின் குரலில் ஏக்கம் வெளிப்பட்டது.
அரசு கல்விக்கென எத்தனை சிறப்புத் திட்டங்கள் தீட்டினாலும் இன்றும் கழிப்பறை
வசதிகூட இல்லாத பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. சமச்சீர் கல்வித் திட்டம் போன்று
எத்தனையோ திட்டங்கள் போட்டாலும் இதுதான் நிலை. தெருவிற்குத் தெரு மெட்ரிகுலேசன்
பள்ளிகள் இருக்கின்றன. கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. குழந்தைகளும் தங்களது பொதி
மூட்டைகளோடு பள்ளிக்குச் செல்கிறார்கள். பல ஆசிரியர்களும் தங்கள் கடமையை மறந்தவர்
களாகச் சொந்த நலனுக்காக அக்கறையாய்ச் செயல்பட்டு வருகிறார்கள் என்கிற எஸ்எஸ்ஆர்
கல்வி என்னும் அமைப்பில் தற்பொழுது இயங்கி வருகிறார்.
குழந்தைகள் படிக்க வேண்டும், அதற்குத் தடையாகக் கல்வித் துறை சார்ந்த எந்த விதி
இருந்தாலும் அது புறக்கணிக்கப்படுவதில் தவறில்லை. 'சுந்தர ராமசாமி வசந்திதேவியுடன்
உரையாடலை நிகழ்த்தியதுபோலப் பள்ளிக் கல்வி குறித்து என்னிடம் பேச வேண்டும் என்று
விருப்பம் தெரிவித்தார், அப்பொழுது எனக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்றேன்.
சுந்தர ராமசாமி நம்மிடையே இல்லாதபோது இனி அப்படியரு உரையாடல் நிகழப்போவதில்லை'
என்று ஆதங்கப்பட்ட எஸ்எஸ்ஆர் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த விரிவான
விவாதத்திற்குப் பதிலளித்தார். |