Google   www kalachuvadu.com

எதிர்வினை:
'தோழர்'களின் கடமையும் இதழியல் நெறியும்

நந்திகிராம் நிகழ்வுகள் தொடர்பான காலச்சுவடு டிசம்பர் 2007 தலையங்கம் வாசகர்களுக்கு நினைவிருக்கும். நந்திகிராம்: தொடரும் வன்முறை, மோடியும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் எனத் தலைப்பிடப்பட்ட அந்தத் தலையங்கத்திற்கு வாசகர்கள் விரிவான அளவில் எதிர்வினையாற்றியிருந்தனர். நந்திகிராமில் சென்ற ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையும் 2002இல் குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையும் மேற்கோள்காட்டி நரேந்திர மோடியையும் புத்ததேவ் பட்டாச்சார்யாவையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்த அந்தத் தலையங்கம் மார்க்சிஸ்ட் ஆதரவு வாசகர்களுக்குப் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்ததை அந்த எதிர்வினைகள் உணர்த்தின. 2002இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து குஜராத்தின் அப்பாவி இஸ்லாமியர்கள்மீது கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட, இந்துத்துவ பாசிஸ்ட் என ஜனநாயக சக்திகளால் வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சிவரும் மேற்கு வங்கப் 'பாட்டாளி வர்க்க' அரசின் முதலமைச்சரான 'தோழர்' புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் ஒப்பிட்டு எழுதப்படும் எந்தவொரு வாசகத்தையும் மார்க்சிஸ்ட் தோழர்களால் பதற்றமின்றி எதிர்கொள்ள முடியாதுதான்.

தோழர்களின் கோபத்திற்குப் பின்னாலுள்ள நியாயத்தையும் புறக்கணிக்க இயலாது. அதே டிசம்பர் இதழில் குஜராத் படுகொலை சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி தெஹல்கா வெளியிட்ட புலனாய்வுகளை ஆதாரமாகக்கொண்டு வெளியிடப்பட்டிருந்த கட்டுரையைப் பாராட்டி 'வாழ்த்திய' முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி. பட்டாச்சார்யாவும் மோடியும் ஒன்றா, சமமா? எப்படி மனம் வந்தது?' எனச் சரமாரியான கேள்விகளைத் தன் கடிதத்தில் எழுப்பினார். இந்தோனேசியாவைச் சேர்ந்த சலீம் குழுமத்தினரின் ரசாயனத் தொழிற்சாலைக்காக (தலையங்கத்தில் இந்த விஷயம் நிலம் கையகப்படுத்தப்பட்டது டாடா கார்த் தொழிற்சாலைக்காக எனத் தவறாக இடம்பெற்றுள்ளது) நிலம் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட மேற்குவங்க அரசின் முயற்சியில் குறுக்கிட்ட 'திரிணாமுல் காங்கிரசின் சில விவாசாயி'களுக்கும் தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 3000 மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்குமிடையே நடைபெற்ற மோதலாகத் தோழர்களால் சித்தரிக்கப்படும் நந்திகிராம் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களும் ஜனநாயகவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அம்பலப்படுத்தியுள்ள தகவல்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டுக் காலச்சுவடு தலையங்கத்திற்குத் தம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர் தோழர்கள்.

அதோடு மற்ற ஊடகங்களைப் போலவே காலச்சுவடும் திட்டமிட்டுத் தம் கட்சியை அவதூறு செய்வதாகவும் ஒரு தோற்றத்தை எதிர்வினைகள் மூலம் உருவாக்குகின்றனர். காழ்ப்புணர்ச்சியும் துவேஷமுமே அந்தத் தலையங்கத்தை எழுதியதற்கான காரணம் எனத் தம் எதிர்வினைகளில் குறிப்பிட்டுள்ளனர். வன் முறைச் சம்பவங்களைப் பற்றி எழுதிய ஊடகங்கள் அதற்கு 'முன்பும் பின்பும்' நடைபெற்றவை குறித்து ஏன் எதுவுமே எழுதவில்லை எனக் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியது அவசியம். 'இந்துத்துவ பாஸிஸ்ட்'டான மோடியின் தலைமையிலான திட்டமிட்ட வன்முறைகளை அந்த அரசாலோ இந்துத்துவ இயக்கங்களாலோ சில மணி நேரங்களுக்குக்கூட ஊடகங்களின் கண்களிலிருந்து மறைக்க முடியவில்லை. ஆனால், உயர்ந்தபட்ச ஜனநாயகம் பேசும் மார்க்சிஸ்ட்களின் 'நேரடி ஆட்சி' நடைபெற்றுவரும் மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மார்க்சிஸ்டுகளுக்கேகூடத் தெரியவில்லை. 3000க்கும் அதிகமான 'தோழர்'கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் 'அகதி'களாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தோழர்களின் முக்கால் வருட அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் நந்திகிராமை விவசாயிகளிடமிருந்து மீட்பதற்காகவுமே 'தோழர்' புத்ததேவின் காவல் துறையும் குண்டர்படையும் நந்திகிராமுக்குள் ஆயுதங்களுடன் நுழைய வேண்டியிருந்தது என்பதுதான் தோழர்களின் விளக்கங்களிலிருந்து நம்மால் அனுமானித்துக்கொள்ள முடிகிற சித்திரம். நந்திகிராம் துண்டிக்கப்பட்டிருந்தது, விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தது என்கிறது விவசாயிகளின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட மேற்கு வங்கக் காவல் துறை.

ஆனால், இது குறித்து நந்திகிராம் நிகழ்வுகளுக்கு முன்பாகவோ பின்பாகவோ ஏதாவது விளக்கமளித்திருக்கிறதா இடது முன்னணி அரசு? குறைந்தபட்சம் தன் தோழமைக் கட்சிகளுடனாவது விவாதித்திருக்கிறதா? அப்படி விவாதித்திருந்தால் 'மீட்பு நடவடிக்கை' ஏன் ரகசியமானதாக இருந்தது? ஊடகங்களோ மனித உரிமை அமைப்புகளோ ஏன் நந்திகிராமுக்குள் அனுமதிக்கப்படவில்லை? இந்திய அரசின் ஆளுகையிலுள்ள ஒரு பகுதியை மாவோயிஸ்ட்டுகள் அல்லது திரிணாமுல் கட்சியினர் 'ஆக்கிரமித்திருந்தார்கள்' என்பது உண்மையானால் அது குறித்த செய்திகளை ஏன் மைய அரசுக்கோ மக்களுக்கோ தரவில்லை? சட்டரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு ஏன் குண்டர்களின் துணையோடு ரகசிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்? மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சட்டபூர்வமான அல்லது தார்மீக நியாயங்களைக் கொண்டவை என்றால் தோழமைக் கட்சியினரும் பழம்பெரும் மார்க்சிஸ்ட் தலைவர்களான அசோக் மேத்தா போன்றவர்களும் வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற மனித உரிமை ஆர்வலர்களும் மார்க்சிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளை ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்?

மேற்கு வங்க ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தி அரசுக்குத் தம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தாரே. நந்திகிராம் படுகொலைகளுக்குத் தம் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடிவரும் நம் காலத்தில் குறிப்பிடத்தக்க காந்தியவாதிகளில் ஒருவரான மேதாபட்கர் வங்கத்தின் மூத்த பெண் எழுத்தாளர் மஹாசுவேதா தேவி மற்றும் அருந்ததிராய் போன்ற ஆளுமைகளின் விமர்சனங்களுக்குத் தோழர்களின் பதில் என்ன? இவர்கள் அனைவரையும் மாவேயிஸ்ட்டு என்று முத்திரை குத்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடிந்தது மார்க்சிஸ்ட் கட்சிக்கு

குஜராத் படுகொலைகள் குறித்த தகவல்கள் அவற்றுக்கான முழுமையான பின்னணியோடு ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. விசாரணைக் கமிஷன்களும் அமைக்கப்பட்டன. பெயரளவில் என்றாலும்கூட விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், நந்திகிராம் வன்முறைகள் குறித்த விசாரணைகள் எந்த மட்டத்தில் நடைபெற்றுவருகின்றன எனத் 'தோழர்'கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அது குறித்த விவாதங்களை எழுப்புவதற்கு மார்க்சிஸ்ட்கள் ஏன் அவ்வளவு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்? தம் தயவை நம்பி இருக்கும் சிறுபான்மைக் காங்கிரஸ் அரசை இடதுசாரிகள் மிரட்டிப் பணியவைத்திருக்கிறார்கள் என எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் 'தோழர்'களின் பதில் என்ன? என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.

ஊடகங்களோ மனித உரிமை அமைப்புகளோ சமூகவியலாளர்களோ அறிவுஜீவிகளோ நந்திகிராமுக்குள் செல்ல முடியாத நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொலைபேசி வழியாக நந்திகிராம் விவசாயிகள் நிலவுரிமைப் பாதுகாப்புக் குழுவான பியுபிசியைச் சேர்ந்த தொண்டர்களிடம் பேசி அறிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்திய புரட்சிகர ஜனநாயக முன்னணி என்னும் மனித உரிமை அமைப்பு. 2007 நவம்பர் 12ஆம் தேதி அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நந்திகிராம் வன்முறைகளுக்குப் பின்னணியில் இயங்கிய சதித் திட்டங்கள் குறித்து ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

சுமார் 150 பேர் கொல்லப்பட்டதும் 2000 பேர்வரை காணாமல் போக்கடிக்கப்பட்டதுமான இவ்வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை எனக் கூறுகிறது அந்த அறிக்கை. மேற்கு வங்கத்தையும் பீகாரையும் சேர்ந்த 1500 மார்க்சிஸ்ட்கள் சுமார் 550 அப்பாவி கிராமத்தினரைக் கடத்திச் சென்று கெசூரி என்னும் ஒரு கிராமத்தில் சிறைவைத்ததாகவும் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்துகிறது அந்த அறிக்கை. மார்க்சிஸ்ட்டுகளுக்கு, 2007 மார்ச் 14 அன்று நந்திகிராம் விவசாயிகள்மீது தாக்குதல் தொடுப்பதற்கான ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதும் அந்தக் கிராமத்தில்தான் எனக் குற்றம் சுமத்தும் அறிக்கை, அதிரவைக்கும் மேலும் பல தகவல்களைத் தந்திருக்கிறது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறைப்பதில் முக்கியப் பங்கு வகித்த கோர்பேட்டாவைச் சேர்ந்த தபன் கோஷ் மற்றும் சுக்குர் அலி ஆகிய இரண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர்த் தலைவர்களை அவர்கள் படுகாயமுற்ற 4 பெண்களை வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்ல முயன்றபோது, பியுபிசி தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்கள். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சிபிஅய்யின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள தலைமறைவுக் குற்றவாளிகள் அவர்கள். மேதா பட்கர் உள்ளிட்ட சமூக நல ஆர்வலர்களையும் மார்ச் 8ஆம் தேதி நந்திகிராம் சென்ற மனித உரிமை அமைப்பான ஏபிடிஆர் உறுப்பினர்களையும் தடுத்துத் தாக்குதல் தொடுத்தனர் மார்க்சிஸ்ட்டுகள். அதற்குத் தலைமை வகித்து வழி நடத்தியது ஹால்டியாவின் தற்போதைய மார்க்சிஸ்ட் எம்.பி. லட்சுமண் சேத் எனபவரும் அவரது வலதுகரமாக விளங்கும் உள்ளூர் மார்க்சிஸட் தலைவர் அசோக் பட்நாயக்கும்தான் என்கிறது அந்த அறிக்கை. அசோக் பட்நாயக் அந்தப் பகுதியின் பிரபலமான நில மாபியா. அனைத்துத் தாக்குதல்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் மேலிடத்தால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை எனக் குற்றம்சாட்டும் அந்த அறிக்கை மார்க்சிஸ்ட் கட்சியின் வேறு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட அந்தத் தாக்குதல் சதியில் நேரடியாகப் பங்குபெற்றவர்கள் எனச் சொல்கிறது. தாரிட் தாப்பர் (பாரக்பூர்), அமிதாப் நந்தி (டம்டம்), சுஷாந்த் கோஷ் (மிட்னாப்பூர்) ஆகிய மூவரும்தான் அவர்கள்.

வன்முறையாளர்களுக்குத் தேவையான ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகளையும் எஸ். எல். ஆர். 100 ரகத் துப்பாக்கிகளையும் டிரக்குகள் முதலான வாகனங்களையும் அவர்கள்தான் வன்முறையாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர் எனக் குற்றம் சுமத்துகிறது பியுபிசி. மேற்கண்ட நான்கு எம்.பி.க்களும் படுகொலைகளிலும் பாலியல் வன்முறைகளிலும் நேரடியாகப் பங்கெடுத்தவர்கள் என்றும் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலத் தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் உதவினார் எனவும் அந்த அறிக்கை மேலும் சொல்கிறது.

பல ஆங்கில ஊடகங்கள் இவற்றைப் பதிவுசெய்திருக்கின்றன. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஊடகங்களின் வாயிலாகவும் இணைய தளங்களிலும் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் புத்ததேவ் அரசின் மீது சுமத்தியிருக்கும் ஒரு தருணத்தில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்ட எந்தவொரு ஊடகவியலாளரும் அதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், அது குறித்த கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியாது. தம் தலைவர்களின் விளக்கங்களை அப்படியே ஏற்றுப் பிரச்சாரம் செய்வது சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு (தோழர்களுக்கு) வேண்டுமானால் 'கடமை'யாக இருக்கலாம். ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணி அது அல்ல. மோடியின் தலைமையிலான இந்துத்துவ வெறியர்களின் படுகொலைகளைக் கண்டித்ததற்கு அடிப்படையான அதே தார்மீகக் கடமைதான் காலச்சுவடை நந்திகிராம் தொடர்பான டிசம்பர் இதழ்த் தலையங்கத்தையும் எழுதத் தூண்டியது.

- ஆசிரியர் குழு

உள்ளடக்கம்