|
செம்மொழித் தமிழாய்வு மையம், திராவிட அரசியல் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்திற்கு
வரப்போகிறது. இதனால் உண்டாகும் இழப்புகள், இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், அரசினர் கீழ்த்திசைச்
சுவடிகள் நிறுவனம் போன்ற உதாரணங்கள் மூலம் படிப்பவர்கட்கும் புரியவைக்கப்பட்டுள்ளன.
தமிழ் தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் பதவிமோகமும் சுயமுனைப்பும் கொண்டவர்களாலான
ஆக்கிரமிப்பைப் பார்க்கலாம். பேராசிரியர்களான வ. அய். சுப்பிரமணியம், ச. வே.
சுப்பிரமணியம், முத்துச் சண்முகம் போன்றவர்கள் தமிழ் வளர்தலுக்கான தீர்க்க
தரிசனத்தைக் கொண்டிருந்தார்கள். இன்றுள்ள தமிழ்த் துறையினரிடம் இத்தகு நோக்கைக்
காண்பது முடியாத ஒன்று. சாதியும் மதப் பார்வையும் எப்படி அரசியல்வாதிகளைத் தங்கள்
வலைக்குள் சிக்க வைக்கலாம் என்பதில்தான் நிறுவன வேலைநாள்களில் இவர்கள்
எண்ணுகின்றனர்.
இக்கால இலக்கியங்களைத் தெரிந்துகொள்வதில் நாட்டமில்லாதது மாதிரியே முந்தைய
இலக்கியங்களிலும் பரிச்சய மற்றவர்களாகத் தங்களுக்குள் பகைமை பாராட்டி, ஒருவர் காலை
ஒருவர் வாரிவிடுவதிலும் குறியாக உள்ளபோது எப்படித் தமிழின் பொது வளர்ச்சியில்
நாட்டம்கொள்வார்கள் நிறுவனங்களில் வேலைசெய்யும் தமிழ்ப் பணியாளர்கள்?
செம்மொழி ஆய்வு மையம், தமிழ்ப் பணியாளர்கட்கு வருமானத்தைக் கொண்டுதரும் பிற
நிறுவனங்களாக மாறாமலிருக்க வேண்டும். மிக முக்கியப் பொறுப்பாளர்கள் சாதி, மத,
அரசியல் நோக்கின்றி நியமிக்கப்பட வேண்டும்.
நா. சிவசுப்பிரமணியன்
பாளையங்கோட்டை
செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் தலையங்கம் சொன்ன செய்திகள் முற்றிலும்
ஏற்றுக்கொள்ளத்தக்கவை. தமிழ் மொழியைக் காப்பாற்ற அரசை நினைவுபடுத்தத் தமிழர்களே
போராட வேண்டிய நிலை வேறு எந்த மாநில மொழிக்கும் நேர்ந்ததில்லை. செம்மொழி ஆய்வு
மையமாவது தன் கடமையில் எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இயங்க வேண்டும். இது
முடிந்தால் தமிழுக்கு நல்லது.
அ. ரா. வலம்புரி நாகராஜன்
ஈரோடு
எதிர்வினையில் 'கனிமொழியின் பாராளுமன்ற முதல் உரை' குறித்துச் சுப. உதயகுமார்
'கிட்டப் பார்வையோடு கனிமொழியின் பாராளுமன்ற முதல் உரை அமைந்தது துரதிருஷ்டமானது'
என ஆதங்கப்பட்டு எழுதியுள்ளது வியப்பைத் தருகிறது.
கனிமொழி யார்? திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர். திராவிட
முன்னேற்றக் கழகம் எக்கட்சி? மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியின் முக்கியமான உறுப்புக் கட்சி. காங்கிரசை அடுத்து அதிக மத்திய
அமைச்சர்களைக் கொண்ட மாநிலக் கட்சி. மத்திய அமைச்சரவையின் கருத்தைத்தான் உறுப்புக்
கட்சியான தி.மு.க. பிரதிபலிக்கும் என்பது இயல்பானதே.
அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பாடுபட்டாவது அமல்படுத்தியே தீருவது
என்பதே மத்திய அரசின் முடிவு. எனின் இந்த ஒப்பந்தத் தின் தீய விளைவுகளைப் பற்றிக்
கூட்டணிக் கட்சிகள் பேசுவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? புஷ்ஷ§ம் அவரது
கூட்டமும் பகீரதப் பிரயத்தனம் செய்தும் இன்னமும் இந்திய - அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாததற்குக் காரணம் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே என்பதை
யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அரசியலுக்காக மட்டுமே இந்த ஒப்பந்தத்தை
எதிர்க்கும் பாரதீய ஐனதா கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதே உண்மை. ஆளும்
கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தால் அமைச்சரவையிலிருந்து
விலகி வெளியேவர வேண்டியதுதான். அதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை என்பதே உண்மை.
சேகரன்
பெரணமல்லூர்
கனிமொழி அவர்கள் தனது முதல் உரையை ஆற்ற முற்பட்டிருந்தது இங்கிலாந்து
பாராளுமன்றத்திலோ அமெரிக்கப் பாராளுமன்றத்திலோ அல்லாது இந்தியப்
பாராளுமன்றத்தில்தானா எனத் தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்ட பிறகு
பேசியிருக்க வேண்டும். உரிமையுள்ள தருணத்தையும் உரிமையைத் தட்டிக்கழிக்கும்
விதத்துக் குள்ளாக்கியிருப்பது தனது உரிமையையும் தனது தாய்மொழியின் மாண்பையும்
காக்கக் கிட்டிய நல்ல வாய்ப்பைத் தவறவிட்ட கனிமொழியின் இச்செயல்
கண்டனத்துக்குரியதாகும்.
பஷீரின் 'ஜென்ம தினம்' சிறுகதை வெளியான காலக் குறிப்பைப் பதிவு செய்யாமல்
வெளியிட்டிருப்பதை ஒரு குறையாகக் கருத வேண்டியுள்ளது.
பா. செல்வவிநாயகம்
சென்னை
பூச்சிக்கொல்லி நச்சுகளின் தீங்குகளை முன்வைத்துத் தார்மீகப் பொறுப்புடனும்
அக்கறையுடனும் எழுதப்பட்டுள்ளது 'ஒலியற்ற வசந்தம்.' கட்டுரையாளரை வெறும் காட்டுயிர்
ஆர்வலராக வரையறுத்துவைத்திருந்த என் நிலைப்பாட்டைத் தகர்த்துவிட்டது இக்கட்டுரை.
பிரசுரமாகி அரை நூற்றாண்டை நெருங்கிவிட்ட ரேச்சல் கார்சனின் புத்தகம் நமது
சூழலுக்கு வெகுதாமதமாக அறி முகமாவது வேதியியல் மற்றும் பூச்சிக்கொல்லி நச்சுகளால்
உண்டாகும் தீயவிளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை நாம் இன்னும் எட்டவில்லை என்பதையும்
இவ்விஷயத்தில் நமது பின்தங்கிய நிலையையுமே காட்டுகிறது.
தியடோர் பாஸ்கரன் தனது கட்டுரையில் குறிப்பிடும் ஊட்டி - அவலாஞ்சி சாலையில் தினமும்
பலமுறை பயணிக்கக்கூடியவன் நான். குளிர் சூழ்ந்த அதிகாலை வேளைகளில் போரட் 10 ஜி
பூச்சிக்கொல்லியின் காட்டமான நெடி காற்றில் நிலைத்திருக்கும். பூச்சிக் கொல்லி
மருந்துக்கிடங்கில் நுழைந்த அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை.
எண்டோ சல்பானின் தீயவிளைவுகளை உணர்ந்த கேரள அரசு அதைத் தடைசெய்து பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்துவருகிறது. தமிழக வேளாண்மைத் துறையின்
பரிந்துரையின்படி இங்குள்ள விவசாயிகள் இம்மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தி
வருகிறார்கள். நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஹேப்டோ குளோர் பூச்சிக் கொல்லியையும்
நிலத்தடி நீரை மாசு படுத்தக்கூடியதும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியதுமான குளோரி
பைரிபாஸ் பூச்சிக்கொல்லியையும் வேளாண்மைத் துறையும் வேளாண்மைப் பல்கலைக்கழகமும்
எந்தத் தயக்கமுமின்றி இன்றும் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன.
இப்பூச்சிக்கொல்லிகளின் அழியாத் தன்மையே கோலா மென்பானங்களில் இவற்றின் நச்சுக்
கூறுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க ஏதுவாக இருந்தது. நம்நாட்டில்
பயன்படுத்தப்படும் பெரும்பாலான பூச்சிக்கொல்லிகள் வளர்ந்த நாடுகளில்
தடைசெய்யப்பட்டவை ஆகும். இம் மருந்துகளின் தீய விளைவுகளைக் குறித்து நமது வேளாண்மை
விஞ்ஞானிகளும் அரசாங்கமும் அறியாதவர்கள் அல்லர்.
நிர்மால்யா
ஊட்டி
தியடோர் பாஸ்கரனின் கட்டுரை, அனுதினமும் நஞ்சாக மாறிவரும் நமது நிலம் குறித்த
செய்திகளை அறிவிக்கின்றது. எதிர்காலத் தலைமுறைக்கு நாம் எதையும்
மிச்சம்வைக்கப்போவதில்லை. பறவைகளும் மரங்களும் இல்லாத உலகைக் கொஞ்ச நேரம் கண்களை
மூடிக் கற்பனைசெய்து பார்க்கும்போது மிகுந்த அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க
இயலவில்லை.
சங்கீதா ஸ்ரீராம் கூறுகின்ற புள்ளி விவரங்கள், அதிர்ச்சியளிக்கக்கூடும். ஆனால்,
இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார், எஸ். என். நாகராஜன் போன்றோரின் ஆய்வுகளையும் அறிவுறுத்தல்களையும்
எண்ணிப் பார்க்க வேண்டும். நமது கண் முன்னே கேழ்வரகு, கம்பு, தினை முதலான
பாரம்பரியப் பயிர்கள் மறைந்துகொண்டிருக்கின்றன.
கே. ரவிச்சந்திரன்
திருச்சி
பூச்சிக்கொல்லி மருந்து 1950லிருந்து வேளாண்மைக்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு
அதன் பாதிப்பால் ஈரலைப் பாதித்து மஞ்சள் காமாலை ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது.
காய்கறித் தோட்டம், தேயிலைத் தோட்டம் என எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படும்
பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சிகளுக்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும்
ஆபத்து ஏற்படுத்துகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துத் தொழில் மூலம் 5,000 கோடி
புரள்கிறது என்பதைப் படித்தபோது, மனம் பதைபதைத்தது. இது பற்றிய விழிப்புணர்வு
ஏற்படவில்லை. ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். கலாச்சாரச்
சீரழிவான சீரியல்கள் அதன்மூலம் விளம்பரங்கள் அதன் மூலம் வருமானம் என்ற நோக்கில்
செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளோ அடுத்த தேர்தல், பதவிக்கு வருவது பற்றிச்
சிந்திக்கும்போது, இது பற்றிச் சிந்திப்பதற்கு நேரமேது. கட்டுரையைப் படித்தபோது
ஒவ்வொரு தலை முறையையும் பாதிப்பது பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. பூச்சிக்கொல்லி
மருந்தின் பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி? அரசு செயல்பட்டு அமெரிக்கா போல்
தடைசெய்ய வேண்டும்.
ஈ. சிதம்பரம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பஷீர் அவர்களின் நூற்றாண்டு விழாவின்
சிறப்புப் பகுதியாகச் சில பக்கங்களை அந்த உன்னதப் படைப்பாளிக்குக் காலச்சுவடு
வழங்கி, பெருமைப்படுத்திக் கௌரவித்துள்ளது. அவரது படைப்பு எப்போது படித்தாலும்
புதிதாகவே இருக்கும் கேரள முஸ்லிம் மக்களின் வாழ்க்கையைக் கொண்டு ஒட்டுமொத்த ஏழை,
எளியவர்களின் பிரச்சினையைச் சொன்னவர். அவை மானுடச் சங்கடங்களில் உள்ளோட்டமுடையவை.
எந்த விதப் பாசாங்குமின்றி மிகமிக எளிமையாகவே எழுதிய படைப்பாளி பஷீர். ஜெயமோகன்
சொல்வதைப் போல வாழும்போதே தொன்மமாக விளங்கிய படைப்பாளி அவர்.
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
கோவை
பஷீர் நம் காலத்து எழுத்து நாயகர். அண்டை மாநிலம் என்றெல்லாம் நினைக்கத் தோன்றாமல்
தமிழுக்கு மிக நெருக்கமாகிவிட்டவர். எளிய மக்களின் வாழ்வை எளிய மொழியில்
இலக்கியமாக்கிய பெருமைக்குரியவர். அடித்தட்டு மலையாள முஸ்லிம் மக்களின் இன்ப
துன்பங்கள், கனவுகள், கவலைகள், ஆசைகள், பெருமூச்சுகள் அவர்களின் சொந்த மொழியில்
அலங்காரங்களற்றுக் கலைப்படைப்பாகின்றன பஷீரின் கைகளில். மலையாள முஸ்லிம் வாழ்க்கையை
எழுதியிருக்கலாம். அரபி மலையாளத்தில் எழுதியிருக்கலாம். இலக்கண சுத்தமில்லாத
மொழியாய் இருக்கலாம். இந்த மேலாடைகளையெல்லாம் மெல்ல விலக்கிவிட்டால் பளிங்குபோல்
நமக்குப் புலப்படுவது மானிட வாழ்வு! அதன் ஆதார சுருதிகளையல்லவா பஷீர்
மீட்டிவிடுகிறார். தத்துவ நெருடல்கள் இல்லாமல், ஆனால், மனிதம் என்னும் இடையறாப்
பயணத்தின் தொடர்ச்சியாய் உயிர்க்கும்போது வாழ்வியல் தத்துவமாகி இழையோடுவது தவிர்க்க
இயலாதது. நெகிழ்ச்சியும் இறுக்கமும் இணைந்த, இனிப்பும் கசப்பும் கலந்த, சிரிப்பும்
அழுகையும் கைகோத்த, நையாண்டியும் குத்தலும் சேர்ந்ததுதானே வாழ்வு! இதை பஷீர்
சொல்லில் குழைத்துத் தரும்போது என்னமாய் வசீகரிக்கிறது. வாழ்வதற்கான அர்த்தம்
எல்லோருக்கும் புரிகிறதா என்ன? இந்த அர்த்தத்தைத் தேடித்தானே இலக்கியம், தத்துவம்,
வரலாறு எல்லாம் ஓயாது பயணிக்கின்றன. பஷீரின் பயணம் நம்மைப் போன்ற
எளியவர்களுக்கானது. இலக்கிய உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம்
காட்டுகிறது. அவரது நூற்றாண்டு நம்மை வழி நடத்தட்டும்.
பெருமாள்முருகன் கவிதைகள் வெகு இயல்பாக, எளிய மொழியில், ஆனால் வலுவான கலை
அம்சத்தோடு விளங்குகின்றன. குழந்தைகள் இந்த உலகத்தின் சொர்க்கங்கள். அந்தப்
பிஞ்சுப் பூக்கள் வண்ண நட்சத்திரங்களாகச் சூழலை அழகுபடுத்துகின்றன. அந்தச்
சின்னஞ்சிறு வாய்த் திறப்புக்காகப் பிரபஞ்சமே கைகுவித்துக் காத்திருப்பது அருமை.
இரவீந்திர பாரதி
அரூர்
ரவிக்குமாரின் "பிறவழிப் பயணம்" கட்டுரை குறித்த என் கடிதம் பிரசுரமாகி இருந்தது.
அதனைப் படித்த கல்வியாளர் முனைவர் எஸ். எஸ். இராஜகோபாலன் அவர்கள் செயல்வழிக் கற்றல்
குறித்து முனைவர் வசந்திதேவியுடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அத்திட்டம்
குறித்த உண்மையான நிலையைத் தெரிவிக்குமாறும் என்னைக் கேட்டிருந்தார்கள். இது
குறித்துப் பென்னகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக்குழு மூலம்
பெற்றோர்களை அழைத்து அவர்கள் முன் மாணவர்களின் செயல்வழிக் கற்றல் குறித்த
மதிப்பீட்டினைத் தொகுத்து அதனை அன்னாருக்கு அனுப்பவுள்ளேன். இதனை இங்கு விரிவாகக்
குறிப்பிடக் காரணம் கல்வித் துறையின்பால் காலச்சுவடின் ஈர்ப்பினையும் சமூகப்
பிரச்சினைகளில் அதன் பணியும் போற்றுதலுக்குரியது என்பதனை ஒளிவு மறைவின்றி
வெளிப்படுத்த விழையும் நன்றி கலந்த உயர்நோக்கந்தான்!
பேநசீர் குறித்த கட்டுரையில், அதிகாரத்திற்கு வந்ததும் தாங்கள் "பெண்மை"க் குணம்
உடையவர்கள் அல்ல, இரும்புக்கரத்தவர்களே என நிறுவுவதுதான் அவர்தம் பணியாக உள்ளது
என்ற வரிகள், நேற்று, இன்று நிகழ்வினைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது உண்மைதான்
என்பதனைப் பறை சாற்றுகின்றன.
கா. இர. குப்புதாசு
செஞ்சி
"பசுமைப் புரட்சியின் கதை" இந்திய விவசாயிகளின் ஆதித் துயரத்தை மிக ஆழமாக
விளக்கியிருந்தது.
பசுமைப் புரட்சி என்றாலே ஒரு செழிப்பான விவசாய உற்பத்தி முறைதான் அது என
நம்பிக்கொண்டிருக்கும் நம் மக்களில் எத்தனை பேருக்கு, அதன் பின்னணியில் உள்ள வலி
மிகுந்த கொடூரம் தெரியும்? அன்றைய மத்திய விவசாய மந்திரி சி. சுப்பிரமணியம், எம்.
எஸ். சுவாமிநாதன் போன்ற நமது நாட்டு விஞ்ஞானிகளும், நார்மன் போர்லாக் போன்ற
அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒத்துழைப்போடு மிகவும் வலுக் கட்டாயமாக - விவசாயிகளை
நிர்ப்பந்தித்து - அமல்படுத்திய ஒரு செயல்பாடுதான் "பசுமைப் புரட்சி".
அன்றைக்கிருந்த உணவுப் பஞ்சத்தின் காரணமாக, இவற்றின் கொடூரம் படித்தவர்களுக்கே
தெரியவில்லை எனும்போது, பாமரர்களைப் பற்றி என்ன சொல்ல!
ஆங்கிலேயர்கள்தான் இந்த நிகழ்வின் மூலம் என நிறுவியிருக்கிறார் சங்கீதா. இந்த
நாட்டை, நாட்டின் ஆன்மாவை அவர்கள் இதுபோன்ற வழிமுறைகளின் மூலமே
நாசப்படுத்தினார்கள். அவர்களுக்கு நாம் அடிமையானோம் என்பதன் உண்மையான பொருள்,
அவர்கள் இந்நாட்டின் நிலவளம், நீர்வளம், உற்பத்தி முறைகள் போன்றவற்றைத் தங்கள்
இஷ்டம்போலச் சுரண்டினார்கள் என்பதுதான். அரசியல் உரிமைகள் இழப்பு என்பதெல்லாம்
இதற்குப் பின்னால்தான்! 1957ஆம் வருடம் நடைபெற்ற 'சிப்பாய்க் கலகம்' எனச்
சொல்லப்படும் முதல் சுதந்திரப்போருக்குக் காரணமான பல நிகழ்வுகளில், விவசாயிகளைப்
பிரிட்டிஷார் நசுக்கிப் பிழிந்ததும் முக்கியமான காரணமாகும். காலங்காலமாக
நடைபெற்றுவந்த மரபான விவசாய முறைகளை ஆங்கில ஆட்சியாளர்கள் முற்றிலும் சீரழித்தனர்.
பருத்தி பற்றியும் மார்க்ஸ் அவர்களின்
Articles on India என்ற
நூலில் இருந்து டால்மிஸ் கால்டன் இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்.
"1700,1721ஆம் ஆண்டுகளில் உடைக்காகவோ வீட்டு உபயோகத்திற்காகவோ சாயம் தோய்த்த
காலிக்கோ துணிவகைகளையும் பருத்தி நூலால் ஆன அச்சிட்ட சில துணி வகைகளையும்
பயன்படுத்த இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது. அது மட்டுமல்ல, இந்தியா, சீனா
போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட துணிவகைகளை அணிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.
இதற்கு அபராதம் 200 பவுன்வரை இருந்தது." தங்களது சொந்த நாட்டிலும் இவர்கள் இது
போன்ற கொடுமையான சட்டங்களை அமல்படுத்தினார்கள் எனில், இவர்கள் 'வந்த' நாட்டில்
எத்தகைய அராஜகம் புரிந்திருப்பார்கள் என யூகிக்க முடிகிறதா?
டால்மிஸ் கால்டன் மேலும் கூறுவதைப் பார்க்கலாம். "நிலத்தின் மீதிருந்த இவ்வாறான
நெருக்கடிகள் அதிகமானதால் மக்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல்போனது.
வழக்கமான, பழமையான கருவிகளைக் கொண்டு தீவிர சாகுபடியை அவர்களால் மேற்கொள்ள
முடியவில்லை. நிலவரி அவர்களைக் கசக்கிப் பிழிந்தது.
வங்காளத்தில் 1764-65ஆம் ஆண்டுகளில் 8,11,000 பவுனாக மட்டும் இருந்த நிலவருவாய்,
திவானி உரிமையை கம்பெனி பெற்ற முதல் வருடத்திலேயே 1765-66இல் 17,40,000 பவுனாக
உயர்ந்தது."
எதைப் பயிரிட வேண்டும், எதைப் பயிரிடக் கூடாது என்பது மட்டுமில்லாமல் இது போன்று
இந்திய விவசாயிகளின் வாழ்க்கை முறையையே பிரிட்டிஷ் அரசு நிர்மூலமாக்கியது. இதன்
நீண்ட பின்னணியில்தான் இன்றைய பசுமைப் புரட்சியையும் பார்க்க வேண்டும்.
கே. எஸ். முகம்மத் ஷ§ஐப்
காயல்பட்டினம்
அபத்தம் என்னும் தலைப்பில் அச்சுப்பிழை பற்றிய தங்கள் கருத்தைக் கண்டேன். பிப்ரவரி
08 இதழில் வெளியிடப்பட்ட என் கடிதத்திலும் அப்படி ஓர் அச்சுப்பிழை. ஆண்டு '1974'
என்பதாக இருக்க வேண்டியது '1947' ஆகி இருக்கிறது. 1947இல் ஹரிஜன நலத்துறை என்று
ஒன்று இருந்ததே இல்லை.
எல். சங்கமேஸ்வரன்
திருமழபாடி
|