Google   www kalachuvadu.com

சிற்றிதழ் இயக்கம்:
தூக்க நினைத்த கோவர்த்தன கிரி
பழ. அதியமான்

இதழியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் சில முயற்சிகள் தமிழ் இலக்கிய உலகில் 1960, 70களில் தொடக்கம் பெற்றன. வ.ரா. நடத்திய மணிக்கொடியில் பணியாற்றியவரும் இரண்டாம் கட்டத்தில் அதை நடத்தியவருமான பி.எஸ். ராமையா இத்தகைய ஆவண முயற்சியைத் தொடங்கிவைத்தார். அவரது ஆவணம், மணிக்கொடி காலம். வரலாற்றின் இழையும் படைப்பின் ருசியும் கொண்ட அந்நூலின் வெற்றியைத் தொடர்ந்து சரஸ்வதி, தீபம் ஆகியவற்றின் வரலாறுகளை, படைப்பாளர் என்ற முறையில் அவ்விதழ்களோடு தொடர்புகொண்டிருந்த வல்லிக்கண்ணன் எழுதினார். நவீனத் தமிழில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பதிவுசெய்வது, அதன் தொடர்ச்சியைத் தக்கவைப்பது, அதன் ஊடாகச் சில விருப்பங்களை நிறைவுசெய்துகொள்வது போன்ற நோக்கங்கள் இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டன.

இந்த முன்னணி ஆவணப்படுத்தலுக்குப் பின் நின்ற இதழியல் சக்தியான நா. பார்த்தசாரதி கருதியதுபோல நவீனத் தமிழின் வரலாறு, இக்குறிப்பிட்ட மூன்று இதழ்களின் வரலாற்றோடு முடிந்துவிடாது. எதிரெதிரான பலபோக்குகளைக் கொண்ட பல இதழ்களின் வரலாறுகள் தொகுக்கப்பட்டால்தான் அது ஒருவாறு திருப்தியைத் தர இயலும். இக்குறை பலராலும் நன்கு உணரப்பட்டது. இதற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர் 90களின் பின்பகுதியில் மற்றொரு முயற்சி தொடர்ந்தது. 1880களில் தொடங்கி 1990வரையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிவந்தவற்றுள் தேர்வுசெய்யப்பட்ட 107 தமிழ் இதழ்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகள் எழுதுவதாக அம்முயற்சி அமைந்தது. 10 தொகுதிகள் திட்டமிடப்பட்டு அதில் 8 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. பேராசிரியர் மா.ரா. அரசுவின் கடும் உழைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவியுடன் இம்முயற்சி நடைபெற்றுவருகிறது.

இதழ்களின் வரலாற்றுப் பயனை உணர்ந்திராத தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்ட சில நூலகங்கள், சில தனிமனிதர்களின் சேகரிப்பை நம்பியே இந்த இதழியல் ஆவணப் பணி நடைபெற வேண்டியுள்ளது. கிடைக்கும் இதழ்கள், எழுதுபவருக்குக் குறிப்பிட்ட இதழைப் பற்றி இருக்கும் முன் எண்ணம், இதழியல் அறிவு முதலிய கவலைதரும் அம்சங்கள் நிறைந்த புலமைச் சூழலில் தற்சார்பு சார்ந்தவையாகவே இந்த அறிமுகக் குறிப்புகள் பெரும்பான்மை இருக்க முடியும். அதேபோல மணிக்கொடி காலத்தைத் தன் நினைவிலிருந்தே எழுதியதாக பி.எஸ். ராமையா குறிப்பிடுகிறார். அதன் காலப் பிழைகள் நூல் வெளிவந்த காலத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டன. தனிப்பட்ட அனுபவமாகவே படைப்பாளி வல்லிக்கண்ணனின் இரு நூல்களும் அமைந்துள்ளன. ஆவணங்களில், வரலாற்றுக்குரிய துல்லியம், நம்பகத்தன்மை, ஆராய்ச்சி முடிவுகள் முதலிய அம்சங்கள் குறித்த கவலை நமக்கு உண்டு. என்றாலும் இவைதாம் ஆய்வு மூலங்கள். இவற்றைக்கொண்டுதான் பிற்கால அறிவுலகம் இயங்க வேண்டும். இத்தகைய பின் புலத்தில் தமிழ் இதழியல் சூழல் நம்பகமான ஆய்வுமூலத்தை நோக்கிக் காத்திருந்தது.

கட்டுரையாசிரியர், இதழ் வரலாற்றாசிரியர் ஆகியோரின் கருத்தியல் சார்ந்த ஒருமுகப் பார்வை என்ற குறையைத் தீர்த்துப் பன்முகப் பார்வைக்கு வாய்ப்பளிக்கும் மூலத்துக்கு வாசகன் ஏங்குகிறான். சிற்றிதழ்களின் வளர்ச்சியால் உருவான மாற்றுச் சிந்தனைகள் பெருகிய வாசகப் பரப்பு ஆகியவை இதழ்களின் மூலப்பிரதியை நோக்கி அவனை நகர்த்தின. இத்தகைய புலமை எதிர்பார்ப்பை உணர்ந்த கலைஞன் பதிப்பகம், இதழ்களைத் தொகுப்புகளாக வெளியிடும் பதிப்புப் பணியினைத் தொடங்கியது. 1999இல் கசடதபற இவ்வகையில் முதல் நூலாக வெளி வந்தது. 2007வரையில் ஏறக்குறைய இருபது தொகுப்புகள் வந்துவிட்டன. கலைஞன் மட்டுமல்லாமல் வேறு பதிப்பகங்களும் இதில் ஈடுபட்டன. தொகைநூற் காலம் என்று சொல்லும்படியான நிலையை இந்த எட்டாண்டுகள் பெற்றன. இவ்வகையில் தொகுப்புகளாகி இருக்கும் இதழ்கள் இதழியல் வரலாற்றில் வகிக்கும் இடத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

தமிழில் நவீனத்துவம் உருவாகிய சூழலின் அடையாளமாகக் கருதப்படும் எழுத்துக்கு முன் இருந்த இதழ்கள், பின் தோன்றிய இதழ்கள் என இந்த நூற்றாண்டுத் தமிழ் இதழ்களை இரு பெரும்பிரிவுகளாக நாம் பிரித்துவிட முடியும். எனினும் அதன் உள்ளடக்கம் மேலும் உள்ஒதுக்கீடுகளைக் கோரி நிற்கின்றது. அவற்றை ஐந்து மிகப் பெரும்பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஸ்தாபிக்கப்பட்டுவிட்ட கருத்தின் மேன்மையில் எழும் மனப்போக்கைப் பிரதிபலிக்கும் இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடும் இதழ்களான சுதேசமித்திரன், கலைமகள் . . .

தன் அரசியலைப் பளிச்சென வெளிப்படுத்தி இடதுசாரிச் சாய்வுடைய இலக்கிய முயற்சியை, புரட்சி மனப்பான்மையுடன் வெளியிட்ட இதழ்களாக விளங்கிய மணிக்கொடி, சரஸ்வதி, மனிதன், சிகரம் . . .

மிதவாத அரசியலைக் கவனப்படுத்தி, பொருட்படுத்தக்கூடிய படைப்பாளர்களையும் படைப்புகளையும் பரப்பிய சக்தி, வசந்தம், முல்லை, சுபமங்களா . . .

தரமான இலக்கியமாகத் தன்னை அறிவித்துக்கொண்ட எழுத்து மற்றும் சரஸ்வதிக்கு இடைப்பட்ட பத்திரிகைகளான தீபம், கணையாழி . . .

இந்த ஐவகையில் அடங்கிவிடு வன தொகுப்புகளாக வெளிவந்துள்ள எல்லா இதழ்களும். எனினும் இவை எழுத்து மற்றும் எழுத்துக்கு முன் உள்ள இதழ்ச் சூழலையே பிரதிநிதித் துவப்படுத்துபவையாக இருக்கும். புதுச்சிந்தனை, ஜனரஞ்சகத்துக்கு எதிர் நிலை, கருத்து நிலையின் விளைவுகளாகச் சூழலை அவதானித்தல் போன்றவை எழுத்துவுக்குப் பிறகே நிகழ்ந்தன. இந்தச் சிறுபத்திரிகை மரபை எழுத்து (1959-1972)விலிருந்து பிரக்ஞை (1974-78) என்பதாக ஒரு மரபையும், புதிய தலைமுறை (1966)யிலிருந்து நிகழ் (1983-1995) என இன்னொரு தீவிர மார்க்சிய மரபும், படிகள் (1978) முதல் வித்தியாசம் (1999) வரையிலான நவீனத்துவச் சாயல் மரபும், நிறப்பிரிகை (1990-2000) உருவாக்கிய அரசியலை முதன்மைப்படுத்திய மரபும் என நாம் பிரித்துப் பார்க்க முடியும். புது மரபாகக் கல்குதிரை, சிலேட், கவிதாசரண், அணங்கு, பனிக்குடம் முதலானவற்றைக் கணிக்கலாம். எழுத்துவுக்குப் பிறகான இதழ்களின் மிக நெகிழ்வான வகைப்பாடே இவை. இதில் காலச்சுவடு முதலிய இடைநிலை இதழ்களாக வெளிவருபவற்றைத் தனி மரபாக வகைப்படுத்த வேண்டியுள்ளது. சிற்றிதழுக்கு மிக நெருக்கம் கொண்டவையாக அவை விளங்குகின்றன.

இப்பெரும் தமிழ் இதழியல் பரப்பில் தொகுப்புகளாக ஆகியுள்ளவை எழுத்துக்கு முன் உள்ளவையே பெரும்பான்மை. எழுத்துவுக்குப் பின் இருப்பவை மிகச் சில. எழுபதாண்டுக் கால இதழியல் வரலாற்றில் பிற்காலச் சுதேசமித்திரன் தொடங்கிக் கலைமகள், மணிக்கொடி, உள்ளிட்டு சுபமங்களா வரை முக்கியமான இலக்கிய இதழ் கள் தொகுப்புகளாகி உள்ளன.

இந்த இலக்கிய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு இந்தக் காகிதத் தலையணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சில இதழ்கள் ஒரு தொகுதியாயும் சில இரண்டிலிருந்து நான்கு தொகுதிகளாகவும் வந்திருக்கின்றன. 1000 பக்கங்களைப் பேரெல்லையாகவும் 200 பக்கங்களைச் சிற்றெல்லையாகவும் கொண்டுள்ளன. அதாவது இரண்டு செங்கல் அளவு பெரிதாகவும், மொசைக்கல் அளவு சிறிதாகவும் எனப் பல் வேறு அளவுகளில் இவை உருவாகியுள்ளன. செங்கற்களே மிக அதிகம்.

இதுவரை தொகுப்புகளாகி இருக்கும் இதழ்கள் சுமார் 20 இருக்கும். 'போகிற போக்கைப் பார்த்தால், தினத்தந்திக்குக்கூடத் தொகுப்பு வந்துவிடும்' என்றார் பிரபஞ்சன் ஒரு சமயம். அந்த அளவுக்கு ஆயாசம் ஏற்படுகிறது.

இந்த இலக்கிய இதழ்கள் சமூகத்தைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவை. தமிழகத்தில் தலித்துகள், பெண்கள், பெரியார் என்னும் ஜீவன்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக்கூட இவற்றைக் கொண்டு அறிய முடியாது. ஜனரஞ்சகத்துக்கு மிக அருகில் இருந்த கலைமகள் பெரியார் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது. அது பெரியாரைக் காட்டுவதாக இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இலக்கியம் மட்டுமே இவற்றின் பேச்சு, மூச்சு எல்லாம். எனவே இலக்கிய என்ற எனது அடைமொழியும் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை ஒரு வகையில் பிரதிபலிக்கும் இந்த இலக்கிய இதழ்த் தொகுப்புகளின் அமைப்பும் தரமும் எவ்வாறு உள்ளன என்று மேலோட்டமாகப் பார்க்கும் சிறு முயற்சியே இக்கட்டுரை.

நோக்கமும் தொகுப்பாளர்களும்

தொகுப்புகளாகி உள்ள இதழ்கள் அநேகமாய் வணிக நோக்கம் கொண்டவை அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட லட்சிய வேட்கையைக் கொண்டவை. மணிக்கொடியின் தொடர்ச்சியாகத் தன்னைக் கருதிக்கொண்டது கலாமோகினி என்றால், இலக்கியத்தை மட்டுமே முன்நிறுத்திய எழுத்துவிலிருந்து நாடகம், ஓவியம் எனச் சகல கலைத் துறைகளிலும் பரவ வேண்டும் என விருப்பம் கொண்டு கிளைத்ததாக நடையைச் சொல்லலாம். நெகிழ்வாக இனம் பிரித்தால் நடை, இலக்கிய வட்டம், கசடதபற ஆகியவற்றைத் தீவிர இலக்கிய நோக்கம் கொண்டவை எனலாம்.

தொகுப்புகளில் சிலவற்றை அதன் ஆசிரியர்களே தொகுத்திருக்கின்றனர். இலக்கியவாதிகள், ஆசிரியரின் மகன், பதிப்பகத்தாரின் உழைக்கும் நண்பர்கள் எனப் பலரும் இத்தொகுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் எவரும் இத்தொகுப்புப் பணியில் ஈடுபடவில்லை என்பதைச் சொல்லவேண்டும்.

தொகுப்பாளர்கள், குறிப்பிட்ட இதழின் இயக்கத்தில் பங்கேற்றவர்களாகவோ, அதைப் புரிந்துகொண்டவர்களாகவோ அமைவது முன்சொன்ன நோக்கத்தைச் சாத்தியப்படுத்தப் பயன்படலாம். அந்த வகைத் தொகுப்பாளர்கள் மணிக் கொடி, கசடதபற, சரஸ்வதி, அஃக், கொல்லிப்பாவை, தீபம், சக்தி, முல்லை ஆகியவற்றுக்கு அமைந்தார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பது வேறு.

முன்னுரைகள் என்னும் அறிமுகங்கள்

தொகுப்புகளாகி உள்ளவை இரண்டு தலைமுறைக் கால இதழ்கள். நடப்புத் தலைமுறை பெரும்பாலும் படிக்கவோ பார்க்கவோ வாய்ப்பில்லாத இதழ்கள் என்பதால் அவ்விதழ்களைப் பற்றிய விரிவான, தெளிவான முன்னுரை அல்லது அறிமுகம் ஒவ்வொரு தொகுப்பிலும் தேவை. இதழின் நோக்கம், ஆசிரியர், பங்கேற்ற படைப்பாளர், தனித்துவம், எதிர்கொண்ட உள் மற்றும் வெளிக் கருத்தியல் நெருக்கடிகள், காலம், எண்ணிக்கை, இதழ் நின்றதற்கான காரணம் முதலிய இதழ் சார்ந்த முழுத் தகவல்களை உள்ளடக்கியதாக முன்னுரை - அறிமுகம் அமைய வேண்டும் என்பது மிக எளிமையான முன் தேவை. அக்குறிப்பை ஆசிரியரோ இதழோடு நெருங்கிய தொடர் புடையவரோ வேறு வழி இல்லையெனில் குறைந்தபட்சம் இதழியல் அனுபவமுடையவரோ எழுதுவது தகவல்களின் துல்லியத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பயன்படும். இந்த வகையில் நன்கமைந்தவை மூன்று முன்னுரைகள் மட்டுமே.

அதில் ஒன்று சரஸ்வதி தொகுப் பிற்கமைந்த அதன் ஆசிரியரின் மேலதிக விவரங்கள் கொண்ட முன்னுரை. ஆனாலும் தான் நடத்திய சரஸ்வதி நின்றதற்கான காரணத்தை வல்லிக்கண்ணன் எழுதிய சரஸ்வதி காலம் நூலிலிருந்தே எடுத்துக்காட்டுகிறார். உண்மையையும் மறைமுகமாகச் சொல்ல வேண்டிய சூழல். முற்போக்கு வட்டாரத்திலிருந்து எந்த ஒரு பத்திரிகையையும் தாமே நடத்த வேண்டும் என விரும்பிய ஒரு இடதுசாரித் தலைவரின் தலையீடே சரஸ்வதியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிகிறது. இத்தகைய ஒரு தகவலை, இதழை நடத்தியவரோ இதழோடு நெருங்கிய தொடர்புடையவரோதான் கூற முடியும்.

'மணிக்கொடி காலம்' என்ற தொடரை லட்சிய நுரை பொங்கி வழியும் பொருளில் 1948இலேயே வ.ரா. பயன்படுத்தி மணிக்கொடி பிரமை முயற்சியைத் தொடங்கி வைக்க, பி.எஸ். ராமையா 'தீப'த்தின் உதவியுடன் அதைப் பிரபல்யப்படுத்த, சிட்டி அதை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இழுத்தார். மணிக்கொடி பற்றிய மறுமலர்ச்சி பிரமையைக் கட்டமைப்பதில் தனக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் அரை நூற்றாண்டுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த சிட்டி, மணிக் கொடி, கலாமோகினி தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரைகளையும் இந்த நோக்கத்தில் பயன் கொண்டார். மணிக்கொடி இதழ்த் தொகுப்பு முன்னுரையில் அதன் இலக்கியத் தரத்தை விதந்து போற்றும் சிட்டி, மணிக்கொடியின் வாரிசாகக் கலாமோகினியை மதிப்பிட்டு அதன் பணிகளைத் தமிழ் மறுமலர்ச்சி மீட்பு முயற்சிகளாகக் கலாமோகினி முன்னுரையில் வர்ணித்தார். அவரது மதிப்பீடு அதன் சாதனை சார்ந்ததல்ல; தன்விருப்பத்தின் மேல் எழுந்தது. ஆயினும் அதனைப் பற்றிய பல முக்கிய விவரங்கள் அடங்கிய சிறப்பான முன்னுரை அது. பாராட்டத்தக்க இரண்டாவது சிறந்த முன்னுரை அது.

ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடா சலபதி முல்லைக்கு எழுதிய ஆய்வு முன்னுரை, இதழியல் வரலாற்றில் முல்லையின் இடத்தை நிர்ணயம் செய்யும் முக்கியமான முன்னுரை.

ஆக, சரஸ்வதிக்கு அதன் ஆசிரியர் விஜயபாஸ்கரன் முன்னுரையும், கலாமோகினிக்கு அதன் படைப்பாளரும் இதழோடு நெருங்கிய தொடர்புடையவருமான சிட்டி எழுதிய முன்னுரையும், முல்லைக்கு ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ஆய்வுரையும் சிறப்பான முன்னுரைகளாகும். தவிர, கி. அ. சச்சிதானந்தம் (நடை, இலக்கிய வட்டம்), பரந்தாமன் (அஃக்) ஆகியோர் எழுதிய அறிமுகக் குறிப்புகளில் சில விடுபடல்கள் இருப்பினும் இதழ்ச் சூழலை நன்கு விளக்குபவை. மற்ற தொகுப்புகளின் முன்னுரைகள் கை விரல்களின் வளர்ந்த நகங்கள்.

காலம் பற்றிய கவனம்

இந்த இதழ்களின் தொகுப்புகள் களஞ்சியம், தொகுப்பு என இரண்டு பெயர்களில் வெளியிடப்பட்டுள்ளன. தலைப்புப் பெயர் எதுவானாலும் படைப்புகள் கால நிரலில் தொகுக்கப்படுவது பலவகையில் வாசகனுக்குப் பயன்படுவதாக அமையும். பல்லாண்டுகள் கடந்த பத்திரிகையின் தொகுப்பில் இவ்வொழுங்கு பயன்தரக் கூடியது. கால மாற்றத்தின் ஊடாகப் பத்திரிகையின் மாறிய நிலைப்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும் குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட ஆசிரியரின் பொறுப்பில் சாதனைகள் என்னவாக இருந்தன என்பன போன்ற விவரங்களை அறியக் கால ஒழுங்கு பயன்படும். காலம் பற்றிய கவனம் முல்லை, கொல்லிப்பாவை தவிர அநேகமாக எந்தத் தொகுப்பிலும் பின்பற்றப்படவில்லை.

ஒரு எழுபதாண்டு காலத்தின் பல கட்டங்களில் வெளிவந்த இதழ்களின் தொகுப்புகள் தரும் பயன்களுள் மற்றொன்று காலந்தோறும் மாறியும் பக்குவப்பட்டும் வந்துள்ள சமூக, இலக்கிய நிலைமைகள் பற்றிய அவதானிப்புக்கு வாய்ப்பு அளிப்பது. இதற்கு உதவும் தொகுப்புகள் மிகச் சில: கசடதபற, சரஸ்வதி, தீபம் ஓரளவு அஃக்.

1931இலிருந்து 1965வரையிலான 34ஆண்டு காலம் வெளிவந்த சுதேசமித்திரன் வாரப் பதிப்பின் தொகுப்பு இவ்வகையில் நன்கு பயன்பட்டிருக்கமுடியும். ஆனால் அத்தொகுதியில் 50களுக்குப் பிறகு வெளியான படைப்புகளே மிகுதியாக இடம்பெற்றுள்ளன. சுதேசமித்திரனின் இரண்டாம் தொகுதிக்கு 1959ஆம் ஆண்டுத் தொகுப்பு என்றே பெயர் சூட்டலாம். அந்த அளவுக்கு அவ்வருடப் படைப்புகளின் ஆதிக்கமே அதிகம். இது நாம் சுட்டிய கால மாற்றத்தைப் புரிந்துகொள்ளப் பயன்படாது போவதோடு சமதர்மமும் ஆகாது. மொத்த இதழ்களின் தொகுப்பாக அமைய வேண்டியவை கிடைத்த இதழ்களின் தொகுப்புகளாக உருவாகியுள்ளன. இந்தக் கஷ்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இக்குறை பற்றி முன்னுரையில் மூச்சுகூட விட்டிருக்கமாட்டார்கள். அந்த அலட்சியம்தான் தவறான தொகுப்புக் குறையைவிட உறுத்துகிறது.

பழைய முயற்சிகளைப் பயன்கொள்ளாமை

பரந்த வாசகச் சூழல், பதிப்பகத் தேவை போன்றவற்றின் விளைவாய் எழுந்த இந்தப் புதிய தொகுப்புகளுக்கு முன்னோடியாய்ச் சில சிறு முயற்சிகள் முன்னரே இந்த நோக்கில் நடந்துள்ளன. அவற்றுள் ஒன்று தன் வெள்ளி விழாவின்போது கலைமகள் வெளியிட்ட 'கலைமகள் கதம்பம்'. முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் கலைமகளில் வெளிவந்தவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளைப் படைப்பாளர், உள்ளடக்கம், வடிவம் சார்ந்த வகைப்படுத்தலுடன்கொண்டிருந்த தொகுப்பு அது.

1932 தொடங்கி இன்றும் நடக்கும் கலைமகள் இதழின் புதிய தொகுப்புக்கு எந்த ஆண்டுவரை படைப்புகளை எடுத்துக்கொண்டார்கள் என்ற குறிப்பு இல்லை. பெரும்பான்மையும் அம்மாமி இலக்கியம், இசை, மதம் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள் தொகுப்பை நிறைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவின் குறிப்பிட்ட கால, இலக்கிய, சமயப் பங்களிப்பைப் பற்றி அறிந்துகொள்ள மட்டும் பயன்படும் தொகுப்பு இது. முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கணிதம் (பக். 59) என்ற கட்டுரை முடிவு பெறாதிருப்பதைக்கூடக் கவனிக்கவில்லை.

அதே சமயம், முந்தைய கதம்பத்தைக் கவனித்து, அதில் வந்த படைப்புகளை இதில் தவிர்த்திருப்பது நல்ல முறை. இது தற்செயலாகவும் இருக்கலாம். 1957இல் வெளிவந்த கலைமகள் கதம்பத்தின் உள்ளடக்க வகைப்பாட்டையும் முன்னுரையையும் போற்றச் செய்யும் வண்ணம் புதிய கலைமகள் உள்ளது.

இதேபோல தீபம் இதழில் வெளி வந்த 'நானும் என் எழுத்தும்' தொடரைத் தீபம் கட்டுரைகள் என்ற நூலாக 1985இல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தீபம் இதழ்த் தொகுப்பில் 'நானும் என் எழுத்தும்' என்ற வரிசையில் இடம்பெற்றிருந்த நான்கு எழுத்தாளர்களையும் இலக்கியச் சந்திப்பில் இரண்டு பிரபலங்களையும் தவிர்த்திருக்கிறார்கள்.

வாசகனுக்குள் ஒரு தேடலையோ உணர்ச்சி சார்ந்த ஒரு நிறைவையோ தீபத்தின் 'நானும் என் எழுத்தும்' மற்றும் 'இலக்கியச் சந்திப்புகள்' தர முடியாது சரிகின்றன. என்றாலும் நிறைவு தருவதற்கான நல்வாய்ப்பு அந்த வடிவங்களில் இருந்தன. தீவிர மற்ற இலக்கிய வாசகனுக்கும் பல்வேறு இலக்கிய வகைமைகளில் தீனி தரும் தொகுப்பாகத் தீபம் விளங்குகிறது. பல ஆளுமைகளின் இலக்கியச் செயல்பாட்டை வெளிக்கொணர்வதாகப் பல படைப்புகள் இருக்கின்றன. பேட்டிக் கேள்விகள், ஆளுமைக் கேற்றவாறு அமையாமல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவர்கள் முயற்சியையும் மீறிச் சில பேட்டிகள் நன்றாக அமைந்து ஆச்சர்யத்தைத் தருகின்றன.

தன்னளவில் முழுமை

உள்ளடக்கத்தைத் தவிர இதழ்களின் முகப்பட்டை, வடிவமைப்பு, சித்திரம் அதில் வந்த சிறு குறிப்புகள். . . இத்யாதிகளுடனும் ஒரு இதழை முழுமையாகப் புரிந்துகொள்ள ஏற்றபடி ஒரு பதிப்பு இனித்தான் உருவாக வேண்டும். அதற்கு நடக்கும் இடைக்கால ஏற்பாடுகள்தாம் இந்தத் தொகுப்புகள். என்றாலும் முழுமையைப் பற்றிய ஒரு புரிந்துணர்வைத் தரும் வகையில் இந்தத் தொகுப்புகளை அமைக்க முடியும். அந்த உணர்வை முல்லைக் களஞ்சியம் முழுமையாகத் தருகிறது. முக்கியமானவை தொகுக்கப்பட்டிருக்கும் என்ற உணர்வை நடையும் இலக்கிய வட்டமும் தருகின்றன. ருசியானவை விடுபட்டிருக்காது என்ற உணர்வைத் தீபம் தருகின்றது. இப்படி ஒவ்வொரு தொகுப்பும் பிறை உணர்வையே தருகின்றன. பல்லாண்டுகள் வந்த இதழ்களின் தொகுப்புகளில் திருப்தி சிரம சாத்தியம். ஆனாலும் தன்னளவில் முழுமை என்ற உணர்வைத் தொகுப்பாளர்கள் சிறிது கூடுதலாக உழைத்திருந்தால் தந்திருக்க முடியும்.

இலக்கிய வட்டம் தொகுப்பில் 'இன்றைய தமிழ் இலக்கியம்' என்ற க.நா.சு.வின் கட்டுரை, 'இதன் தொடர்ச்சியாக ஒரு சிறு கட்டுரை' அடுத்த இதழில் வெளியாகும் என்னும் குறிப்புடன் வெளிவந்து பதிவாகியுள்ளது. ஆங்கில இதழ் ஒன்றில் வெளிவந்து ஐந்தாண்டுகளுக்குப்பின் 1964இல் தமிழில் வெளிவந்த அப்பெரிய கட்டுரை, தமிழ் மறு மலர்ச்சி இலக்கியம்மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தது. காலத்துக்கும் இடத்துக்கும் தக்க விளக்கங்கள் சிலவற்றையேனும் தொடர்ச்சியாக வந்த அச்சிறு கட்டுரை கொண்டிருந்திருக்கும் என எதிர்பார்த்துத்தேடும் வாசகனுக்கு அது அத் தொகுப்பில் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட அச்சிறு கட்டுரை எனக்குத் தெரிந்து அத்தொகுப்பில் இல்லை. முழுமை உணர்ச்சி பறிபோன இடங்களுள் இது ஒன்று.

அதே இலக்கிய வட்டத்தில் ஒரு தலையங்கக் கட்டுரையில் இந்த இதழ் நாலாவது பக்கத்தில் எஸ்ரா பவுண்டு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது என்று ஒரு தகவல் வருகிறது. அந்த எஸ்ராவின் கட்டுரை தொகுப்பில் இருக்க வேண்டுமே என்று எதிர்பார்க்கும்போது அது இருக்கிறது. அந்த இடம்பெறல் வாசகனுக்குள் மகிழ்ச்சியையும் தொகுப்பின் மீது நம்பிக்கையையும் தருகிறது.

படைப்பாளர் பற்றிய அறிமுகங்கள்

இந்தத் இதழ்த் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள படைப்பாளர் மிகப் பலர். இன்றைக்குப் புகழ் பெற்றிருக்கும் எழுத்தாளர் அதில் அநேகர். எனினும் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் பிரபலமடையாதவர்கள். கொள்கை சார்ந்த ஒரு எழுத்து இயக்கம் எனில் அதிலிருந்து புதியமுனைகள் வெளிக்கிளம்ப வேண்டும். எழுத்து, இலக்கிய வட்டம், நடை, கசடதபற, கலாமோகினி, மணிக்கொடி . . . இதழ்களிலிருந்து புதிய எழுத்தா ளர்கள் தோன்றியிருப்பது தெரிகிறது. சிலர் சில இதழ்களில் மட்டுமே பங்காற்றியுள்ளனர்.

சிறுபத்திரிகைகளின் தன்மை இல்லாத இலக்கியப் பத்திரிகைகளில் 40களில் எழுதிய அநுத்தமா, லக்ஷ்மி இத்யாதி பெண்களின் படைப்புகள் உள்ளன. ஆனால் 70, 80களில் வந்த சிறுபத்திரிகைகளில் அந்த அளவுக்குக்கூடப் பெண்களின் படைப்புகள் இடம்பெறவில்லை. எழுத்துவில் இரா. மீனாட்சி மட்டும் காணக் கிடைக்கிறார்.

புனைபெயர்களில் எழுதியவர் மற்றும் படைப்பாளிகளின் விவரங்கள் தொகுப்புகளில் தரப்படவில்லை. இதைப் பற்றிய தொகுப்பாளர்களின் அலட்சியம் வருத்தம் தருகிறது. இலக்கிய வட்டம் தொகுப்பாளர் தவிர வேறு எவரும் இது பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவரும் பிரபலமான எழுத்தாளர் பற்றிய பிரபலமான குறிப்பையே தந்துள்ளார்.

நடையில் கண்ணன், செல்வம் என்ற பெயர்களில் வந்துள்ள கட்டுரைகள் ஆழம் தேடிப் போய்ப் பிரச்சினையை அலசுகின்றன. ஓலூலூ, தெஹெல்வி என்ற புனைபெயர்களில் சிறந்த படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் யார்? எவர்? என்பதை அத்தொகுப்பிலிருந்து அறிய முடியாது. எழுத்தாளர் சி.மணியின் புனைபெயர்களை அறிந்த சிற்றிதழ் வாசகர்களாக இதழ்த் தொகுப்பைப் படிக்கிற எல்லோரும் இருந்துவிட முடியாது. 'ஜராதுஷ்டன் இவ்வாறு சொன்னான்' என்ற நீட்ஷே நூலின் சிறு பகுதி வி.து. சீனிவாசன் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. வி. து. சீனிவாசனின் பரந்த அறிவு அவரது பொறுப்பில் வந்த நடை படைப்புகளின் கனத்தைக் கூட்டியிருக்கும்.

சிற்றிதழ்த் தன்மையின் தொடக்க முனைகள்

வெகுஜன இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இருக்கிற வேறுபாட்டில் முக்கியமானது ஆழமும் தீவிரமும் சார்ந்த கருத்து வெளிப்பாட்டு வாய்ப்பு. இதைப் பெரும்பான்மையான இதழ்கள் பயன்கொண்டதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் கசடதபற, சரஸ்வதி, அஃக், கொல்லிப்பாவை ஆகியவை இவ்வகையில் முதலில் நிற்கின்றன. இந்தத் தன்மை வெளிப்படுமாறு தொகுப்புகளும் அமைந்திருக்கின்றன.

'சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம் விடும் அறைகூவல்களை ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறது' என்ற முழக்கத்துடன் (திராவிட இயக்க எழுத்துகளோடு சேர்ந்து இனம் காணப்படும் 'முழக்கம்' என்ற இச்சொல்கூடக் கசடதபற வுக்குப் பிடிக்காது) கிளம்பிய கசடதபறவின் நோக்கத்தைத் தொகுப்பு பிரதிபலிக்கிறது.

எழுத்தில் கல்கி, ஓவியத்தில் ரவிவர்மா, கவிதையில் சுரதா, மீரா ஆகியோரைத் தாட்சண்யமின்றி மறுதலித்தது கசடதபற. எழுத்தில் அசோகமித்திரன், ந. முத்துசாமி, நகுலன், சார்வாகன், ஓவியத்தில் ஆதிமூலம், பாஸ்கரன், கவிதையில் ஞானக்கூத்தன், பாலகுமாரன், ஐராவதம், விமர்சனத்தில் வெங்கட்சாமிநாதன் ஆகியோரைக் கொண்டாடியது. சார்த்தர் பேட்டியின் தமிழாக்கம், எஸ்.வி. ராஜதுரையின் மொழிபெயர்ப்புக் கட்டுரை போன்ற நல்ல படைப்புகளோடு சில அக்கப்போர்களும் இலக்கியச் சர்ச்சைகள் என்ற முகமூடியோடு இடம்பெற்றுள்ளன. நாடகம் சார்ந்த சாதனைகள் தொகுப்பில் இல்லை என்ற குறை இருந்தாலும் தொகுப்பு கசடத பறவைக் காட்டுகிறது.

சரஸ்வதியில் சாகித்திய அகா தெமி பரிசு பெற்றோர், தேர்வுக் குழு, தேர்வின் முறை, அதன் மந்தணம் ஆகியவற்றை விமர்சிக்கும் ரகுநாதன் உள்ளிட்டோரின் சில கட்டுரைகள் மிக வேகமானவை, ஆழமானவை. இந்த விமர்சனத்திற்கும் அசைந்துகொடுக்காமல் அத் தேர்வு முறை மாறவில்லை என்பது யதார்த்தம். ஆனால், ரகுநாதனின் நண்பர்கள் பிற்காலத்தில் இதில் புகுந்து வெற்றியுடன் வெளிவந்துவிட்டதும் யதார்த்தம்.

தொகுப்புக்கான படைப்புத் தேர்வு முறை

தொகுப்பின் வெற்றிக்குப் படைப்புத் தேர்வு மிக முக்கியம். இது வரலாற்றுப் பதிவு என்பதால் அதன் முக்கியத்துவமும் கூடுகிறது. இருப்பினும் பெரும்பாலான இதழ்த் தொகுப்பாளர்கள், படைப்புகளைத் தேர்வுசெய்த முறை பற்றிச் சிறப்பான குறிப்பைத் தரவில்லை. ஒரு சிலர் இது பற்றிப் பேசியுள்ளனர். அவருள் ஒருவரான கி.அ. சச்சிதானந்தம் படைப்புத் தேர்வு பற்றி இப்படிக் கூறுகிறார். "இவற்றிலிருந்து (நடை, இலக்கிய வட்டம் இதழ்களிலிருந்து) பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள் கொண்டுவர வேண்டும் என்ற அவா என்னுள் நீண்ட காலமாக இருந்து வந்தது" என்று தொடங்குபவர் நிறை வாய் இப்படிச் சொல்கிறார் ". . . இத் தொகுப்பில் உள்ளவை தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டுமல்லாது பிரதி நிதித்துவமாக இருப்பவைகளும் உண்டு என்பதை வாசகர்களும், மதிப்புரை செய்யத் தயாராக இருப்பவர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று முடிக்கிறார்.

இதிலிருந்து பிரதிநிதித்துவப்படுத்துபவையாகத் தொகுக்க நினைத்து, வேலை முடியும்போது தேர்ந்தெடுக்கப்பட்டவையோடு "பிரதிநிதித்துவப் படுத்துபவையும் உண்டு" என்று சொல்லத்தக்க நிலையில் தொகுப்பு உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது. இது பலருக்கும் நேர்வதுதான். சிந்திக்கிற சச்சு சாருக்குத்தான் இப்பிரச்சினை எல்லாம், மற்ற தலையணைத் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை.

மற்ற தொகுப்புகளின் படைப்புத் தேர்வு எப்படி நடந்திருக்கும்? பிரதி நிதித்துவப் படைப்புகளின் தொகுப்பா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா? மாதிரிகளா? படைப்புக்கு முக்கியத்துவமா? படைப்பாளர்க்கா? காலத்தின் வரிசையா? கருத்துக்கு முதன்மையா? ஏதேனும் வேறு நோக்கமா? இப்படித்தான் நடந்து முடிந்தது என்பதன் சாட்சியமா? காலம் புடைத்தபின் முறத்தில் தங்கிய நெல்லின் மணியா? விருப்பங்களின் தேர்வா? கிடைத்தவற்றின் திரட்டா? கிளிமூக்கின் தேர்ந்தெடுப்பா? திரட்டுகளைப் பார்த்துவிட்டு யோசிக்கும்போது எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

வித்தியாசமான வெற்றித் தொகுப்பு

கவிதை, கட்டுரை, கதை என்ற இலக்கிய வகைமை சார்ந்த வரிசையிலேயே பெரும்பாலான தொகுப்புகள் அமைந்துள்ளன. இதழின் நோக்கத்தைச் சார்ந்தும் செயல்பாட்டைச் சார்ந்தும் அதனதன் தனித்தன்மை சார்ந்தும் தொகுப்புகள் அமைந்திருக்கலாம். முல்லை, அதன் ஆசிரியர் முத்தையாவின் மகன் பழநியப்பனால் புதுமுறையில் பதிக்கப்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனும் பாரதிதாசனும் முல்லையின் கதாநாயகர்கள். இவர்களை முக்கியத்துவப்படுத்தும் வகையில் தொகுப்பு செய்யப்பட்டிருக்கிறது. முல்லையில் முக்கியப் பங்காற்றிய இவ்வாளுமைகளின் படைப்புகள் அடிப்படையில் பொருள் பாகுபாடும் அமைந்துள்ளது. எஞ்சியவை இலக்கிய வகைமைகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளன. 'முல்லை ஒரு வரலாற்றுப் பதிவு' என்ற ஆ.இரா. வேங்கடாசலபதியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள முல்லை இலக்கியக் களஞ்சியத்தில் அவ்விதழ் இதழியல் வரலாற்றில் பெறும் இடம் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. இதழின் கருத்துநிலை, அதில் பங்கு பெற்றவர்களின் கருத்து நிலை இவற்றின் விவரிப்புகளோடு வெளிவரும்போது வாசகனுக்கும் ஆய்வாளனுக்கும் அத்தொகுப்பு வாசிப்பு அனுபவத்தோடு வேறு பயனையும் அளிக்கிறது.

தொகுப்பு முயற்சியில் தோல்வி கண்டவை

முன்னால் இலட்சியமாகவும் பின்னால் சாதனையாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டதற்கு ஏற்ற வகையில் தம் இதழைத் தொகுத்துக்கொள்ள சில சிற்றிதழ்களுக்கு வரலாறு அளிக்கும் நல்ல வாய்ப்பு இந்தத் தொகுப்புப் பதிப்புகள். செய்யப்பட்ட தொகுப்பு உள்ளடக்கக் குறையால் விரும்பியவாறு அமையவில்லை என்றாலும் நியமிக்கப்பட்ட தொகுப்பாளரின் குறையாகவும் பதிப்பாளரின் பிழையாகவும் இதனைச் சுட்டிவிடலாம். இந்த வகையில் எழுந்த முயற்சிகளுக்கும் அதன் ஒரே விளைவான தோல்விகளுக்கும் சான்றாக மணிக்கொடி, கலாமோகினி, அஃக் தொகுப்புகளைச் சுட்டலாம்.

முதலில் மணிக்கொடி. மணிக் கொடியின் சரியான தொகுப்பு என்பது வ.ரா. (1933-34), பி.எஸ். இராமையா (1935-38), ப.ரா (1938-39) ஆகியோரின் ஆசிரியத்துவத்தில் வந்த இதழ்களின் தொகுப்பாக இருக்க வேண்டும். நான்காவது பகுதியாக, கணேசன் என்னும் 'வெறும் வாசகர்' (வார்த்தை உபயம் : சிட்டி) பண உதவியால், ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் வந்த மிகச் சில இதழ்களையும் இணைத்துக்கொள்ளலாம். மூன்று தொகுப்பாசிரியருள் ஒருவரான 'ப. முத்துக்குமாரசாமி எங்கெங்கோ தேடிப் பிடித்துப் பல விஷயங்களைக் கொண்டுவர' அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதுதான் இந்த அரிய நூல் என்று தொகுப்பாசிரியருள் மற்றொருவரான சிட்டி முன்னுரையில் குறிக்கிறார்.

இதழின் தொகுப்பு முறை பற்றி இதைத் தவிர வேறு குறிப்பில்லை. ஆனால் 'மணிக்கொடியும் சிறுகதையும் ஒருபொருள் குறிக்கும் இரு சொற்கள்' எனும் கருத்தைக் களித்தோதும் தொகுப்பாளர், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், மொழி பெயர்ப்புகள், நாடகம் என வழக்கமான தொகுப்பு வரிசையினை இதிலும் கையாண்டுள்ளார். சிறுகதைக்கென எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. சில கதைகள் கட்டுரைத் தலைப்பெயருக்குக் கீழேயும் பரவியுள்ளதை வேண்டுமானால் சிறப்பு எனச் சொல்லமுடியும். கட்டுரைப் பகுதியின் கீழ் கதைகள் சிலவும் இடம் பெறுமாறு தொகுப்பு முழுக் கவனத்துடன் சுவையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அச்சில கதைகளுள் தொகுப்பாளர் ஒருவருடையதும் ஒன்று.

இத்தொகுப்பின் மூன்று தொகுப்பாளர்களுள் இரண்டாமவரின் பங்கு என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளது. மணிக்கொடிக் கதைகளைத் தேர்வுசெய்து தந்தார்; மொழி பெயர்ப்புகளுக்கு மூல ஆசிரியர் பெயர்களைப் பதிவுசெய்தார்; நூல் வர உறுதுணையாக இருந்தார் என நம் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் முன்னுரையில். ரஜனி, வில்லன், மாயா, விஸ்கி, வியாசன், உ.வே.சா., வாணிதாஸன் முதலிய சிறுகதை எழுத்தாளர்களின் (?) கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது பெரிய பணிதானே! மணிக்கொடி எழுத்தாளர்களாக மேற்கண்டவர்களை அறிய வைத்ததும் நல்லதுதான். அடுத்து எந்தெந்தக் கதைகளுக்கு மூல ஆசிரியர் பெயரைக் கண்டு பதிவுசெய்தார் என்ற குறிப்பையாவது தந்திருக்கலாம். மூல ஆசிரியரின் பெயரில்லாமல் கதையை வெளியிட்ட மணிக்கொடியை நாம் எதற்குப் பாராட்டுகிறோம் என்றாவது நாம் வருத்தப்பட உதவியிருக்கும்.

மணிக்கொடியின் வாரிசு என்று ஒரு சிலரால் கருதப்படுவது கலா மோகினி. இதில் இடம்பெற்றுள்ள மாரீச இலக்கியம் என்ற தலைப்பிலான வல்லிக்கண்ணனின் கட்டுரை இலக்கியத் திருட்டுக்கு எதிராகத் தார்மீகக் கோபம் பொங்குவது. 'நமது அதிதி' என்ற தலைப்பிலான புதிய பாணியில் அமைந்த எழுத்தாளர் அறிமுகக் குறிப்புகள் சுமார் ரகத்தைச் சார்ந்தவை. வ. ரா., பாரதிதாசன் ஆகியோர் 'நமது அதிதி' பகுதியில் தம் புகைப்படம் இடம் பெற வந்த வேண்டுகோளை மறுத்துப் புறந்தள்ளியிருக்கிறார்கள். இந்த மறுப்பே கலாமோகினியின் தரத்தை, மணிக்கொடி தொடர்புடைய இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அறியப் போதுமானது. அது வெளியிட்ட கு. ப. ரா. மலரை மட்டும் வைத்துக்கொண்டு கலா மோகினியைச் சிறந்த இதழ் என்று சொல்ல முடியாது.

'உலகத்தில் இது மாதிரி பெயரைப் பத்திரிகைகளுக்கு யாரும் வைத்திருக்கக் கூடாது. எந்தக் காலத்துக்கும் என்று நான் விரும்பினேன். ஒரு சப்தத்தைப் பெயராக வைத்தேன். வரவேற்பும் மிதமிஞ்சிக் கிடைத்தன' என்று சொல்லும் ஆசிரியர் பரந்தாமன், தானே தொகுப்பாளராக இருந்து அஃக் தொகுப்பை உருவாக்கியுள்ளார். 'பிராணனை வாங்கிக்கொண்டு பிரசுரமாயின. என் கையிலிருந்த கடைசிச் சல்லியையும் இதற்காகவே செலவு செய்துவிட்டு தற்சமயம் நான்தான் எனக்கு மீதியாக இருக் கிறேன்' என்று அஃக் கொண்டு வந்தது பற்றி அலமலந்து பேசுகிறார். சிற்றிதழுக்குள் ஓவியத்தை, அச்சுக் கலைத் திறமையைக் கொண்டுவந்த பெருமையின் சொற்களால் நிரம்பி வழிகிறது அஃக் தொகுப்பு. இந்தப் பெருமையின் பிரவாகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொகுப்பில் வந்துள்ள கலைப் படைப்புகள் அமுங்கிப்போய்விட்டன. ஒரு மனிதரின் கடுமையான உழைப்பும் இரு மனிதர்களின் நீண்ட புலம்பலுமாக அஃக் தொகுப்பு அமைந்துவிட்டது. அஃக் தோல்வியின் வெற்றி.

வருந்த வைக்கும் தொகுப்புகள்

பெரும்பான்மைத் தொகுப்புகள் ஒரே மாதிரியாய் அமைந்து வாசகனுக்கு அலுப்பையும் வருத்தத்தையும் தருகின்றன. தொகுப்பை எந்த நோக்கத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் செய்திருந்தாலும் தவறுகளை நீக்கிச் செய்திருந்தால் ஒரே மாதிரியாய் அமைந்திருந்தாலும் அலுப்பை அளித்திருக்காது. கவனம், அக்கறை, நேர்த்தி ஆகியவை சில தொகுப்பு முயற்சிகளில் இல்லை. தவறற்றதை விரும்புவது பேராசையாக மாறிவிட்டது இத்தொகுப்புகளைப் பார்க்கும்போது.

சக்தி இதழ்த் தொகுப்பு

வருத்தத்தைத் தரும் தொகுப்பில் முதல் இடத்தைப் பிடித்துக்கொள்கிறது சக்தி. எத்தனை ஆண்டு காலம் நடைபெற்றது என்பதைக்கூட உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் ஒரு இதழ்த் தொகுப்பு! சுமார் 16 ஆண்டு காலம் என்ற தொனியில் போகிறபோக்கில் ஒரு குறிப்பு. மகாகவி பாரதி என்ற தலைப்பெயரின் கீழ் பாரதிக்குத் தொடர்பில்லாத அச்செழுத்து மகிமை (தி. ஜ. ர.), வருகிறார்கள் போகிறார்கள் (ல. சண்முகசுந்தரம்) முதலிய கட்டுரைகள். கவனத்தைச் செலுத்தாது தயாரிக்கப்பட்ட தொகுப்புகள். சக்தி களஞ்சியத்தின் முதல் பாகத்தின் நிலை பற்றிய பருக்கைப் பதம் மேலே சொன்னது. (இதற்கு இரண்டு தொகுப்பாளர்கள்!)

சக்தி களஞ்சியத்தின் இரண்டாம் தொகுதியில் பிற இந்திய மொழிக் கதைகள் என்ற பகுதியில் பல குழப்பங்கள். படைப்புகள் வெளிவந்த இதழின் எண், காலம் பற்றிய குறிப்பு தொகுப்பில் எங்கும் தரப்படவில்லை. ந. பிச்சமூர்த்தி, நா. பிச்ச மூர்த்தி ஆகியிருப்பது (இந்தத் தவறு பல தொகுப்புகளிலும் சகஜமாகக் காணக் கிடைக்கிறது) பற்றியோ மாக்சிம் கார்க்கியின் ஒரு கதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்ற குறிப்பு இல்லை என்பது பற்றியோ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கு. அழகிரிசாமி தொகுத்திருக்கும் தமிழக நாட்டுப்புறக் கதைகள் பற்றிய தகவல் உள்ளடக்கக் குறிப்பில் இல்லை என்பது பற்றியோ இன்னும் இவை போல உள்ளவை பற்றியோ ஒன்றும் சொல்லப்போவதில்லை. எத்தனை வேகாத பருக்கைகளை எடுத்துக் காண்பிப்பது?

அதேபோல சுதேசமித்திரன் தொகுப்பிலும் குழப்பங்கள் பல. 'எனக்குக் கிடைத்த மோதிரம்', 'புத்திர வாஞ்சை' என்ற கட்டுரைகளை எழுதியவர் யார் என்ற குறிப்புகள் இல்லை. கட்டுரைக்குரிய தகுதி இல்லாத இப்படைப்புகள், எழுதியவர் பெயராலாவது தகுதி பெறலாம் என்றால் அதுவும் தெரியவில்லை.

இந்தக் கவனம், அக்கறையின்மையால் ஏற்படும் தவறுகள், நேர்த்தியான தயாரிப்பு என்ற திசையிலிருந்து இத்தொகுப்புகளை அப்புறப்படுத்திவிடுகின்றன.

முடிவாக

இலக்கிய இதழைப் பெரும் கனவுடன் தொடங்கிய அதன் ஆசிரியர்களைப் போலவே, இந்தத் தொகுப்பாளர்களும் பெரும் பொறுப்புடன் இப்பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். தொகுப்பதற்குரிய சரியான நபர்கள், இதழ்களின் கிடைப்பருமை, சரியான முறைகளை வகுத்துக்கொள்ளாதது, அதற்குரிய பணம் முதலிய ஏந்துகள் கிடைக்காதது போன்றவற்றைத் தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லமுடியும். சூழலின் மோசத்தைக் காரணமாகச் சுட்டலாமெனினும் இன்னும் சூழல் படுமோசமாகவில்லை என்பதையும் நாம் சொல்லித்தானாக வேண்டும். கோவர்த்தன கிரியைத் தூக்க நினைத்தவர்கள், கடைசியில் துணி துவைக்கும் கல்லையே தூக்கி நிறுத்தினர். குடையாக மாற வேண்டியது குடைக் கம்பியாகக் குத்துகிறது.

உயிரோடு இருக்கிறவர்களின் தவறுகளைச் சொன்னால் அவதூறு. அமரர்களை விமர்சிப்பது அநாகரிகம். வாழ்த்த(வே) வாய், நினைத்து மருக(வே) மட நெஞ்சு, தாழ்த்த(வே) சென்னி.

மேலும் சில தொகுப்புகள்

1. வசந்தம் (1942-68)

சென்னை அல்லாத ஒரு இடத்திலிருந்து (கோவை) நீண்டகாலம் வந்த இதழ் என்ற பெருமை, ஆர். சண்முகசுந்தரத்தின் சகோதரர் திரு ஞானசம்பந்தம் ஆசிரியராக இருந்த வசந்தத்திற்கு உண்டு. 1944, 1949ஆம் ஆண்டுகளில் ஜி. டி. நாயுடு உள்ளிட்ட புரவலர்களின் உதவியோடு வ. ரா., பாரதிதாசன், அண்ணா எனப் பல வகை எழுத்தாளர்களையும்கொண்ட எழுத்தாளர் மாநாட்டை நடத்தியது வசந்தத்தின் இரண்டாவது பெருமை. அதேபோல 1949 செப்டம்பரில் நடத்திய பாரதி விழாவும் முக்கியமானது. வசந்தம் நீண்டகாலம் வீச முடிந்ததற்கு, ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் பொருளாதாரப் பின்னணி காரணம். கவிதை, கட்டுரை, சிறுகதை, பிறமொழிக் கதை, நாடகம் என்பதாகத் தொகுப்பு அமைந்துள்ளது. கே.சி.எஸ். அருணாசலம் கவிதைக்கு மாதிரி; கட்டுரைக்கு அடையாளம் மு. அருணாசலம்; கதைக்குப் பூபாளூர் சுந்தரராமன்; பிறமொழிக் கதைக்கு மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்; நாடகங்களுக்கு மாதிரி 'சுகி' ...என்றால் வசந்தத்தின் படைப்புகளின் தரத்தை, போக்கை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும். தழுவல், மொழிபெயர்ப்பு என்ற பாகுபாட்டைப் பிறமொழிக் கதைகளின் வெளியீட்டில் தவறாமல் குறித்திருப்பது வசந்தத்தின் இலக்கியத் தெளிவைக் காட்டுகிறது. வசந்தத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவரும் தொகுப்பாளரில் ஒருவருமான கா. நஞ்சுண்டன் 600 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்புக்குத் தெளிவான முன்னுரையை எழுதியுள்ளார். ஆமாம்! எதற்கு நான்கு தொகுப்பாளர்கள்!

2. மனிதன்

விந்தனை நினைவுபடுத்த இதழ் உலகில் இருக்கும் எச்சம் மனிதன். இதில் பலவகையான எழுத்தாளர்களின் சங்கமம் நிகழ்ந்துள்ளது. எனினும் விந்தன், தமிழ் ஒளி, ஜெயகாந்தன் பங்களிப்பே பிரதானமான இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சி உள்ள ஓ லுவினா(ரமன்) ஐயோ கமல் (சாது), ஸ்ரீமதி லுவினா அவர்களுக்கு (ஜெய காந்தன்), காலத்தின் தூதரே (ஆலால சுந்தரம்) என்ற படைப்புகள் கதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன. அவை கட்டுரைகள்.

விந்தனின் கசந்த வாழ்க்கைக்கு மேலும் கசப்பூட்டும் திரை உலக மனிதர்களுடனான அவரது அனுபவங்களின் தொடர் ஒன்று நிறைவு பெறாமல் இத்தொகுப்பில் உள்ளது. கசப்புக்கு ஏது முடிவு? கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றிய நம்பிக்கை வறட்சி. யதார்த்தத்தின் கோரக்குதறல்களுடன் கூடிய படைப்புகள் மனிதனை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. விந்தனின் யதார்த்த சித்திர வரைதல் முயற்சிக்கு மனிதன் ஒரு பெரிய வரைதளம்.

புத்தனைக் கொண்டாடிய இதழாகத் தமிழில் அறிமுகமான மனிதன் மொத்தம் 10 இதழ்களே வந்தது. ஜனரஞ்சக இலக்கிய உலகின் அங்கீகாரம், சமகால ரசனை இவற்றை அடிப்படையாகக்கொண்டு படைப்புகளைத் தேர்வுசெய்யத் தொகுப்பாளர் திட்டமிட்டுள்ளது தெரிகிறது. இதில் இடம்பெற்றுள்ள கல்கியின் படம், அவரது அங்கீகாரக் கடிதம் ஆகியவை இவற்றுக்குச் சான்று. இந்தியாவில் யார் திட்டம் தான் நிறைவேறியது?

3. கணையாழி (1965)

அரசியல் பத்திரிகையாகத் தில்லியில் உருவாகி, ஆசிரியரின் முயற்சி இன்றியே இலக்கியப் பத்திரிகையாக மாறி, சென்னையில் வந்து தங்கிவிட்ட மாத இதழ் கணையாழி. நாற்பதாண்டு கணையாழி இதழ்கள் நான்கு தொகுதிகளாக வந்துள்ளன. வே. சபாநாயகம் (1) இந்திரா பார்த்தசாரதி (1) என்.எஸ். ஜகந்நாதன்(2) ஆகியோரின் பெயரில் அவை உருவாகியுள்ளன. ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் முதல் தொகுப்புக்கு முன்னுரையும் இரண்டாவது, மூன்றாவது தொகுப்புகளுக்கு நன்றி உரையும் (நான்காவது தொகுப்புக்கு அதுவும் இல்லை) எழுதியுள்ளார். கூடுதலாக என். எஸ். ஜகந்நாதன் மட்டும் தன் இரண்டாவது தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ளார். மற்ற தொகுப்பாளர்கள் எதுவும் எழுதவில்லை.

இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, தி. ஜானகிராமன், அசோகமித்திரன், மாலன், பாலகுமாரன் ஆகியோரின் பழைய எழுத்துக்களை நினைவூட்டும் தொகுப்பாகக் கணையாழி விளங்குகிறது. நேற்றைய தமிழ்ப் பரப்பில் தீவிர இலக்கியத்திற்கான இதழ் என்று எப்படியோ கணையாழிக்குப் பெயர் ஏற்பட்டுவிட்டது. ஆச்சர்யம் ஊட்டும் அந்த வினோதம் அன்றைய மற்ற பத்திரிகைகள் நிலையைக் கவலையோடு நினைக்கவைக்கிறது.

இதழின் நோக்கம், செயல்பாடு, தொகுப்புமுறை ஆகியவை பற்றியும் சொல்ல வேண்டியதன் தேவை பற்றியும் கவலைப்படாத அலட்சியம் தந்திரமானது. குறிப்பிட்ட குறைந்த வாசகர்களின் ஆதரவை மட்டுமேகொண்ட ஒரு இதழ், பல காலம் தொடர்ந்து வந்ததின் பொருளாதாரப் பின்னணி குறித்து அறியவிரும்பும் வாசகன் அது குறித்த தகவலுக்கு எங்கே போவான்? அவை முன்னுரை ஆசிரியரின் வாய்வழித் தகவல்கள் வழியாக அன்றோ கிடைக்க வேண்டும். அவை முன்னுரையில் தெளிவாக இல்லை. கி. கஸ்தூரிரங்கன் சுபமங்களாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இது தொடர்பான சில விவரங்கள் கிடைக்கின்றன. கணையாழியை ம. ராசேந்திரன் பொறுப்பில் 'தசரா'விடம் கையளித்த சமயத்தில் அந்நேர்காணல் நிகழ்ந்ததால் அதுவும் இயன்றது.

கி. கஸ்தூரிரங்கன், தி. ஜானகிராமன் (கௌரவ ஆசிரியர்), அசோகமித்திரன் (பொறுப்பாசிரியர்), இந்திரா பார்த்தசாரதி (கௌரவ ஆசிரியர்) எனக் கணையாழியின் ஆசிரியத்துவத்தில் ஏகதேசம் ஒரே பார்வை கொண்டவர்களே இருந்திருக்கிறார்கள். இவர்களது வார்ப்பாகவே, படைப்புகளும் கவனப்படுத்தப்பட்டிருக்கும் என்று தீர்மானிப்பது தவறாகாது.

அறிவார்ந்த நடுநிலை என்னும் பெயரில் திராவிட இயக்க எதிர்ப்பு நுண் அரசியலை இலக்கியத்தின் ஊடாகப் புதிய தலைமுறைக்குள் பரப்பியதில் நேற்றைய கணையாழி வகித்த பாத்திரத்தை வேறு எந்த இதழாலும் தட்டிப் பறித்துவிட முடியாது.

4. சிகரம் (1975-82)

ஆசிரியரே தொகுப்பையும் தயாரிக்கும் பேறு பெற்ற சில பத்திரிகைகளில், முற்போக்கு இதழாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சிகரமும் ஒன்று.

இடதுசாரி முகாமிலிருந்து செம் மலர் வந்துகொண்டிருந்த சூழலில் இன்னொரு பத்திரிகை வருவதும் வந்தாலும் விற்பதும் சிரமம். ஆனால், சிகரம் வந்தது. விற்றதா? தனக்குப் பிறகு தோன்றிய தாமரையோடு களத்தில் நிற்க முடியாது சரஸ்வதி வீழ்ந்த வரலாறு இதே முற்போக்கு முகாமில் நடந்து முடிந்தது எல்லோரும் அறிந்த ஒன்று. தரமான உள்ளடக்கம், பெருகிய வாசகப்பரப்பு, தீர்க்கமான பார்வை முதலியவற்றைக் காட்டிலும் இயக்கம் அல்லது பின்னணிப் பலம்தான் முக்கியம் என்பது தாமரை, செம்மலர், கலைமகள் ஆகியவை தொடர்ந்து வெளிவருவதிலிருந்து நாம் அறிய வரும் செய்தி. சரஸ்வதி தோற்றதும் சிகரம் நின்றதும் இவ்வகையிலேயே புரிந்து கொள்ளப்படும். சிகரம் நின்றது சொந்த லௌகீக வாழ்க்கையின் திசைத் தேர்வின் விளைவு எனச் சிகரம் ஆசிரியர் தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.

காலத்தின் ஊடகமான சினிமாவைப் பொருட்படுத்தி இதழுக்குள் கொண்டுவந்ததைச் சிகரத்தின் முக்கியச் செயல்பாடாகக் கருதலாம். சூரிய தீபன் - மன ஓசை; வைகறை - பாலம்; பெ.நா. சிவம் - பதிப்பகம், கி.த. பச்சையப்பன் - தமிழ் இயக்கம் என்ற தொடர்பில்தான் மலர்ச்சி பெற்று வரலாற்றுக்குள் வருகிறார்கள். இவர்களுக்குப் படியாகச் சிகரம் இருந்திருக்கிறது என்று ஆசிரியர் கூறுவது முக்கியமான விஷயம். வெவ்வேறு விதமான நிறம் கொண்ட ஆயிரம் மலர்களைப் பூக்கச் செய்திருக்கிறது சிகரம் என்கிற ஒரே செடி.

மாவோவுக்கு இருந்த செல்வாக்கு, பாரதிதாசன், பெரியார் தொடர்பில் இடதுசாரிகளின் மாறுபட்ட நிலைபாடு, 'நெருக்கடி கால'ச் சிக்கலில் சிகரம் தப்பித்த வரலாறு, பலரும் வெளியிட முடியாத படைப்புகளை வெளியிட்டது, பத்திரிகை விற்பனை எண்ணிக்கை அதிகமானால் இழப்பும் அதிகமாகும் என்ற விசித்திர வணிகச் சித்தாந்தப்படி சிகரம் வீழ்ந்தது இப்படிப் பல விவரங்கள் அடங்கிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வழக்குரைஞருக்குரிய திறமை, சிகரத்தின் உள்ளடக்கத்தில் மட்டு மல்ல தொகுப்பிலும் தெரிகிறது.

5. கொல்லிப்பாவை (76-88)

தர்மூ சிவராமுவினால் பெயர் சூட்டப்பெற்ற கொல்லிப்பாவை

அ. ராஜமார்த்தாண்டன் பொறுப் பில் 12 இதழ்களும், ஆர். கே. ராஜ கோபாலன் பொறுப்பில் காலம் தவறாது எட்டு இதழ்களும் மொத்தம் 20 இதழ்கள் வந்துள்ளன. உள்ளடக் கங்களில் கூடுதலாகக் கடிதம், குறிப் புகள் எனச் சேர்த்துள்ளது தனிச் சிறப்பு. படைப்புகள் நவீனத் தமிழை அடையாளப்படுத்துவதாய் உள்ளன. படைப்புகள், தொகுப்பின் பக்கங்களில் தொடர்ச்சியாகப் பதிக்கப் பெற்று இருப்பதால், ஒரு படைப்பு முடிந்ததும் முடிந்தது எனும் உணர்ச்சி உடனே வர மறுக்கிறது.

"நிதர்சனத்தின் தீவிரத் தன்மையை ஆழ்ந்த மனோபாவத்தின் மூலம் சந்திக்கிறபோது கிளர்வது ஆனந்தம். ருசிகரம் என்பது சிற்றுணர்வுகளுக்குத் தீனி போடுவது. முதிர்ச்சியற்ற மேலோட்டமான மனோபாவங்களைப் போஷிப்பது. பெரும்பான்மையினரால், வெகு ஜனத்தினால் விரும்பப்படுகிறவை எவை என்று குறிவைத்து அவற்றை வளர்ப்பது" என்ற நோக்கின் அடிப்படையில் 70களில் சிற்றிதழ்களில் வெளிவந்த எழுத்துகளை அலசி, நோண்டி நுங்கு எடுக்கும் பிரமிளின் எழுத்து ஆனந்தமானது. 'வெளிச்சம் பாய்ந்திருந்த அறை' யாகப் பிரமிளின் எழுத்துக்கள் பரவசப்படுத்துகின்றன. அரசியல் முன்எண்ணம் எதுவுமின்றிப் படித்தால் இன்றும் கிளர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எழுத்தின் உள் ஒளி அரசியலைத் தாண்டி ஊடுருவக் கூடியது. பிரமிளின் எழுத்துக்களும் வெங்கட் சாமி நாதனின் 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' கட்டுரையும் அதன் விளைவான விமர்சனக் கட்டுரைகளும் கொல்லிப்பாவையின் அழிக்க முடியாத முத்திரைகள். வெ.சா. போற்றிய கோவில் கலாச்சாரத்தை மறுத்து, சுந்தர ராமசாமி எழுதிய எழுத்து கொல்லிப்பாவையை இன்னும் குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது சமூக நினைவில் நிறுத்தும்.

6. யாத்ரா (1978-84)

யாத்ரா இரண்டு தொகுப்புகளாய் வந்துள்ளது. நாடகம், தெருக் கூத்து, பாவைக் கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கட்டுரைகள் தொகுப்பாகி உள்ளன. தவிர தி. ஜானகிராமன் பற்றிய கட்டுரைகள், தருமூ சிவராம் படைப்புகள், ஜே.ஜே. சில குறிப்புகள், ஜெருசலேம், கண்ணதாசன் பற்றிய விமர்சனங்கள் ஆகியவையும் யாத்ராவின் முக்கியப் படைப்புகள்.

600 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறுபத்திரிகைத் தொகுப்பில் கூத்துகள் பற்றி மட்டுமே 200 பக்கங்களுக்குமேல் இடம்பெறுவது என்பதும் அதுவும் கூத்துகள் பற்றிய நேரடிப் பரிச்சயம் இல்லாதவர்களால் அது இயன்றுள்ளது எனும்போது அது மேலும் முக்கியமாகிறது. கூத்துக் கலையை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தும் பிரகிருதிகளாக யாத்ராவோடு தொடர்புடையவர்களானதற்கு யாத்ரா ஒரு காரணம்.

7. சுபமங்களா (1988, 1991-1995)

ஒரு இதழின் பழகிவிட்ட முகத்தைப் புதிய ஆசிரியரால் முற்றிலும் மாற்றிவிட முடியும் என்பதற்கான வாழ்ந்த அடையாளம் சுபமங்களா. அதன் பழைய தசைகளைக் கொண்டே அந்த முக மாற்றத்தைக் கோமல் சுவாமிநாதன் சாதித்தது, பத்திரிகை நிர்வாகம்-பத்திரிகை உள்ளடக்கம் என்ற உறவு சார்ந்த பத்திரிகை இயலில் மிக முக்கியமான அம்சம். ஒரு ஜனரஞ்சக ஆசிரியரின் கையிலிருந்து கோமல் சுவாமிநாதன் (1931?-1995) கைக்கு 1991 பிப்ரவரியில் சுபமங்களா வந்தது. இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே (1988-மே) இதழ் வந்து கொண்டிருந்தாலும் இந்நிகழ்விற்குப் பிறகே இதழ் இலக்கிய முற்றத்துக்கு வந்தது. அதிலிருந்து 58 இதழ்கள் கோமலின் ஆசிரியத்துவத்தில் அவர் மறைந்த பிறகு வந்த 59ஆம் இதழோடு சுபமங்களா தன் பயணத்தை முற்றாக முடித்துக் கொண்டுவிட்டது.

சுபமங்களா நவீனத் தமிழின் பல திசைகளின் சந்திப்பாக இருந்தது. சுந்தர ராமசாமியும் அ. மார்க்ஸ§ம் வெங்கட் சாமிநாதனும் வத்ஸலாவும் சூரியதீபனும் அறிவுமதியும் சந்திக்கமுடிகிற ஒரு வெளி அதில் சாத்தியமானது. நேர்காணல்கள் அதன் தனித்துவம். படிக்கத் தூண்டும் வடிவமைப்பு, தன் கொள்கையை, சாய்வை வெளிப்படுத்தும் விதமாய்த் துணுக்குகளைப் பயன் கொண்டது சுபமங்களா. இன்றைய இடைநிலை இதழ்களின் முன்னோடி. நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் சுபமங்களா பற்றிய எந்தத் தகவலையும் தொகுப்பின் முன்னுரையிலிருந்து பெற முடியாது. கோமலுக்கும் சுப மங்களாவுக்குமான எந்தத் தொடர்பு பற்றிய தகவலும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது அதன் முன்னுரை.

சுபமங்களாவின் தொகுப்பில் 35 கவிதைகள், 38 கதைகள், 27 கட்டுரைகள், 19 நேர்காணல்கள், 14 விமர்சனங்கள் உள்ளன. இளையபாரதி இதன் தொகுப்பாசிரியர். படைப்பு வெளிவந்த தேதி உட்பட படைப்பைப் புரிந்துகொள்ளத் தேவைப்படும் எந்தப் புறத்தகவலுமின்றித் தொகுப்பு உருவாகியுள்ளது. ஆனால், படிக்கத் தூண்டும் வடிவமைப்புடன். இதற்கு முன்பே கலைஞர் முதல் கலாப் பிரியாவரை என்றொரு சுபமங்களாவின் நேர்காணல் மட்டுமேகொண்ட தொகுப்பு வந்திருக்கிறது.

ராஜம் கிருஷ்ணன் உட்பட நேர்காணல் காணப்பட்ட பல எழுத்தாளர்களிடம் சுபமங்களா பெற்ற கரிப்பு அனுபவம் தொகுப்பின் முன்னுரையில் காணக் கிடைக்க வேண்டும். அவை இலக்கிய உள் விவகாரங்கள் இல்லை. ஒரு சமூகத்தின் கலாச்சாரம் தொடர்பான பேசும் சாட்சியங்கள். பல ஊர்களில் கோமல் நடத்திய வாசகர் கூட்டங்கள் இதழைப் பரவலாக்கியது. கோமலின் இதழ் அனுபவத்தை முன்னுரையாகக் கொள்ளாத சுபமங்களாவின் தொகுப்பு முழுமையடையாத தொகுப்பாகவே இருக்கும்.

புதுப்புது எழுத்தாளர்களை சுபமங்களா உருவாக்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும் நவீனத் தமிழின் பல போக்குகளின் முன்னோடிகள் தயங்காமல் பங்களிக்கக் கூடிய வகையில் ஒரு பயனுள்ள வெளியாக இருந்தது என்பதை வரும் தலைமுறைகள் உணர இத்தொகுப்பு சிறிதளவு பயன்படலாம்.

8. எழுத்து (1959-1970)

சிறுபத்திரிகையின் தோற்றத்திற்கு ஆதர்சமான எழுத்துக்கு இன்னும் தொகுப்பு வரவில்லை. இந்தக் குறையைச் சிறிதளவு தீர்த்திருக்கிறது வல்லிக்கண்ணன் தொகுப்பில் வந்துள்ள எழுத்து என்ற சிறுநூல். நூலில் எழுத்துவின் இரண்டு இதழ்கள் அப்படியே முழுவதும் தரப்பட்டுள்ளன. சின்ன குத்தூசி எழுத்துவின் முதல் ஆண்டின் பல இதழ்கள் குறித்து விரிவாக எழுதியிருப்பது எழுத்துவின் அடிநாதத்தைப் பத்திரிகையாளர் பார்வையில் புரிந்துகொள்ள உதவுவது. இலக்கியம் (அதிலும் விமர்சனம்), புதுக்கவிதை இதுவே எழுத்துவின் இலட்சியம் என்பதை இந்நூலிலிருந்தும் உணர முடியும். எழுத்துவின் பங்களிப்பாளர்கள், அதன் தமிழ், அதன் இலக்கிய விளைவு பற்றி விரிவாக எழுத வேண்டிய சமூகத் தேவை உள்ளது. அதற்கு இங்கே இடமில்லை.

உள்ளடக்கம்