|
தமிழ் மக்களுக்கு
'நடை' என்னும் புதிய ஏட்டினை அறி முகப்படுத்துவதில் பெருமையும்
மகிழ்ச்சியும் அடைகிறோம். 'நடை' ஓர் இலக்கிய முத்திங்கள் ஏடு; இலக்கியப்
படைப்புக்கும் திறனாய்வுக்கும் என்றே வருகின்ற ஏடு. இதுபோன்ற ஏடு தமிழுக்குப்
புதிதல்ல; என்றாலும் 'நடை' பல வகையிலும் மாற்றம் உடையது என்பது வாசகரின் முதற்
பார்வைக்கே புலனாகி இருக்கும். இந்த மாற்றம் 'நடை'யினது நோக்கத்தின் அடிப்படையில்
எழுவதாகும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை
அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே 'நடை'யின் நோக்கம். இந்த
இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த 'நடை'.
'நடை'யின் நோக்கம் நிறைவேறவும் 'நடை' வெற்றியுடன் நடக்கவும் இக்கூட்டு முயற்சியில்
வேறு சிலரின் துணையும் தேவை: இதற்கு எல்லா வகை எழுத்தாளரையும், விமரிசகரையும் துணை
செய்யுமாறு அழைக்கிறோம். சிறுகதை, கவிதை, கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வுக்
கட்டுரை முதலியவற்றை 'நடை' வரவேற்கிறது. ஓர் ஏட்டின் வெற்றிக்கு அடிப்படைத் தேவை
வாசகரின் பேராதரவுதான். எனவே இலக்கியச் சுவைப்புக்குப் புகழ்பெற்ற தமிழ் மக்களைத்
துணைபுரியுமாறு அழைக்கிறோம்.
ஆசிரியர் |