Google   www kalachuvadu.com

எழுத்து வளர

இன்றைய போக்குகளை எழுத்து எப்படி பிரதிபலிக்கும், எதிர்காலப் போக்குக்கு என்னவகை செய்யும், சென்ற காலப் போக்குகளை எவ்வாறு மதிப்பிடும் என்பதுதான் இந்த முயற்சியின் முன் உள்ள கேள்வி. அதற்கு உள்ள பதில்களை இந்த ஏடு ஆரம்பித்து, வரும் ஏடுகள் தொடர்ந்து சொல்லும். மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக்கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், பழக்க முறையாகிவிட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாகக் கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னன்னவைகளைக் கொடுத்து, பிடிக்கச் செய்ய வேண்டும், புதுப்புது விதமாக, நோக்கும் பார்வையும் கொண்டு, வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பெருகும்.

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் உள்ள உறவு மறுக்க முடியாதது. அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்துதான் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கலை உருவங்களை ரசித்து, கோட்பாடு பற்றிய வித்தியாசங்களைப் போக்கிக் கொள்ளக் கூடும். கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு கலை உருவத்தை விளக்கி ஆதாரம் காட்டிக் கலை உருவத்தின் மதிப்பை அறியச்செய்ய முடியும். கலைகள் பல்வேறு மாறுபட்ட சித்தாந்தங்களுக்குக் களமாக அமைந்துள்ளன என்பது இன்று நாம் பார்க்கிற விஷயம். அதை நினைவிலிருந்து ஒதுக்கிவிட்டு நாம் ஒரு இலக்கிய நூலை அணுக முடியாது. ஆனால், அவ்விதம் பார்ப்பதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ளவும் தவறக் கூடாது. எனவே எழுத்து இலக்கியக் கோட்பாடுகள், தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத்தான் இலக்கியப் படைப்பும் ரசனையும் ஏற்பட முடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன்முன் வைத்துக்கொண்டுள்ளது.

படைப்புதான் எழுத்துக்கு முதல் அக்கறையாக இருக்கும்.

'சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக்கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்.'

என்று க. நா. சு. தன் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' கட்டுரையில் கூறியுள்ளது அப்படியே எழுத்து தன் குறிக்கோளாகக் கொண்டுள்ள படைப்பு லக்ஷியமாகும். சோதனை செய்து பார்ப்பவர்களால்தான் இலக்கியமே வளர்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு முதல் நாவலைத் தந்த வேத நாயகம் பிள்ளையும் சிறுகதையைத் தந்த வ.வே.சு.அய்யரும் புதுக்கவிதை தந்த பாரதியும் வசன நடையில் புதுமை காட்டிய வ.ரா.வும் இந்த வழிவந்த மற்ற சிலரும் சோதனைக்காரர்கள். இன்றைய இலக்கியம் பற்றிப் பேசும்போது இவர்களைத்தான் முதலில் குறிப்பிடுகிறோம். சுயமாக, தனித்தன்மையுடன் கலை உருவம் படைத்தவர்களை அதே சுவடில் பின்பற்றி 'காப்பி' அடித்து சிருஷ்டிப்பவர்களை ரசிக உள்ளம் அவ்வளவாக நீண்ட நாளைக்குத் தன் நினைவில் இருத்திக் கொள்வதில்லை. ஆகவே இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்.

முடிவாக -

எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளிவருகிறது. 2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது, நேரில் சந்தாதாரராகச் சேருபவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவைதான். வாசகர்களின் தொகையைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்காக அல்ல; இலக்கிய வாசகர்களைத் தேடிப்பிடிப்பதுதான் எழுத்துக்கு நோக்கம். ஏனெனில் 'பிடித்தமானது' என்ற சாக்கில் பொது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளை எழுத்து கையாளும், உத்தேசம் இல்லை. 'எழுத்து எனக்குப் பிடித்து இருக்கிறது' என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அவர்களைத் தேடும் எழுத்து. எழுத்து தன்முன் கொண்டுள்ள பார்வையைப் பற்றிச் சொல்லிவிட்டது. இலக்கிய வாசகர்களின் ஆதரவை எதிர் பார்த்து ஒரு துணிச்சலான முயற்சியாக வரும் எழுத்துக்கு தமிழகம் தன் அரவணைப்பைத் தந்து, அது ஏட்டின்பின் ஏடாக அடுக்கு ஏற வகைசெய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த முதல் ஏடு உங்கள்முன் வைக்கப்படுகிறது.

எழுத்து முதல் தலையங்கத்திலிருந்து
ஜனவரி 59

உள்ளடக்கம்