Google   www kalachuvadu.com

வாழ்த்து

காலச்சுவடு இதழும் நஞ்சுண்டனும் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். அவர்கள் மூலமாகவே மகத்தான தமிழ் வாசகர்களை நான் நெருங்கி வந்துள்ளேன். இந்தச் சோதனையான நாள்களிலும் என்னையும் காலச்சுவடு வாசகர்களையும் பிணைத்துள்ள காலச்சுவடின் ஆசிரியர் குழுவைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தஸ்லிமா நஸ்ரீனைப் போன்ற ஆதரவற்ற ஓர் எழுத்தாளரை நாட்டைவிட்டு நாம் துரத்துவதைப் பாருங்கள். திபெத் போன்ற பழமையான நாகரிகத்தைப் பேராசை பிடித்த சீனர்கள் அழிப்பதை அனுமதிக்கிறோம். கருணையற்ற மோடி மாதிரியான ஆட்சியாளரைத் திறமையான நிர்வாகியென்று நாம் மெச்சத் தொடங்கியுள்ளோம். கனிமங்களை வெட்டியெடுப்பதற்காக நகரங்களையே நாம் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறோம். அக்கனிமங்களைச் சீனாவிற்கு விற்கிறோம். நம் அரசியல் கட்சிகள் கனிமச் சுரங்க அதிபர்களுக்குச் சொந்தமாகிவிட்டன. அவர்களில் யார் பெரும் செல்வந்தரோ அவரே மாநிலங்களவைக்கு முன்மொழியப்படுகிறார் அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிறார். நம்மிடையே பிற்போக்கான அரசியல்வாதிகள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், ராஜாஜியைப் போன்ற ஆரோக்கியமான பழமைவாதிகளும் இல்லை. ராஜாஜியோடு நாம் அர்த்த பூர்வமாக விவாதித்திருக்க முடியும். இப்படிப்பட்ட உலகில், அன்னியோன்யமானதும் உண்மையானதுமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய சமூகம் நாம் என்று நம்மில் சிலரை உணரவைக்கும் காலச்சுவடு போன்ற இதழ் மிகவும் தேவை.

காலச்சுவடின் ஐம்பதாம் இதழை நான் சேலத்தில் வெளியிட்டது இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலச்சுவடின் நூறாவது இதழ் வெளியாகும் இத்தருணத்தில் என் மகிழ்ச்சியை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

யு. ஆர். அனந்தமூர்த்தி
பெங்களூர்

உள்ளடக்கம்