|
காலச்சுவடின் நூறாவது இதழ் இது. ஒரு தீவிர இதழ் தொடர்ந்து நூறு இதழ்கள்
வெளிவருவது தமிழ்ச் சூழலில் ஒரு சாதனை எனக் குறிப்பிடுவது மிகை அல்ல. தமிழ்ச்
சிற்றிதழ் இயக்கத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது 'சாதனை'
என்னும் இச்சொல் அதிக அழுத்தம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. காலச்சுவடு
இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதற்கு முக்கியமான காரணங்கள் நிதானமான அடிவைப்புகளும்
பல்துறை சார்ந்த அக்கறைகளுமே ஆகும். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பெரிய
கனவுகளைச் சாத்தியப்படுத்தும் வகையில் இருமாத இதழாகவும் பின்னர் மாத இதழாகவும்
படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது காலச்சுவடு. இதழைத் தொடர்ந்து கொண்டுவருவதற்கான
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஓரளவேனும் உருவாக்கப்பட்டுள்ளன. போதாமைகள் உள்ளன
என்றாலும் சூழல் குறித்த புரிதலோடு பயணம் தொடர்கிறது.
காலச்சுவடு படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல்,
வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளையும்
கவனத்தில் கொண்டு தன் அக்கறைகளை வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இதுவரையிலான
இதழ்களை மேலோட்டமாகப் புரட்டினாலே இது புலப்படும். காலச்சுவடு வெளியிட்டுள்ள
சிறப்புப் பகுதிகள் இதற்குப் பருண்மையான சான்றுகள். அண்டை மாநில மொழிகளுடன்
காலச்சுவடு இடையறாது தொடர்பைப் பேணிவந்திருக்கிறது. யு. ஆர். அனந்தமூர்த்தி, பால்
சக்காரியா போன்ற ஆளுமைகள் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்கள்.
கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக்
கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைக் காலச்சுவடு தொடர்ந்து வெளியிட்டு
வந்திருக்கிறது. குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கலை, இலக்கிய நிகழ்வுகளையும்
காலச்சுவடு ஏற்பாடு செய்கிறது. இவற்றை இதழின் செயல்பாட்டு விரிவாக்கமாகக் காணலாம்.
இவை எல்லாவற்றின் காரணமாகவே பரந்துபட்ட வாசகப் பரப்பைக் காலச்சுவடு
பெற்றிருக்கிறது. பங்களிப்பு சார்ந்தும் வெவ்வேறு வகையான ஆர்வலர்களுக்குக்
காலச்சுவடு களமாக விளங்குகிறது.
தமிழ்ச் சூழலின் அவலம், செயல்பாடின்மையைப் போற்றுவதாகும். செயல்படுவோரை
எவ்வகையிலாவது முடக்கிவிடுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
காலச்சுவடின்மீது பல்வேறு அவதூறுகள் கூறப்படுகின்றன. தொடர்ந்து உள்நோக்கங்கள்
கற்பிக்கப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு காலச்சுவடுக்கு
இருக்கிறது. பரந்துபட்ட வாசகத் தளத்தை வெகுஜன எழுத்து பிடித்து வைத்திருக்கிறது.
நல்ல இலக்கியத்தைப் படிப்போர் குறைவு என்று புலம்பிக்கொண்டிருந்த குரல்கள், தீவிர
இலக்கியத்திற்கு விரிந்த வாசகர் தளம் கிடைப்பதை அங்கீகரிக்க மறுக்கின்றன. தமது
அதிகாரத்திற்கும் தியாக பிம்பத்திற்கும் சிதைவு நேரிடுவதைத் தாங்கிக்கொள்ள இயலாதவை
இக்குரல்கள். ஆரோக்கியமான விமர்சனங்கள், ஆலோசனைகள், பகிர்தல்கள் என வரும்
அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாற்றங்களைச் செய்வதற்குக் காலச்சுவடு
எப்போதும் தயாராகவே உள்ளது. நம் முன்னுள்ள தேவைகள் ஏராளம். எட்டியவை மிகக்குறைவே.
எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்பும் காலச்சுவடை சாதனைத் திசையில் மேலும் வழி
நடத்தும் என்னும் நம்பிக்கை உள்ளது. நூறாவது இதழை எட்ட உதவிய காலச்சுவடின்
பங்களிப்பாளர்களுடனும் வாசகர்களுடனும் ஆதரவாளர்களுடனும் இச்சாதனையைப் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
n
இடம் மாறும்
மறைமலையடிகள் நூல்நிலையம்
மறைமலையடிகள் நூல்நிலையம், மறைமலையடிகளின் நூல் சேகரிப்பைக் கருவாகக் கொண்டு சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958இல் நிறுவப்பட்டதாகும்.
இந்நூல்நிலையம் மற்றுமொரு நூல்நிலையம் அல்ல. தமிழியல் சார்ந்த அனைத்துவகை
நூல்களையும் இதழ்களையும் கொண்ட இந்த அரிய நூலகம் இரண்டு தலைமுறை ஆய்வாளர்களுக்கு
இன்றியமையாத ஒரு கருவூலமாக விளங்கிவந்துள்ளது. வ. சுப்பையா பிள்ளை அவர்களின்
தொலைநோக்கும் இரா. முத்துக்குமாரசாமி அவர்களின் பரந்துபட்ட நூலியல் அறிவும்
நூலகத்திற்குப் பலமாக விளங்கியுள்ளன. ஆனால் சென்ற பதினைந்து இருபது ஆண்டுகளில்
பொருளாதார முடை, தமிழ் ஆர்வலர்களின் அக்கறையின்மை முதலான காரணங்களால் நூலகம்
நலிவுற்று வந்தது. நெருக்கடியும் சந்தடியும் சூழல் மாசும் நிறைந்த வடசென்னை
மண்ணடிப் பகுதி ஓர் ஆய்வு நூலகத்திற்கு உரிய இடமல்ல.
இப்பொழுது தமிழக முதல்வரின் கடைக்கண் பார்வை பொன்விழாக் காணும் மறைமலையடிகள்
நூல்நிலையத்தின் மீது விழுந்துள்ளது; கன்னிமாரா பொது நூலகக் கட்டடத்திற்கு
மறைமலையடிகள் நூல்நிலையம் இடம்மாற்றப்பட்டுள்ளது. வள்ளலார் முதன்முதலில்
சொற்பொழிவாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தில் இயங்கி வந்த மறைமலையடிகள்
நூல்நிலையம் இடம்பெயர்ந்துள்ளது ஒருவகையில் பண்பாட்டு இழப்பே என்றாலும், காலத்தின்
கட்டாயமான இந்த இடமாற்றம் வரவேற்புக்குரியது. இந்நூலகம் 1990களின் இடைப்பகுதிவரை
ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அரசு மானியம் பெற்று வந்தது. சென்ற தி. மு.
க. ஆட்சியின்பொழுது இது ஒரு லட்சம் ரூபாயானது. தமிழ்ச் சமூகம்
பெருமைபட்டுக்கொள்ளத்தக்க ஆதரவல்ல இது. தமிழ்ப் பெயரமைந்த ஒரு தமிழ்ப்படம் ஓடும்
திரையரங்குக்கு ஒரு நாளில் கிடைக்கும் வரிச் சலுகையைவிட இது குறைவு.
தமிழ் வளர்ச்சி என்பது அலங்காரத் தோரண வாயில்களும் சிலைகளும் மட்டுமல்ல.
மறைமலையடிகள் நூல்நிலையம் போன்ற அரிய தமிழ்க் கருவூலங்களுக்குத் தரப்படும் ஆதரவே
செம்மொழி தமிழின் பெருமைக்கு வழிகோலும். கன்னிமாரா பொது நூலகம் என்ற ஜோதியில்
கலந்துவிடாமல் மறைமலையடிகள் நூல்நிலையத்தின் தனித்தன்மை பேணப்படுவதோடு, அதன் அரிய
சேகரங்கள் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம்
முதல் படியாகக் கன்னிமாரா நூலகக் கட்டடத்திற்கு மறைமலையடிகள் நூல்நிலையம்
இடமாற்றப்பட்டதை வரவேற்று, தமிழக அரசைக் காலச்சுவடு பாராட்டுகிறது.
n
சிதம்பரம்:
பழைய சிறப்புப்
பொருளாதார மண்டலம்
'சர்ச்சை முடிவுக்கு வந்தது' என மாலையும் கையுமாகப் பேட்டி கொடுத்துச் சிதம்பரம்
தீட்சிதர்கள் வெளியிட்ட செய்தியை, அவர்களையும் விஞ்சும் ஆர்வத்தோடு நாளிதழ்கள்
வெளியிட்டன. தில்லைவாழ் தீட்சிதர்களின் தனிப் பொறுப்பில் உள்ள சிதம்பரம் கோயிலில்
தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்துவருகிறது.
இதைச் செயல்படுத்த, பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும் அரசுத் துறையிலும்
வழக்குமன்றத்திலும் முயற்சி நடந்துவந்துள்ளது. இப்போராட்டம் கடந்த இரண்டு
வாரங்களில் உச்சகட்டத்தைத் தொட்டு, இப்போது தற்காலிகமான முடிவை எட்டியிருக்கிறது.
சிதம்பரம் கோயிலின் குறிப்பிட்ட மேடையில் தமிழ் மொழியிலான தேவார, திருவாசகப்
பாடல்களைப் பாட முன் அனுமதி, குறிப்பிட்ட நேரம், காலக்கெடு என்னும்
விதிகளுக்குட்பட்டு இசைவு என்பது போராட்டம் இப்போது அடைந்துள்ள விளைவின் எல்லை.
உண்மையில் போராட்டம் வெற்றியுடன் கூடிய முடிவுக்கு வந்துள்ளதா என்பதைப்
போராட்டத்தைத் தொடங்கியவர்கள்தான் சொல்ல முடியும். ஆனால், இங்கே போராட்டத்தை
எதிர்கொண்டவர்கள் சர்ச்சை முடிந்தது என்று அறிக்கைவிடுகிறார்கள்! நாத்திகர்களையும்
தன்னைப் பாடவைத்த நடராஜன் பெற்றவெற்றி இது என நிலைமையை ஆத்திகமயப்படுத்துகிறார்கள்.
சட்டையைக் கழற்றவைத்திருக்கிறார்கள். மாலையால் மயக்கி இருக்கிறார்கள். உண்மையில்
பிரச்சினை பெரிதாகிப்போய், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு பெருகித் தமிழகத்தின்
எல்லாக் கோயில்களையும் போல இதுவும் அறநிலையத் துறையின் கீழ் வந்துவிடுமோ என்ற
அச்சத்தில் இந்த அவசரம் நேர்ந்திருக்கிறது. அதனால்தான் வெள்ளைக் கொடிக்கு வேலை
வந்துவிட்டது. இதனால் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் மூடப்பார்க்கிறார்கள். சேது
சமுத்திரத் திட்டத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள், இதை மூடிமறைக்கப் பார்க்கும்
மர்மம் இதுதான்.
தமிழைத் தங்கள் கோயிலில் பயன்படுத்துவது பற்றி அறிக்கை மேல் அறிக்கைவிடுகிறார்கள்.
'சிறப்புப் பொருளாதார மண்டல'மாக இயங்கும் கோயிலைத் தங்களிடம் தக்கவைத்துக்கொள்ளவே
'தமிழே எங்கள் மூச்சு' என்கிறார்கள். மூச்சைத் தினமும் அரைமணி நேரந்தான்
விடுவார்கள்போலும்.
போராட்டக் காலத்தில் அரசாங்கம் தீவிரமாகச் செயல்படவில்லை. நேரெதிராக விளைவு மாறிவிட
அதிக வாய்ப்புள்ளது என்று அஞ்சி இருக்கலாம். ஆமாம் பிசாசுகள்
காத்துக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால், அரசு ஆணைப்படி நடந்து கொண்டவர்களையும் ஆணவமாக
நடந்துகொண்டவர்களையும் சரிநிகர் சமானமாக நடத்தியது நியாயமா?
இதில் ஆத்திகம், நாத்திகம் என்ற பிரச்சினை இல்லை. இது மொழிப் பிரச்சினைகூட அல்ல.
குறிப்பிட்ட புவியியல் பரப்பைச் சார்ந்த மனிதர்களின் பௌதீக இயக்கம் சார்ந்த
பிரச்சினை. அதில் சுயநலத்துடன் குறுக்கிடும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான உரிமை
சார்ந்த பிரச்சினை. அதிகாரத்தின் மேலாதிக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது
ஒன்றின் பேரால் நிகழும். நேற்று முன்தினம் அது மதமாக இருந்தது. நேற்று சாதியாக
இருந்தது. இன்று மொழியாக இருக்கிறது. நாளை வேறொன்றாக இருக்கும். ஆனால், அதை
எதிர்ப்பது எப்போதும் விடுதலையை நாடும் மனிதனின் இயக்கமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில், தமிழ்த் தெருவில், தமிழ் மக்கள் புழங்குமிடத்தில் தமிழர்கள் தமிழில்
வாய் திறக்க முடியாதென்பது அவமானங்களுள் ஒன்றுதான். இந்த அவமானத்தைத் துடைக்க
முயலும் எவரும் மனித உரிமைக்குத் தொண்டாற்றுபவர்களே.
n |