Google   www kalachuvadu.com

சிற்றிதழ் இயக்கம்
கவிதையில் எஞ்சும் காலத்தின் சுவடுகள்
க. மோகனரங்கன்

சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நுட்பமான வாசகர். பல வருடங்களாகச் சிறுபத்திரிகைகளைத் தொடர்ந்து படித்துவருபவர். குரலில் அதிருப்தி தொனிக்கச் சொன்னார். 'இப்போதெல்லாம் சிற்றிதழ்களில் துறைசார்ந்த கட்டுரைகள், கருத்தியல் அடிப்படையிலான விவாதங்கள், நாட்டு நடப்பு சார்ந்த விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்புகள் இவையே அதிகமும் காணப்படுகின்றன. படைப்பு இலக்கியத்திற்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு நல்ல சிறுகதையையோ கவிதையையோ இப்பத்திரிகைகளில் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அதிலும் கவிதைகளின் நிலைதான் மிகவும் கவலைக் குரியது. இதழ் வடிவமைப்பின்போது ஏற்படும் இடைவெளிகளை நிரப்புவதற்காக ஒருவகையான பக்கநிரப்பிகளாகவே இன்று கவிதைகள் உபயோகமாகின்றனவோ என்றுகூடப் பலசமயங்களில் சந்தேகம் வருகிறது.' சற்று மிகையாகத் தொனித்தாலும் அவர் கூற்றில் பேரளவு உண்மை இருப்பதாகவே எனக்கும் அப்போது தோன்றியது. எனவே, அவரது கருத்தை ஆமோதிக்கவும் செய்தேன். எதை எழுதினாலும் தேர்வுகளின்றி உடனடியாகப் பிரசுரமாகும் வாய்ப்பு இருப்பதனாலேயே இன்றைய எழுத்துக்களில் ஒரு சீரான தரத்தைக் காண்பது அரிதாகயிருக்கிறது என்றும் குறைபட்டுக்கொண்டார் அந்நண்பர்.

இப்போது, இக்கட்டுரைக்காகப் பழைய காலச்சுவடு இதழ்களை எடுத்துவைத்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில்தான் நண்பரின் கருத்தும் அதற்கான எனது ஆமோதிப்பும் எங்களுடைய மேலோட்டமான மனப் பதிவினின்று உருவானவை என்பது எனக்குப் புரிந்தது. மேலும், இத்தகைய அதிருப்தி தோய்ந்த வாசக எதிர்வினை என்பது எல்லாக் கால கட்டத்திலும் இருந்துவருகின்ற வழக்கமான ஒன்றுதான். காலச்சுவடு விமர்சனக் கூட்டங்களிலும் மதுரை (இதழ்: 16, டிசம்பர், 96), சேலம் (இதழ்: 17, ஏப்ரல். 97) கவிதைகளின் தரம் குறித்த இத்தகைய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

பெரும்பாலும் எந்தவொரு அபூர்வமான நிகழ்வும் அது நிகழும் சம காலத்தில் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நுண்ணுணர்வு கொண்ட சிலரது தொடர்ச்சியான மதிப்பீடுகளால் அது வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிய பிறகே, அவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டுப் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்குத் தமிழில் புதுக் கவிதையின் தோற்றத்தையே உதாரணமாகக் கூறலாம். எழுத்துவில் சி.சு. செல்லப்பா பரிசோதனை முயற்சியாகப் புதுக்கவிதைகளைப் பிரசுரிக்கத் தொடங்கியபோது, தமிழ் அறிவுலகம் அதைப் பொருட்படுத்தவே இல்லை. கழுதைப்புலி என்பதுபோல ஒரு வினோதமிருகமாகவே அதைக் கணித்துக் கேலி பேசிவந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் அது தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஒரு வடிவமாக உருவெடுத்தது மட்டுமின்றி மரபான செய்யுள் வகைமையையே வாசகர் கவனத்திலிருந்து வெளியேற்றவும் செய்துவிட்டது.

ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலில், டாக்டரும் எஸ். ஆர். எஸ்சும் ஒருமுறை சம்பத் பங்களாவிற்கு வருகிறார்கள். அங்கே வாயில் புகையும் சிகரெட்டுடன் ஜே.ஜே. எதையோ வரைந்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். என்ன வரைகிறான் எனப் பார்க்க நெருங்கிவரும் டாக்டரையும் எஸ்.ஆர். எஸ்சையும் சைகைகாட்டித் தடுத்து நிறுத்தும் ஜே. ஜே. கூறுகிறான். 'ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.' உண்மைதான். காலச்சுவடு தொடங்கி 20 ஆண்டுகள் கால இடைவெளியும் 100 இதழ்கள் தூர இடைவெளியும் இப்போது கிடைத்திருக்கின்றன. அவ்விடைவெளிகளில் நின்று, அவ்விதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் திரும்ப நோக்கும்போது, வரலாற்றின் எந்தக் காலகட்டத்தையும் போலவே இவற்றிலும் சில சோதனை முயற்சிகளும் சில சாதனை அளவுகளும் பல சாதாரண விழைவுகளும் கலந்தே இருப்பதைக் காண முடிகிறது.

தான் செயல்படும் காலம் மற்றும் களம் பற்றிய முன்னுணர்வும் புதிய முயற்சிகளுக்கும் ஆரோக்கியமான விவாதங்களுக்குமான தடையற்ற வெளியை உருவாக்குவதும் இளைய தலைமுறை எழுத்துக்களை அடையாளங்கண்டு வளர்த்தெடுக்கும் தன்மையும் ஒரு சிற்றிதழுக்கு அத்தியாவசியமான பண்புகளில் சிலவாகும். அவ்வகையில் கவிதையைப் பொறுத்துக் காலச்சுவடின் பங்களிப்பாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.

1. புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளுக்குப் பேரளவு இடந் தந்து (இவற்றுள் சில பிரத்யேகச் சிறப்பிதழ்களும் அடங்கும். இதழ் 52). தமிழகக் கவிதைப் போக்கிற்கு இணையானதொரு வலுவான தரப்பாக ஈழத்துக் கவிதைகளையும் முன்னிறுத்தியது. இவ்விரு போக்குகளின் உரையாடல்களினால் இரண்டு தரப்புமே பரஸ்பரம் பாதிப்பும் செழுமையும் அடைந்துள்ளன.

2. பெண்களின் அகவெளிப்பாட்டிற்கான தடையற்ற வெளியை உருவாக்கி ஊக்கம் தந்தமையை இரண்டாவதாகக் குறிப்பிடலாம். காலச்சுவடு 47ஆம் இதழ் பெண்கள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் முழுக்கவும் பெண்களின் கவிதைகளே இடம்பெற்றுள்ளன. தவிரவும் புதுமைப்பித்தன் நூற்றாண்டையட்டி இளம் பெண் கவிஞர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வென்ற எழுவரின் பத்துக் கவிதைகள் இதழ்79இல் வெளியிடப்பட்டுள்ளன. பிற இதழ்கள் எவற்றிலும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பெண்கவிகள் காலச்சுவடில் பங்கேற்றிருப்பதைக் காண முடிகிறது.

3. ஒரே கவிஞர்களுடைய பல கவிதைகளை மொத்தமாக ஒரே இதழில் வெளியிடுவது. இதன்மூலமாகப் பல இளம் கவிஞர்களுக்குக் கூடுதல் கவனமும் வெளிச்சமும் கிடைக்கும்படி செய்தது. (எ.கா.: பழனிவேள், அய்யப்ப மாதவன், கவிதா, மௌனன் . . .)

4. மாறுபட்ட முனைப்புகளைக் கொண்ட பல்வேறு தரப்பினரும் பங்குபெறும் தளமாகக் காலச்சுவடு இயங்கியது மற்றொரு சிறப்பு. இதனால், இதில் வெளியான கவிதைகள் இயல்பாகவே வடிவத்திலும் அழகியலிலும் தொனியிலும் பார்வையிலும் பன்முகத் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன. இதைத் தவிர முதல் ஐம்பது இதழ்களில் வெளியானவற்றினின்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்றும் (தொகுப்பாசிரியர்: சிபிச்செல்வன்) வெளிவந்துள்ளது. இதில் ஈழக் கவிஞர்கள், பெண் கவிஞர்கள் உட்படத் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தலை முறைக் கவிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பலவிதமான அனுபவம், வாசிப்பு, சமூக, அரசியல் பார்வை கொண்டவர்களாதலால், இதிலடங்கியுள்ள கவிதைகளை அக்காலச் சூழலையும் போக்கையும் பிரதி பலிக்கும் ஒரு வகை மாதிரித் தொகுப்பாகக் கொள்ள முடியும். இத்தகைய வண்ண வேறுபாடுகளையும் குரல் மாறுபாடுகளையும் இதற்கு முன் வந்துள்ள வேறு இதழ்களின் கவிதைத் தொகுப்புகளில் காண முடிவதில்லை.

கவிதையின் பாடுபுலங்களையும் உணர்வுநிலைகளையும் அகம், புற மென்றும் அறம், பொருள், இன்பம் என்றும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றும் தெளிவாக வகைப்படுத்திக்கொண்டு அன்று எழுத முடிந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள். இன்றோ நெருக்கடியான காலத்தில் பதற்றமான மனநிலையுடன் வாழும் கவிஞனின் உணர்வுகளும் அறிவும் குழம்பிய நிச்சயிக்க முடியாத நிலையில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று அவன் கவனத்திற்கு எட்டாத அறிவுத் துறையென்று எதுவும் இல்லை. அதே சமயம் எதைப் பற்றியும் முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்வதற்கான அவகாசமும் மனநிலையும் அவனுக்குக் கிடைப்பதில்லை. இன்றைய கவிஞனின் குரல் ஒழுங்குபடுத்தப்பட்டதோ செறிவூட்டப்பட்டதோ அல்ல. மாறாகச் சிதறடிக்கப்பட்ட ஒன்று. தற்காலக் கவிதைகளில் புலப்படும் அவசரமும் நிம்மதியின்மையும் கலங்கிய தன்மையும் கவிஞனுடையது மட்டுமல்ல. காலத்தினுடையதும்தான். எனவேதான், இக்கவிதைகளை ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு வகைப்பாட்டிற்குள் கொண்டுவரச் சிரமப்படும் ஒரு வாசகன் இவற்றின் தரம் குறித்த சந்தேகத்தை எழுப்பும்படியாகிறது. இதழ் 24இல் வெளிவந்த சங்கரராம சுப்ரமணியனின் பின்வரும் கவிதையை நோக்குவோம்.

எங்கிருந்து புறப்பட்டு நகரெங்கும் பரவுகிறார்கள் / இந்த விற்பனைப் பிரதிநிதிகள் / கழுத்துப் பட்டையை ஓயாமல் / சரி செய்துகொண்டு / காலை வணக்கம் ஐயா / நாங்கள் சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் / . . . / சரி ஐயா / உங்கள் சிரமம் புரிகிறது / தொந்தரவுக்கு மன்னிக்கவும் / உங்கள் நாயைக் கொஞ்சம் பிடித்துக்கொள்ளுங்கள் / நாங்கள் வெளியேறுகிறோம். / ஒரு வரவேற்பறையில் யாரோ தெரிய கதவை / மென்மையாகத் திறக்கிறார்கள்

காலை வணக்கம் ஐயா/

நாங்கள் சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் / . . .

படிமம், உவமை போன்ற அழகுகளையெல்லாம் விலக்கிக்கொண்டு வெளிப்படும் இக்கவிதையில் காட்சியும் அதையட்டிய பார்வையாளன் ஒருவனின் யோசனையும் காட்சிக்குள் வரும் விற்பனைப் பிரதிநிதிகளின் குரலும் ஒன்றின் மேல் ஒன்று படிந்து காணப்படுகின்றன. 70களின் இறுதியில் வெளியான ஞானக்கூத்தனின் 'விடுமுறைதரும் பூதங்கள்' கவிதையை ஒப்பிட்டால் காலத்தின் அவசரம் கவிதை வெளிப்பாட்டில் கொண்டு சேர்த்திருக்கும் மாற்றங்களை ஒருவர் உணர முடியும்.

'தாண்டவ மூர்த்திக்கு கால் சுளுக்கு / தொடங்கிவிட்டது முயலக நடனம்'

இது யுவன் கவிதையன்றின் தொடக்கம் (இதழ் 22) படித்தவுடன் முதலில் எழும் புன்னகையை ஒதுக்கிவிட்டு, உற்றுப்பார்த்தால் பச்சையான யதார்த்தம் ஒன்றும் தெரியும். அது ஆடலரங்கில் தாண்டவ மூர்த்திகளின் காலம் முடிந்துவிட்டது என்பதுதான். அரசியல் தொடங்கி இலக்கியம் ஈறாகச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஒரு படித்தான மைய அதிகாரமென்பது சிறிது சிறிதாக நகர்ந்துவருகிறது. இதுகாறும் அடக்கி ஒடுக்கிவைக்கப்பட்ட குரல்கள் மேலெழுந்து வரவும் தொடங்கிவைக்கிறது முயலக நடனம். இதனால், ஆட்டம் மட்டுமல்ல ஆட்டவிதிகளும்கூட மாறுகின்றன. அதனால், முந்தைய இலக்கணங்களையும் விதிகளையும் துறக்க முயல்கிற கவிதைகளே இன்று எழுதப்படுகின்றன.

'எதுவும் எழுதுவதில்லையா எனக் கேட்கும் / இலக்கிய நண்பனே! /. . . / உனக்காக / என் மூளையிடமும் கேட்டுப் பார்த்தேன் / இதுவே கடைசி வார்த்தைகளென / அது தந்தது இதுதான் / 'பிணத்தின் தலையிலிருந்து / வெளியேறும் பேன்கள்'

என்கிற பாதசாரியின் சொற்கள் (இதழ் 29) கவிதையின் இடத்தை அதன் மரபான புனிதத்தைக் கேலிசெய்கின்றன.

சுந்தர ராமசாமி கவிதை எனும் விந்தை என்ற தன் உரையில் (இதழ்: 64) 'ஒரு மொழியில் கவிதை வளர்ச்சி பெற வேண்டுமானால், அந்த மொழியில் புதிதாக வரும் கவிஞர்கள் அவர்களுக்கு முந்தைய கவிஞர்களின் அழகுகளைக் கூசாமல் துறக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்' என்கிறார். புதிதாக எழுதுபவர்களில் பலர் உணர்ந்தோ அல்லது தன்னியல்பாகவோ அத்தகைய புதிய அழகுகளைப் பாடுபவர்களாகவே அமைந்திருக்கிறார்கள்.

தன் கவிதையன்றில் பெண் விழிகளைக் குறிப்பிடவரும்போது, விருந்தினர் விட்டுச் சென்ற குவளையில் மீதமிருக்கும் பானம் போல மிதக்கும் கண்கள் என்று உவமிக்கிறார் ந. ஜயபாஸ்கரன் (இதழ்: 26). இது ஒரு மரபுத்தொடர்ச்சியான பார்வைதான். ஆயினும், அடுத்த தலைமுறை இக்கண்ணோட்டத்தினின்றும் விலகி வெகுதூரம் வந்து விடுகிறது. அவருடைய அழகுணர்வும் வெளிப்பாட்டு மொழியும் எவ்வித உணர்ச்சித் தழுதழுப்பையும் ஐயுறுவதாகவும் அவற்றைத் தம் வரிகளில் அனுமதிக்காத ஒன்றாகவுமே இருப்பதை உணர முடிகிறது.

உனக்காக / எந்தக் காதல் கடிதமும்/ எழுதப்படாத எனது அறைகளிலிருந்து / பரவுகிறது காய்ந்த விந்தின் நெடி

லஷ்மி மணிவண்ணன்
(இதழ் 19)

கடிதம் எழுதிவிட்டுக் காத்திருக்கச் சாத்தியமில்லாத அவசரம் மட்டுமல்ல காதலிலிருந்து காமத்தை அடைவதற்கான இயல்பான தூரமும்கூட இவ்வரிகளில் அழிக்கப்படுகிறது. சென்ற தலைமுறைவரையிலும் கூடப் புனிதமாகப் பார்க்கப்பட்டவற்றின் மீதும் சஞ்சலத்தின் கருநிழல் படிந்துவிட்டது. இத்தலைமுறை பிறக்கும்போதே சந்தேகத்தின் கண்களோடுதான் பிறக்கிறதுபோலும்.

கபடங்கள் புரியாத வயதுகளை / சிதைத்துக் கொன்ற

வக்கிரங்களின் நிழல் பிடியிலிருந்து / இன்னும் மீளவில்லை எனது இரவுகள்

இப்போது என் பகல்களிலும் /

படரத் தொடங்கிவிட்டது அந்த நிழல், / நேற்று தோளில் விழுந்த ஒரு கை / கீழிறங்கிவிடுமோவென / பயம் துளிர்த்த நொடியிலிருந்து.

யாழினி
(இதழ் 50)

இத்தகைய வக்கிரங்கள் சமூக வாழ்க்கை தொடங்கிய நாளிலிருந்தே நடந்துகொண்டுதானிருக்க வேண்டும். ஆனால், இது போன்ற ஒரு குரல் ஒலிக்கும் சாத்தியம் தமிழ்க் கவிதைக்கு இப்போதுதான் கூடியுள்ளது.

'மீன் தண்ணீரை அறிவதில்லை' என்பதைப் போலவே அரசியல், திரைப்படம் குறித்த எதிர்வினைகள் தமிழ்க் கவிதைகளில் முழுவீரியத்துடன் இடம்பெறவில்லை. ஆத்மா நாம், ஞானக்கூத்தன், கலாப்பிரியா ஆகியோர் கவிதைகளில் சில தருணங்களில் இடம்பெற்றாலும் அவை ஒப்பீட்டளவில் குறைவானவையே. அவ்விதத்தில் இதழ் 36இல் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் 'அரசி' கவிதை முக்கியமானது. அக்கவிதை எழுதப்படவும் வாசித்துப் பொருள்கொள்ளப்படவும் காரணமாக அமைந்த சூழல் மாறிவிட்டிருந்தாலும் அக்கவிதை தன்னளவில் தனித்த இருப்புக் கொண்டதாகவே இருப்பது அதன் சிறப்பு.

அதுபோலவே, காலச்சுவடில் வெளியான சல்மா மற்றும் சுகிர்தராணியின் கவிதைகளையட்டிச் சர்ச்சைகளும் பரவலான விவாதங்களும் எழுந்தன. ஒருவிதத்தில் அவை பெண்கவிகளின் தனித்தன்மை, அரசியல், சுதந்திரம் முதலியவை குறித்த ஒரு புரிதலை உருவாக்குவதாகவும் அமைந்தன. அவ்வகையில் காலச்சுவடில் (இதழ் 70) வெளியான மாலதி மைத்ரியின் விலக்கப்பட்ட குருதி I, II ஆகிய இரு கவிதைகளையும் தனித்துக் குறிப்பிட வேண்டும். இக்கவிதைகளில் உமை, மீனாட்சி என்ற புராணிகத் தொன்மங்களை மாலதி மிகவும் பொருத்தமாகவும் அழகுணர்வோடும் பயன்படுத்தி இருப்பதனால் கவிதை உணர்த்தும் விஷயம் எவ்வளவு அழுத்தத்துடனும் கவித்துவ வீச்சுடனும் வெளிப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது.

இதைப் போலவே காலச்சுவடில் வெளியான ஈழத் தமிழ்க் கவிதைகளைப் பற்றியும் தனித்துக் குறிப்பிட வேண்டும் 'நிலா எரித்துக் குடிசைகள் சாம்பலாயின' என மஜித் ஒரு கவிதைக்குத் தலைப்பிடுவதையும் 'மூடப்படும் படை வீடு' தரும் ஆறுதலைப் பற்றி சோலைக்கிளி பாடுவதையும் புரிந்துகொள்ள ஈழத்தின் யதார்த்தம் பற்றிய நுண்ணுணர்வு நமக்குத் தேவை.

எங்களுடைய காலத்தில்தான் /ஊழி நிகழ்ந்தது / ஆழிக்கூத்தில் நிலம் நடுங்கிப் / பேய் மழையில் உடல் பிளந்து / உள்ளும் வெளியும் தீ மூள / இருளின் அலறல்

...... காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துக்களைத் / தீயிலிட வாய்க்கவில்லை / ஆனால் சிவரமணி எரித்துவிட்டாள் / அந்தர வெளியில் கவிதை அழிகிறது / ......

சேரன்
(இதழ் 27)

என்று எழுதும்போது போர், இனம், மொழி, தேசம் என எல்லா எல்லைகளையும் கடந்து மனித நாகரிகம், அறம் இவற்றின் பெறுமானம் என்ன என்பது பற்றிய நடுங்கும் கேள்விகளுக்குள் கவிதை நம்மை இழுத்து நிறுத்திவிடுகிறது.

இவை தவிர நூல் விமர்சனம், கட்டுரைகள், எதிர்வினைகள், விவாதங்கள் எனப் பல்வேறு வடிவங்களிலும் கவிதை பற்றிய பேச்சுகள் இந் நூறு இதழ்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் பதிவாகியிருப்பதைக் காணமுடிகிறது. பசுவய்யா, எம். ஏ. நுஃமான், ராஜமார்த்தாண்டன், சுகுமாரன், பிரம்மராஜன், பிரேம் ரமேஷ், பெருந்தேவி, ஆனந்த், குவளைக் கண்ணன் முதலியோர் இவ்வகையில் பங்காற்றியுள்ளனர்.

நேர்காணல், கட்டுரைகள், புனை கதை என வேறு பல வகைமைகளில் அழுத்தமாகப் பதிவுபெற்றிருப்பினும், கவிதைகளைப் பொறுத்தவரையிலும் தலித் அழகியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் குரல்கள் போதுமான அளவு காலச்சுவடில் இடம்பெறவில்லை என்பதை ஒரு முக்கிய விடுபடலாகச் சுட்டத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்தத்தில் ஒரு இலக்கிய இதழ் என்ற வகையில் கவிதைக்கான தனது பங்களிப்பை ஆக்கபூர்வமாகவும் பொறுப்புணர்வோடும் ஜனநாயகத்தன்மையுடனும் காலச்சுவடு நல்கியுள்ளது.

உள்ளடக்கம்