Google   www kalachuvadu.com

சு.ரா. பக்கங்கள்
புலமையின் அம்மணம்
சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த சிறுகதையின் 'கரட்டு வடிவம்' இது. செம்மைப்படுத்தாத நிலையில் நோட்டுப் புத்தகத்தில் இருந்தவாறு இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொற்கொடிக்கு ஏழெட்டு வயதிற்குள்தான் இருக்கும். இந்த வயதில் அவள் 'திருக்குறள் செல்வி' என்று முதலமைச்சரிடமிருந்து பட்டம் பெற்றது ஆச்சரியம்தான். அவளுடைய புகைப்படங்களைத் தினசரிகள் வெளியிட்டிருந்தன. தொலைக்காட்சிப் பேட்டியில் அவள் செந்தமிழில் கணீரென்று பேசினாள். தனக்கு வாழ்வு தந்தவர் என்று சொல்லி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தாள். திருக் குறளைக் கற்றுத் தந்தது. தமிழ்ப் புலமை பெற்றிருக்கும் தனது தாய் என்றும் ஊக்குவித்தது பள்ளித் தலைமையாசிரியரும் பாட்டனாரும் பாட்டியும் தந்தையும் சொந்தமும் சுற்றத்தினரும் என்று சொன்னாள். அயலில் வாழும் தமிழர்களிடமிருந்து ஐரோப்பா போவதற்குத் தனக்கு அழைப்புக் கிடைத்திருக்கிறது என்றும் கிறிஸ்துமஸ் லீவில் போகிற வழியில் இந்தியப் பிரதம மந்திரியைப் பார்த்துச் சில குறள்களை ஒப்பிக்கப் போவதாகவும் சொன்னாள்.

பொற்கொடியின் தந்தை மணிகண்ட சிவனும் நானும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்தில் மணி கண்ட சிவனை ஒரு முக்கியமாகக் கருதியதே இல்லை. அதனால் அவனுடைய மகள் இவ்வளவு புகழ் பெற்றது எனக்குப் பெருமையாகவே இருந்தது. பொற்கொடிக்கு மழலை தெளிவதற்குள் சிவனின் மனைவி தன் குழந்தைக்குத் திருக்குறள் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டாள். 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தொடங்கும் குறளை, குழந்தை பதினைந்து நிமிஷங்களுக்குள் கற்றுக்கொண்டுவிட்டதாம். இதைச் சொல்லி சிவன் மிகவும் சந்தோஷப்பட்டான். பத்திரிகைப் பேட்டியில் சிவன் 'பத்து நிமிடங்க'ளில் என்று சொல்லியிருந்தது கவனக்குறைவால் நேர்ந்த தவறாகத்தான் இருக்க வேண்டும். அதன்பின் எனக்கும் சிவனுக்கும் உறவு கொஞ்சம் நெருங்கிற்று. தன் மகளை முன்னுக்குக் கொண்டுவருவதுதான் தன் வாழ்வின் குறிக்கோள் என்பது போல் இரவு பகலாக உழைக்கத் தொடங்கினான். சிவனின் உடம்பு அலைச்சலிலும் உரிய நேரத்திற்கு உணவு கிடைக்காமலும் மெலியத் தொடங்கியிருந்தது. இது பற்றி நான் அவனைச் சந்திக்கும் போதெல்லாம் விசாரித்துவந்தேன். அவ்வாறு விசாரிக்கிறபோது அவன் முகத்தில் சந்தோஷம் பரவும். வள்ளி - பெண்ணின் செல்லப் பெயர் - அரங்கேற்றம் செய்வதுவரையிலும் தனக்கு ஊணும் உறக்கமும் வேண்டாம் என்று அவன் சொன்னான். இது தவிர ஒவ்வொருமுறை என்னுடன் பேசும்போதும் ஒரு பெரிய மனிதரின் பெயரைச் சொல்லி அவரைப் 'பிடிக்க' வழியுண்டா என்று கேட்பான். ஒவ்வொரு தடவையும் அவன் தவறாமல் இந்தப் 'பிடிக்க' என்ற சொல்லைப் பயன்படுத்துவது எரிச்சலைத் தந்தாலும் அதை அவன் சொல்வதை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆசையையும் தந்து கொண்டிருந்ததால் அதற்கான சந்தர்ப்பத்தை நான் செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருந்தேன். இவ்வாறு பலரையும் 'பிடிக்க' எத்தனை தடவை அவன் சென்னை சென்றான் என்பதைச் சொல்ல முடிந்தது.

அவ்வாறு அவன் சென்னை சென்ற நேரத்தில் அவன் சந்திக்க நேர்ந்த தாய¢ப் பற்றும் தமிழ்ப் பற்றும் மிகுந்த ஒரு உயர் பதவியாளர், ஒருசில குழந்தைகள் திருக்குறளை முழு¬மாக ஒப்பித்துப் பாராட்டுப் பெற்றிருப்பதாகவும் ஆனால் எந்தக் குழந்தையும் இதுவரையிலும் தலைகீழாக ஒப்பித்தது இல்லையென்றும் சொன்னார். மணிகண்ட சிவன் அது பற்றித் தான் சந்திப்போரிடமும் சொல்லச் சொல்ல அநேகமாக எல்லோருமே அந்த ஆலோசனையை வியந்து பாராட்டினார்கள். ஆனால் வள்ளிக்கு நேராகப் படிக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டதோ அதைவிட அதிகக் கடினமாக இருந்தது தலைகீழாக ஒப்பிக்கக் கற்றுக்கொள்வது. ஆனால் சிவனின் மனைவி நம்பிக்கையுடன்தான் இருந்தாள். வல்லாரை அன்றாடம் சாப்பிட்டு வருவதால் வள்ளியின் நினைவாற்றலும் வளர்ந்துகொண்டே வருகிறது என்றான். எந்த அதிகாரத்தின் பெயரைக் குறிப்பிட்டாலும் அந்த அதிகாரத்தை அவள் கூறுவதற்கான பயிற்சி நடந்துகொண்டிருப்பதாகவும் அது முடிந்ததும் எந்தக் குறளின் முதல் சொல்லைச் சொன்னாலும் அதைப் பூர்த்திசெய்து சொல்லவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றான். யார் சொன்னாலும் சரி, ஒவ்¢வொரு குறளையும் தலைகீழாகச் சொல்லித் தருவதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு முயன்றால் குழந்தையின் மூளைக்கு உபாதை ஏதும் ஏற்படக்கூடும் என்றும் நான் சொன்னேன்.

இவ்வாறு வள்ளிக்குப் பயிற்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் பல தடவை மணிகண்டன் அழைத்து அவன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். குழந்தை கற்றுக்கொண்டிருந்த குறளை என்னிடம் சொல்லிக்காட்டச் சொல்வான். குழந்தை சொல்லத் தொடங்கும்போது ஒவ்வொரு தடவையும் மணிகண்டன் ஓடிச் சென்று வாசல் கதவைச் சாத்திவிட்டு வருவான். இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. கேட்டதற்கும் அதைப் பின்னால் ஒரு நாள் சொல்வதாக மணிகண்டன் சொன்ன தோரணையில் அது ஒரு மிக முக்கியமான விஷயம் என்ற பதிவை என் மனத்தில் அவனுடைய கமுக்கமான முகபாவனையால் ஏற்படுத்தினான்.

அந்தக் காலத்தில் மணிகண்டனின் குழந்தை பல கஷ்டங்களுக்கு ஆளாயிற்று. வகுப்பில் ஆசிரியர் அவளுடைய திருக்குறள் ஆற்றலைச் சதா புகழ்ந்து பேசிக்கொண்டுவந்தார். முதலில் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இது ஆச்சரியமான விஷயமாகத்தான் இருந்தது. பொற்கொடியை இதுவரையிலும் பார்த்திராததுபோல் சக மாணவிகளும் மாணவர்களும் பார்த்தார்கள். அவர்களுக்கு அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவள் நடப்பதிலும் பேசுவதிலும் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்துவருவதாக அவளுக்குத் தோன்றியிருந்தது. சதா சிரித்துக்கொண்டு கலகலவென்று பேசிக்கொண்டு அங்கும் இங்கும் பஞ்சு விதைபோல் பறந்துகொண்டிருந்தவள். அவள் முகம் இறுக்கமாகிவிட்டிருந்தது. திருக்குறளை முழுமையாகக் கற்ற ஒரு பெண் எப்படிச் சிரிக்க வேண்டும் எப்படிப் பார்க்க வேண்டும் அவள் தனது நடையுடை பாவனைகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் தமக்குத் தெரியாமல் இருப்பது அவள் மனதிற்குள் குமைந்துகொண்டிருந்தது. எப்படிச் சிரித்தாலும் அது திருக்குறள் பண்டிதைக்கு ஏற்ற சிரிப்பு அல்ல என்று அவளுக்குத் தோன்றிற்று.

ஒரு நாள் 'குழந்தை சிரமப்படுகிறது' என்றான் மணிகண்டன் என்னிடம். பின்பக்கம் நின்றுகொண்டிருந்த தன் மனைவியின் காதில் விழுந்துவிடுமோ என்ற கவலையில் அவளைப் பார்த்தபடியே என்னைப் பார்க்காமல் சொன்னான். தெரு வழியாக நடந்து போகிறபோது திடீரென்று ஒருவர் எதிர்ப்பட்டு, 'மெய் கூறுதல்' அதிகாரம் மட்டும் சொல்லம்மா என்கிறாராம். பள்ளிக்கூடக் குழந்தைகள் அவளிடமிருந்து விலகிவிட்டதாகவும் யாரும் அவளைப் பாண்டியாடச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும் எப்போதும் முகத்தில் வாட்டத்துடன் தனிமையில் உட்கார்ந்துகொண்டிருப்பதாகவும் சொன்னான். இந்தப் பேச்சையெடுத்தாலே மனைவி எரிந்துவிழுவதாகச் சொன்னான். புள்ளயெ முன்னுக்கு வர விடமாட்டீங்க என்கிறாளாம். என்னதான் குறையிருந்தாலும் முதலமைச்சர் அவளுக்குப் பட்டமளித்துப் பாராட்டும்போது அந்தக் குறையெல்லாம் நம் மனதைவிட்டுப் போய்விடுமென்றும் அவன் சொன்னான்.

குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துவிட்டால் குழந்தைக்கு ஒரு நிவர்த்தி ஏற்படலாம் அல்லது அவளது துன்பம் கூடினாலும் கூடலாம்.

பட்டமளிப்பு விழாவன்று அவளிடம் கேள்வி கேட்டு அவளது புலமையைச் சோதிப்பதற்கு மிகப் பெரும் புலவர் ஐவர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஐந்து பேரையும் மணிகண்ட சிவன் தனித்தனியாகப் பார்த்தான். எல்லோரும் அவனுடைய முயற்சியைப் பாராட்டினார்கள். தலைகீழாகச் சொல்வதுதான் முக்கியமானதும் புதுமையானதுமான சோதனையென்றும் புலமைக் குழுவினர் சொன்னார்கள். திருக்குறளில் எந்தெந்த இடத்தைப் பிடித்து அறிஞர்கள் குழந்தையை மடக்கப் பார்ப்பார்கள் என்பது அவர்களது கோடி காட்டல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்ற எதிர் பார்ப்பு மணிகண்டனுக்கு இருந்தது. சுற்றிவளைத்துப் பேசினாலும்கூட அவனுடைய நோக்கத்தை அறிந்து தமிழன்னையை ஏமாற்றுவது முறையல்ல என்று அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் என்று மணிகண்ட சிவன் என்னிடம் சொன்னான். என்ன திமிர் என்றான்.

சிவனும் அவன் மனைவியும் திருக்குறள் அரங்கேற்றத்திற்கு நானும் வர வேண்டும் என்றார்கள். சுசீந்திரம், தேரூர், செண்பகராமன்புதூர், தோவாளை, பறக்கை, பூதப்பாண்டி போன்ற இடங்களிலிருந்து சுமார் ஐம்பது பேர் வரையிலும் வரவிருக்கிறார்கள் என்று சொல்லி என் ஆசையைத் தூண்டினான் மணிகண்டன். நான் வராமலிருந்துவிடுவேனோ என்ற எண்ணம் கணவன் மனைவிக்கும் இருந்தது. ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது வள்ளியே என்னை அழைத்தாள். அன்பு வழிய என்னை மாமா போட்டுக் கூப்பிடுகிறவள். ஆனால் மாமன் என்று அவள் அழைத்தது எனக்கு உள்ளூர . . . நல்ல குழந்தை நாசமாகப் போகிறதே என்று நினைத்தேன். ஆனால் மனது நெகிழ்ந்துவிட்டது. அவசியம் வருவேன் என்று சொன்னேன். 'நன்றி' என்றது குழந்தை.

சென்னையில் சோதனை நடந்த இடத்தில் என்னால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. சோதனை நடக்கிறபோது என் சதையைப் பிய்த்து எடுப்பதுபோல் இருந்தது. புலவர் குழுவைச் சேர்ந்தவர்கள் மாறி மாறிக் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தை ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையைப் பகிர்ந்தபோது கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரித்தனர். கடைசியாக முதலமைச்சர் எழுந்திருந்து முகத்தில் மந்தஹாசத்துடன் சில கேள்விகளைக் கேட்டார். குழந்தை சிறிதும் பயப்படாமல் பதில் சொன்னதும் கரவொலி கொட்டகையை அதிரச் செய்தது.

சோதனை முடிந்ததும் சிவனையும் அவன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க நான் விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுற்றியிருந்த கூட்டத்தினர் அவர்கள் பக்கத்தில் என்னை நெருங்க விடவில்லை. புகைப்படக்காரர்கள், கேள்விகள் கேட்டுப் பதில் எழுதிக்கொள்ளும் பத்திரிகைக்காரர்கள், பாராட்டும் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், மாலை அணிவிப்பவர்கள். பயில்வான் போல் இருந்தவர் திடீரென்று உள்ளே புகுந்து குழந்தையைத் தூக்கி வலது கை உள்ளங்கையில் ஏந்தி கையை வானை நோக்கிப் பிடித்து பாலன்ஸ் செய்தார். கூட்டத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

மணிகண்ட சிவன் எக்மூரில் தங்குமிடத்தை என்னிடம் சொல்லியிருந்தான். மாலை ரயிலில் அவர்கள் போக இடையூறாக இல்லாமல் முன்கூட்டியே போய்விட வேண்டும் என்ற யோசனையில் ஓட்டல் அறைக்குப் போனேன். மணிகண்ட சிவனும் அவன் மனைவியும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். குழந்தை மின்விசிறிக்கடியில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தது.

குழந்தைக்குக் கிடைத்த பாராட்டுக்களில் தாயும் தகப்பனும் பூரித்துப் போயிருந்தனர். தலைக்கு நாள் சம்பவங்களை ஒருவரைச் சொல்லவிடாமல் மாறிமாறிக் கூறிக்கொண்டிருந்தனர். அரசாங்கச் செலவில் குழந்தையைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசையும் முதலமைச்சருக்கு இருக்கிறதாம். காலை இதழில் வராத பல செய்திகளை என்னிடம் கொண்டிருந்த நெருக்கத்தால் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நான் புறப்படட்டுமா என்று கேட்டேன். என்னை விட இருவருக்குமே பிரியம் இல்லை. ஒரு சில விஷயங்களேனும் என்னிடம் சொல்ல விட்டுப்போயிருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது.

'குழந்தையை எழுப்பு' என்று தனக்குத் தெரியாமல் வெளிப்பட்ட அதிகாரக் குரலில் சொன்னான் மணிகண்டன்.

குழந்தை சிணுங்கிற்று. அதன் போக்கில் விட்டால் இன்னும் ஐந்தாறு மணி நேரமேனும் தூங்கும் என்று தோன்றியது. அவ்வளவு களைப்புப் போலிருக்கிறது.

'ரயிலில் நல்லா தூங்கலாம்.'

பலாத்காரமாக எழுப்பிக் குழந்தையைக் குளிக்க அழைத்துக்கொண்டு போனாள். குளியலறையில் தண்ணீர் விழும் சத்தமும் வாளியின் கைப்பிடி விழுவதில் எழும் ஓசையும் கேட்டது.

பாக்கியத்தம்மாள் அவள் உடுத்திக்கொள்ள வேண்டிய ஆடைகளைப் பெட்டியிலிருந்து எடுத்துப் படுக்கை மீது வைத்தாள். விலையுயர்ந்த ஆடைகள். அன்பளிப்பாகக் கிடைத்திருக்கலாம்.

திடீரென்று குழந்தை தாயின் அருகே நின்றது. பாக்கியத்தம்மாள் திரும்பிப் பார்த்தாள். படீரென்று பொற்கொடியின் புட்டத்தில் ஒரு அடி விட்டாள்.

மாமனுக்கு முன்னுக்கு அம்மணத்தோட வரயா நாயே என்று சொல்லியவாறு குழந்தையைக் குளியலறைக்கு இழுத்துக்கொண்டு போனாள்.

நான் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

19.05.2003, திங்கள்கிழமை

ஓவியங்கள்: கலை

உள்ளடக்கம்