|
செல்வியின் குரலிலும் செயலிலும் முன்பைவிட அதிக உற்சாகம் தெரிகிறது.
"மலாய்க்காரர்கள் இப்போது அதிக நட்புடன் என்னைப் பார்க்கிறார்கள்.
புன்னகைக்கிறார்கள். நேற்று ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பவர், 'மக்கள் சக்தி
எப்படி இருக்கிறது' என விசாரிக்கிறார் என்றார் செல்வி.
மலேசிய அறவாரியம் ஒன்றில் பணிபுரியும் 22 வயது செல்விக்கு, மலேசியாவில் 'இனி ஒரு
விதி செய்ய முடியும்' என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் வலிமையை ஆளும்
அதிகாரவர்க்கம் முதல் தோட்டப்புறத்தில் வாழும் கல்வியில்லாத பாமர மக்கள்வரை
அனைவருக்கும் உணர்த்தியுள்ளது அண்மையில் நடைபெற்ற மலேசியத் தேர்தல்.
"அரசியல் சுனாமி" என்று மலேசியப் பத்திரிகைகள் வர்ணிக்கும் இந்தத் தேர்தல், கடந்த
ஐம்பது ஆண்டுகளாகத் தன்னிகரற்ற வலிமையுடன் நாட்டை ஆண்டுவந்த ஆளுங்கூட்டணிக்குப்
பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. இதுவரை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
பெற்றுவந்த ஆளுங்கூட்டணியான தேசிய முன்னணி நடந்து முடிந்த தேர்தலில் 222 நாடாளுமன்ற
இடங்களில் 140 இடங்களையே பெற்றது. கடந்த 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இக்கூட்டணி
பெற்றிருந்த இடங்கள் 198. அத்துடன் மார்ச் 8ஆம் தேதி போடப்பட்ட 7.9 மில்லியன்
வாக்குகளில் 51% வாக்குகளை மட்டுமே இந்தக் கூட்டணி பெற்றிருக்கிறது. மேலும் 13
மாநிலங்களில் ஐந்தை இழந்துள்ளது. 1969க்குப் பிறகு ஆளுங் கூட்டணி சந்தித்திருக்கும்
மிகப்பெரும் தோல்வி இது.
"ஆளும் கட்சியின் பெரும்பான்மையை முறியடிக்க வேண்டும் என்றுதான் போராடினோம். இதில்
மக்கள் சக்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது" என்றார் பினாங்கின் துணை
முதல்வராகப் பதவியேற்றிருக்கும் டாக்டர் பி. ராமசாமி. முக்கிய எதிர்க்கட்சிகளில்
ஒன்றான ஜனநாயகச் செயல் கட்சி (ஞிகிறி) சார்பாகப் போட்டியிட்டுச் சட்டமன்றத்
தொகுதியிலும் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்றிருக்கும் இவர், மலேசியாவின்
துணை முதல்வரான முதல் இந்தியர், தமிழர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவர்
மலேசியப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
இந்தப் பெரும் மாற்றத்துக்கு மலேசிய இந்தியர்களின், முக்கியமாகத் தமிழர்களின்,
எழுச்சியும் ஒரு காரணம். அமைதியான முறையில் இவர்கள் நடத்திவரும் உரிமைப் போராட்டம்,
மலேசிய மக்களின் கவனத்தை மட்டுமின்றி, அனைத்துலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தனை ஆண்டு காலமாக அடிநிலையில் இருந்து வந்த மலேசியத் தமிழர்கள் நிலைமை
இப்போதுதான் உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
எனினும், 27 மில்லியன் மக்கள் தொகையைக்கொண்ட மலேசியாவில் 7 விழுக்காட்டினராக
இருக்கும் இந்தியரின் வாக்கு இல்லாமலேயே தேர்தலில் இந்திய வேட்பாளர்கூட வெற்றி
பெற்றிருக்க முடியும். ஆனால், "மக்கள் சக்தி" என்ற பெயரில் இந்திய அமைப்புகள்
ஒன்றுசேர்ந்து ஏற்படுத்திய முழக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொள்கைரீதியாக
வேறுபட்டிருக்கும் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளான அன்வரின் மக்கள் நீதிக்
கட்சி (கேடிலான்), ஜனநாயகச் செயல் கட்சி (ஞிகிறி), மலேசிய இஸ்லாமியக் கட்சி
(றிகிஷி) ஆகியவை ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டன. தங்களது
பிரச்சாரத்துக்கு இந்திய முகங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டன. பாரம்பரிய
இஸ்லாமியக் கட்சியான பாஸ் கட்சி, முதல்முறையாக ஓர் இந்துப் பெண்ணைக் களத்தில்
இறக்கியது. ஹிண்ட்ராப் அமைப்பின் [பிவீஸீபீu க்ஷீவீரீலீts ணீநீtவீஷீஸீ யீஷீக்ஷீநீமீ
(பிமிழிஞிஞிஸிகிதி)] வழக்கறிஞர் சிவநேசன், தடுப்புக் காவலில் இருக்கும்
ஹிண்ட்ராப்பின் முக்கிய உறுப்பினரும் வழக்கறிஞருமான மனோகரன் மலையாளம் ஆகியோரும்
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.
"தேர்தலில் தேசிய முன்னணிக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்காது என்பது நிச்சயம்.
அதற்கு மேலும் அதிக இடங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தேர்தலுக்கு முன்னர்
கொடுத்த பேட்டி ஒன்றில் எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறியிருந்தார்.
ஆளுங்கூட்டணியின் இனவாதப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்றவற்றுக்கு
எதிர்ப்பு வலுத்திருப்பதை ஆட்சியில் இருந்தவர்கள் கவனிக்கத் தவறிவிட்டாலும்
எதிர்க்கட்சிகள் சரியாகக் கணித்து அதற்கேற்பக் காய் நகர்த்தி, வெற்றி கண்டுள்ளன.
ஓர் இஸ்லாமிய நாட்டில் கோயில் இடிப்புச் சம்பவம் ஆட்சியையே ஆட்டம்
காணச்செய்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாடாங் ஜயா என்ற இடத்தில்
கட்டப்பட்டிருந்த கோயில் (பதிவு செய்யப்படாதது) கடந்த நவம்பர் மாதம்
இடிக்கப்பட்டபோது ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைச் செயல்படையினர் குரல்
கொடுத்தனர். இந்தச் சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்துலக ஊடகங்களும்
பெரிய அளவில் செய்தி வெளியிட்டன. தொடர்ந்து ஹிண்ட்ராப் சென்ற நவம்பர் 25ஆம் தேதி
நடத்திய பேரணி அனல்பூத்த நெருப்பாக இருந்த மக்களின் கொதிப்பைக் கிளறிவிட்டது.
மேலும் வழக்கறிஞர்கள் மன்றம், பெர்சே ஆகிய அமைப்புகள் நடத்திய பேரணிகள், அவற்றைத்
தடுப்பதற்காக மக்கள்மீது தேசிய முன்னணி அரசாங்கம் நடத்திய தாக்குதல்கள்,
அப்பேரணியில் கலந்துகொண்டவர்களில் பலரைக் கைதுசெய்தது, பின்னர், அவற்றைச் சமாளிக்க
அரசாங்கம் இனரீதியான சமரசப் போக்கை நாடியது போன்ற செயல்கள் மலேசியாவின் அனைத்து
மக்களிடமும் எதிர்ப்பைக் கிளப்பியது.
மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ஆளும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியில்
ஒன்றான, மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைவர் தோற்கடிக்கப்பட்டார். இதில்
போட்டியிட்ட ம. இ. காவின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் 6 பேரும் 19 சட்டமன்ற
உறுப்பினர்களில் 12 பேரும் படுதோல்வி அடைந்ததற்கும் எதிர்க் கட்சிகளில் போட்டியிட்ட
பல இந்தியர்கள் வெற்றி பெற்றதற்கும் இந்தியர்களுக்கு மட்டுமின்றிச் சீனர்கள்,
மலாய்க்காரர்கள் என எல்லா மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு உணர்வே காரணம்
என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா ஒரு பல்லின நாடு. ஆனால், "நாம்தான் உலகிலேயே
இனவாத அரசியல் நடத்தும் ஒரே நாடு", என்று அம்னோவைச் சேர்ந்த அமைச்சர் மெகாட்
நாஜ்முடின் காஸ் கூறியுள்ளார். ( கீமீ ணீக்ஷீமீ (ணீறீsஷீ) tலீமீ ஷீஸீறீஹ்
நீஷீuஸீtக்ஷீஹ் வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ tஷீ ஜீறீணீஹ் க்ஷீணீநீவீணீறீ
ஜீஷீறீவீtவீநீ. tலீமீ ஷ்லீஷீறீமீ ஜீஷீறீவீtவீநீணீறீ sஹ்stமீனீ னீust தீமீ
க்ஷீமீவீஸீஸ்மீஸீtமீபீ'.- ஜிலீமீ suஸீ 7.12.2007.)
நீண்டகாலமாகச் சில அடிப்படைகளை ஆதாரமாகக்கொண்டு மலேசிய அரசியல் அமைப்பு
செயல்பட்டுவருகிறது. இதில் முதன்மையானது முக்கிய இனங்களுக் கிடையிலான அதிகாரப்
பகிர்வு. மலேசியாவில் நீண்டகாலத்துக்கு முன்னர் குடியேறிய இந்திய, சீன
வம்சாவளியினர், குடியுரிமைக்குக் கைமாறாக மலாய் அரசியல் மேலாதிக்கத்தை
ஏற்றுக்கொண்டனர்.
1957இல் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு, இன அடிப்படையிலான ஐக்கிய மலாய் தேசியகட்சி
(அம்னோ), மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் ஆகியவற்றின் கூட்டணிக்கு
வழிவகுத்தது. 1969இல் நடந்த சீன - மலாய் கலவரத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி,
தேசிய முன்னணி என்ற பெயரில் 14 கட்சிக் கூட்டணியாக விரிவடைந்தது. நாட்டின்
பெரும்பான்மையினருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மலாய்க்காரர்களுக்குச்
சலுகைகளும் முன்னுரிமையும் அளிக்கும் புதிய பொருளியல் கொள்கை கொண்டுவரப்பட்டது.
ஐந்து முக்கியத் தேசியக் கொள்கைகளும் உருவாக்கப்பட்டன.
கடந்த 40 ஆண்டுகளாக இனப் பிரதிநிதித்துவ அடிப்படையிலேயே அம்னோ கூட்டணி மலேசியாவை
ஆண்டுவருகிறது. நாடாளுமன்றத்தில் கோட்டா முறையில் இனங்களுக்கு இடம்
அளிக்கப்படுகிறது. எனினும் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவமாக இருக்கும்
மஇகா பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதுகூட மலாய்க்காரர்களின் வாக்குகளால்தான்.
இத்தகைய சூழலில் அமைச்சரவை அல்லது எந்த அரசு அமைப்பில் அவர்கள் இருந்தாலும்
அவர்களால் இந்தியர்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் பெரும்பான்மையினர்
ஏற்றுக்கொள்ளும் அளவில்தான் பூர்த்திசெய்ய முடிந்து வந்துள்ளது. அம்னோ ஆட்சி
அமைத்தபோது, இந்தியர் காங்கிரஸின் தலைவராக இருந்த துன் சம்பந்தன் மலேசியாவின் முதல்
இந்திய அமைச்சரானார். இந்தியர்களுக்காக அவர் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார்.
துன் சம்பந்தன் பெயரில் தெருவையும் கட்டடத்தையும் மலேசியாவில் காணலாம். ஆனால்,
அவரைத் தொடர்ந்துவந்த தலைவர்களான டத்தோ மாணிக்கவாசகம் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
1974இல் மஇகாவின் தலைவரான சாமிவேலு தமிழகத் திமுக தலைவர் கருணாநிதி பாணியிலேயே
செயல்பட்டுவந்தார். "அம்னோவின் அடிவருடிகளாகவே மஇகா தலைவர்கள் இருந்து
வருகின்றனர்," என்கிறார் தோட்டத் தொழிலாளியாகப் பணிபுரியும் திரு. முனியப்பன்.
சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே
மலேசிய இந்தியர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் புதிதாகப் பிறக்கும் இந்தியக்
குழந்தைகளில் கிட்டத்தட்ட 15,000 குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழே
எடுக்கப்படுவதில்லை என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. பிறப்புச் சான்றிதழ் இல்லை
என்றால் பள்ளியில் சேர முடியாது. கல்வி, வேலை வாய்ப்புகள் இல்லாததால் இந்தியச்
சமூகத்தில் குற்றச்செயல்களும் அதிகரிக்கத் தொடங்கின.
"பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியர்கள்தாம் மிகவும்
புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய மலேசியர்கள் நாலாந்தரக் குடிமக்களாக
நடத்தப்படுகின்றனர்," என்றும் "பல்வேறு துறைகளில் பின்தங்கியிருக்கும் இந்தியர்கள்
குற்றச்செயல்கள், தற்கொலைகள் போன்ற சமூகச் சீர்கேட்டுச் செயல்களில் மட்டுமே
முன்னணியில் இருக்கின்றனர்" என்றும் ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணியில் உள்ள
கெராக்கான் கட்சியின் இளையர் பிரிவுத் துணைத் தலைவர் பரஞ்சோதி
சுட்டிக்காட்டியுள்ளார் (செம்பருத்தி, 2008 தேர்தல் சிறப்பிதழ்).
1957இல் 888ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 2007இல் 523ஆகக் குறைந்துள்ளது.
பல்கலைக்கழகம் செல்லும் தமிழர்கள் விகிதாசாரமும் அரசாங்கப் பதவிகளைப் பெறும் தமிழர்
எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஆளுங்கட்சியான தேசிய முன்னணி படிப்படியாக அதன் இன, மத
வாதக் கொள்கைகளை அமலாக்கம் செய்து வந்ததன் விளைவாக ஏழை மக்கள், குறிப்பாக இந்திய,
சீன மலேசியர்கள், அரசியல், பொருளாதார சமூக விவகாரங்களில் பெரும்
பாதிப்பிற்குள்ளாயினர்.
எனினும், இத்தனை ஆண்டுகாலத்தில் இந்தியர்களின் உரிமைக்காக ஓங்கிக் குரல்
கொடுத்திருப்பவர்கள் ஹிண்ட்ராப் அமைப்பினர் என்றால் மிகையாகாது. "எங்களுக்காக
யாரும் போராடாதபோது நாங்கள் எங்கள் இனத்துக்காக நாங்கள் போராட வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று முன்னர் கூறினார் ஹிண்ட்ராப்பின் சட்ட
ஆலோசகர் உதய மூர்த்தி. மக்கள் தொகையில் 7% இந்தியர்கள், 6.3% இந்துக்கள். இதில்
பெரும்பான்மையினர் தமிழர்கள். அதிலும் அடிநிலையில் இருக்கும் தோட்டப்புற மக்களில்
மிக அதிகமானோர் தமிழர்கள். கோயிலும் வழிபாடும்தான் இந்த மக்களின் முக்கிய இணைப்பாக
இருந்து வருகிறது. இந்தப் பிணைப்புதான் மிகக் குறுகிய காலத்துக்குள் பெரும் எழுச்சி
ஏற்பட உதவியிருக்கிறது. ஹிண்ட்ராப் 'இந்து' என்ற போர்வையில் இருந்தாலும்,
ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுக்கிறது. மதம்
சார்ந்து இந்த அமைப்பு செயல்படுகிறது என்ற குறைபாடு எழுப்பப்பட்டபோதும், மலேசியத்
தமிழர்களையும் ஏனைய இந்தியர்களையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைக்க இந்தியர் - இந்து
என்ற அடித்தளம் தேவைப்படுவதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்களைக் கொண்ட இந்த அமைப்பினர்,
பாதிக்கப்படும் இந்தியர்களுக்காகச் சட்டரீதியாகப் போராடுகிறார்கள். கோயில்களை
மட்டுமின்றி, தமிழ்ப் பள்ளிகளின் நலவாழ்வுக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். 50
ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் 15,000
இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டிருப்பதாகவும் ஹிண்ட்ராப் கூறுகிறது. அவற்றுக்கு
அரசாங்கம் இழப்பீடு தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கிறது.
எழுச்சி, வெற்றி என்பவற்றின் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பதுதான் இப்போது
எழுந்திருக்கும் பெரும்கேள்வி. மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும்
அப்துல்லா அகமட் படாவி தனது புதிய அமைச்சரவையை 18.3.08 செவ்வாய்க்கிழமை
அறிவித்தார். அமைச்சரவையில் பாதிக்கு மேல் புதியவர்கள், இளையர்களின்
பிரதிநிதித்துவம், நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்த பலர் நீக்கம், 90
பேரைக்கொண்டிருந்த அமைச்சரவை 68ஆகச் சுருக்கம் எனப் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையையும் அவர் விட்டுக்கொடுத்துள்ளார். "பிரதமர்
அப்துல்லா அகமட் படாவியின் புதிய அமைச்சரவை மாறுபட்ட சமிக்ஞைகளை
வெளிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் மக்களின் குமுறல்கள் செவிமடுக்க
ஆரம்பித்திருக்கும் அதே வேளையில் பழைய அரசியல் வெகுமதி பாணியையும் பின்பற்றுகிறார்"
என்று கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. லிம் கிட் சியாங். மஇகா
சார்பில் வெற்றி பெற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி வழங்கியுள்ளார்.
டாக்டர் சுப்ரமணியத்துக்கு மனிதவள அமைச்சர் பதவியும் எஸ். கே. தேவமணி, டத்தோ எம்.
சரவணன் இருவருக்கும் துணை அமைச்சர் பதவிகளும் கொடுத்துள்ளார். பழைய அமைச்சரவையில்
இந்த எண்ணிக்கை ஏழாக இருந்தது. மேலும், செனட்டரான கோகிலன் பிள்ளை என்பவருக்கும்
துணை அமைச்சர் பதவி தந்துள்ளார். அத்துடன் சீனர்களில் ஐவர் முழு அமைச்சர்களாகவும்
10 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி பெற்றுள்ளனர். எப்படியிருந்தாலும் 222இல் 140
இடம் என்பது உலகின் பல அரசாங்கங்களுக்கு எட்டாக்கனி. அரசியல், சமூகச்
சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்யப் போதிய வலிமையை ஆளுங்கூட்டணி
பெற்றிருக்கிறது. படாவி தாம் பதவி விலகப்போவதில்லை என உறுதியாகக் கூறினாலும், வரும்
அம்னோ தேர்தலில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றே மலேசியச் செய்திகள்
கூறுகின்றன. ஆளுங்கூட்டணி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே வலுவான எதிரணியை உருவாக்கியிருக்கும் அன்வார் இப்ராஹிம், தேசிய
முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் ஈர்க்கும் முயற்சியில்
இறங்கியுள்ளார். அரசாங்கத்தை அகற்றக்கூடிய சக்தியாக விளங்கும் கிழக்கு மலேசியாவில்,
தேசிய முன்னணிக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதாக அன்வார்
கூறியுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமரான அன்வார், பத்தாண்டுகளுக்கு முன்னர் பதவிநீக்கம்
செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இப்போது மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு அவர்
தலைமை வகிக்கிறார். தேர்தலில் போட்டியிட இருந்த தடை அவருக்கு ஏப்ரல் மாதத்துடன்
முடிகிறது. அப்போது தமது இடத்தை அவருக்கு விட்டுக்கொடுப்பேன் என்று கூறித்தான்
அன்வாரின் மனைவி ஓட்டு வாங்கியுள்ளார். வரும் இடைத்தேர்தலில் அன்வார் பெரும்
வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சபா, சரவாக் என இரு
மாநிலங்களைக்கொண்ட கிழக்கு மலேசியா மலாய்காரர்கள் அல்லாத பூமிபுத்திரர்களைக்
கொண்டது. இங்கு 54 இடங்களைத் தேசிய முன்னணி கைப்பற்றியுள்ளது. 82 இடங்களை
வைத்திருக்கும் அன்வார் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க இன்னும் 30 இடங்கள் மட்டுமே
வேண்டும். மலேசியத் தேர்தல் சட்டப்படி கட்சி மாறும் எம்பிக்கள் பதவி விலக
வேண்டியதில்லை. ஆனால், ஆளுங்கூட்டணியின் முதுகெலும்பான அம்னோவை அத்தனை எளிதாக
அன்வாரால் அசைத்துவிட முடியாது. எனினும், ஆட்சி மாறக்கூடிய ஆபத்து இருப்பதைத் தேசிய
முன்னணி உணர்ந்திருப்பதையே புதிய அமைச்சரவை நியமனம் காட்டுகிறது. அதே நேரத்தில்
ஆளுங்கட்சியின் இனவாத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்
முக்கியக் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சிகளை, தேர்தல் முடிந்த சில நாள்களிலேயே
இனவாத அரசியல் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது கவனித்தக்கது. கெடா மாநிலத்தில் பாஸ்
கட்சியைச் சேர்ந்தவர் முதல் அமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அம்மாநில
ஆட்சிக்குழுவில் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற வெ. ஆறுமுகம்
சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆட்சிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும்
பொறுப்பு இந்திய விவகாரமாகும். இனவாத அரசியலின் முதல் அடையாளம் இது. பதவி
முக்கியமல்ல; இலக்கையடையும் பிரதிநிதித்துவம் முக்கியம் என்று கூறும் அன்வார், ஏன்
மலாய்க்காரர்கள் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்படுவதில் கவனமாக இருக்கிறார் என்ற
கேள்வியை மலேசியாகினி இணையதளம் எழுப்பியுள்ளது.
"ஒரு சீனரோ இந்தியரோ மாநில ஆட்சிக் குழுவில் நிதித் துறைக்குப் பொறுப்பேற்றால்,
அதனால் மலாய்க்காரர்களின் அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் ஏன் பாதிக்கப்பட
வேண்டும்? இந்திய விவகாரங்களுக்கு என்று மட்டும் ஏன் ஓர் ஆட்சிக் குழுவினர்
நியமிக்கப்பட வேண்டும்? இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்றுதான் மக்கள்
வாக்களித்தனர்" என்று ஜி. வி. கந்தையா அதில் எழுதியுள்ளார். மலாய்க்காரர்களுக்குப்
புதிய பொருளாதாரக் கொள்கையை (ழிமீஷ் மீநீஷீஸீஷீனீவீநீ றிஷீறீவீநீஹ்) ரத்து
செய்வதில் அன்வார் கூட்டணி ஆதரவாக இருக்கிறது. ஏற்கனவே பினாங்கு மாநிலத்தில் இந்தக்
கொள்கை ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்தக்
கொள்கை எப்படிக் கையாளப்படுகிறது அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப்
பொறுத்தே மலேசியாவின் நிலைத்தன்மை இருக்கும். எது எப்படி இருந்தாலும் மலேசிய
இந்தியர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான பல சாத்தியக்கூறுகள்
தென்படுகின்றன. தங்கள் உரிமைகள் என்ன, தேவைகள் என்ன என்பதை மலேசிய இந்தியர்கள்
உணரத் தொடங்கியுள்ளனர். அவர்களது செயல்பாட்டைப் பேச்சில் மட்டுமின்றிப்
படைப்புகளிலும் காண முடிகிறது. இந்தச் சில காலத்துக்குள் குறிப்பாக இளையர்கள்
எழுதியிருக்கும் கவிதைகள், ஆழமிக்க ஒரு புதிய படைப்பிலக்கியத்தை மலேசியத் தமிழ்
உலகுக்குத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர்களது இந்த எழுச்சியை
உணர்வுரீதியாக அரசியல் மற்றும் பிற சக்திகள் தங்களது ஆதாயத்துக்காகப்
பயன்படுத்திக்கொள்ளாதவரையில், அரசாங்க ஆதரவு கிடைக்காத நிலையிலும் சரியான பாதையில்
அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்க இயலாது.
தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக மலேசிய அரசாங்கம் தைப்பூசத்துக்குப் பொது
விடுமுறை அளித்தது. மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படும்
என்று வாக்குறுதி அளித்தது. இடிக்கப்பட்ட கோயிலுக்குப் புது நிலம் அளிப்பதாகவும்
தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி அளிப்பதாகவும் கூறியது. இந்த "அன்பளிப்பு"களுக்கு
இந்தியச் சமூகம் மயங்கிவிடவில்லை.
"வாக்களிப்பு தினத்தன்று எந்தக் காரணமுமே இல்லாமல் இரண்டு தமிழ்ப் படங்களைத்
தேசியத் தொலைக்காட்சியான ஆர்டிஎம் ஒளிபரப்பியது. தமிழர்களை அவ்வளவு கேவலமாக
நினைத்துவிட்டார்களா? படம் பார்த்துக்கொண்டு ஓட்டுப் போடப்போகாமல் இருந்துவிடுவோம்
என எண்ணிவிட்டார்களா?" என்று தேர்தல் நடந்த அன்று செல்வி கேட்டபோது அவர் குரலில்
இருந்த கொந்தளிப்பு அடங்க நீண்டகாலமாகும் எனத் தோன்றியது.
மக்கள் மனத்தில் கொழுந்துவிட்டெரியும் கேள்விகள்
அனைத்து மலேசியர்களும் சமம் என்றால் ழிணிறி எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை
இன்னமும் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? (மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்
இப்பொருளாதாரக் கொள்கை மகாதீரால் 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டது.)
இனவாதம் பேசும் அம்னோ (படாவியின் ஆளும் கட்சி) தலைவர்கள் மட்டும் ஏன்
கைதுசெய்யப்படவில்லை?
மலேசியர்கள் தங்கள் கருத்துகள், குறைகளைக் கூற ஏன் அமைதியான முறையில் கூட்டம்
கூட்டக் கூடாது?
பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணியின் கருத்துகள் மட்டுமே ஊடகங்களிலும்
பத்திரிகைகளிலும் வெளியிடப்படுகின்றனவே?
பல்கலைக்கழக இடத்திலும் பொதுக் கல்வி உபகாரச் சம்பளம் அளிக்கப்படுவதிலும்
இனப்பாகுபாடு காட்டப்படுவது ஏன்?
வீட்டு மானியம் ஏன் அனைத்து மலேசிய மக்களுக்கும் இல்லை?
நீதிபதிகள் விலைக்கு வாங்கப்படுகிறார்களா?
வாழ்க்கைத் துணை இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவரது கணவர்/மனைவியையும் பிள்ளைகளைப்
பாதுகாக்க ஏன் சட்டம் இல்லை? எடுத்துக்காட்டாக பி. மாரிமுத்து என்பவரின் மனைவி
முஸ்லிம் எனக் கூறி அவரது ஐந்து பிள்ளைகளும் அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் சென்று போராடிய மாரிமுத்து தன் 5 பிள்ளைகளையும் மீட்டார். ஆனால், அவரது
மனைவி முஸ்லிம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அம்னோ கட்சி ஏன் தொடர்ந்து இனவாதத்தையும்
மதவாதத்தையும் கையிலெடுக்கிறது?
மலாய்க்காரர்களுக்கு என்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுபோல் ஏன் மற்ற இனங்களுக்கும்
ஒதுக்கப்படவில்லை?
சர்ச்சையைக் கிளப்பியுள்ள பிரச்சினைகள்
m உணவு, எரிபொருள் விலையேற்றத்தினால் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு.
அதிகரித்துவரும் வருமான இடைவெளி.
m சிவில் சட்டம், இஸ்லாமியச் சட்டம் ஆகியவற்றின் வரம்புகள் குறித்த சர்ச்சைகள்.
உதாரணமாக எம்.மூர்த்தி என்பவரின் இறுதிச் சடங்கு உரிமைகள். அவர் இஸ்லாம் மதத்துக்கு
மாறிவிட்டார் எனக் கூறி, அவரது இறுதிச் சடங்குகளை இந்து முறைப்படி நடத்தவிடமால்
அவரது மனைவி தடுக்கப்பட்டார்.
m கிறிஸ்தவர்கள் "அல்லா" பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடை.
m சிறுபான்மையினரின் உரிமைகள் பறித்துக்கொள்ளப்படும் அளவுக்கு
மலாய்க்காரர்களுக்குச் சலுகை வழங்கப் படுதல், இஸ்லாமிய மதத்தை நோக்கிச் செல்லும்
நாட்டின் போக்கு.
m இன அடிப்படையிலான ஹிண்ட்ராப் போன்ற போராட்டங்கள்.
m உயர்ந்துவரும் குற்றச்செயல் எண்ணிக்கை.
m ஊழல், அதிகார துஷ்பிரயோகம்.
m பெருகிவரும் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை. |