Google   www kalachuvadu.com

பத்தி: பிறவழிப் பயணம்
காணாமல்போன நரிக்கொம்பு
ரவிக்குமார்
நடவடிக்கை எடுத்த முதல்வர்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, நரிக்குறவர்களுக்கு நலவாரியம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று 20.03.2008 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரிக்குறவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும். இது போன்ற புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுத்த முதல்வர் பாராட்டுக்குரியவர்.

'நரிக்குறவி அம்மையாருக்கு செல் தந்த நன்னஞ்சேரி நாணுவய்யன் பரம்பரை...' என்பது பாக்கியம் ராமசாமி எழுதியுள்ள ஒரு சிறுகதையின் பெயர். கல்யாண வீடு ஒன்றில் மணமகனுக்கு செல்போனை அன்பளிப்பாகத் தருவதற்குச் செல்கிறார் ஒருவர். அங்கு ஏற்கனவே பலபேர் அதே யோசனையோடு செல்போனும் கையுமாக வரிசையில் நிற்கிறார்கள். மிகவும் புதுமையானது என நினைத்திருந்த தனது ஐடியாவைப் பலரும் செயல்படுத்துவதைக் கண்டு எரிச்சலடைந்த அவர் அந்த யோசனையைத் தனக்குக் கூறிய தன் நண்பரிடம் எரிந்து விழுகிறார். வேறு பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு வரலாம் என்றால் அதற்கும் அவகாசம் இல்லை. அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அந்தத் திருமணத்துக்கு 'எச்சில் இலை சேகரிக்க வந்த வயசான நரிக்குறவக் கிழவி' கேட்டுவிட்டு செல்போனைத் தனக்கு விலைக்குத் தருமாறு பேரம் பேசுகிறார். ஒரு 'நரிக் குறவியம்மையாரிடம்' டீல் பேச அருவருப்படைந்த அவர் அந்த செல்போனை மணமகனிடமே கொடுத்துக் குறவியிடமிருந்து தப்பித்துக்கொள்வதாகப் போகிறது கதை. இது ஒரு நகைச்சுவைக் கதை. நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதுவும், எச்சில் இலை பொறுக்குவதற்காக வந்தவர். அவர் செல்போனுக்குத் தொள்ளாயிரம் ரூபாய் தருவதாகப் பேரம் பேசுகிறார் என்பதுதான் இந்தக் கதையின் மையமான நகைச்சுவை. கதையில் குறத்தி என்று சொல்லாமல், குறவி என்று குறிப்பிடுவதன் மூலம் நமக்கு மேலும் சிரிப்பு மூட்ட ஆசிரியர் முயன்றிருக்கிறார்.

பிதாமகன் திரைப்படத்திலும் இப்படி ஒரு காட்சி வரும். ரயிலில் பல்வேறு பொருட்களை ஏலம்விட்டு வியாபாரம் செய்வார் சூர்யா. பலரும் ஏலம் கேட்பார்கள். ஒரு நரிக்குறவப் பெண்ணும் ஏலம் கேட்பதாகக் காட்சி இருக்கும். சூர்யா மிகவும் பிரமாதமாக நடித்திருந்த காட்சி அது. சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. நரிக்குறவப் பெண்ணின் 'ஷாமியோவ்' என்ற குரலை இமிடேட் செய்து சூர்யா சொல்லும்போது நாமும் சேர்ந்து சிரித்திருப்போம். இப்படிக் கதைகளிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்காகப் பயன்பட்டுக்கொண்டிருக்கும் சமூகம்தான் நரிக்குறவர் சமூகம்.

அதிலும், சிதறிக் கிடப்பவர்களாக, படிப்பறிவு இல்லாதவர்களாக, பொருளாதார பலமற்றவர்களாக இருக்கும் சமூகத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அப்படி ஆயிரக்கணக்கான சிறு சமூகக் குழுக்கள் நமது நாட்டில் அடையாளமில்லாமல் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக் குன்றிப்போய்க் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நரிக்குறவர் சமூகம்.

தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் 'குறவஞ்சி'யும் பாக்கியம் ராமசாமி சித்திரித்துள்ள 'நரிக்குறவி'யும் ஒரே வகையானவர்கள் அல்ல. தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிகுடிகளில் ஒன்றாக இருந்த குறவர்கள் வேறு, இப்போது நாம் பார்க்கிற நரிக்குறவர்கள் வேறு. ஆனால், இன்றைய தலைமுறைக்கு இந்த வேறுபாடு தெரியாது. குறவன் குறத்தி என்றாலே நரிக்குறவர்கள்தான் என்று இப்போது ஆக்கிவிட்டார்கள். இதற்கு நமது சினிமாக்காரர்களே முக்கியக் காரணம் என்று சொல்லலாம். கிளுகிளுப்புக்கும் நகைச்சுவைக்கும் நரிக்குறவர்களைப் பயன்படுத்துவது தமிழ்ச் சினிமாவில் வெகுகாலத்துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஜெமினி கணேசனும் கே. ஆர். விஜயாவும் நடித்த 'குறத்தி மகன்' என்ற திரைப் படம் ஒரு விதிவிலக்கு. மக்களிடம் கைதட்டல் பெறுவதற்காகக் குறவன் குறத்தி வேடமிட்டு ஓ... சிங்கா! ஓ... சிங்கி என்று 'டப்பாங்குத்து' ஆடிய 'புரட்சிக்காரர்களிடம்' அரசாங்கத்தையே ஒப்படைத்து அழகுபார்த்த தமிழ்ச் சமூகம் நரிக்குறவர்களை ஏனோ நடுத்தெருவில் விட்டுவிட்டது. இப்போது அவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தாங்களே பேசுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்காகக் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அழையா விருந்தாளியாகச் சென்றபோதுதான் அவர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நரிக்குறவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளின் பரிமாணத்தையும் அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு வடலூரில் உள்ள அவர்களது குடியிருப்புக்குச் சென்று அவர்களிடம் பேசி விவரங்களைச் சேகரித்தேன்.

நரிக்குறவர்கள் 'வாக்ரிவாலா' என்று அறியப்படுகிறார்கள். குருவிக்காரர்கள் என்ற பெயரும் அவர்களுக்கு உண்டு. நரிக்குறவர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பே எட்கர் தர்ஸ்டன் என்ற ஆங்கில மானுடவியல் அறிஞர் விரிவாக எழுதியிருக்கிறார். 1909ஆம் ஆண்டில் அவர் எழுதி வெளியிட்ட 'தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும்' என்ற ஆங்கில நூலில் குருவிக்காரர்கள் என்னும் நரிக்குறவரைப் பற்றி ஆறு பக்கங்களில் விவரித்திருக்கிறார். அவர்கள் ஜங்கால் ஜாதி எனவும் காட்டு மராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் வியாபாரம் செய்துவந்த காயலான்கள் என அழைக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரிகளிடம் மணிகளை வாங்கிவந்து அவற்றைக் கோத்து மாலையாக்கி நரிக்குறவப் பெண்கள் விற்றதாக எட்கர் தர்ஸ்டன் கூறியிருக்கிறார். திருமணமான இளம் பெண் பகலில் எங்கே போனாலும் இரவில் தன் கணவனிடம் வந்து சேர்ந்துவிட வேண்டும். அப்படி வராவிட்டால் பழுக்கக் காய்ச்சிய இரும்பை வெறும் கையில் பிடித்தபடி பதினாறு அடி தூரம் நடக்க வேண்டும். சூடு பொறுக்காமல் இரும்புத் துண்டைக் கீழே போட்டுவிட்டால் அந்தப் பெண் நடத்தை கெட்டவள் என்று அர்த்தம். இது நரிக்குறவர் சமூகத்திடம் இருந்த ஒரு வழக்கம் என தர்ஸ்டன் குறிப்பிட்டிருக்கிறார். குறத்தி மகன் திரைப்படத்திலும்கூட அப்படி ஒரு காட்சி இருந்ததாக ஞாபகம். ஆனால், அந்த வழக்கத்தை இப்போதும் நரிக்குறவர்கள் பின்பற்றுகிறார்களா எனத் தெரியவில்லை.

நரிக்குறவர்களைப் பார்க்கிற நாம் அவர்களைப் பழங்குடியின சமூகத்தினர் (ஜிக்ஷீவீதீணீறீs) என்றுதான் எண்ணியிருப்போம். ஆனால், தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (விஙிசி) பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இருபத்து நான்காவதாக அவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வன்னியர் உள்ளிட்ட சமூகத்தவரோடு போட்டிப் போட்டுத்தான் நரிக்குறவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சலுகைகளைப் பெற வேண்டும்.

மராத்தி கலந்த மொழியைப் பேசும் நரிக்குறவர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகள் சீதையோடு தொடர்பு படுத்தப்பட்டிருப்பது சுவாரஸ்யமான விஷயம். ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் இருந்ததாகவும் தெருவில் போகும்போது எதிரே சீதை வந்ததாகவும் அப்போது அவர்களில் இளையவன் சீதையைக் கேலி செய்ததால் சீதை கோபமுற்றுச் சாபம் கொடுத்ததாகவும் அதனால் அவன் குருவிகளைப் பிடித்தும் பிச்சை எடுத்தும் ஜீவிக்க வேண்டி ஆனதாகவும் ஒரு கதை உள்ளது. இன்னொரு கதையில், இரண்டு சகோதரர்கள் இருந்ததாகவும் அவர்களில் ஒருவன் சீதை குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்ததால் சீதையின் சாபத்துக்கு ஆளாகிக் குருவி பிடித்து உயிர்வாழும் நிலைக்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நரிக்குறவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஆந்திரா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்னாடகா முதலிய மாநிலங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் பழங்குடி இனத்தவராகவே கருதப்படுகிறார்கள். ஹரியானாவில் 'பவுரியா' என்றும் மத்தியப் பிரதேசத்தில் 'பார்தி' என்றும், குஜராத்தில் 'வாக்ரி' எனவும் கர்னாடகாவில் 'ஹக்கி பக்கி' எனவும் அழைக்கப்படும் நரிக்குறவர்கள் அந்த மாநிலங்களில் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதற்கான சலுகைகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில்தான் அவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்திருக்கிறோம்.

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை தமிழக அரசின் சார்பில் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. 1964ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு கொள்கையளவில் நரிக்குறவர்களைப் பழங்குடியினராக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பழங்குடியினருக்கான சலுகைகள் 1974ஆம் ஆண்டுவரை அளிக்கப்பட்டன. ஆனால், அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து முறையாக அறிவிப்பு செய்வதற்கு முன்பு இப்படிச் சலுகைகளைத் தரக் கூடாது என மத்திய அரசு 1974ஆம் ஆண்டில் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய காரணத்தால் அப்போதிருந்த அரசு அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாகச் சேர்த்து உத்தரவிட்டது. ஆனால், படிப்பு உதவித்தொகை, மனைப்பட்டா, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெறுகின்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்து பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி 1975ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்ட அந்தத் 'தற்காலிக ஏற்பாடு'தான் கடந்த முப்பத்து இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பலவிதங்களில் நரிக்குறவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் மத்திய அரசு அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி வருகிறது. கலைஞர் அவர்கள் ஐந்தாவதுமுறையாக முதல்வர் பொறுப்பேற்றதும் இதுபற்றி மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டது (கடித எண்: 17789/கிஞிகீ-10/2004-1 நாள் 14.8.2006). ஆனால், அதற்குப் பிறகும்கூட மத்திய சமூகநீதி அமைச்சகம் இதில் முடிவெடுக்கவில்லை. அண்மையில் சென்னைக்கு வந்த தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் பிரதிநிதிகளிடமும் நரிக்குறவர் மக்கள் தமது கோரிக்கையைத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த மாதம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நான் பேசினேன்.

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது மட்டுமே அவர்களை முன்னேற்றிவிடாது. அவர்களது பிழைப்புக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டியது அதைவிட முக்கியம். இதற்காகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ முன்னோடியாக ஒரு திட்டத்தைத் தயாரித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலில், விருத்தாசலம் கோட்டாட்சியராக இருக்கும் பாலசுப்பிரமணியம் அற்புதமான ஒரு 'சர்வே'யைச் செய்து முடித்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் எங்கெங்கு வாழ்கிறார்கள், அவர்களது தொழில் என்ன, அவர்களுக்கு வீடு இருக்கிறதா, அவர்களில் படித்தவர்கள் எவ்வளவுபேர் உள்ளிட்ட எல்லா விவரங்களும் அந்த சர்வேயில் கண்டறியப்பட்டு நூற்றுப் பன்னிரண்டு பக்கங்களில் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று இடங்களில் மொத்தம் 1464 நரிக்குறவர்கள் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அவர்களில் பதினான்கு வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளில் சுமார் பாதிப்பேர் இப்போது பள்ளிக்குச் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் ஐந்து பேர் கல்லூரியில் படித்து வருகின்றனர். பதினேழு பேர் ப்ளஸ்டூ படிக்கின்றனர். ஆனால், மொத்தத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குறவர்களில் பத்து சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் அவர்கள் அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கான ஏற் பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டிருக்கிறார்.

நரிக்குறவர்கள் என்றாலே துப்பாக்கியும் கையுமாக அவர்கள் காட்சியளிப்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். இப்போது வேட்டைக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிப்பதிலும் அரசாங்கம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்து வந்த நரிக்குறவர்கள் இப்போது பிழைப்புக்கு வழியின்றிக் கஷ்டப்படுகிறார்கள். 'நரிக்கொம்பு இருக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள்' என்று பேருந்து நிலையங்களில் நச்சரிக்கும் நரிக்குறவர்களை இதனால்தான் இப்போது காணமுடிவதில்லை. நரிகளெல்லாம் சிவபெருமானின் திருவிளையாடலால் பரிகளாக மாற்றப்பட்டதாகப் புராணக்கதை ஒன்று உண்டு. அதேபோல இறைவனின் திருவிளையாடலோ என்னவோ இப்போது நரிகளெல்லாம் மனிதர்களாக மாறிவிட்டன. அதனால் நரிக்குறவர்களின் பாடு மேலும் திண்டாட்டமாகிவிட்டது.

நரிக்குறவர்களின் முதன்மையான தொழிலாக 'பாசி மணி மாலைகள்' தயாரிப்பது மட்டுமே இப்போது இருக்கிறது. அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நரிக்குறவர்களுக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. தனது பக்தர்களை ஐயப்பன் காப்பாற்றுகிறானோ இல்லையோ, அவன் நரிக்குறவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறான். ஆண்டு முழுவதும் தாங்கள் தயாரிக்கும் மணிமாலைகளை 'ஐயப்பா சீஸனில்' விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.

நரிக்குறவர்கள் தயாரிக்கும் மணிமாலைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பூஜைக்குப் பயன்படும் மாலைகள், ஃபேன்ஸி மாலைகள், விலை உயர்ந்த கற்களால் ஆன மாலைகள், தரமான அலங்கார மாலைகள். விலை அதிகம் கொண்ட மாலைகளைத் தயாரிப்பதற்கான மணிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு காயலான் கடைகளில் கிடைத்ததுபோல இப்போது கிடைப்பதில்லை. அவற்றை வாங்குவதற்கு அவர்கள் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என நெடுந்தூரம் போக வேண்டியுள்ளது. அப்படி அலைந்து திரிந்து மணிகளை வாங்கி வந்து மாலைகள் தயாரித்தாலும், அவற்றை விற்பது கடினமாக இருக்கிறது. தொலைக்காட்சிகளில் ஓயாமல் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்களின் புண்ணியத்தால் நாகரிகமடைந்துவிட்ட கிராமத்துப் பெண்கள் இப்போது நரிக்குறவர்களிடம் மணிமாலைகளை வாங்கி அணிந்துகொள்ள முன்வருவதில்லை. எனவே அவர்கள் ஐயப்ப பக்தர்களின் கருணையை நம்பியே காலம் கழிக்க வேண்டிய நிலை.

மணிமாலைகள் செய்யும் நரிக்குறவர்களின் திறமையையே மூலதனமாக்கி அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டிருக்கிறார். வல்லுநர்களைக் கொண்டு சிறந்த டிசைன்களில் மாலைகள் செய்வதற்கு நரிக்குறவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விலை உயர்ந்த மணிகளை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வாங்கிவந்து கடலூரில் 'ஸ்டாக்' செய்து அவர்களுக்குச் சுலபமாக சப்ளை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நரிக்குறவர்களையே உறுப்பினர்களாகக் கொண்ட சுய உதவிக்குழுக்களை அமைத்து இப்படியான மணி மாலைகளைத் தயாரித்து அவற்றை 'மார்க்கெட்' செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தித்தர வங்கிகள் முன்வந்துள்ளன. இதில் சில தொண்டு நிறுவனங்களும் ஒத்துழைக்க ஆர்வம் காட்டியுள்ளன. போர்க்கால நடவடிக்கையாக இதைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்.

நரிக்குறவர்கள் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்குக் கால நிர்ணயம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஊர்களில் மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுவிட்டன. அவர்களின் குடியிருப்புகள் அனைத்துக்கும் மின் இணைப்பு, குடிநீர், சிமெண்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட ஆணையிடப்பட்டு வேலைகள் நடக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நரிக்குறவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டுமெனில் அதற்கு 294 வீடுகள் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டு அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும் என அந்தத் திட்டத்தைத் தயாரித்த விருத்தாசலம் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அதற்கான நிதியை வழங்குவதற்கு ஏதேனும் ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனம் முன்வந்தால் இந்தத் திட்டம் ஒரே ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

நரிக்குறவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களால் தயாரிக்கப்படும் மணி மாலைகள் 'மார்க்கெட்' செய்யப்பட்டால் அவர்களின் பொருளாதார நிலை நிச்சயம் உயரும். நாடோடிகளாக அவர்கள் அலைந்து திரிவதும் முடிவுக்கு வந்துவிடும். ஒரு இடத்தில் நிலையாகக் குடியிருந்தால்தான் அவர்களால் தமது பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியும். தற்போது வடலூரில் நிலையான குடியிருப்பு இருக்கின்ற காரணத்தால்தான் அங்கிருக்கும் பல குழந்தைகள் பள்ளியில் இப்போது படித்து வருகின்றனர்.

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நான் பேசிய செய்தியை பார்த்துவிட்டு அந்த சமூகத்தைச் சேர்ந்த பலபேர் செல்போனில் தொடர்பு கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தனர். இப்போதெல்லாம் கடலூர் மாவட்டத்தில் எந்த அரசு விழா நடந்தாலும் நரிக்குறவர் பிரச்சினையைப் பற்றி வலியுறுத்த நான் தவறுவதில்லை. அதுபோலவே அந்த விழாக்களுக்கெல்லாம் அவர்களும் தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்கள். பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டால் தாங்களும் தொழிற் கல்வி பயில முடியும், அரசாங்க வேலைகளைப் பெற முடியும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்தால் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் நரிக்குறவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களை முன்னேற்றுவது அரசாங்கத் திற்கு இயலாதகாரியம் அல்ல. ஒரே ஆண்டில் அவர்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கையை வழங்கிவிட முடியும். அரவானிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் கருணையோடு பல சலுகைகளை அறிவித்துக்கொண்டிருக்கும் தமிழக அரசு நரிக்குறவர்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நரிக்குறவர்கள் பற்றி இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பங்களை விலக்கி விட்டு அவர்களின் யதார்த்த நிலைமையை தெரிந்துகொண்டால் அரசாங்கம் மட்டுமல்ல நாமும்கூட அவர்களுக்கு உதவத் தயங்கமாட்டோம். அவர்களும் நம்மைப்போல உணர்ச்சி கொண்ட மனிதர்கள்தான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் பாக்கியம் ராமசாமியின் சிறுகதை நமக்கு சிரிப்பை வரவழைக்காது. கோபத்தைத்தான் ஏற்படுத்தும்.

உள்ளடக்கம்