Google   www kalachuvadu.com

இரண்டாம் வருகை
கண்ணன்

என் முதல் மகன் சாரங்கன் பிறந்தது 1994 ஏப்ரலில். சென்னை மருத்துவமனையிலிருந்து மனைவி மைதிலியின் வீட்டிற்கு நான் திரும்பியபோது என் மாமனார் ஆவலுடன் வாசலுக்கு வந்து, 'குழந்தை எப்படி இருக்கிறது?' என்றார். 'என் குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், உங்களுடைய குழந்தைதான் படுத்திக்கொண்டிருக்கிறது' என்றேன். தாய்மையையும் குழந்தைப் பிறப்பையும் பற்றிய மிகையான பண்பாட்டுப் புனைவுகளைத் தமிழ்ச் சமூகம்போல உற்பத்திசெய்திருக்கும் மற்றொரு பண்பாடு இப்பூவுலகில் இருக்குமோ தெரியவில்லை. கர்ப்பமாகி மைதிலி சென்னைக்குச் சென்றிருந்த காலத்தில் நான் கருத்தரித்த குழந்தை புதிய காலச்சுவடு. இன்றுவரை குடும்பம், வியாபாரம் மற்றும் உறவுகளைத் தாண்டிய முதல் ஆர்வமாக அதுவே இருந்துவருகிறது. குழந்தைப் பிறப்பின், வளர்ப்பின் வலிகளையும் பூரிப்புகளையும்விடக் குறைந்ததாக இது எனக்குத் தோன்றவில்லை.

காலச்சுவடு இதழை சுந்தர ராமசாமி 1988இல் துவங்கியபோது நான் பெங்களூரில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைக்கு ஊர் வரும்போது அப்பாவும் நண்பர் தி. அ. சீனிவாசனும் திட்டங்களையும் படைப்புகளையும் விவாதிப்பதைக் கவனித்திருக்கிறேன் என்றாலும் அதிகம் கலந்துகொண்டதில்லை. முதல் இதழ் என் பெங்களூர் முகவரிக்கு வந்தது. பின்னர் எட்டு இதழ்களையும் படித்துவிட்டு, சந்தித்தபோது அப்பாவுடன் விவாதித்தது நினைவிருக்கிறது. காலச்சுவடுக்கு வரும் பெரும்பான்மையான படைப்புகளைச் சீனிவாசன் முதலில் படித்துப் பார்த்துவிட்டுத் தன் கருத்துகளை சு.ரா.விடம் பகிர்ந்துகொள்வதுண்டு. படைப்புகளைச் செப்பனிடுவதிலும் அச்சாக்கத்திலும் எம். எஸ். அவர்களும் சீனிவாசனும் அவருக்கு உதவினார்கள். படிப்பை முடித்துவிட்டு நான் ஊர் திரும்புவதற்குள் இதழ் நின்றுவிட்டது.

காலச்சுவடு ஆண்டுமலர் எதையும் கொண்டுவரும் எண்ணம் சு. ரா. வுக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால், காலச்சுவடு கணக்கு விஷயத்தில் அவர் கவனக்குறைவாக இருந்தார். காலச்சுவடுக்கு வரும் சந்தா மற்றும் விற்பனைத் தொகையை அதன் கணக்கில் செலுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இதழ் தயாரிப்புக்குக் கணக்கின்றிக் கைப்பணத்திலிருந்து செலவழித்துக்கொண்டிருந்தார். காலச்சுவடு நின்றபோது, முழுவரவுத் தொகையும் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்தது. இது சிக்கலை ஏற்படுத்தியது.

ஆண்டுமலர் ஒன்றை வெளியிட்டுக் கணக்கை நேர்செய்துவிடலாம் என்று சு. ரா. முடிவுசெய்தார். அப்போது நான் ஊர் திரும்பித் துணிக்கடையில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தேன். சு. ரா.வின் இலக்கிய ஆர்வமும் வியாபார நாட்டமின்மையும் பல பிரச்சினைகளை நிறுவனத்தில் ஏற்படுத்தியிருந்தன. அவை முற்றிய நிலையில் நான் வந்து சேர்ந்தேன். இச்சிக்கல்களுக்கு ஈடுகொடுத்துக்கொண்டே மலர் தயாரிப்பில் சு. ரா. ஈடுபட்டார். அதில் நானும் பங்களித்தேன். தொடர்ந்து அவருடன் மலரின் உள்ளடக்கம் பற்றி விவாதித்தேன். தயாரிப்புப் பணியிலும் உதவினேன். இந்த அனுபவம் ஒரு இதழை நடத்த வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆர்வம் உறுதிபடத் துணைநின்றது.

நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பியபோது என்மீது நம்பிக்கை கொள்ள எந்தக் காரணமும் எனக்கோ பிறருக்கோ இருந்திருக்க நியாயமில்லை. எப்போதுமே நான் மிக நல்ல மாணவனாக இருந்ததில்லை. எதையும் சாதித்ததுமில்லை. வாழ்வியல் சார்ந்த தன்னம்பிக்கையின்மையும் கொஞ்சம் சுயபச்சாதாபமும். சுமார் பத்து வயதிலிருந்து ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் வேறொரு தளத்தில் தன்னம்பிக்கை தருவதாக இருந்தது. இந்த மனநிலையில்தான் துணிக்கடையில் பணியாற்றத் துவங்கினேன். நிறுவனத்திலும் அப்போது குடும்பத்திலும் இருந்த பல நெருக்கடிகளையும் தாண்டி மூன்று ஆண்டுகளில் வியாபாரத்தை மூன்று மடங்காக உயர்த்த முடிந்தது.

என் இதழியல் கனவுகள் மீண்டும் துளிர்விட்டன. இந்த என் கனவு இதழுக்கும் முந்தைய காலச்சுவடுக்கும் என் மனநிலையில் தொடர்ச்சியெதுவும் இல்லை. சு. ரா. வின் காலச்சுவடு பற்றி எனக்கு உயர்வான மதிப்பீடே இருந்தது. என்றபோதிலும் அது என்னுடைய முன்னோடி இதழ் அல்ல. அப்போது பல முக்கியமான சிற்றிதழ்த் தொகுதிகளைப் புரட்டிப் பார்த்திருந்தாலும் அவற்றின் நீட்சியாகக் காலச்சுவடை யோசிக்கவில்லை. உலக ஆங்கில இதழியலுடன் எனக்கிருந்த பரிச்சயமும் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தின் ஆரோக்கியமான அம்சங்களும் இணைந்து ஒரு பார்வையை மனத்தில் உருவாக்கியிருந்தன.

1993இல் என்று நினைக்கிறேன், எனக்கு மணிவண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அரவிந்தனையும் தேவி பாரதியையும் மனுஷ்ய புத்திரனையும் முதலில் சந்தித்தது அந்த ஆண்டிலாகத்தான் இருக்க வேண்டும். அந்த வருடம் நடைபெற்ற குற்றாலம் பட்டறைக்குச் சென்றேன். யாருடன் சென்றேன் என்பது நினைவில் இல்லை. புதிய கோட்பாடுகளை முகாந்திரமாகக்கொண்டு அங்கு நடந்த அராஜகங்கள் என்னை ஆழமாகப் பாதித்தன. சிற்றிதழ் இயக்கம் பெரும் தேக்க நிலையிலிருந்தது. சுபமங்களா ஒரு நடுத்தர இதழாக முக்கியத்துவம் பெற்று வெளிவந்துகொண்டிருந்தது. கோமல் சுவாமிநாதன் அவர்களின் பரந்துபட்ட பார்வையும் இடதுசாரித் தொடர்பும் சுபமங்களாவை ஒரு பொதுக்களமாக மாற்றியிருந்தன. குறிப்பாக அதன் நேர்காணல்கள் பல தீவிரமான எழுத்தாளுமைகள் வாசகருக்கு அறிமுகமாகக் காரணமாயின. பல முக்கியமான விவாதங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

தம்மைச் சுயமாக வளர்த்துக்கொண்டு ஒரு நிலையை அடைந்தவர்களுக்கு சுபமங்களா இடமளித்தது. எல்லா அதிகார மையங்களுக்கும் உரிய கௌரவம் அளித்ததன்வழி அது ஒரு பண்பாட்டு மையமாயிற்று. எல்லாருக்கும் ஒரு நாற்காலி தந்துவிட்டால் மனநிறை வடைந்துவிடுவார்கள் என்ற உறுதிப்பாடு கோமல் சுவாமிநாதனுக்கு இருந்தது. நம் எழுத்தாளர்கள் அந்த நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றிவந்தனர். சுபமங்களா வழி உருவான எழுத்தாளர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால்தான் சுபமங்களா பற்றிய முழுமையான மதிப்பீட்டை வந்தடைய முடியும்.

இந்தப் பின்னணியில் இருப்பு நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு புதிய களத்திற்கான தேவையை நான் உணர்ந்தேன். காலச்சுவடை மீண்டும் நடத்துவது பற்றி அப்பாவிடம் பேசினேன். நான் இதழைத் துவங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால், அதை அவர் தடை செய்யவும் இல்லை. காலச்சுவடை என் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார். நண்பர்களோடு இணைந்து செயல்படும்போது காலப்போக்கில் சில நட்புகளை இழக்க வேண்டிவரும் என்றும் என்னை எச்சரித்தார்.

ஒரு இதழை என்னால் நடத்த முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருந்தால் அது மிக நியாயமானதுதான். நான் தமிழைப் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தேன். தமிழ் நிச்சயமாக என் விருப்பப் பாடமாக இருக்கவில்லை. சகித்துக்கொள்ள முடியாத பாடத்திட்டத்தையே அதற்குப் பழி சொல்ல வேண்டும். (இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே அட்டை, அதே பக்க எண்கள், அதே தாள், அதே சகிக்கமுடியாத பாடத் திட்டத்தில் என் மகன் தமிழைக் கற்றுவருகிறான்.) வெளியூரில் படித்த காலத்தில் வீட்டுக்கு எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. தமிழ் இலக்கணம் அன்றும் இன்றும் சுத்தமாகத் தெரியாது. இருப்பினும் வாசிப்புவழி உருவாகியிருந்த தமிழ் மொழி பற்றிய உள்ளுணர்வு இருந்தது.

புதிய காலச்சுவடின் முதல் இதழ் வெளிவந்ததும் சு.ரா.வின் அவநம்பிக்கை நீங்கியது என்று நினைக்கிறேன். இதழின் உள்ளடக்கத் தேர்வில் அவர் இறுதிவரை தலையிட்டதில்லை. ஆனால், இதழைப் படித்துவிட்டுத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார். யோசனைகளையும் பகிர்ந்துகொள்வார். தன் படைப்புகளை மிகுந்த தயக்கத்துடனேயே காலச்சுவடுக்குக் கொடுத்துவந்தார். ஒவ்வொரு படைப்புடனும் அப்போதைய நிர்வாக ஆசிரியருக்குக் கடிதத்தை இணைத்து அனுப்புவார். மிகச் சிறந்ததாக இருந்தால் மட்டும் தன்னுடைய படைப்பைப் பிரசுரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நிராகரிக்கத் தயங்க வேண்டாம் என்றும் எழுதுவார். அவர் அனுப்பிய எட்டுச் சிறுகதைகள் காலச்சுவடில் பிரசுரிக்கப்படவில்லை என்பது என் நினைவு. இதை இரண்டு காரணங்களுக்காகக் குறிப்பிட வேண்டியுள்ளது. சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் நிராகரிக்கப்படும்போது, எவ்வளவு அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற என் பட்டறிவு. இரண்டு, சு.ரா. அளித்த சுதந்திரத்தைக் காலச்சுவடில் துணிச்சலோடு பயன்படுத்தியவர்கள் பின்னர் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு எடுபிடிபோல் செயல்பட்ட வரலாறு. சுதந்திரம் என்பது எங்கு அளிக்கப்படுகிறதோ அங்கு மட்டும் அனுபவிப்பதல்ல; எங்கு மறுக்கப்படுகிறதோ அங்கே உரிமையுடன் கோரப்படுவதுமாகும்.

சுந்தர ராமசாமியின் நண்பர்கள், அவருடைய தன்னார்வ சிஷ்யர்கள், என்னுடைய சிற்றிதழ் இலக்கிய உலக நண்பர்கள் யாரையும் காலச்சுவடு இதழ்க் குழுவில் சேர்ப்பதில்லை என்பதை முதலில் முடிவு செய்தேன். மணிவண்ணன் இடதுசாரிப் பின்னணி கொண்டவர். சிற்றிதழ்ச் சூழலுடன் அப்போது (1993இல்) பெரிய தொடர்பு இல்லாதவர். நாங்கள் இருவரும் பேசியதில் மூன்றாவதாக மனுஷ்ய புத்திரனை அழைக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது மனுஷ்ய புத்திரனை நான் ஓரிருமுறை மட்டுமே சந்தித்திருந்தேன். அவரும் வேறு தளத்திலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர். அப்போது சிற்றிதழ் இயக்கத்தோடு அதிகத் தொடர்பற்றிருந்தவர். இலக்கியம்/சிந்தனை சார்ந்து இங்கு உருவாகியிருந்த மதிப்பீடுகள் மாறுபட்ட பின்னணி கொண்ட குழுவின் மதிப்பீட்டிற்கு உள்ளாக வேண்டும் என்று நினைத்தேன். சிற்றிதழ்களின் மாதிரியாகக் காலச்சுவடு உருவாவதை நான் விரும்பவில்லை. ஆயிரம் பிரதிகள் அச்சிட்ட காலத்திலும் அதைச் சிற்றிதழாக நான் எப்போதுமே கருதியதில்லை; குறிப்பிட்டதுமில்லை. தீவிர இதழ் என்ற தொடரே ஆரம்பம் முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய காலச்சுவடு தமிழின் இன்றைய தேவை பற்றிய சு. ரா. வின் பார்வையில் அமைந்தது. புதிய காலச்சுவடு அப்படி எந்த ஒரு தனிநபரின் பார்வையிலும் அமைவதைத் தவிர்த்து, ஒரு குழுவின் பார்வைகள், பல்சிந்தனைகள், பல்நோக்குகள், பன்முகப் படைப்புகள் என விரிவடைந்தது. புதிய காலச்சுவடுக்கு முந்தைய இதழ்கள் எல்லாமே படைப்புகளின் போதாமையை, படைப்பாளிகளின் ஒத்துழையாமையை நொந்துகொண்டே வெளிவந்துள்ளன. சு. ரா.வின் காலச்சுவடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், புதிய காலச்சுவடு, சிற்றிதழ்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக்கொண்ட வரையறைகளைத் தவிர்த்து இதழியல் பற்றிய விசாலமான பார்வையை முன்வைத்ததன் வழி, முதல் இதழிலிருந்து நூறாம் இதழ்வரை படைப்புத் தட்டுப்பாடு என்பதை உணர்ந்ததே இல்லை. மாறாக ஒவ்வொரு இதழிலும் எதைச் சேர்ப்பது, எதைத் தவிர்ப்பது என்ற பெரும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. ஒரு இதழ் அச்சுக்குச் செல்லும்போதே கிட்டத்தட்ட இன்னொரு இதழுக்கான பக்கங்கள் தயாராகிவிடுவதுண்டு. காலாண்டிதழாக இருந்தபோதும் இருமாத இதழாக ஆனபோதும் இப்போது மாத இதழாக வெளிவரும்போதும் இந்தப் பக்க நெருக்கடி எங்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு பங்களிப்புச் செழுமை காலச்சுவடுக்கு முந்தியும் பிந்தியும் எந்த இதழுக்கும் ஏற்படவில்லை. அதேபோல் புதிய குரலுக்கு இடமளிக்காத ஒரு இதழும் இந்த நூறு இதழ்களில் வந்ததில்லை. புதியவற்றிற்கான தேடல் என்பது எல்லாக் காலகட்டங்களிலும் காலச்சுவடை இணைக்கும் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ளது.

1994 அக்டோபரில் புதிய காலச்சுவடின் முதல் (இதழ் எண் 9) இதழ் வெளிவந்தது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மணிவண்ணன் காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து விலகிக்கொண்டார். 2002இல் நான் ஆசிரியர் குழுவிலிருந்து விலகிக்கொண்டு அரவிந்தன், ரவிக்குமார் இருவரையும் இணைந்துகொள்ள அழைத்தேன். 2003 ஆரம்பத்தில் சுஜாதாவின் பதிப்பாளராகியிருந்த மனுஷ்ய புத்திரன் ராஜிநாமாக் கடிதம் அனுப்பினார். அதை உடனடியாக ஏற்றுக்கொண்டேன். பின்னர் நஞ்சுண்டன் ஆசிரியர் குழுவில் இணைந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அரவிந்தன் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ரவிக்குமார் (ஆதவன்) சட்டமன்ற உறுப்பினரானதும் ஆசிரியர் குழுவிலிருந்து விலகிக்கொண்டார். பெருமாள்முருகன், தேவிபாரதி ஆகியோர் இணைந்துகொண்டனர். இவ்வாறு பல்வேறு காலங்களில் பற்பல நண்பர்கள் இணைந்தும் பின்னர் விலகியும் சென்றுள்ளனர். இவற்றில் பெரும்பான்மையான உறவுகள், நட்புகள் தொடர்ந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் காரணமாகக் காலச்சுவடு நண்பர் வட்டத்தில் ஓரிரு மாற்றங்களே ஏற்பட்டன. காலச்சுவடு ஆலோசனைக் குழுவிலும் பல்வேறு காலங்களில் பல்வேறு நண்பர்கள் பணியாற்றியுள்ளனர். சிபிச்செல்வன், பெ. அய்யனார், திவாகர் இன்னும் சிலர் உதவி ஆசிரியர்களாக, இணை ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். சில காலகட்டங்களில் கனிமொழி, ஆனந்த் ஆகியோர் கவிதைத் தேர்வுகளில் உதவியுள்ளனர். இப்போது ராஜமார்த்தாண்டன் உதவி வருகிறார். ஆ. இரா. வேங்கடாசலபதி, அரவிந்தன் 1994 முதலே என் சக பயணிகளாக இருந்துவருகின்றனர். 'வாரிசு' முத்திரை குத்தி என் சுயத்தை அவமதிக்கும் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்த அன்றைய சூழலில் என்மீது நம்பிக்கை கொண்ட நண்பர்கள் இவர்கள். எம். எஸ். அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ் ஆய்வு, தமிழ் அடையாள அரசியல், திராவிட இயக்கம் போன்ற தளங்களுடன் சலபதியும், மனித உரிமை, தமிழக அரசியல், தலித் பண்பாடு போன்ற தளங்களுடன் ரவிக்குமாரும் காலச்சுவடின் உறவை வலுப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உறவுகள் காலச்சுவடிற்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகத் தேவிபாரதி பொறுப்பேற்று நடத்திவருகிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாமே பலரது பங்களிப்புகள் காலச்சுவடுக்கு ஏற்படவும் அதே நேரம் தேக்கமின்றி இதழ் வளரவும் வழிவகுத்து வருகின்றன.

கடந்த பத்தாண்டுகளாகக் காலச்சுவடின் உள்ளடக்கத்தில் என்னுடைய பங்களிப்பு என்பது அந்தந்தக் காலகட்ட நிர்வாக ஆசிரியர்களின் (சில சமயங்களில் அறிவிக்கப்பட்டும் பல சமயங்களில் அறிவிக்கப்படாமலும்) மனோபாவம் சார்ந்தே இருந்துவந்துள்ளது. வலியுறுத்தி நான் சொல்லக் கூடியவை மிகக் குறைவு. காலச்சுவடில் என் கருத்துகள் எல்லாம் என் பெயரில் மட்டுமே ஆரம்பம் முதல் பதிவாகி வருகின்றன. அவற்றிற்கான முழுப் பொறுப்பு எனக்கு மட்டுமே. அதே நேரம் இவற்றையும்கூடப் பிரசுரிக்க வேண்டும் என நான் வலியுறுத்துவது இல்லை. ஆசிரியர் குழுக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு என்னுடைய பார்வையைத் தெளிவாக முன்வைப்பதுண்டு. அவற்றில் ஏற்கப்படுபவை ஒரு பகுதி; நிராகரிக்கப்படுபவை அதிகம். இது எனக்கு மகிழ்ச்சியையே அளித்துவருகிறது.

காலச்சுவடை மீண்டும் துவங்கி நடத்தப்போகிறோம் என்று அறிவித்த பிறகு ஆறுமாத கால அவகாசம் எடுத்துக்கொண்டோம். எப்போதும் கைவசம் பல படைப்புகள் இருக்க வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் (1993) காலச்சுவடில் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி ஆசிரியர் குழுவில் இருந்த நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடந்த ஜனவரி காந்தி சிறப்பிதழில் வெளிவந்த அஷிஸ் நந்தியின் காந்தி பற்றிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை வெளியிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எழுதியது நினைவிருக்கிறது. சுமார் 15 ஆண்டுகள் முயன்ற பின்னர் அது நிறைவேறியுள்ளது. கிளாட் அல்வாரிஸ் அவர்களின் நேர்காணலை வெளியிட வேண்டும் என்ற திட்டம் இன்னும் சாத்தியமாகவில்லை. இன்னும் செய்யக் கூடியவை, செய்யப்பட வேண்டியவை . . . திட்டங்களுக்கு முடிவில்லை. தமிழ்ச் சமூகம் எந்த அளவுக்குக் காலச்சுவடை வலுப்படுத்துகிறதோ அதற்கு மேலாகவே எங்கள் பங்களிப்பு இருக்கும் என்பது உறுதி.

காலச்சுவடு தற்போது 7000 பிரதிகள் அச்சிடப்படுகிறது; 1500 சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரு தீவிர இதழ் விற்பனை, சந்தா விஷயங்களில் சரியான தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதே ஆரோக்கியமானது. ஏனெனில் வாசகன் எமக்கு நுகர்வோன் அல்ல, பங்காளி. நகைப்பிற்குரிய பொய் அறிவிப்புகளால் ஆதாரம் பெற நினைப்பது மோசடிப் பண்பாடு. மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மிகை தேவையே இல்லை. எண்ணிக்கை அல்ல, ஏற்படுத்தும் தாக்கமே இங்கு பிரதானமானது.

தமிழ் இதழியல் வரலாற்றில் 15 ஆண்டுகாலம் வளர்ச்சிப் பாதையில் பயணித்த மாற்று இதழ் காலச்சுவடு நீங்கலாக எதுவும் இல்லை. இந்த நெடும் போராட்டத்தில் உதவியவர்களை நான் பட்டியலிட முயலப் போவதில்லை. அது சாத்தியமுமில்லை.

ஆசிரியர் குழுவினர் மட்டுமல்ல பல நண்பர்களும் காலச்சுவடு பணியாளர்களும் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்ட மனநிலையுடன் ஒரு பொதுத் தொண்டாக நினைத்துக் காலச்சுவடுக்குப் பங்களித்து வருகிறார்கள். விலை மதிப்பற்ற இந்தக் கொடையை முழுமையாக நினைவில் கொண்டிருக்கிறேன்.

என் குடும்பத்தினரின் ஆதரவும் எனக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. எனக்கு எல்லாவிதங்களிலும் உதவி வருபவர்கள் என் சகோதரிகள் தைலாவும் தங்குவும். மென்மையான விசாரிப்புகள் வழி என்னை ஊக்கப்படுத்தி வருபவர் அம்மா. அன்றாட நிர்வாகத் தலைவலிகளை எதிர்கொண்டுவரும் என் மனைவி மைதிலி, பத்தாண்டுகளுக்கு முன்னரே என் முதல் அக்கறை காலச்சுவடு என்பதைக் கண்டுணர்ந்துவிட்டாலும், பொறுத்துக்கொண்டிருக்கிறாள். என் பார்வையில் காலச்சுவடு என் குழந்தையாக இருந்தாலும் மைதிலியின் பார்வையில் அது என் முதல் மனைவி!

சகிகள், சகாக்கள், ஆதரவாளர்கள், எழுத்தாளர்கள், முகவர்கள் அனைவருக்கும் நன்றி. நன்றிக்கடன் ததும்பும் மனநிலையுடனேயே இதை எழுதுகிறேன்.

உள்ளடக்கம்