Google   www kalachuvadu.com

அரிச்சந்திரா- இசை நாடகம் முன்வைக்கும்
விழுமியங்களும் வாழ்வின் யதார்த்தமும்

உற்பத்திச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியபோதே மனித சமூகம் தனக்கான பண்பாட்டு அடையாளங்களையும் கேளிக்கைகளையும் தேடத் தொடங்கிவிட்டது எனலாம். ஒவ்வொரு சமூகமும் தன் மண்ணோடும் சூழலோடும் இணைந்த ஒரு வாழ்வியல் நெறியைக் கண்டடையும் இடையறாத எத்தனிப்புகளின் ஒரு பகுதியாகவே தனக்கான கலை மரபுகளை உருவாக்கி வந்துள்ளமையை அவற்றை ஆய்வுக்குட்படுத்தும்பொழுது அறிந்துகொள்ளலாம். கலை இலக்கிய முயற்சிகள் ஒவ்வொன்றுமே ஒரு வகையில் மனித சமூகம் தனக்கான விழுமியங்களைக் கட்டமைக்கும் முயற்சி என்றும்கூடக் கருதலாம்.

உலகமயமாக்கல் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிச் சிறப்பாக உருவாகி நிலைபெற்றிருந்த சமூகப் பொருளாதார அடிப்படைகளையும் அவற்றின் கருத்தியல் ஆதாரங்களாக விளங்கிய பண்பாட்டுக்கூறுகளையும் அழித்துவரும் சூழலில் தொன்மையான எல்லாச் சமூகங்களும் அவற்றைக் காப்பாற்றிக்கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. பரவலான அளவில் இல்லையென்றாலும் சில தனி நபர்களும் குழுக்களும் அத்தகைய செயல்பாடுகளில் அக்கறைகாட்டி வருகின்றனர். நாட்டார் கலை மரபுகளின் இருப்புக்கு இந்தப் பிடிவாதமும்கூட ஒரு காரணமாயிருக்கலாம். ஈரோட்டில் நடைபெற்ற கொங்கு மண்டல மரபுக் கலை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் காணக்கிடைத்த கலைமாமணி கரூர் கே. ஆர். அம்பிகா குழுவினரின் அரிச்சந்திரா இசை நாடக நிகழ்வைக் கண்டபொழுது நம் மரபின் விழுமியங்கள் சார்ந்தும் அவை வற்புறுத்தும் மதிப்பீடுகள் சார்ந்தும் பல கேள்விகள் எழுந்தன.

நவீன வாழ்வின் நிர்ப்பந்தங்கள் மரபார்ந்த கலை வடிவங்களை வடிவரீதியிலும் உள்ளடக்கரீதியிலும் நீர்த்துப்போகச் செய்திருக்கும் ஒரு சூழலில் அவற்றைத் தொன்மையான வடிவங்களில் நிகழ்த்துவதற்கான வெளிகளும் வாய்ப்புகளும் மிக அரிதாகிவிட்டிருக்கின்றன. 'காலம்' கோரும் மாறுதல்களை ஏற்று மரபுக்கலை வடிவங்களும் 'நவீனத்துவப் பரப்புகளுக்குள்' அடியெடுத்துவைத்துவிட்டன.

காலத்திடமிருந்து தப்பிப் பிழைத்திருக்கும் சில மரபுக் கலை வடிவங்களைக் கொங்கு மண்டல மரபுக் கலை விழாவில் காண வாய்ப்புக் கிட்டியது. நாடக உலகின் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ சுவாமிகளின் வழியில் அவரது மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்படும் இசை நாடகக் குழுக்கள் இன்றும்கூட அவரது பவளக்கொடி, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, கோவலன் கதை, அரிச்சந்திரா போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை அவற்றின் பழமை மாறாமல் நடத்திவருகின்றன. கரூர், மணப்பாறை, மதுரை உள்ளிட்ட தென் தமிழ் நாட்டின் சில பகுதிகளில் இப்பொழுதும்கூட நூற்றுக் கணக்கான இசை நாடகக் குழுக்கள் மக்களின் ஆதரவோடு இயங்கிவருகின்றன என்கிறார்கள் நாடக ஆர்வலர்கள்.

கொங்கு மண்டல மரபுக் கலை விழாவில் நடத்தப்பட்ட அரிச்சந்திரா இசை நாடகத்தை நடத்திய கரூர் அம்பிகாவின் நாடக்குழு, இசையாலும் பாடல்களாலும் நிரம்பிய இந்த நாடகத்தின் பிரதியைத் தம் வளமான குரல்களாலும் சிறப்பான உடல்மொழியாலும் முக்கியமான ஒரு கலை நிகழ்வாக மாற்றியிருந்தார்கள்.

மகாபாரதத்தின் கிளைக் கதைகளில் ஒன்றான அரிச்சந்திரன் கதை சத்தியத்தை வலியுறுத்தும் ஒரு கதையாடலாகக் காலந்தோறும் மாறாத அடிப்படைகளுடன் சொல்லப்பட்டுவரும் ஒரு கதை. கடவுளர்களும் துறவிகளும் இடம்பெறும் இப்புராணக் கதையாடல் வலியுறுத்தும் ஒழுக்கவியல் மற்றும் தார்மீக நெறிகள் முதலானவை சராசரி மனிதனுக்குக் குற்ற உணர்வை உருவாக்கக்கூடியவை. மகாத்மா காந்தி இந்நாடகத்தால் பாதிக்கப்பட்டே சத்தியத்தின்மீது ஆழமான பிடிப்புக் கொண்டாராம். மேலான வாழ்வை விழையும் அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் வரும் அடுக்கடுக்கான சோதனைகள், மூளச்செய்யும் துக்கமே நாடகத்துக்கும் பார்வையாளருக்குமிடையே உருவாகும் பிணைப்புக்கு முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. இந்தப் பிணைப்பைக் கருவியாக்கிக் கொண்டு நாடகம் தான் வலியுறுத்தும் விழுமியங்களை ஏற்கும்படி பார்வையாளனை வலியுறுத்துகிறது.

நவீன மனம் ஒன்றினால்கூட நாடகத்தின் வலுவான இந்த உணர்வுத் தளத்தைத் தாண்டிச் செல்ல முடியுமா என்பது சந்தேகமே. தாண்டிச் சென்று சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் பார்வையாளன் தன் சிந்தனையை வேறு பரிமாணங்களுக்கு நகர்த்திச் செல்ல முடியும். நவீன வாழ்வில் அரிச்சந்திரன் வலியுறுத்தும் சத்தியத்துக்குள்ள இடம், தன் கொள்கைக்காக மனைவி, குழந்தையின் துன்பங்களைப் பொருட்படுத்தாத அரிச்சந்திரனின் பிடிவாதமான மானுட இயல்பு , அதற்குப் பின்னால் இயங்கும் அரசியல் போன்றவை குறித்த விவாதங்களை இப்பிரதியின் நவீன வடிவம் ஒன்று எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அந்த வகையில் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். இன்னும் மீதமிருக்கும் இசை நாடக மரபின் கூறுகளைக் கண்கூடாகக் கண்டு அனுபவிக்க வாய்ப்பளித்த நாடகம் இது.

உள்ளடக்கம்