Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 179, நவம்பர் 2014

 
 

தலையங்கம்: நின்று கொல்லும் நீதி
ஜெயலலிதாவின் தண்டனையை பலகாலமாக எதிர்நோக்கிய கருணாநிதிக்கு உண்மையில் அதில் கெட்ட செய்தியும் அடங்கியுள்ளது. 2ஜி வழக்கில் கடுமையாக இயங்கவேண்டிய சூழலை நீதிபதிகளுக்கு இந்தத் தீர்ப்பின் முன்மாதிரி ஏற்படுத்தியுள்ளது. பணத்தை அடித்து பிணை ஆணை பெற்றது போல இனி வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது கடினமாக இருக்கும்.

கடிதங்கள்
சுப. உதயகுமாரன் என்னும் கலகக்காரர் கூடங்குளத்தில் தன் பணியை வெற்றிகரமாக முடித்து மனநிறைவு கொண்டதுபோன்று காவிரி டெல்டா பகுதியில் ரகளை செய்ய வந்துவிட்டார். அவர் கூற்றுப்படியே மீத்தேன் வாயுவை வெளிக்கொணர மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பத்தை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். எத்தகைய அபார சாதனை.

கட்டுரை: ஊழல் குற்றங்களும் அரசியல்வாதிகளின் போராட்டங்களும்
கே. சந்துரு
சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின்மீது போடப்பட்ட வழக்குகளில் தினசரி ஆஜராகிவந்த திமுக தலைவர் காலையில் நீதிமன்றங்களுக்கும் மாலையில் மக்கள் மன்றங்களுக்கும் செல்வதாகப் பெருமையுடன் அறிவித்தார். ஊழல் குற்றங்களில் கைதுசெய்யப்பட்டு காவல்வாகனத்தில் ஏறும்போதும் நீதிமன்றங்களில் வாய்தாக்கள்பெற்று வெளியேறும்போதும் புன்னகையுடன் இருவிரல்கள் மூலம் ‘க்ஷி’ என்ற எழுத்து தென்படும்படியாக வெற்றிச் சின்னத்தைக்காட்டி உலாவரும் ஊழல் அரசியல்வாதிகளின் படங்களை அப்பொழுதிலிருந்துதான் ஊடகங்கள் மக்களுக்குக் காட்ட முற்பட்டன.

கட்டுரை: ஊழல்--வாழும் உதாரணங்கள்
தேவிபாரதி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் சிலரும்கூட ஊழலுக்கெதிராக முகநூல் புரட்சி நடத்தத் துணிந்ததைத்தான் மற்ற எல்லாவற்றையும்விட நகைப்புக்குரியதாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 2ஜி ஊழல்தொடர்பான குற்றச்சாட்டுகளில் திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் முதலானவர்களது பெயர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பட்டியலில் இல்லை என்பதை மேற்கோள்காட்டி புனிதப்போர்வை போர்த்திக்கொள்வதற்கு காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் கூச்சப்படவே இல்லை.

நோபெல் அமைதி பரிசு 2014: ‘என் உலகம் மாறிய அந்த ஒருநாள்’
மலாலா யூசுபாஃஸாய்
அவன் அடுத்தடுத்து மூன்றுமுறை சுட்டதாக தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடதுதோளின் வழியே வெளிவந்தது. இடது காலிலிருந்து ரத்தம் வழிய மோனிபாவின்மேல் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். அதனால் அடுத்தடுத்த குண்டுகள் அருகில் இருந்தவர்களின்மேல் பாய்ந்தது. ஷாஸியாவின் இடதுகையில் இரண்டாவது குண்டும் அவளின் இடது தோளின் வழியாய் கைனத் ரைஸ்ஸின் வலது தோளுக்கு மூன்றாவது குண்டும் பாய்ந்தன.

நோபெல் அமைதி பரிசு 2014: கைலாஷ் சத்யார்த்தியின் 84 ஆயிரம் குழந்தைகள்
சுப. உதயகுமாரன்
திக்கற்று நின்ற லக்ஷ்மண் குடும்பத்துக்கு தெய்வமாய் வந்தார் கைலாஷ். எட்டு, பத்து நண்பர்களுடன் 30 கி.மீ. பேருந்தில் பயணம்செய்து இரவுவேளைகளில் கைலாஷ் வருவார். முதலாளிகளுக்கும் அவர்களின் அடியாட்களுக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாக ஆங்காங்கே கூட்டம் நடத்தி கொத்தடிமைகளை யூனியன்களாக ஒருங்கிணைத்தார். குவாரிக்காரர்கள் இவர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.

பத்தி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்-8 - பணியிடத்தில் பாலியல் வன்முறை
வே. வசந்தி தேவி
தேவராஜன் சுரேகாவைத் தன் அறைக்கு அடிக்கடி வரச்சொல்லி, வெகுநேரம் வேலைக்குத் தொடர்பற்று பேசுவது, அவள் குடும்பத்தைப் பற்றித் தேவையற்ற விவரங்களைக் கேட்பது, மற்ற பெண் ஊழியர்களைப் பற்றிக் கீழ்த்தரமாகக் கமென்ட் அடிப்பது என்று தொடங்குகிறது. சுரேகா தட்டச்சு கற்றவரல்ல என்றாலும், அவருக்கு டிக்டேஷன் கொடுப்பதாக, தன் இருக்கைக்கு அருகில் அமரச்சொல்லி, வெகுநேரம் சிரித்துப்பேசி, அருவருக்கத் தகுந்தவண்ணம் நடந்து கொள்வது என்று தொடர்கிறது. தன்னுடன் வெளியூர்களுக்கு உல்லாசமாகப்போக அழைப்பது, வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்து வெகுநேரம் அன்யோன்யமாகப் பேசுவது என்று எல்லையை மீறுகிறது.

கட்டுரை: நெய்யாறு நீரும் கையறு நிலையும்
சுப. உதயகுமாரன்
போதிய தண்ணீர் கைவசம் இல்லாததால் கேரளாவால் தர முடியவில்லை என்றால்கூடப் பரவாயில்லை. ஆனால் நிலைமை அதுவல்ல. கேரளத்தில் நன்றாக மழைபெய்து வருகிறது; அபரிமிதமான நெய்யாற்றுத் தண்ணீர் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் எனும் ஊரில் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

கட்டுரை: தேவன் உங்களோடு=தத்வமஸி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மையான சமய நடத்தைகள், மழுங்கலான நம்பிக்கைகள், பொருளற்ற விழாக்கள், பயனற்ற விரதங்கள், குழப்பமடையச் செய்யும் உருவ வழிபாடுகள், திகைக்கவைக்கும் தெய்வங்கள், தடுமாறச் செய்யும் தத்துவங்கள், அலுப்பூட்டும் ஆலய ஆச்சாரங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, இந்துமதத்தின் இசகுபிசகுகளை நீக்கி, அவற்றைத் துப்புரவுப்படுத்தி அத்துவைத வேதாந்தம் என்ற ஒருமைவடிவ சட்டகத்துக்குள் இராதாகிருஷ்ணன் சேர்த்தார்.

சுரா பக்கங்கள்: ஆனந்த விகடன் மீது எனக்கு இரண்டு புகார்கள்
ஒரு ஆசிரியர் தன் இதழுக்கு எழுதும்படி ஒரு எழுத்தாளரை அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தாளர் எழுதித்தரும் விஷயத்தை ஆசிரியர் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் சமூகத்தில் எழுத்தாளர்களிடையே வலுவாக இருக்கிறது. நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அழைப்பு விடுத்த நிலையிலும், பல காரணங்களை முன்னிட்டு, படைப்பை திருப்பி அனுப்புவதற்கான உரிமை ஆசிரியருக்கு உண்டு.

கவிதைகள்
அனார்
செந்திதிரை:
வெண்திரையில் நீல அரசியல்

ஸ்டாலின் ராஜாங்கம்
வடசென்னை வாழ் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைமுறை படத்தின் முக்கியமான பதிவுகளாகும். இவற்றை அம்மக்களின் கொண்டாட்ட வாழ்வு என்று விமர்சனங்கள் சொல்கின்றன. ‘வடசென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள்பற்றி தமிழ்சினிமா காட்டிவரும் கற்பனையான இழிவுகளுக்கு மாற்றாக, என்னுடைய பதிவுகள் இருக்கும்’ என்று இயக்குநர் படம் வெளிவருவதற்கு முன்பும் பின்பும் பேசி வந்திருக்கிறார்.

கதை:
அகாலம்

கே.என். செந்தில்
“நேரம் உச்சத்துல இருந்துச்சுன்னு வைய்யி எதுக்கால புலி வந்தாகூட மோந்து பாத்து நக்கிக் குடுத்துட்டுப் போயிரும், அதே நேரம் மோசமாயிட்டுதுன்னா எந்தக் கிரகம் நம்மை அடிச்சுட்டு உளுக்காட்ட எங்கிருந்து வருதுன்னே சொல்ல முடியாது. நம்மளைய படச்சவனுக்கே இதுதான் நிலமை. யேன்ஞ் சொல்றேன்னா யானை மிதிச்சு பொலச்சவனும் இருக்கான். எறும்பு கடிச்சு செத்தவனும் இருக்கான் பாத்துக்குங்க” எனச் சொல்லி அனுப்புவார்.

உரை:
பனியில் மறைந்திருக்கும் அக அரசியல்

க.வை. பழனிசாமி
பொதுவாக வாசகன் முன்வாசித்திராத எழுத்தைத் தேடியே புத்தகத்தில் நுழைகிறான். புதிய எழுத்தைக் காணும்போது புத்தகம் அவனுக்கு நெருக்கமாகிறது. தமிழ் வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் தற்போது மிகத் தேவையானதாகத் தோன்றுகிறது. காரணம், பாமுக் இதில் பேசும் அரசியல். ‘பனி’ முன்வைக்கும் அரசியல் மிகவும் வேறானது. நமக்குப் பழக்கமான புற அரசியல் அல்ல. இந்த நாவல் பேசும் அரசியல் அகவயமானது. புற அரசியலின் வேரே அக அரசியல்தான்.

மதிப்புரை:
வாழ்வை மீட்டிய வீணை

வி.என். ரமேஷ்
பாலசந்தர் என்ற மகா கலைஞர் கர்நாடக இசையின் குறிப்பாக வீணை இசையின் மரபை நன்றாக அறிந்தவர். அவர் மரபை அறிந்து மரபை மீறியவர் அல்லர். மரபை உடைத்தவரும் அல்லர். பயனுள்ள அடிப்படை மரபின் தொடர்ச்சியை விரிவுபடுத்தியவர்; முன்னெடுத்துச் சென்றவர். அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

மதிப்புரை:
தேவபாகமும் மானுடபாகமும்

அ.கா. பெருமாள்
ஈழத்தின் 19ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை சிவசம்புப் புலவரின் வாழ்க்கையிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறார் கைலாசபதி. அவர் “சிவசம்புப் புலவரது வரலாறு பேசப்படாமல் போனால் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாம் எதனை இழக்கிறோம் என நோக்குதல் அவசியமாகும். இவரது வரலாறு தொடர்ச்சிக்கு உதவுவது” என்கிறார்.

நோபெல் இலக்கியப் பரிசு 2014: பத்ரிக் மொதியானொ: நினைவுகளின் கலைநுட்பர்
நாகரத்தினம் கிருஷ்ணா
‘‘நான் எழுதிய நூல்களைக் குறித்து குழப்பமே மிஞ்சுகிறது. ஓரே ஒரு புத்தகத்தைத்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன். (30க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன). நடப்பது அனைத்துமே உண்மை அல்லாதது போலவும் கனவில் நிகழ்வதுபோலவும், என்னைப்போன்ற பிறிதொருவருக்கே பரிசும் புகழும் வந்தடைந்திருப்பதுபோலவும் நினைக்கத் தோன்றுகிறது.

பத்தி:
நிலவைச் சுட்டும் விரல் ‘எப்பவாவது...’

தான் கண்டறிந்த பிரத்தியேக தரிசனத்தை, தானே கண்டடைந்த பிரத்தியேக தர்க்கத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியே தனது சிறப்பிடத்தை எட்டுகிறான் அவன். மிகுந்த சொற்சிக்கனமும், தனக்கேயுரிய விசாரணை முறையும் கொண்ட கவிஞன் பாமர வாசிப்புக்கு அந்நியமாக ஆகிவிடுவது இயல்புதான்.

கட்டுரை:
திருமடைப்பள்ளியும் கருப்புக்கட்டியும்

ஆ. சிவசுப்பிரமணியன்
இன்று திருமடைப்பள்ளியில் ஓரு உணவுப்பொருளாகக் கருப்புக்கட்டி நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர் திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது. இவையெல்லாம் இம்மண் சாராப் பொருட்கள். ஆனால் ஏற்கனவே திருமடைப்பள்ளியில் இடம்பெற்றிருந்த இம்மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்புக்கட்டி விலக்கப்பட்ட பொருளாக முத்திரையிடப்பட்டுவிட்டது.

பதிவு:
ஒரு மேடை - ஐந்து நாடகங்கள்

வீரா
பஞ்சரத்தினத்தின் படைப்புகளை மேலான அனுபவமாக்கியது அதன் பின்னணி இசை. ஐந்து படைப்புகளிலுமே தன் பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்த இசையின் ஓர் உன்னத உதாரணம், சீயக்காய்த் தூள் நாடகத்தில் ஓவியன் வரைந்த சீதையை அவன் மனைவி பார்த்துப் பரவசமடைந்து சீதையைப் போலவே தன்னை அபிநயம் பிடிப்பாள். அப்போது பின்னணியில் ஒலிக்கும் மிருதங்கத்தின் தாளலயம் அந்தக் காட்சியை அபாரமான நிலைக்கு உயர்த்திச் செல்லும்.

கட்டுரை:
‘பீடிக்கப்பட்டவர்கள்’ நாவல் - தஸ்தயேவ்ஸ்கியின் பகடியா? வாக்குமூலமா?

சர்வோத்தமன் சடகோபன்
ஷாடோவின் மனைவி, நிகோலயின் பிள்ளையை கருவில் சுமந்து இறுதியில் ஷாடோவின் இல்லத்திற்கு வருகிறாள். இந்த நாவலில் மிக அற்புதமான கவித்துமான மலர்ச்சியான பக்கங்கள் ஷாடோவிற்கும் அவனது மனைவிக்கும் மலரும் அந்தக் காதல். அத்தனை துரோகத்திற்குப் பிறகும் ஷாடோவ் அவளைக் காதலிக்கிறான்.